நிலவில் இறங்கிய சோவியத் விண்கலம் (பிப்ரவரி 03, 1966) – History of space exploration

Share

முதன் முறையாக நிலவில் விண்கலத்தை பத்திரமாக தரையிறக்கும் முயற்சியில் சோவியத் விஞ்ஞானிகள் வெற்றி பெற்றனர்.

1966ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3 ஆம் தேதி லூனா-9 விண்கலம் குறைந்த வேகத்தில் பயணம் செய்து நிலவின் மேற்பரப்பில் பத்திரமாக இறங்கியது.

தரையிறங்கியவுடன் அந்த விண்கலம் தன்னைச் சுற்றிய நிலவின் தரைப் பகுதியை படம் பிடிக்கத் தொடங்கியது. முதன் முறையாக நிலவின் தரையில் விண்கலம் இறங்கி அதன் அமைப்பை படம் பிடித்து அனுப்பியது.

ரெய்னர், மேரியஸ் என்ற இரு பள்ளத்தாக்குகள் இருந்த பகுதிக்கு மேற்குப் புறமாக அந்த விண்கலம் இறங்கியிருந்தது.

நிலவின் மேற்பரப்பு இளகுவாக இருக்கும். அங்கு விண்கலங்கள் இறங்க முடியாது. புதை மணலாகக் கூட இருக்கலாம் என்றெல்லாம் கருத்துகள் பரவி இருந்தன. அவற்றை பொய்யாக்கும் வகையில் சோவியத் விண்கலம் பத்திரமாக தரையிறங்கியது.

நிலவுக்கு பயணம் செய்யும் மனிதர்கள் மணலுக்குள் மூழ்கிவிட மாட்டார்கள் என்பதை லூனா-9 விண்கலம் உலகுக்கு அறிவித்தது.

1970ஆம் ஆண்டு நிலவுக்கு மனிதனை அனுப்ப சோவியத் யூனியன் திட்டமிட்டு இருந்தது. அதற்காகவே இந்த சோதனை நடத்தப்பட்டது.

“நிலா இறுக்கமான கோள். அங்கு பாறைகளும் கற்களும் நிரம்பி இருக்கின்றன”

சோவியத் விஞ்ஞானிகளின் இந்த அறிவிப்பு நிலா ஆராய்ச்சியில் புதிய திருப்பு முனையாக அமைந்தது.

சாக்லெட் நிறத்தில் அடர்த்தியான வண்ணத்தில் பொக்குப் பாறை மற்றும் எரிமலை குழம்புகளை ஒத்து அந்த மேற்பரப்பு அமைந்திருக்கிறது.

லூனா-9 விண்கலத்தில் பொருத்தப்பட்டிருந்த சாதனங்கள் ரகசியமாகவே வைக்கப்பட்டு இருந்தன. அந்த சாதனங்கள் நிலவின் மேற்பரப்பை படம் பிடிப்பதற்கு மட்டுமின்றி அங்கு நிலவும் தட்பவெப்ப நிலை, அழுத்தம், மேற்பரப்பின் இயற்கை அமைப்பு ஆகிவற்றை பதிவு செய்யும் வகையிலும் பொருத்தப் பட்டு இருந்தன.

அதுமட்டுமின்றி நிலவு குறித்த தகவல்களை பூமிக்கு அனுப்பும் வகையில் ரேடியோ சாதனமும் விண்கலத்தில் இருந்ததாக கருதப்பட்டது.

மனிதர்களுடன் தரையிறங்கும் கனமான விண்கலங்களை தாங்குவதற்கு ஏற்ற வகையில் நிலவின் மேற்பரப்பு இருப்பதை லூனா-9 விண்கலம் உறுதி செய்தது.

அவ்வாறு நிலவுக்கு அனுப்பப்படும் விண்கலங்களை எப்படி பத்திரமாக தரையிறக்க வேண்டும் என்பதற்கு முன்னோடியா கவே இந்த சோதனை அமைந்திருந்தது.

லூனா-9 விண்கலம் தரையிறங்குவதற்கு முன்பு மணிக்கு 9 ஆயிரத்து 600 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்தது. ஆனால், நிலவில் இறங்குவதற்கு வசதியாக அதன் வேகம் மணிக்கு 9.65 கிலோ மீட்டராக குறைக்கப்பட்டது. விண்கலத்தின் எடை 1360 கிலோவாக இருந்தாலும் நிலவில் அது மிக மெதுவாக, பத்திரமாக தரையிறங்கியது.

லூனா-9 விண்கலத்திற்கு முன் பல சோதனைகள் நடத்தப்பட்டன. அத்தனையும் தோல்வியில் முடிந்தன. இருந்தா லும், கடைசியில் சோவியத் விஞ்ஞானிகள் தங்கள் முயற்சியில் வெற்றி பெற்றார்கள்.

அடுத்த 3 நாட்கள் அந்த விண்கலம் 9 புகைப்படங்களை பூமிக்கு அனுப்பியது. அந்த படங்களை மிக தாமதமாகவே சோவியத் விஞ்ஞானிகள் வெளியிட்டார்கள். அதற்கு முன் ஜோட்ரல் பேங்க் டெலஸ்கோப் லூனா-9லிருந்து கிடைத்த சமிக்ஞைகளை பெற்று வெளியிட்டது.

இதுபற்றிய தகவல் சோவியத் யூனியனுக்கு தெரிவிக்கப்படவில்லை.

Leave A Reply