சாதனை படைக்கும் சிவசங்கர் சா.சி.- கருங்குயில்

Share

அந்த 29 வயது இளைஞனின் முன்னே மாபெரும் சவால் காத்திருந்தது. திமுக வரலாற்றிலேயே மிக இளம் வயதிலேயே எவருக்கும் கிடைத்திராத மாவட்ட செயலாளர் பொறுப்பில் செயல்படும் வாய்ப்புதான் அந்த சவால். அதுவும் சனநாயக ரீதியில் உட்கட்சி தேர்தல் மூலம் கிடைத்த பொறுப்பு.

முதல்நாள் வரை மாவட்ட கழக  செயலாளராக பணியாற்றிய மனிதர் கடும் உழைப்பாளி. கழகத்தின் மீதும், தலைவர் மீதும் தீவிர பற்று கொண்டவர். கழகப்பணி என வந்துவிட்டால் வெயில்-மழை, இரவு-பகலெல்லாம் அவருக்கு பொருட்டே அல்ல. மாவட்டம் முழுக்க சுழன்று கழகத்தை கட்டமைத்தவர்.

ஆயுத புரட்சியில் தடம் மாறிக்கொண்டிருந்த முந்திரிக்காட்டு மண்ணில், மெல்ல அறிவுப்புரட்சியை விதைத்தவர். அப்பேர்பட்ட மனிதரை விட சிறப்பாக பணியாற்ற வேண்டிய சவால், அந்த இளைஞனின் முன் இருந்தது.

எதிர்கட்சியினர் அவரை சிறு பையன்தானே என எளிதாக எண்ணினர். இன்னும் சிலர் பொறாமையோடு அந்த இளைஞனை அனுகினர். அவர்களுக்கு, தனது செயல்களால் பதிலளித்து காட்டினார் அந்த இளைஞன்.

அந்த இளைஞனின் பெயர் ‘எஸ்.எஸ்.சிவசங்கர்’. அவருக்கு முன் மாவட்ட செயலாளராக பணியாற்றிய மனிதர் வேறு யாருமல்ல அவரின் தந்தையார் திரு “எஸ்.சிவசுப்ரமணியன்” அவர்கள்.

அரசியலில் நன்கு பரிச்சயமானவர்களின் பிள்ளைகள், எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் முக்கியமானது அடையாளப் பிரச்சினை. “இன்னார் மகன் என்பதால் இந்த வாய்ப்பு என, பலரும் பொத்தாம் பொதுவாக பேசிச்செல்வர்”.

மாறாக அரசியலில் “வாய்ப்பு கிடைப்பதும், கிடைத்த வாய்ப்பை தக்கவைத்துக் கொள்வதும் சாதாரண விசயமல்ல”. அதற்கு கடின உழைப்பும், விசுவாசமும் தேவை. மிகச்சரியாக சொல்ல வேண்டுமெனில் கட்சியின் தலைமை முதல் கீழ்மட்ட தொண்டர்கள் வரை அனைவரிடமும் நம்பிக்கையை பெற வேண்டும்.

அப்படி பெறும் “நம்பிக்கை” மட்டுமே ஒருவரை அரசியலில் தொடர்ந்து நீடிக்கச் செய்யும். அப்படியான நம்பிக்கையை பெற்று  கொள்கையுணர்வும், நெஞ்சுரமும் கொண்டு இன்றளவும் திறம்பட பணியாற்றும் வாய்ப்பை பெற்றிருக்கிறார் திரு எஸ்.எஸ்.சிவசங்கர்.

இடைவிடாது கழகப்பணி !

பெருமை கொள்ளாத அறிவு !

அன்பினால் கட்டியாளும் பண்பு !

ஆரவாரம் இல்லாத பயணம் !

நேர்த்தியான எழுத்தாளுமை !

என திரு எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்களது பொது வாழ்வுப்பயணம் அர்த்தம் நிறைந்தது. அன்று இளைஞராக அரசியலில் நுழைந்தவர், இன்று பல ஆயிரம் இளைஞர் பட்டாளங்களை தன் பின்னே கழகத்தில் பயணிக்க வைத்திருக்கிறார்.

அந்த 29 வயது இளைஞனுக்கு, இப்போது வயது 52. இன்றும் அவர் திமுகவின் மாவட்ட செயலாளராக 5-வது முறையாக தேர்வாகியிருக்கிறார்.

Leave A Reply