லெனினுடன் சில நாட்கள் -1 – மாக்ஸிம் கார்க்கி

Share

விளாடிமிர் லெனின் காலமாகி விட்டார். உலகம் அவரை இழந்துவிட்டது.ஒரு சாதாரண மனிதனை அல்ல, ஒரு நிகரற்ற மேதையை இழந்து நிற்கிறது. அவருடைய காலத்தில் வாழ்ந்த எத்தனையோ மேதைகளை காட்டிலும் அவர் மிகப்பெரிய மேதை.

அவருடைய எதிரிகளும் கூட துணிவோடு ஒப்புக் கொண்டார்கள். ஜெர்மன் முதலாளித்துவ பத்திரிகையான “ப்ரேகர் டாகிப்லாட்” லெனினைப் பற்றி ஒரு கட்டுரையை வெளியிட்டது. அந்தக் கட்டுரையின் முக்கிய அம்சமே லெனினுடைய மாபெரும் தோற்றப்பொலிவை வியப்பை வெளியிடுவதாக அமைந்தது. அவருடைய தோற்றப் பொலிவின் மீது மதிப்பும் பிரமிப்பும் கொண்டு அந்த கட்டுரை எழுதப்பட்டது.

“லெனின் மிகப் பெரியவர். பயங்கரமானவர். தனது மரணத்திலும் கூட நம்முடைய கணிப்பையெல்லாம் மீறி வெகு தொலைவில் நிற்பவர்” என்று முடிகிறது கட்டுரையின் இறுதி வாசகம், இந்தக் கட்டுரையின் உள்ளடக்கம் வெறும் பிரமிப்பு மட்டுமல்ல.

“எதிரியிடம் எப்போதும் நறுமணமே வீசும்” என்ற வாசகத்தை சாதாரணமாக கடந்துவிட முடியாது. ஓய்வில்லாமல் இயங்கிய ஒரு மாபெரும் சக்தி ஒழிந்தது என்று எண்ணி, சந்தோஷமும் அந்தக் கட்டுரையில் இல்லை. மகத்தான ஒரு மனிதனின் முயற்சியால் மனித வர்க்கம் அடைகின்ற பெருமைதான் அந்தக் கட்டுரையின் உள்ளடக்கமாக இருக்கிறது.

பயமே இல்லாத வாழ்க்கை. உறுதியான மனோதிடம். இந்த இரண்டுக்கும் சீரிய உதாரணமாக விளங்கியது லெனினுடைய வாழ்க்கை. இவருடைய பெருமைகளை முதலாளித்துவ பத்திரிகைகளும் கூடப் பாராட்டின. ஆனால் இந்த ஒரு மதிப்பைத் தெரிவிக்கும் திராணியோ, அல்லது நாகரிகப் பண்போ கூட வெளி நாட்டில் குடியேறியுள்ள சோவியத் பத்திரிகைகளுக்கு இல்லாமல் போய்விட்டது.

லெனினுடைய முழுமையான சித்திரத்தைத் தீட்டுவது சிரமமான காரியம். மீனுக்குச் செதில்கள் புறத்தோற்றத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது போல, லெனினுடைய வார்த்தைகள் அவருடைய புறத் தோற்றத்தின் ஒரு பகுதியாக அமைந்திருந்தன. எதையும் எளிமையாக, நேரடியாகச் சொல்லுவது அவருடைய இயல்பின் பிரதான அம்சமாகும்.

அவருடைய பராக்கிரம சாதனைகளை நினைத்துப் பார்த்தால், தெய்வீக ஒளி வட்டம் எதுவும் இன்று பிரகாசிக்க வில்லை. சோவிய் ரஷ்ய நாட்டுப் புரட்சி அறிஞன் ஒருவனிடம் இருந்த அதே தீரம்தான் அவரிடத்திலும் காணப்பட்டது. அந்தப் பராக்கிரமத்தை ரஷ்யா நன்கு அறியும்.

உலக சமுதாயத்தில் நீதியை நிலை நாட்ட முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன், மனித வர்க்கத்தின் நல் வாழ்வுக்குப் பாடுபட, சகல வசதிகளையும், சுகங்களையும் துறந்து, சிறிதும் கர்வம் கொள்ளாது, தியாக வாழ்க்கையை மேற்கொண்டதுதான் புரட்சி அறிஞனின் மாபெரும் தீரமாகும். லெனினிடத்தில் அந்தத் தீரம்தான் காணப்பட்டது.

