சும்மா கிடைத்த‌தா சுத‌ந்திர‌ம்? – 4 – Fazil Freeman Ali

Share

முக‌லாய‌ ம‌ன்ன‌ன் ஜ‌காங்கீருட‌ன் ஒப்ப‌ந்த‌மிட்டுத்தான் ஆங்கிலேய‌ கிழ‌க்கிந்திய‌ க‌ம்பேனி இந்திய‌ ம‌ண்ணில் கால் ப‌திக்க‌த் துவ‌ங்கிய‌து, இல்லையா..? ச‌ரி, அத‌ற்கும் முன்பே இந்த‌ துணைக்க‌ண்ட‌த்தில் அடி எடுத்து வைத்திருந்த‌ பிற‌ ஐரோப்பிய‌ர் நிலை என்னாயிற்று..?

ரோமானிய‌ பேர‌ர‌சின் வீழ்ச்சிக்குப்பின் இந்தியாவுடனான அவ‌ர்க‌ளின் கடல்வழி வர்த்தகம் குறைய‌த்துவ‌ங்கி மெல்ல‌ முடிவுக்கு வ‌ந்து, அந்த‌ க‌ட‌ல் ப‌ய‌ண‌ வ‌ழித்த‌ட‌ங்க‌ள் வ‌ணிக‌ர்க‌ளுக்கு ம‌ற‌ந்தேபோய்விட்ட‌ நிலையில்தான் ஐரோப்பாவின் ப‌ல்வேறு அர‌சுக‌ளும், பெரும் வ‌ணிக‌ர்க‌ளும், க‌ட‌ல் ஆய்வாள‌ர்க‌ளும் அந்த‌ வ‌ழித்த‌ட‌த்தை மீட்டெடுக்கும் முய‌ற்சியில் இற‌ங்கின‌ர்.

அத‌ற்கு முக்கிய‌ ஊக்குவிக்கும் கார‌ணியாய் இருந்த‌து அவ‌ர்க‌ளுடைய‌ இல‌க்கிய‌ங்க‌ள். இந்தியா என்ற‌ நாட்டைப்ப‌ற்றியும், அங்கிருந்த‌ வ‌ள‌ங்க‌ள் ப‌ற்றியும் நிறைய‌ குறிப்புக‌ளும் க‌தைக‌ளும் அவ‌ர்க‌ளின் முன்னோர் எழுதிக் குவித்து வைத்திருந்த‌ன‌ர்.

நாம் ம‌ச‌லாக்க‌ளை ச‌மைக்க‌ ப‌ய‌ன்ப‌டுத்துகிறோம், அவ‌ர்க‌ளோ அக்கால‌த்தில் அதை மாமிச‌த்தை ப‌த‌ப்ப‌டுத்த‌ ப‌ய‌ன்ப‌டுத்தின‌ர். வ‌ருட‌த்தில் ப‌ல‌ மாத‌ங்க‌ள் குளிரில் வாடும் அவ‌ர்க‌ளுக்கு இப்ப‌டி ப‌த‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ சுவையான‌ மாமிச‌ம் ஒரு வ‌ர‌ப்பிர‌சாத‌மாக‌ இருந்த‌து. அடுத்ததாக‌ அவ‌ர்க‌ளை மிக‌வும் க‌வ‌ர்ந்த‌து ந‌ம் நாட்டு ப‌ட்டுத்துணிக‌ளும், வாச‌னைத்திர‌விய‌ங்க‌ளும், முத்து ப‌வ‌ள‌ம் போன்ற‌ அணிக‌ல‌ன்க‌ளும்.

ந‌ம்முடைய‌ வெப்ப‌நிலை கார‌ண‌மாக‌, பெரும்பாலான‌ ம‌க்க‌ள் மெல்லிய‌ வெண்ணிற‌ ப‌ருத்தியாடைக‌ளை அணிவ‌தை வ‌ழ‌க்க‌மாக‌ கொண்டிருக்கையில் ம‌ன்ன‌ர்க‌ள் ம‌ட்டுமே ப‌ல‌ அடுக்குக‌ள்கொண்ட‌ ப‌ட்டாடைக‌ள் அணியும் ப‌ழ‌க்க‌த்தை கொண்டிருந்த‌ன‌ர். ஐரோப்பிய‌ ப‌ருவ‌நிலைக்கோ க‌த‌க‌த‌ப்பைத் த‌ரும் ஆடைக‌ளின் தேவை அதிக‌ம் இருந்த‌து.

