இலங்கை மலையகத் தமிழரின் 150 ஆண்டு வரலாறு – மலையக எழுத்தாளர் எஸ்தர்

Share

தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் ஸ்ரீலங்காவின் மலையகப் பகுதிகளிலும் தேயிலை மற்றும் காப்பித் தோட்டங்களையும், பர்மாவில் (மியான்மர்) ரப்பர் தோட்டங்களையும், மொரிசியஸ் நாட்டில் கரும்புத் தோட்டங்களையும் 19-ஆம் நூற்றாண்டில் வெள்ளையர்கள் உருவாக்கினர்.

இவ்வாறு புதிதாக மலைத் தோட்டங்களை உருவாக்க, காடுகளைத் திருத்தி அமைக்க வேண்டியதிருந்தது. அடுத்து இங்குப் பயிரிடப் பட்ட காப்பி, தேயிலை, ரப்பர் ஆகிய பணப் பயிர்களைப் பராமரிக்கவும், இவற்றின் பலனைச் சேகரிக்கவும் மிகுதியான அளவில் தொழிலாளர்கள் தேவைப்பட்டனர்.

இலங்கையின் மலையகப் பகுதியின் தலை நகராக விளங்கிய கண்டியை 1815-இல் ஆங்கிலேயர் கைப்பற்றினர். இதன் பின்னர் 1824-இல் இம் மலைப் பகுதியில் காப்பி பயிரிடத் தொடங்கினர். 1828-இல் ஜோர்ஜ் பேர்ட் என்ற ஆங்கிலேயர் இப்பகுதியில் காப்பியும் கொக்கோவும் பயிரிடும் தோட்டங்களை உருவாக்கினார். இதையடுத்து வேறு சில ஆங்கிலேயரும் மலைத் தோட்டங்களை உருவாக்கினர். 1869-1880ஆம் ஆண்டுகளில் ஒரு வகையான நோய்த் தாக்குதலுக்கு, காப்பிப் பயிர் ஆளாகியது. இதன் பின்னர் காப்பி மட்டுமின்றி, தேயிலை, கொக்கோ, சிங்கோனா ஆகிய பயிர்களையும் வளர்த்தனர். பின்னர் ரப்பரும் பயிரிடத் தொடங்கினர். என்றால் ‘தேயிலைத் தோட்டங்கள்’ என்று அழைக்கப்படும் அளவிற்குத் தேயிலையே பிரதானப் பயிராக இங்கு விளங்கியது. இத்தோட்டங்களை உருவாக்க சிங்களக் குடியிருப்புகள் பல அழிக்கப்பட்டன. தங்கள் குடியிருப்பு உரிமையை அழித்தவர்கள் என்ற வெறுப்புணர்வின் காரணமாக வெள்ளையர்களின் தோட்டங்களில் பணி புரிய அவர்கள் விரும்பவில்லை. மேலும் செங்குத்தான மலைச்சரிவுகளிலும் அடர்ந்த காட்டுப் பகுதிகளிலும் கடினமாக உழைக்க அவர்கள் முன்வர வில்லை.

இதனால் இலங்கைக்கு வெளியிலிருந்து தொழிலாளர்களை எதிர்பார்க்க வேண்டிய நிலை வெள்ளையர்களுக்கேற்பட்டது. இச்சூழலில் வெள்ளை அரசின் தவறான வேளாண்மைக் கொள்கையால் பாதிக்கப்பட்ட தமிழகக் குடியானவர்கள் தம் வாழ்வுக்கான புதிய ஆதாரங்களைத் தேடவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி இருந்தார்கள்.

இத்தகைய சமூகச் சூழலில் வெள்ளையர்களால் உருவாக்கப்பட்ட மலைத்தோட்டங்கள், கிராமப்புற மக்களுக்கு, பாலைவனச் சோலையாக அமைந்தன. இவர்கள் மட்டுமன்றி, கடன்பட்டு, கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாதவர்கள், சாதி மீறிக் காதலித்தவர்கள், கிரிமினல் குற்றங்களைச் செய்தவர்கள் ஆகியோரின் புகலிடமாகவும் மலைத்தோட்டங்கள் அமைந்தன.