அவர் இறந்ததும் அவரைப்பற்றி எழுதினேன். அப்பொழுது நான் தாங்க முடியாத துக்கத்துடன் இருந்தேன். அதனால் அன்று படபடப்பாகவும், ஒன்றுக் கொன்று பொருந்தாமலும் எழுதும்படியாயிற்று. அத்துடன் வேறு சில காரணங்களை உத்தேசித்தும் நான் பூரணமாக எழுத இயலவில்லை. லெனின் கூர்மையான அறிவு படைத்தவர்; பெரிய ஞானி. “அந்தப் பெரிய ஞானத்தில் பெரிய துக்கமும் அடங்கியிருக்கிறது.”

வெகுகாலத்துக்கு அப்பால் உள்ளதை நோக்குவதே அவருடைய வழக்கம். அவருடைய தொலை நோக்குப் பார்வை எப்போதும் பிசகியதே இல்லை. 1919க்கும் 1921க்கும் நடுவில் அவர் சிலரைப்பற்றி கணித்துக் கூறினார்.அவர்கள் பிற்காலத்தில் எப்படி மாறுவார்கள் என்பதைக் கொஞ்சங்கூட மாறாமல் தீர்க்க தரிசனமாகக் கூறினார்.

இந்தத் தீர்க்க தரிசனங்கள் எப்போதும் நமக்கு இதமானவையாக இருப்பதில்லை. இவற்றை நம்ப வேண்டும் என்ற விருப்பத்தையும் ஒருவனுக்கு ஏற்படுத்துவது இல்லை. ஆனால், கெடுவாய்ப்பாக லெனின் எதையெல்லாம் அல்லது யாரையெல்லாம் சந்தேகப்பட்டாரோ அவை அனைத்தும் பிற்காலத்தில் உண்மையாகவே மாறிவிட்டன.

நான் முன்னால் எழுதிய நினைவுக் குறிப்புகளில் இடைவெளிகளும் முரண்பாடுகளும் உள்ளன. இந்தக் குறைபாடுகளால், அந்தக்குறிப்புகளின் அரைகுறைத் தன்மை பெரிதாகிவிட்டது. நான் லண்டன் காங்கிர ஸிலிருந்து எழுத ஆரம்பித்திருக்க வேண்டும். அந்தக் காங்கிரஸில் சந்தேகம், அவநம்பிக்கை, வெளிப்படையான விரோதம், வெறுப்பு ஆகியவற்றின் வழியே லெனினுடைய முழுமையான வடிவத்தை தெள்ளத் தெளிவாகக் காண முடிந்தது.

முதல் சந்திப்பு

என் மனக்கண் முன் தெளிவாக காட்சியளிக்கிறது. லண்டன் நகரத்தின் ஒரு கோடியில் உள்ள ஒரு மாதா கோவில். மரக் கட்டையால் கட்டப்பட்ட அதன் வெறும் சுவர்கள் யாதொரு அலங்காரமும் இல்லாமல், படுமோசம் என்று சொல்லும் அளவுக்குக் காட்சியளித்தன. அதில் மிகவும் குறுகிய, உயரமான ஜன்னல்கள் வைக்கப்பட்ட ஓடுக்கமான ஒரு ஹால். அந்த ஹால், ஒரு ஏழைப் பள்ளிக்கூடத்தின் வகுப்பு அறையைப் போல இருந்தது.

வெளியே நின்று பார்க்கும்போதுதான் ஏதோ மாதா கோவில் என்று சொல்லும்படியாக இருந்ததே தவிர, உள்ளே நுழைந்துவிட்டால் முற்றிலும் வேறு மாதிரியாகவே இருந்தது. உள்ளே தேவாலயத்துக்குரிய அடையாளங்கள் எவையும் இல்லை. பாதிரியார் நின்று பிரசங்கம் செய்யும் மேடைகூட உயரமாக இல்லாமல் தாழ்ந்து இருந்தது. அது ஹாலின் கோடியில் இல்லாமல், வாசல் பக்கமாக இரண்டு கதவுகளுக்கும் மத்தியில் போடப்பட்டிருந்தது.

