சும்மா கிடைத்த‌தா சுத‌ந்திர‌ம் – 12 – Fazil Freeman Ali

Share

ப‌ல்வேறு ச‌ம‌ய‌ங்க‌ள் ம‌க்க‌ள் ம‌த்தியில் வாழ்ந்திருந்த‌ கால‌ம் அது. தீப‌க‌ற்ப‌த்தின் ஒவ்வொரு மொழிக்குடும்ப‌த்திலிருந்தும் உருவான‌ அறிவுசார் பெரும‌க்க‌ள் புதுப்புது சித்தாங்க‌ளை, க‌ருத்திய‌ல்க‌ளை, வாழ்விய‌ல் நெறிமுறைக‌ளை வ‌குத்திருந்த‌ன‌ர். அவை அனைத்திலுமே ஆண்-பெண், ந‌ல்ல‌வ‌ன்-கெட்ட‌வ‌ன், அறிஞ‌ன்-அறிவிலி என்ற‌ த‌ர‌ப்பிரிவுக‌ள்தான் இருந்த‌ன‌வேயொழிய‌ இவ‌ர்க‌ள் உருவாக்கியிருந்த‌ வ‌ர்ண‌-சாதிய‌ பிரிவுக‌ள் இருந்திருக்க‌வில்லை.

இந்த‌ ஒவ்வொரு ச‌ம‌ய‌த்துக்குள்ளும் ஊடுருவி அங்கும் மூட‌ந‌ம்பிக்கைக‌ளையும் சாதிய‌த்தையும் விதைத்த‌ன‌ர் இந்த‌ உய‌ர்ந்த‌(?) ம‌னித‌ர்க‌ள். ஊடுருவ‌ முடியாம‌ல்போன‌ க‌ருத்திய‌ல்க‌ளை அழித்து ஒழித்தன‌ர். ஒரு கால‌த்தில் தேச‌ங்க‌ள் க‌ட‌ந்தும் த‌ழைத்திருந்த‌ ச‌ம‌ய‌ங்க‌ள்கூட‌ ம‌ன்ன‌ர்க‌ளின் உத‌வியோடு நாடுக‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ன‌, அவ‌ர்க‌ளின் வ‌ணக்க‌த்த‌ல‌ங்க‌ள் கைய‌க‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்டு இவ‌ர்க‌ளின் ம‌த‌ அடையாட‌ங்க‌ள் அவ‌ற்றுள் புகுத்த‌ப்ப‌ட்ட‌ன‌. ஒரு க‌ட்ட‌த்தில் எல்லா ச‌ம‌ய‌ங்க‌ளுக்குள்ளும் சாதிய‌ ப‌டிநிலைக‌ள் பாறைபோல் அசையாம‌ல் அம‌ர்ந்துகொண்ட‌து. ச‌ம‌ய‌ம் மாறுப‌வ‌ர்க‌ளைக்கூட‌ சாதி விடாம‌ல் துர‌த்திய‌து.

ம‌த‌ங்க‌ளை விம‌ர்சிக்கும் முற்போக்க‌ள‌ர்க‌ளில் சில‌ர்கூட‌ சாதிய‌த்தில் கைவைக்கும்போது சிலிர்த்து எழுவ‌து அன்று துவ‌ங்கி இன்றும் தொட‌ர்வ‌தை நீங்க‌ள் பார்த்திருக்க‌லாம். இதுதான் இந்த‌ ச‌முக‌ உள‌விய‌லின் அபார‌ வெற்றி. ஈராயிர‌ம் ஆண்டுக‌ளாக‌ இடைவிடாது வெறி ஊட்ட‌ப்ப‌ட்டு உருவேற்ற‌ப்ப‌ட்டுக் கொண்டிருக்கும் இந்த‌ ச‌மூக‌ நோயை முற்றிலும் க‌ளைய‌ மேல்பூச்சுக்க‌ள் ப‌ய‌ன்ப‌டாது.

தான் ஒரு குறிப்பிட்ட‌ சாதியை சார்ந்த‌வ‌ன் என்று ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொருவ‌ரும் தெரிந்தோ தெரியாம‌லோ ஒட்டுமொத்த‌ சாதிய‌ க‌ட்ட‌மைப்பையுமே ஏற்றுக்கொள்கிறார்க‌ள். நாத்திக‌ம் பேசுப‌வ‌ர்க‌ளில் சில‌ர்கூட‌ சாதி பார்ப்ப‌துக‌ண்டு அதிர்ந்து போயிருக்கிறேன் நான். ச‌முதாய‌த்தில் த‌ன்னோடு வாழும் சில‌ரைவிட‌ நான் பிற‌ப்பால் உய‌ர்ந்த‌வ‌ன் என்ற‌ உள்ள‌த்திற்குள் ஊடூருவியிருக்கும் ஈன‌த்த‌ன‌மான‌ எண்ண‌த்தைத‌விர‌ வேறென்ன‌ இத‌ற்கு கார‌ண‌மாக‌ இருக்க‌ முடியும்..?

