எடப்பாடியின் வெற்றிக்கும் ஸ்டாலின்தான் காரணம்! – ஆதனூர் சோழன்

Share

தலைப்பு உங்களுக்கு மலைப்பை ஏற்படுத்தலாம். அதெப்படி, எடப்பாடி வெற்றிக்கு ஸ்டாலின் காரணமாக முடியும் என்று நீங்கள் நினைக்கலாம்.

பொதுவாக தவளை தனது வாயால் கெடும் என்பார்கள். அதைப்போலத்தான் யார் சொல்லிக்கொடுத்த தந்திரமோ, ஸ்டாலின் தனது பிரச்சாரத்தை தொடங்குவதற்கு முன்பிருந்தே, அடுத்து அமையப்போவது திமுக ஆட்சிதான் என்றும், தப்பு செய்யும் அமைச்சர்களும் அவர்களுக்கு துணைபோகும் அதிகாரிகளும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்று தினமும் சொல்லத் தொடங்கிவிட்டார்.

அமைச்சர்களுக்கு தண்டனை என்பதைக்கூட ஏற்றுக் கொள்வார்கள். அவர்கள் தேர்தலுக்கு தேர்தல் மாறக்கூடியவர்கள். ஆனால், அதிகாரிகள் தொடர்ந்து அரசுப் பொறுப்பில் இருக்கக்கூடியவர்கள். அவர்களுக்கு தண்டனை என்று மிரட்டினால், அவர்கள், திமுகவுக்கு எதிரான வேலைகளை பொறுப்பில் இருந்துகொண்டே செய்ய மாட்டார்களா?

அதைத்தான் செய்தார்கள். தேர்தல் பிரச்சாரம் ஆளுங்கட்சிக்கு ஜீரோ என்ற நிலைமையை எட்டியது. அப்போதாவது ஸ்டாலின் சுதாரித்திருக்க வேண்டும். அப்போதும், எடப்பாடி அரசை குறைத்து மதிப்பிட்டுவிட்டார். கடைசிச் சட்டமன்றக் கூட்டம் முடியும் வரை சில அஸ்திரங்களை அவர் பத்திரப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால், அதை தவறவிட்டுவிட்டார்.

எடப்பாடியால் என்ன செய்துவிட முடியும் என்று எளிதாக நினைத்துவிட்டார். ஆம், மக்களைக் கவரக்கூடிய தனது முக்கியமான திட்டங்களை அடிக்கடி பேசத் தொடங்கினார். நகைக்கடன் தள்ளுபடி, விவசாயக்கடன் தள்ளுபடி, மகளிர் சுயஉதவிக் குழு கடன்கள் தள்ளுபடி போன்ற திட்டங்களை கொங்கு மண்டல விவசாயிகளை கவருவதற்காக அடிக்கடி பேசி கைதட்டல் வாங்கினார். அவருடைய அந்த பிரச்சாரத்துக்கு மக்கள் மத்தியில் குறிப்பாக அதிமுகவினர் மத்தியிலேயே அதிக வரவேற்பு இருப்பதை அதிகாரிகள் எடப்பாடிக்கு தெரிவித்தனர்.

அதிமுகவுக்காக வேலை செய்த பிரச்சார டீமும் எடப்பாடியிடம் இதை ஒப்புக்கொண்டது. வேறு வழியில்லை திமுக மொத்த இடங்களையும் ஸ்வீப் செய்ய போகிறது என்று கூறிவிட்டார்கள். எனவேதான், சட்டமன்றத்தின் கடைசிக் கூட்டத்தொடரின்போது, திமுக அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் எடப்பாடியே நிறைவேற்றுவதாக அறிவித்தார். அவருடைய அந்த அறிவிப்பைத் தொடர்ந்து, மக்கள் மத்தியில் குறிப்பாக அதிமுகவினர் மத்தியில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது.

படுதோல்வி என்ற பயத்தில் இருந்த அதிமுகவினர், எடப்பாடியின் தந்திரத்தால் தங்களுடைய கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கையை பெற்றனர். அதுவரை படுதோல்வி என்ற கணிப்பை வெளியிட்டவர்கள்கூட அதிமுக கணிசமான இடங்களைக் கைப்பற்றும் என்று கூறத்தொடங்கினார்கள்.

கொங்குமண்டல விவசாயிகள், தங்கள் சாதியைச் சேர்ந்த எடப்பாடியின் இந்த அறிவிப்புகளை அவருடைய ஆட்சித்திறன் என்று நம்பத் தொடங்கினார்கள். இதன்விளைவே, அதிமுக கூட்டணி பெற்ற 75 இடங்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

ஆக, இன்றைக்கு எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக உட்கார்ந்திருப்பதற்கு திமுக தலைவர் ஸ்டாலினே காரணம் என்பதை அவரே ஒப்புக்கொள்வார்.

இதில் வேண்டுமானால், எடப்பாடி ஜெயித்திருக்கலாம். ஆனால் இனி வரும் காலம் ஸ்டாலினை சமாளிக்க முடியாமல் அவர் திணறுவார் என்பது மட்டும் உறுதி. அதற்கு ஏற்ற வகையிலேயே ஸ்டாலின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை இந்தியாவில் எந்த மாநில முதல்வரும் கையாளாத வகையில் மிகத் திறமையாக செயல்படுத்துகிறார். எடப்பாடி காலத்தில் பறிக்கப்பட்ட மாநில உரிமைகளை மீட்டெடுப்பதிலும் ஸ்டாலின் மிக நேர்த்தியாக செயல்படுகிறார்.

Leave A Reply