நான் இதற்குமுன் லெனினைப் பார்த்ததே இல்லை. அவரைப்பற்றி நான் எவ்வளவு படித்திருக்க வேண்டுமோ அவ்வளவு படித்திருக்கவும் இல்லை. அவரைப்பற்றிக் கொஞ்சம் நஞ்சம் படித்திருந்தேன். எல்லாவற்றையும்விட அவரை நேரில் அறிந்தவர்கள் அவரைப்பற்றி உற்சாகம் ததும்பச் சொன்ன விஷயங்களையும் கேட்டிருந்தேன். இரண்டும் சேர்ந்து அவரிடத்தில் என்னை மிகுந்த ஈடுபாடு கொள்ளும்படி செய்தன.

நாங்கள் பரஸ்பரம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டபோது, அவர் சந்தோஷத்துடன் என் கையைப் பிடித்துக் குலுக்கினார். என்னைக் கூர்ந்து பார்த்தார். பழைய நண்பன் ஒருவன் பேசும் தோரணையில், வேடிக்கையாக, “நீங்கள் வந்தது ரொம்பவும் சந்தோஷம், உங்களுக்குச் சண்டை என்றால் ரொம்பவும் பிடிக்கும் என்று நினைக்கிறேன். இதோ இங்கே அருமையான தகராறு ஒன்று நடக்கப்போகிறது” என்று சொன்னார்.

லெனின் இந்தமாதிரி இருப்பார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. அவர், ரகரத்தைத் தொண்டைக் குழியில் உருட்டி உச்சரித்தார். நிற்கும்போது கைகள் இரண்டையும் கட்டிக் கஷ்கத்தில் செருகிக்கொண்டு ஒரு மாதிரி ஹாயாக நின்று கொண்டிருந்தார். எப்படியும் அவர் ரொம்ப ரொம்பச் சாதாரணமனிதராகத் தோற்றம் அளித்தாரே ஒழிய, ஒரு தலைவர் என்று கருதுவதற்கு ஏற்றவாறு இல்லை.

நான் இலக்கியப் பார்வை உடையவன். அதனால் இப்படிப்பட்ட சிறு சிறு விபரங்களையெல்லாம் கவனிக்க நேரிடுகிறது. இந்த அவசியமான காரியமானது என்னைப் பொறுத்தமட்டிலும் ஒரு பழக்கமாக, சில சமயங்களில் எரிச்சல் தரும் பழக்கமாகக்கூட, ஆகிவிட்டது.

ஜி.வி. பிளெக்கனாவை முதல் முதலாக நான் சந்தித்தபோது, அவர் கைகளைக் கட்டியவாறு நின்று கொண்டிருந்தார். மிகவும் கவனமான பார்வையுடன், எனக்குச் சற்று சலிப்பு உண்டாக்கும் பார்வையுடன், என்னைப் பார்த்தார். அளவுக்கு மீறி வேலை செய்து களைத்துப்போன ஒரு வாத்தியார், அதிகபட்சமாக வந்துசேர்ந்த ஒரு மாணவனை அப்படித்தான் பார்ப்பது வழக்கம். அவர் சொன்னவற்றில் “உங்கள் எழுத்துக்களில் எனக்கு மிகுந்த ஈடுபாடு” என்ற சம்பிரதாய வாசகம் ஒன்றே ஒன்றதான் என் ஞாபகத்தில் இருக்கிறது. பரஸ்பரம் மனம்விட்டு அளவளாவவேண்டுமென்னும் விருப்பம், எனக்கோ அல்லது பிளெக்கனாவுக்கோ அந்தக் காங்கிரஸ் நடைபெற்று முடியும் வரையிலும் ஏற்படவே இல்லை.

எனக்கு முன்பாக ஒரு வழுக்கைத் தலை மனிதர் (லெனின்) கட்டுக் குட்டையாக வைரம் பாய்ந்த சரீரத்துடன் உள்ள ஒரு மனிதர் நின்று, ரகரங்களைத் தொண்டைக் குழியில் உருட்டிப் பேசிக்கொண்டிருந்தார். ஒரு கையால் தம் நெற்றியைத் துடைத்துக் கொண்டார். அவருடைய நெற்றி, சாக்ரட்டீஸின் நெற்றியைப் போல இருந்தது. தம் பிரகாசமான விழிகளால் என்னை அன்பாதரவோடு பார்த்துக் கொண்டிருந்தார்.