இப்ப‌டி த‌ன‌க்கே தெரியாம‌ல் சாதிய‌த்தீயை த‌ன்னுள் அணையாம‌ல் ஏந்தியிருக்கும் இவ‌ர்க‌ளுக்கு தெரியாத‌ இன்னொன்று, “த‌ன‌க்கு மேல் இன்னொரு சாதி இருக்கிற‌து” என்ப‌தையும் ஆழ்ம‌ன‌தில் ஏந்தித்திரிகிறோம் என்ப‌து. அத்துணை வ‌லுவாக‌ சாதிய‌ம் இந்திய‌ர்க‌ளுக்குள் விதைக்க‌ப்ப‌ட்டு வேரூன்றியிருக்கிற‌து.

“நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்” என்றப‌டி, நோயின் தோற்றுவாயை அறிந்து, அதை அக‌ற்றுவ‌துதான் ஒரே வ‌ழி. ம‌ருந்துக‌ளால் ச‌ரிசெய்ய‌ முடியாத அள‌வுக்கு முற்றிப்போன‌ நோய்க்கு அறுவைசிகிட்சைக‌ள்கூட‌ தேவைப்ப‌ட‌லாம், இல்லையா..?

இப்ப‌டி, ப‌ல‌ த‌லைமுறைக‌ளாக‌ தேவையான‌தை உழைத்தும் உரிமையை போராடியும் பெற்று வாழ்ந்துவ‌ந்த‌ ம‌க்க‌ள் ஏதோ ஒரு கால‌த்தில் தெளிவ‌டைந்து புர‌ட்சி செய்ய‌த்துவ‌ங்கினால் என்ன‌ செய்வ‌து..? இன்றில்லை என்றாலும் என்றாவ‌தொருநாள் இது ந‌ட‌க்க‌க்கூடுமல்ல‌வா..? அப்டியொரு புர‌ட்சி ந‌ட‌ந்தால் அன்று வாழ்ந்துகொண்டிருக்கும் ந‌ம் ச‌ந்த‌திய‌ர் நிலைமை என்ன‌வாகும்..? அப்ப‌டியொரு புர‌ட்சி எண்ண‌மே ம‌க்க‌ளுக்கு தோன்றாம‌ல் செய்வ‌து எப்ப‌டி..? அத‌ற்கு ஒரு புதிய‌ அஸ்திர‌ம் க‌ண்டுபிடிக்க‌ப்ப‌து. அதுதான் “பிரார்த்த‌னை”

க‌ற்றால் க‌ல்வி கிட்டும்; உழைத்தால் உய‌ர்வு ஏற்ப‌டும்; உரிமை போராடிப் பெறுவ‌து என்ற‌ ம‌ன‌நிலையை மாற்றி, இதில் எது வேண்டுமென்றாலும் இறை என்ற‌ இல்லாத‌ ஒன்றின்முன் ப‌ய‌ப‌க்தியோடு கையேந்தி நின்று ம‌ன‌முருகி பிரார்த்திக்கும்ப‌டி கூற‌ப்ப‌ட்ட‌து. “ந‌ட‌ப்ப‌த‌னைத்தும் இறைவ‌னின் நாட்ட‌ம். அவ‌ன் நாடினால் ம‌ட்டுமே மாற்ற‌ங்க‌ள் ஏற்படும்” என்று ந‌ம்ப‌வைக்க‌ப்ப‌ட்ட‌து. அதுவ‌ரை ந‌ன்றியும் வ‌ண‌க்க‌மும் ம‌ட்டுமே செலுத்த‌ ப‌ய‌ன்பட்டுவ‌ந்த‌ கோவில்க‌ள் இப்போது கையேந்தி ம‌ன்றாடிநிற்கும் பிச்சைக்கார‌ர்க‌ளின் கூடார‌மாகிப்போன‌து. பேர‌ர‌ச‌ர்க‌ளையும் பிச்சைக்கார‌ர்க‌ளாய் மாற்றிய‌து இந்த‌ பிரார்த்த‌னை

“தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்” என்ற சான்றோர் வாக்குக‌ள் புற‌ம்த‌ள்ள‌ப்ப‌ட்டு, ம‌க்க‌ளின் த‌ன்முய‌ற்சியும் போர்க்குண‌மும் ம‌ழுங்க‌டிக்க‌ப்ப‌ட்டு, ப‌க்தியும் பிரார்த்த‌னையும் ம‌ட்டுமே எல்லா பிர‌ச்சினைக‌ளுக்குமான‌ தீர்வாக‌ முன்வைக்க‌ப்ப‌ட்ட‌து.

