நிலவில் ஒரு மோதல் (மார்ச் 24, 1965) – History of space exploration

Share

1965ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ஆம் தேதி அமெரிக்கர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவம்.

அமெரிக்கா அனுப்பிய ரேஞ்சர்-9 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் மோதியது. அந்த மோதல் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது.

விண்கலத்தில் போர்த்தப்பட்ட விசேஷமான கேமராக்கள் இதை சாத்தியமாக்கின. 15 நிமிடங்கள் இந்த மோதல் படிப்படியாக ஒளிபரப்பானது. நிலவின் மேற்பரப்பில் மோதும்வரை தொடர்ச்சியாக படங்கள் ஒளிபரப்பாயின.

நிலவின் மேற்பகுதி இளகுவாக இருக்கும் என்று கருதப்பட்டது. விண்கலங்கள் அங்கு பத்திரமாக இறங்க முடியாது, மனிதர்கள் நடமாட முடியாது என்றெல்லாம் யூகங்கள் உலவின.

நிலவுக்கு மனிதனை அனுப்புவதற்குமுன் அதன் பத்திரத்தன் மையை சோதிக்க வேண்டிய அவசியம் இருந்தது. எனவே ரேஞ்சர் விண்கலங்கள் மூலமாக நிலவின் மேற்பகுதியை அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.

அதன் ஒரு கட்டமாகத்தான் ரேஞ்சர்-7 மற்றும் ரேஞ்சர்-8 விண்கலங்கள் நிலவை மிக நெருக்கமாக புகைப்படங்கள் எடுத்து அனுப்பின. அதன் தொடர்ச்சியாக ரேஞ்சர்-9 விண்கலத்தை நிலவின்மீது மோதும் வகையில் விஞ்ஞானிகள் அனுப்பி வைத்தனர்.

அதுவரை புகைப்படங்களாக மட்டுமே பார்த்து வந்த சாதாரண மக்கள், இந்த முறை தங்களுடைய வீடுகளில் அமர்ந்தபடி நிலவை பார்த்து ரசித்தனர்.

இந்த மோதலுக்கு 5 நிமிடங்கள் முன்பு சுமார் 644 கிலோ மீட்டர் உயத்திலிருந்து எடுக்கப்பட்ட படத்தில், நிலவின் மேற்பரப்பில் மிகப்பெரிய சாலைகள் இருப்பது போன்ற தோற்றங்கள் ஒளிபரப்பாயின.

அடுத்த கட்டமாக 285 கிலோ மீட்டர் உயரத்துக்கு இறங்கியபோது மனித தோலை மைக்ரோஸ்கோப்பில் பார்ப்பதுபோல கரடுமுரடான தோற்றம் ஒளிபரப்பானது.

ரேஞ்சர்-9 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் மோதுவதற்கு ஒரு வினாடியில் 10ல் 2 பங்கு நேரம் மட்டுமே இருந்த நிலையில் இறுதிப் படம் ஒளிபரப்பானது. அந்த படம்தான் நிலவின் மேற்பரப்பு எவ்வளவு கெட்டியானது என்பதற்கு ஆதாரமாக கருதப்பட்டது.

ரேஞ்சர்-9 விண்கலம் எடுத்த படங்களை மட்டுமின்றி ஏற்கெனவே எடுக்கப்பட்ட படங்களையும் சேர்த்து சுமார் 11 ஆயிரம் படங்களை விஞ்ஞானிகள் பகுத்தாய்வு செய்தனர்.

இந்த படங்கள் சோவியத் யூனியனை அமெரிக்கா முந்துவது போன்ற தோற்றத்தை உருவாக்கின.

ஆனால் நிலவின் மேற்பகுதி கெட்டியானது என்பதை மட்டுமே அமெரிக்க விஞ்ஞானிகள் உறுதி செய்தனர். மற்றபடி விண்வெளி ஆராய்ச்சியில் சோவியத் யூனியன் தனிப்பாதை வகுத்து ரகசியமாக முன்னேறிக்கொண்டு இருந்தது.

பூமிக்குத் திரும்பிய விண்கலம் (ஆகஸ்ட் 29, 1965) – History of space exploration

Leave A Reply