விண்வெளி ஆராய்ச்சி வரலாறு – 15 – ஆதனூர் சோழன்

Share

வெள்ளிக் கோளின் வீணை நாதம் (டிசம்பர் 14, 1962)

ஒருபுறம் நிலவை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் போதே, மறுபுறம் வெள்ளிக் கோளுக்கு விண்கலத்தை அனுப்பியது அமெரிக்கா.

மெரைனர் என்ற விண்கலத்தை அது அனுப்பியது. ஆனால், முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது.

அதைத்தொடர்ந்து, மெரைனர்-2 என்ற விண்கலத்தை அமெரிக்கா அனுப்பியது.

110 நாட்கள் பயணம் செய்த அது, 1962 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி வெள்ளிக் கோளை நெருங்கியது.

வெள்ளிக் கோளை ஆய்வு செய்வது இதுதான் முதன்முறை. வெள்ளிக் கோளை விண்கலம் நெருங்கியதும் விண்கலத்தில் இருந்த டிரான்ஸ்மிட்டர் வெகு வித்தியாசமான வீணை நாதம் போன்ற இசையை பூமிக்கு அனுப்பியது.

கலிபோர்னியாவில் உள்ள கோல்ட்ஸ்டோன் ஒலிவாங்கி நிலையம் இதை பதிவு செய்தது. மெல்லிய வீணை இசை போன்ற சப்தத்தை கேட்டதும் விஞ்ஞானிகள் உற்சாகம் அடைந்தனர்.

“வெள்ளிக் கோளின் இசையைக் கேளுங்கள்” என்றார் வில்லியம் பிக்கரிங் என்ற விஞ்ஞானி.

வெள்ளிக் கோளை 40 நிமிடங்கள் ஸ்கேன் செய்தது விண்கலம்.

வெள்ளிக் கோளை சுற்றிலும் அடர்த்தியான மேகங்கள் சூழ்ந்திருந்தன. அந்த மேகங்களுக்கு ஊடாக கோளில் இருந்து வெளிப்படும் வெப்பம், நுண்ணலைகள் ஆகியவற்றை விண்கலம் பதிவு செய்தது.

வெள்ளிக் கோளில் இருந்து தொடர்ச்சியாக வெளிப்பட்ட சமிக்ஞைகள் 5 கோடியே 80 லட்சம் கிலோ மீட்டர் விண்வெளியைப் பற்றிய தகவல்களை அறிய உதவியாக இருந்தது.

விண்கலத்தின் ஆய்வுகள் வெள்ளிக் கோளில் ஏதேனும் ஒரு வடிவத்தில் உயிர்கள் இருக்க்க கூடுமா என்ற ஆராய்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தன.

மெரைனர்-2 விண்கலத்தின் ஸ்கேன் அமைப்புகள் அனைத்தும் துல்லியமாக செயல்பட்டன.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் வெள்ளிக் கோள் பற்றிய புதிய தகவல்கள் ஏராளமாக கிடைத்தன.

இதற்கு முன் இவ்வளவு தூரத்திலிருந்து ரேடியோ சமிக்ஞைகள் கிடைத்ததே இல்லை.

பல்வேறு இடையூறுகளைக் கடந்து மெரைனர்-2 சோதனை முயற்சி அற்புதமான வெற்றியைப் பெற்றது.

சூரியனின் தகிக்கும் வெப்பத்தைத் தாங்கிக் கொண்டு விண்கலத்தில் இருந்த சாதனங்கள் நன்றாகவே இயங்கின.

மெரைனர்-2 விண்கலம் அனுப்பிய தகவல்களை ஆய்வு செய்த பிறகுதான், வெள்ளிக் கோளின் தட்பவெப்ப நிலை குறித்து முதல்முறையாக தெரியவந்தது.

அந்தக் கோள் பூமியைப் போல இல்லாமல், எதிர்திசையில் சுழல்கிறது. வெள்ளிக் கோள் உஷ்ணத்தால் தகிக்கிறது. கோள் முழுவதும் கார்பன் டை ஆக்ஸைடு நிரம்பியிருக்கிறது என்ற உண்மைகள் வெளியுலகுக்கு அறிவிக்கப்பட்டன. அங்கு காந்த வயல் பரப்பு எதுவும் இல்லை என்ற தகவலும் தெரியவந்தது.

இதைத் தாண்டி வெள்ளிக் கோள் தொடர்பாக வேறு தகவல்கள் கிடைக்கவில்லை. ஆனால், 1967 ஆம் ஆண்டு சோவியத் யூனியன் அனுப்பிய வெனேரா-4 என்ற விண்கலம் புதிய தகவல்களை அனுப்பியது. அதைத் தொடர்ந்து, பல வெனேரா விண்கலங்கள் வெள்ளிக் கோளுக்கு அனுப்பப்பட்டன.

பயனீர் வீனஸ் என்ற பெயரில் நாஸாவும் இரண்டு விண்கலங்களை அனுப்பியது. இந்த விண்கலங்கள் வெள்ளிக் கோளின் அபாயகரமான தன்மைகளை உலகுக்கு அறிவித்தன.

விண்வெளி ஆராய்ச்சி வரலாறு – 16 – ஆதனூர் சோழன்

Leave A Reply