ப‌க்தி த‌லைக்கேறி புத்தி வெளியேற, மானுட‌ம் வ‌ர‌லாறு காணாத‌ புதிய‌ ச‌ரிவை ச‌ந்தித்த‌து. இந்த‌ ப‌க்தியும் பிரார்த்த‌னையும்தான், அன்று வீழ்ந்த‌ ம‌க்க‌ளை இன்றுவ‌ரை மீண்டு எழ‌விடாம‌ல் நிர‌ந்த‌ர‌மாக‌ முட‌ங்கிக்கிட‌க்க‌ வைத்திருக்கும் மிக‌ப்பெரும் உள‌விய‌ல் ஆயுத‌ம். மாற்ற‌த்தை நாம்தான் உருவாக்க‌வேண்டும் என்ற‌ உண்மை ம‌ற‌க்க‌டிக்க‌ப்ப‌ட்டு, “நீதாஞ்சாமி இதை மாத்தித்த‌ர‌ணும்” என்று ம‌ன்றாடிநிற்கும் மூட‌த்த‌ன‌ம் மனித‌ மூளைக்குள் இள‌ம் ப‌ருவ‌ம் முத‌லே முட்டித்த‌ள்ள‌ப்ப‌ட்ட‌து.

அழ‌காக‌ ஓடிக்கொண்டிருந்த‌ நீர் தேங்கிப்போன‌தால், சாக்க‌டையாகிப்போன‌ ச‌மூக‌த்தில் மூச்சுத்திண‌றி ம‌ரித்துப்போன‌து ச‌மூக‌நீதி. ஒவ்வொரு அநீதியும் “இறைவ‌னின் க‌ட்ட‌ளை” என்ற‌ புனித‌முலாம் பூச‌ப்ப‌ட்டு விம‌ர்ச‌ன‌த்துக்கு அப்பாற்ப‌ட்ட‌ வேத‌வாக்காகிப் போன‌து.

பெண்க‌ள் ஆண்க‌ளுக்காக‌ ப‌டைக்க‌ப்ப‌ட்ட போக‌ப்பொருட்க‌ள், இர‌ண்டாம்த‌ர‌ குடிம‌க்க‌ள், ஆத்மா இல்லாத‌ ச‌தைப்பிண்ட‌ங்க‌ள், ச‌ந்த‌திக‌ளை பெற்றுத்த‌ரும் இய‌ந்திர‌ங்க‌ள், ஆண்க‌ளுக்கு அட‌ங்கி வாழ‌வேண்டிய‌ ஜென்ம‌ங்க‌ள் என்று வேத‌ விற்ப‌ன்ன‌ர்க‌ள் ஓயாம‌ல் ஓத‌, மானுட‌த்தின் ச‌ரிபாதி ம‌க்க‌ட்தொகை ச‌ப்த‌மின்றி மூலையில் முட‌க்கி ஒடுக்கி வைக்க‌ப்ப‌ட்ட‌து.

“வ‌றுமையும் ஏழ்மையும் இறைவ‌ன் உன‌க்கு விதித்த‌ விதி. அதை சிர‌மேற்கொண்டு செய‌ல்ப‌ட்டு பிற‌ப்பால் உன்னைவிட‌ உய‌ர்ந்த‌வ‌ர்க‌ளுக்கு சேவ‌க‌ம் செய்து வாழ்வ‌தே உன் பிற‌விக்க‌ட‌ன். அந்த‌ க‌ட‌னை முழுமையாக‌ அடைத்து ம‌ர‌ணித்தால் உன் அடுத்த‌ பிற‌வியில் நீ ந‌ல்ல‌ பிற‌ப்பை அடைவாய்” என்ற‌ இறைவிதியை ஏற்றுக்கொண்டு வாழும் ஆட்டும‌ந்தைக‌ளாக‌ பெரும்பாலான‌ ம‌க்க‌ள் ஆக்க‌ப்ப‌ட்டார்க‌ள்.

அவ்வ‌ப்போது அற‌ச்சீற்ற‌த்தோடு எதிர்ப்புக்குர‌ல் எழுப்பிய‌ ச‌மூக‌ப்போராளிக‌ள் பொதும‌க்க‌ள் முன்னிலையிலேயே அடித்துக்கொல்ல‌ப்ப‌ட‌, உயிர‌ச்ச‌ம் எல்லோரையும் தொற்றிக்கொண்ட‌து. த‌ண்ட‌னைக‌ளும் சித்திர‌வ‌தைக‌ளும்கூட‌ இறைவ‌னின் பெய‌ரால் அர‌ங்கேற்ற‌ப்ப‌ட்ட‌தால் ஏற்க‌ன‌வே இறைய‌ச்ச‌த்தில் மூழ்கிப்போயிருந்த‌ ம‌க்க‌ள் சில‌ த‌லைமுறைக‌ளிலேயே “எல்லாம் ந‌ம் த‌லைவிதி” என்று ஏற்றுக்கொண்டு அடிமைக‌ளாக‌ வாழ‌க்க‌ற்றுக் கொண்டார்க‌ள்.