உடனே, “தாய்” என்ற என் புத்தகத்திலுள்ள குறைபாடுகளைப்பற்றிப் பேச ஆரம்பித்தார். அந்தப் புத்தகத்தின் கையெழுத்துப் பிரதி எஸ்.பி.லேடிஷ்னிகா விடம் இருந்த போது அவர் வாங்கி வாசித்திருக்க வேண்டும். நான் புத்தகத்தை முடிக்கவேண்டுமென்று அவசர அவசரமாக எழுதிக்கொண்டிருந்ததாக அவரிடம் தெரிவித்தேன். ஆனால் ஏன் அப்படி அவசரமாக எழுதினேன் என்பதை என்னால் சரிவர எடுத்துக் கூறமுடியவில்லை. லெனின் நான் சொன்னதை ஏற்றுக்கொண்டு தலையை ஆட்டினார். அப்புறம் நான் அவசரப் பட்டதன் காரணத்தை அவரே விளக்கமாக எடுத்துக் சொன்னார்:]

“ஆம், அந்தப் புத்தகத்தை சீக்கிரம் எழுதி முடிக்க வேண்டும் என்பதே என் விருப்பமும். இப்படிப்பட்ட புத்தகம் அநேக தொழிலாளிகளுக்குத் தேவையாக உள்ளது. அவர்கள் புரட்சி இயக்கங்களில் பங்கெடுத்துக் கொள்ளும் போது, தன்னுணர் வில்லாத நிலையிலும் குழப்பத்துடனும் பங்கெடுத்துக் கொள்ளுகிறார்கள். அவர்கள் “தாய்” நாவலைப் படிப்பதனால் மிகுந்த பயன் உண்டு. இன்றையத் தேவைக்கு மிகவும் பொருத்தமான புத்தகம். என் புத்தகத்துக்கு அவர் கொடுத்த பாராட்டு இது ஒன்றுதான். ஆனால் என்னைப் பொறுத்தமட்டிலும் இது அபூர்வமான மதிப்பு வாய்ந்த பாராட்டாகும்.
பிறகு, “தாய்” புத்தகம் மொழி பெயர்க்கப் பட்டிருக்கிறதா என்றும், ரஷ்ய, அமெரிக்கத் தணிக்கை யாளர்களால் அதில் கத்திரிப்பு செய்யப்பட்டுள்ளது என்றும், “தாய்” நாவலை எழுதிய ஆசிரியரரைத் தண்டிக்கவேண்டும் என்று கூறியிருப்பதாகவும் நான் தெரிவித்தேன்.

இதைக் கேட்டதும் அவர் தம் புருவங்களைச் சுருக்கி விழித்தார். அப்புறம் சற்றே பின்பக்கமாகச் சாய்ந்து கொண்டு, கண்களை மூடிய வண்ணம் ஒரேயடியாகச் சிரிக்கத் தொடங்கி விட்டார். இந்தச் சிரிப்பைக் கேட்டு எப். உரால்ஸ்கியும் – அவர்தான் என்று நினைக்கிறேன் – மற்றும் மூன்று பேரும் அங்கு வந்து விட்டார்கள்.

எனக்கு ஒரே குதூகலம். பொறுக்கி எடுக்கப்பட்ட முந்நூறு கட்சி ஊழியர்களின் மத்தியில் நானும் ஒருவனாக இருந்தேன். அந்த முந்நூறு பேரும், அமைப்பு ரீதியாகத் திரண்டுள்ள ஒன்றரை லட்சம் தொழிலாளர்களால் காங்கிரஸுக்கு அனுப்பப் பட்டவர்கள் என்று எனக்குத தெரிய வந்தது. என் கண் முன்பாக எல்லாக்கட்சித் தலைவர்களும் – பழைய புரட்சிக்காரர்களான பிளெக்கனாவ், அக்ஸெல்ராட, டியூஷ் ஆகியோரும் காட்சியளித்தார்கள். என் குதூகலத்துக்குரிய காரணத்தைச் சொன்னால், வாசகரால் எளிதில் புரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.

அதாவது நான் இரண்டு வருஷ காலத்தை என் தாய் நாட்டை விட்டு வெளியிடத்திலே கழித்து வந்தபோது அடியோடு உற்சாகம் குன்றிப் போயிருந்தேன். என் மனக்கசப்பு பெர்லின் நகரில் ஆரம்பித்தது. அந்த நகரில்தான் நான் அநேகமாக எல்லா சமதர்ம ஜனநாயக வாதிகளையும் சந்தித்தேன். ஆகஸ்ட், பெபல், கனத்த ஆகிருதி படைத்த ஸிங்கர் ஆகியோர் அருகில் இருக்க, சுற்றிச்சூழ மதிப்புமிக்க பல பிரமுகர்கள் அமர்ந்திருக்க, நான் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டேன்.

(தொடரும்)

Leave A Reply