விண்வெளி ஆராய்ச்சி வரலாறு – 14 – ஆதனூர் சோழன்

Share

நிலவில் முதல் அமெரிக்க விண்கலம்

(ஏப்ரல் 26, 1962)

1959ஆம் ஆண்டிலேயே சோவியத் யூனியனின் விண்கலம் நிலவில் இறங்கிவிட்டது.

சுமார் 3 ஆண்டுகள் கழித்து அமெரிக்காவில் ரேஞ்சர்-4 விண்கலம் நிலவில் இறங்கியது.

1962 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி இது நடந்தது.

அந்த மாதம் 23ஆம் தேதி கேப் கேனவெரல் ஏவுதலத்திலிருந்து அட்லஸ்-ஏஜெனா என்ற ராக்கெட் ரேஞ்சர்-4 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது.

இந்த பயணத்தின் முக்கிய நோக்கம் விண்கலத்தை நிலவின் மேற்பரப்பில் இறக்குவது மட்டுமல்ல. விண்கலத்தில் பொருத்தப்பட்டிருந்த டெலிவிஷன் கேமராக்கள் மூலம் மிக அருகில் நிலவை படம் பிடிப்பதும் ஆகும்.

திட்டமிட்டபடி விண்கலம் நிலவில் இறங்கியது. ஆனால் தரையிறங்கிய வேகத்தில் டெலிவிஷன் கேமராக்கள் இயங்கத் தவறிவிட்டன. விண்கலத்தில் இருந்த மின்சார இணைப்புகளில் பழுது ஏற்பட்டு விட்டது.

நிலவின் மேற்பரப்பை நெருங்கும் வேளையில் படிப்படியாக நிலவை படம்பிடிக்கும் வகையில் விண்கலத்தின் கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன. மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டதால் அது நடைபெறாமல் போயிற்று.

ஆனால் ரேடியோ டிரான்ஸ்மிட்டர் மட்டும் இயங்கியது. அதன் உதவியால்தான் விண்கலம் நிலவில் இறங்கியதை விஞ்ஞானிகள் உறுதி செய்ய முடிந்தது.

அந்த வகையில் விஞ்ஞானிகளின் எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிந்தது.

ரேஞ்சர் வரிசை ராக்கெட்டுகள் நிலா பயணத்தில் முக்கியமான பங்கு வகித்தன. நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தில் அடுத்தடுத்த கட்டங்களை இவை முடிவு செய்தன.

முதல் 6 ரேஞ்சர் ராக்கெட்டுகள் தோல்வியில் முடிந்தன. அவற்றில் சில நிலவை விட்டு முற்றாக விலகி விண்வெளியில் தொலைந்து போயின.

1964ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31ஆம் தேதி ரேஞ்சர்-7 ராக்கெட் நிலவில் பத்திரமாக தரையிறங்கியது. அதற்கு முன் அது நிலவின் மேற்பரப்பை படிப்படியாக 4 ஆயிரம் புகைப்படங்கள் எடுத்து பூமிக்கு அனுப்பியது.

தரையைத் தொடுவதற்கு சில வினாடிகள் வரை நிலவின் மேற்பரப்பை அது வெகு நெருக்கமாக படம் பிடித்தது.

ரேஞ்சர்-8 விண்கலம் 1965ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நிலவை தொட்டது. அதே ஆண்டு மார்ச் மாதம் ரேஞ்சர்-9 விண்கலமும் நிலவில் இறங்கியது.

மொத்தத்தில் இந்த மூன்று விண்கலங்களும் அனுப்பிய தகவல்கள் அப்பலோ விண்கலத்தில் மனிதர்கள் நிலவை அடைவதற்கு மிகவும் உதவிகரமாக இருந்தன.

விண்வெளி ஆராய்ச்சி வரலாறு – 15 – ஆதனூர் சோழன்

Leave A Reply