வெள்ளை முதலாளிகளின் இத்தேவையை நிறைவேற்றும் வகையில் ‘ஒப்பந்தக் கூலி முறை’ ((Indentured Labour System) என்ற முறை உருவாக்கப்பட்டது. இதன்படி கிராமப்புற ஏழைக் குடியானவர்கள், தோட்ட முதலாளியிடம் ஒரு குறிப்பிட்ட கால அளவு, அத்தோட்டங்களில் பணிபுரிவதாக ஒப்பந்தம் பத்திரத்தில் கையெழுத்தோ, கைநாட்டோ போட்டுக் கொடுத்துவிடுவர். ஒப்பந்தக் காலம் முடியும் முன்னர் அவர்கள் மலைத்தோட்டங்களை விட்டு வெளியேற முடியாது. திருட்டுத்தனமாகச் சிலர் தாயகத்திற்குத் திரும்பி விடுவதும் உண்டு. தோட்ட முதலாளிகள் கொடுக்கும் புகாரின் அடிப்படையில் இங்குள்ள காவல்துறை அவர்களைக் கைது செய்து அவர்கள் பணிபுரிந்து வந்த தோட்டத்திற்குத் திருப்பி அனுப்பிவிடும்.

ஒரு கட்டத்தில் இம்முறையால் தேவையான ஆட்களைத் திரட்ட முடியாத நிலையில் ‘கங்காணி முறை’ என்ற முறையை அறிமுகப்படுத்தினர். கங்காணி என்பவர் ஏற்கெனவே வெள்ளையர்களுக்கு உரிமையான மலைத்தோட்டங்களில் பணிபுரிந்து வந்த தொழிலாளிதான். முரட்டுத்தனமும், வாக்கு சாதுர்யமும், பொருளாசையும், ஒருசேரப் பெற்றவர்களாகவும் வெள்ளை முதலாளிகளின் நம்பிக்கைக்கு உரியவர்களாகவும் விளங்கியவர்களே கங்காணிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இக்கங்காணிகள், Tine Ticket எனப்படும் அடையாளத் தகடுகளுடன் இலங்கைத் தேயிலைத் தோட்டங்களிலிருந்து புறப்படுவர். அவர்கள் கொண்டு வரும் அடையாளத்தகடில், தோட்டத்தின் பெயர், அது இருக்கும் பகுதி, தகடின் வரிசை எண் ஆகியன குறிக்கப்பட்டிருக்கும். பெரும்பாலும் திருச்சி, மதுரை, இராமநாதபுரம், தஞ்சை, புதுக்கோட்டை, திருநெல்வேலி ஆகிய மாவட்டப்பகுதிகளுக்கே கங்காணிகள் புறப்பட்டு வந்தனர். தங்களது பூர்வீகக் கிராமம், உறவுக்காரர்கள் மற்றும் தன் சாதிக்காரர்கள் வாழும் ஊர் எனத் தமக்கு அறிமுகமான பகுதிகளையே கங்காணிகள் தேர்ந்தெடுத்துக் கொண்டனர்.

திக்கற்று நிற்கும் கிராம மக்களிடம், இலங்கையின் மலையகத் தோட்டங்களை, சொர்க்க லோகம் என வருணித்து, தோட்டத் தொழிலாளர்களாகப் பணிபுரிய அவர்களைக் கங்காணி அழைப்பான். அதை ஏற்றுக்கொண்ட மக்களிடம், தான் கொண்டு வந்த தகடை, இரண்டரை ரூபாய்க்கு விற்றுவிடுவான். சிலர் குடும்பத்துடன் புறப்படுவார்கள். இவர்களது பயணச் செலவை முதலில் கங்காணியே ஏற்றுக்கொள்வான். பின் இவர்கள் தூத்துக்குடி இரயில் நிலையத்திற்கும் மணியாச்சி இரயில் நிலையத்திற்கும் இடையில் உள்ள தட்டப் பாறை அல்லது இராமேஸ்வரம் அருகில் உள்ள மண்டபம் என்ற ஊர்களில் உள்ள தொழிலாளர் முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர்.

