உலகப்புகழ் பெற்ற ஓவியர்கள் – 5.போட்டிசெல்லி

Share

இவரும் இத்தாலி நாட்டு ஓவியர்.

போட்டிசெல்லியின் வாழ்க்கைக் கதை குறித்து விரிவான தகவல்கள் கிடைக்கவில்லை.

ஆனால், இத்தாலியைச் சேர்ந்த பிளாரன்ஸ் நகரில் 1445 ஆம் ஆண்டு பிறந்தார். மாதம் தேதிகூட தெரியவில்லை.
இவருடைய ஓவியங்கள் 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் அங்கீகாரம் பெற்றன.

14 வயதில் ஓவியப் பயிற்சியாளராக சேர்ந்தார். இவருடைய சமகால ஓவியர்களைக் காட்டிலும் கூடுதல் கல்வியறிவு பெற்றிருந்தார்.

தொடக்கத்தில் இவர் தனது மூத்த சகோதரர் ஆண்டோனியாவுடன் தங்கநகைத் தொழிலாளியாக வேலை செய்தார்.
1462ல்தான் ஃப்ரா ஃபிலிப்போ லிப்பி என்ற ஓவியரிடம் பயிற்சிக்கு சேர்ந்தார். இவருடைய பல படைப்புகள் லிப்பியின் பெயரிலேயே வந்தன.

அந்த காலகட்டத்தில் போட்டிசெல்லி ஹங்கேரிக்கு சென்றிருக்கிறார். அந்த நாட்டு ஆர்ச்பிஷப் கொடுத்த ஆர்டரின் பேரில் எஸ்டெர்கோம் தேவாலயத்தில் ஓவியம் வரைந்திருக்கிறார்.

1470 ஆம் ஆண்டு போட்டிசெல்லி தனது சொந்த ஓவியக் கூடத்தை உருவாக்கினார். இவருடைய தொடக்ககால ஓவியங்கள் மாதிரிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டவை.

இவருடைய ஓவியங்களில் தி பெர்த் ஆஃப் வீனஸ், பிரைமவேரா ஆகியவை தனித்தன்மை வாய்ந்தவை.
தி பெர்த் ஆஃப் வீனஸ் ஓவியத்துக்கு மாடலாக சிமோனெட்டா வெஸ்புகி என்ற பெண் இருந்தார். அவர் பிரபு குடும்பத்தைச் சேர்ந்தவர். திருமணமான பெண்.

அந்த பெண்மீது போட்டிசெல்லி காதல் கொண்டார். ஆனால், அது நிறைவேறவில்லை. இதையடுத்து அவர் திருமணமே செய்துகொள்ளவில்லை.

அந்த பெண் 1476 ஆம் ஆண்டு இறந்துவிட்டார். அப்போதும் அவர்மீது கொண்ட காதல் மாறவில்லை. தான் இறந்துவிட்டால், தனது உடலை அந்த பெண்ணின் காலடியில் புதைக்கும்படி போட்டிசெல்லி கூறியிருந்தார்.
அதன்பிறகு, 34 ஆண்டுகள் கழித்து 1510 ஆம் ஆண்டு போட்டிசெல்லி இறந்தார். அவர் கேட்டுக்கொண்டபடி அந்த பெண்ணின் கல்லறை அருகிலேயே அவருடைய உடலை புதைத்தனர்.

சில நவீன வரலாற்று ஆசிரியர்கள் போட்டிசெல்லியைப் பற்றி ஆய்வு செய்து நூல்களை எழுதியுள்ளனர்.
போட்டிசெல்லி ஓரினச் சேர்க்கையாளர் என்றும் எப்போதும் அவருடன் சிறுவன் ஒருவனை கூட வைத்திருந்தார் என்றும் சிலர் எழுதியுள்ளனர்.

இந்தக் கூற்றை சிலர் மறுத்துள்ளனர். ஆனால், பெண்ணுடன் மட்டுமே காதல் இருக்க வேண்டும் என்று இல்லை. காதல் யார்மீது வேண்டுமானாலும் வரலாம் என்று போட்டிசெல்லி கூறியிருப்பதாக சிலர் ஆதாரங்களுடன் எழுதியுள்ளனர்.

போட்டிசெல்லி 1510 ஆம் ஆண்டு இறந்தாலும், அவருடைய ஓவியங்கள் கண்டுகொள்ளப் படவில்லை. பிரிட்டிஷ் கலெக்கடரும் ஓவியக்கலை வரலாற்று ஆசியருமான வில்லியம் யங் ஒட்டெலி என்பவர் இத்தாலி வந்தார். 1799ல் அவர் போட்டிசெல்லியின் தி மிஸ்டிகல் நேட்டிவிடி என்ற ஓவியத்தை வாங்கினார்.

அவர் இறந்தபிறகு, அந்த ஓவியத்தை இன்னொருவர் வாங்கினார். அவர், அதை மான்செஸ்டர் நகரில் காட்சிக்கு வைத்தார். அந்த ஓவியத்தை சுமார் 10 லட்சம்பேர் பார்த்து ரசித்தனர்.

அந்த ஓவியத்தின் நுட்பத்தை ரசித்த முதல் நபரான் ரியோ, அதை வியந்து பாராட்டினார். இதையடுத்து பலரும் போட்டிசெல்லியை அறிந்துகொள்ள ஆர்வம் கொண்டனர்.

1893 ல்தான் போட்டிசெல்லியைப் பற்றி முதல் நூல் வெளியாகியது. அவருடைய ஓவியங்களைத் தேடி அலையத் தொடங்கினர். 1900 முதல் 1920 க்கு இடைப்பட்ட காலத்தில் இன்னும் ஏராளமான நூல்கள் வெளியாகின.

Leave A Reply