க‌ல்வி ம‌றுக்க‌ப்ப‌ட்டு, நில‌ம் பிடுங்க‌ப்ப‌ட்டு,, சுய‌ம‌ரியாதை சுர‌ண்ட‌ப்ப‌ட்டு ம‌ண்ணின் மைந்த‌ர்க‌ளில் ஒரு பெருங்கூட்ட‌ம் சொந்த‌ நாட்டிலேயே அடிமைக‌ளாக்க‌ப்ப‌ட்டு அடிமாடுக‌ளாய் மாற்ற‌ப்ப‌ட்ட‌ன‌ர். இந்த‌ அவ‌ல‌ம் தீப‌க‌ற்ப‌த்தின் எல்லா நாடுக‌ளிலும் ப‌ட‌ர்ந்த‌து. சில‌வ‌ற்றில் கூடுத‌லாய், சில‌ நாடுக‌ளில் குறைவாய்.

“என்ன‌தான் இவ‌ர்க‌ள் ந‌ம்மைவிட‌ உய‌ர்ந்த‌ சாதியாக‌ இருந்தாலும் ந‌ம்மைவிட‌வும் தாழ்ந்த‌ சாதிக‌ளும் இருக்க‌த்தானே செய்கிற‌து, அவ‌ர்க‌ளோடு ஒப்பிடுகையில் நாம் உய‌ர்ந்த‌ சாதிதானே” என்ற‌ கேவ‌ல‌மான‌ சிந்த‌னையால் ச‌மூக‌ அட‌க்குமுறைக‌ளும் அத்துமீற‌ல்க‌ளும் க‌ண்டும் காணாம‌ல் க‌ட‌ந்துபோகும் நிலையை அடைந்த‌து.

ம‌ன்ன‌ர்க‌ளுக்கு ஒப்பான‌, சில‌ வேளைக‌ளில் ம‌ன்ன‌ர்க‌ளைவிட‌வும் அதிக‌மான‌ அதிகார‌ம் கொண்ட‌வ‌ர்க‌ளாக‌ மாறின‌ர் இந்த‌ இறைத்தர‌க‌ர்க‌ள். நாடுக‌ளுக்குள் போர்க‌ள் உருவாக்குவ‌து முத‌ல், திரும‌ண‌ உற‌வுக‌ள் ஏற்ப‌டுத்துவ‌துவ‌ரை; வெளிநாட்டிலிருந்து அர‌ச‌ர்க‌ளை அழைத்துவ‌ந்து உள்நாட்டு ம‌ன்ன‌ர்க‌ளை வீழ்த்துவ‌து முத‌ல், உள்ளூர் ம‌ன்ன‌ரின் எந்த‌ ம‌க‌னுக்கு முடிசூட்டுவ‌து என்ப‌துவ‌ரை; அனைத்திலும் இவ‌ர்க‌ளின் ஆக்டோப‌ஸ் க‌ர‌ங்க‌ள் ம‌றைந்தே இருந்த‌து..

அரிய‌ணையில் யார் அம‌ர்ந்தாலும் அதிகார‌மென்ன‌வோ பிர‌மிடின் உச்ச‌த்தில் இருக்கும் இந்த‌ புரோகித‌ர்க‌ள் கையில்தான் என்ப‌தால் உள்நாட்டு ம‌ன்ன‌ர்க‌ளும் வெளிநாடுக‌ளிலிருந்து இங்கு வ‌ந்து ஆட்சிய‌மைத்த‌ ம‌ன்ன‌ர்க‌ளும் இவ‌ர்க‌ளின் ம‌த‌ ச‌ட்ட‌ங்க‌ளிலும், மூட‌ ந‌ம்பிக்கைக‌ளிலும், ச‌மூக‌ க‌ட்ட‌மைப்பிலும் த‌லையிடுவ‌தை குறைத்துக்கொண்ட‌ன‌ர். சில‌ர் க‌ண்டும் காணாம‌ல் க‌ட‌ந்து போயின‌ர்.

நாளொரு மேனியும் பொழுதொரு வ‌ண்ண‌முமாய் இந்த‌ ச‌மூக‌ சீர‌ழிவுக‌ள் இப்ப‌டியே தொட‌ந்து கொண்டிருக்கையில்தான் “அவ‌ன்” இந்த‌ ம‌ண்ணில் கால‌டி எடுத்து வைத்தான்…

சும்மா கிடைத்த‌தா சுத‌ந்திர‌ம் – 13 – Fazil Freeman Ali

Leave A Reply