மயில் மீன்!

Share

ஒரு பகுதி நிலப்பரப்பை மூன்று பகுதி நீராகச் சூழ்ந்து பிரம்மாண்டமாக எல்லையில்லா அற்புதங்களை, அதிசய உயிரினங்களை உள்ளடக்கி காட்சி தருகிறது கடல். கடலில் உள்ள மீன்கள் மட்டுமே எண்ணிலடங்காத வகையில் உள்ளன. மீன்களின் வகை எண்ணிலடங்காதவையாக இருந்தாலும் ஒருசில மீன்கள் நம் மீனவர்களால் நமக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றுதான் மயில் மீன். ஆங்கிலத்தில் ஸ்வார்ட் ஃபிஷ் (sword fish) என்று அழைக்கப்படும் இந்த மீனின் விலங்கியல் பெயர் சைபியஸ் கிளாடியஸ் ஆகும். கிளாடியஸ் என்றால் லத்தின் மொழியில் வாள் என்று அர்த்தம். இது சுமார் ஒன்பது அடி நீளம்வரை வளரக்கூடியது. உலகம் முழுதும் உள்ள சற்று வெதுவெதுப்பான கடற்பகுதிகளில் காணப்படும். பசிபிக், அட்லாண்டிக், ஆர்டிக் மற்றும் இந்தியப் பெருங்கடலில் கூட்டம் கூட்டமாகக் காணப்படும். முதுகுப்புறம் விரித்த மயில்தோகை போன்ற அமைப்பு கொண்டிருப்பதால் மயில் மீன் எனத் தமிழில் குறிப்பிடுகிறார்கள்.

இந்த மீனினத்தில் பல வகைகளுள்ளன. அதிக அளவாக சுமார் 90 கிலோ வரை இறைச்சியையுடையது. எனினும் நீளம் மற்றும் எடையில் பல்வேறு வேறுபாடுகள் கொண்டவையாக உள்ளன. தமிழகத்தில் தூத்துக்குடிக் கடற்பிரதேசத்தில் அரிதாக சாம்பல் நிறமுள்ள, ஆறு முதல் ஏழடி நீளமுள்ள மயில் மீன்கள் பிடிபடுகின்றன. இது கடல் வாழ் உயிரினங்களில் மிக வேகமாக நீந்தக்கூடியது. மணிக்குச் சராசரியாக 100 கி.மீ. வேகத்தில் நீந்தும். கடலின் மேல்பரப்பில் தாவித்தாவி நீந்தும்போது படகிலுள்ள மீனவர்களை தனது தாடையால் தாக்கி ஆழமான காயங்களை ஏற்படுத்திவிடுவதும் உண்டு. ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் மயில் மீன்களைத் தூண்டில் போட்டு பிடிப்பது மிகப் பிரபலமான பொழுதுபோக்காக உள்ளது.

Leave A Reply