விண்வெளியில் முதல் பெண் (ஜீன் 16, 1963)
இந்தச் சாதனையையும் சோவியத் ரஷ்யாதான் நிகழ்த்தியது.
அந்த பெண்ணின் பெயர் வாலன்டினா டெரஷ்கோவா. 26 வயதான இளம் பெண்.
நெசவுத் தொழிலாளியான இவருக்கு ஒரு ஆசை.
சோவியத் யூனியன் சார்பில் முதன்முதலாக யூரி காகரின் விண்வெளிக்குச் சென்று திரும்பியபோது உதித்த ஆசை.
“நானும் விண்வெளிக்குச் செல்ல வேண்டும்”
நெசவுத் தொழிலாளியான ஒரு பெண் இப்படி ஆசைப்படலாம். ஆனால் அது வேறு எந்த நாட்டிலாவது நிறைவேற முடியுமா?
சோவியத் யூனியனில் அவருடைய ஆசை நிறைவேறியது.
1963ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16ஆம் தேதி அவர் வோஸ்டாக்-6 என்ற விண்கலத்தில் அவர் விண்வெளிக்குள் நுழைந்தார். அது ஒரு புத்தம் புதிய சோதனை முயற்சி.
ஏற்கெனவே, இரண்டு நாட்களுக்கு முன்பு கர்னல் வாலரி பைகோவ்ஸ்கி என்ற விண்வெளி வீரர் வோஸ்டாக்-5 என்ற விண்கலத்தில் விண்வெளியில் சுற்றிக் கொண்டிருந்தார்.
டெரஷ்கோவா பயணம் செய்த விண்கலத்தை ஏற்கெனவே விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் பைகோவ்ஸ்கியின் விண்கலத்துடன் இணைக்க சோவியத் விஞ்ஞானிகள் திட்டமிட்டிருந்தார்கள்.
அதற்காகத்தான் டெரஷ்கோவா புறப்பட்டார்.
விண்வெளிக்குச் சென்ற முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார். ரஷ்ய அதிபர் குருசேவ் ஒரு தந்தையைப் போல பெருமிதம் கொள்வதாக வாழ்த்துத் தெரிவித்தார்.
மாஸ்கோவில் உள்ள செஞ்சதுக்கத்தில் லட்சக்கணக்கான ரஷ்ய பெண்கள் கூடி கொண்டாடினார்கள்.
டெரஷ்கோவா இரண்டு நாட்கள் 22 மணி நேரம் 50 நிமிடங்கள் விண்வெளியில் இருந்தார். 12 லட்சத்து 50 ஆயிரம் மைல்கள் அவர் பயணம் செய்து பூமியை 49 முறை சுற்றியிருந்தார்.
ஏற்கெனவே விண்வெளியில் சுற்றிக் கொண்டிருந்த பைகோவ்ஸ்கி புதிய சாதனை ஒன்றை படைத்தார். அதுவரை அதிகபட்ச சாதனையாக கருதப்பட்ட நாட்களைவிட கூடுதலாக அவர் விண்வெளியில் கழித்திருந்தார்.
அவர் 82 முறை பூமியைச் சுற்றியிருந்தார். 20 லட்சத்து 60 ஆயிரம் மைல்கள் விண்வெளியில் அவர் பயணம் செய்திருந்தார். நான்கு நாட்கள் 23 மணி நேரம் 54 நிமிடங்கள் அவர் விண்வெளியில் தங்கியிருந்தார்.
இருவரும் கஜகஸ்தான் மாநிலத்தில் பாராசூட் மூலம் பத்திரமாக தரையிறங்கினார்கள்.
பூமிக்குத் திரும்பிய பிறகு டெரஸ்கோவா விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடவில்லை. அவர் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பணியாற்றினார்.