இம் முகாம்கள் இலங்கை அரசின் தொழிலாளர் துறையால் நடத்தப்பட்டன. இங்கு நுழையும் போது கங்காணி கொடுத்த தகடைக் கயிற்றில் கோத்து, கழுத்தில், தொங்கவிட்டுக்கொள்ள வேண்டும். காலரா, அம்மை, ஆகிய நோய்களுக்கான தடுப்பூசிகளை ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் போடுவர். இவ்விரு நோய்களும் அவர்களிடம் இல்லை என்று உறுதி செய்த பின்னரே இவர்கள் இராமேஸ்வரத்திற்கு அழைத்துச் செல்லப் பட்டு அங்கிருந்து கப்பல் வாயிலாக இலங்கையின் தலை மன்னார் பகுதிக்கு அல்லது கொழும்பு நகருக்குச் செல்வர். தலை மன்னாரிலிருந்து கால்நடையாக ஆடு, மாடுகளைப்போல் கூட்டம்கூட்டமாக கங்காணி அழைத்துச் செல்வான். வழிநடைக் களைப்பினாலும், போதுமான உணவில்லாமை யாலும் நடைப் பயணத்தின் போதே சிலர் இறந்து போவதும் உண்டு. இத்தொழிலாளர்களைக் ‘கூலி’ என்ற இழிவான சொல்லாலேயே குறித்தனர். இவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம், ‘கூலிச் சம்பளம்’ என்றே குறிப்பிடப்பட்டது. இவர் களிடையே மதப்பிரச்சாரம் செய்ய உருவாக்கப் பட்ட கிறித்தவ மிஷன்கூட ‘கூலி மிஷன்’ என்றே பெயர் பெற்றது. இவர்கள் தமிழர்களாக இருந்த மையால், ‘கூலித் தமிழன்’ தோட்ட காட்டான்’ என்று குறிப்பிட்டு, இவர்களைவிட தாங்கள் உயர் வானவர்கள் என்று யாழ்ப்பாணத் தமிழர்களும், கொழும்பில் வாணிபம் செய்து வந்த இந்தியத் தமிழர்களும் தம்மை வேறுபடுத்திக் காட்டிக் கொண்டனர்.

‘கூலிலயன்கள்’ என்றழைக்கப்படும், குதிரைலாயம் போன்ற வரிசையாக உருவாக்கப்பட்டிருந்த தகரக் குடிசைகளில் இவர்கள் குடியேற்றப்பட்டனர். காலையில் கொம்பு ஊதியதும் அல்லது தப்பு அடித்ததும் எல்லோரும் பிரட்டுக்களத்தில் கூட வேண்டும். ஆங்கிலத்தில் ‘‘Parade Ground’ என்று வெள்ளையர்கள் குறிப்பிட்டதையே ‘பிரட்டுக் களம்’ என்று நம்மவர்கள் குறிப்பிட்டனர். இங்கிருந்து அவர்கள் தோட்டப்பயிர் உள்ள இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுவர். தேயிலைக் கொழுந்தெடுத்தல், காப்பிப் பழம் பறித்தல், செடிகளைக் கவ்வாத்து செய்தல், களை எடுத்தல், புதிய தோட்டம் உருவாக்கக் காடு திருத்தல் ஆகிய பணிகளை இவர்கள் மேற்கொள்வர். குழுக்களாகப் பிரிந்து இவர்கள் வேலை செய்வர். ஒவ்வொரு குழுவையும் கண்காணிக்க ஒரு ‘கங்காணி’ உண்டு இவர்கள் ‘சில்லரைக் கங்காணி’ என்றழைக்கப்பட்டனர்.

கடற்பயணத்திற்கும் செலவான தொகையை, தொழிலாளர்கள் கங்காணிக்குக் கொடுக்க வேண்டும். கூலிகளின் ஊதியத்திலிருந்து தவணை முறையில் இதைப் பிடித்தம் செய்வர். கம்பளி மற்றும் வேட்டிக்கான தொகைக்குக் கங்காணி எவ்வாறு கணக்குச் சொல்லி, ஊதியத்திலிருந்து கழிப்பான் என்பதை சாரல் நாடன் (1988-49)பின் வருமாறு குறிப்பிடுவார்.

“கம்பளி மூன்று ரூபாய், கருப்புக் கம்பளி மூன்று ரூபாய், வேஷ்டி மூன்று ரூபாய், வெள்ளை வேஷ்டி மூன்று ரூபாய்”.

இவர்களை ஈவு இரக்கமின்றி வேலை வாங்குவதற்காக வெள்ளை முதலாளிகள் ‘தலைக்காசு’ அல்லது கங்காணிக் காசு என்ற பெயரால் கூலியாட்களின் கூலியிலிருந்து ஒரு சிறு பகுதி பிடித்தம் செய்து அதைக் கங்காணிக்கு வழங்கி வந்தனர்

Leave A Reply