இவை இந்தியாவில் எளிதாக‌வும் ம‌லிவாக‌வும் கிடைத்த‌ன‌. இப்ப‌டி ப‌ல்வேறு ச‌மூக‌, பொருளாதார‌, அர‌சிய‌ல் கார‌ணிக‌ள் இந்தியா என்ற‌ சுவ‌ர்க்க‌பூமிக்கு செல்லும் வ‌ழியை அறியும் ஆசையையும் தேவையையும் ஏற்ப‌டுத்த‌…

மிக‌ நீண்ட காலத்திற்குப் பிறகு, போர்த்துகீசியர்கள் வர்த்தக நோக்கத்திற்காக முதலில் கப்பல் மூலம் மே 1498-ல் வ‌ந்திற‌ங்கின‌ர். வாஸ்கோ ட காமா ஆப்பிரிக்க க‌ண்ட‌த்தின் ப‌ல‌ நாடுக‌ளில் த‌ரை இற‌ங்கி, அங்கு கிடைக்கும் பொருட்க‌ளை விரிவாக‌ ப‌ட்டிய‌லிட்டும் அந்த‌ க‌ட‌ல்வ‌ழிப்பாதைக‌ளை தெளிவாக‌ ப‌திவும் செய்துவிட்டு, தென்னாப்பிரிக்காவின் கேப் ஆஃப் குட் ஹோப்-பை சுற்றி பயணம் செய்து, இப்போது கேரளாவில் உள்ள கோழிக்கோடு வந்தடைந்தார்.

அங்கு வந்த அவர், அப்போது ஆட்சி செய்திருந்த‌ சாமூத்திரிராஜாவிடம் வியாபாரம் செய்ய அனுமதியும் பெற்றார். அது சேர‌ நாடு உருக்குலைந்துபோய் ப‌ல்வேறு சிறு குறு ம‌ன்ன‌ர்க‌ளின் ஆட்சி ந‌ட‌ந்துகொண்டிருந்த‌ கால‌ம். இந்த‌ சாமுத்திரி, கொழிக்கோட்டை த‌லைமையாக‌க்கொண்டு ம‌ல‌பாரின் ப‌குதிக‌ளை உள்ள‌ட‌க்கி ஆட்சி செய்துவ‌ந்த‌ ஏராடி குல ம‌ன்ன‌ர்.

எழுத்து வ‌டிவ‌ம் உருவாகவில்லை என்றாலும் ச‌ம‌ஸ்திருத‌ம் உள்ளே நுழைந்து ம‌லையாள‌ம் என்ற‌ மொழி சொல்வ‌ழ‌க்கில் ஸ்தாபிக்க‌ப்ப‌ட்டிருந்த‌ கால‌க‌ட்ட‌ம் அது. ம‌ன்ன‌ர்க‌ளும் அமைச்ச‌ர்க‌ளும் ச‌ம‌ஸ்கிருத‌த்தில் ம‌லையாள‌த்தை எழுத‌, அந்த‌ மொழி க‌ற்கும் வாய்ப்பு ம‌றுக்க‌ப்ப‌ட்ட‌ சாமானிய‌ர்க‌ள் த‌மிழில் ம‌லையாள‌த்தை எழுதிக் கொண்டிருந்த‌ன‌ர்.

குறிப்பிட்ட‌ சாராரைத்த‌விர‌ பிற‌ருக்கு க‌ல்வி முற்றிலும் ம‌றுக்க‌ப்ப‌ட்டிருந்ததால் மிக‌ச்சின்ன‌ ச‌த‌விகித்தின‌ரைத்த‌விர‌ ம‌ற்ற‌னைவ‌ரும் எழுத்த‌றிவு அற்ற‌வ‌ர்க‌ளாக‌வே இருந்த‌ன‌ர் என்றால் அது மிகையாகாது.

துறைமுக‌ம் வ‌ந்திற‌ங்கிய‌ வாஸ்கோவின் குழுவின‌ரை ந‌ல்ல‌முறையில் வ‌ர‌வேற்று க‌வுர‌வித்து அவ‌ர்க‌ளுக்கு வ‌ணிக‌ம் செய்யும் அனும‌தியும் அளித்த‌ ம‌ன்ன‌ர், அவ‌ர்க‌ள் கேட்ட‌ வ‌ரிவில‌க்கு விண்ண‌ப்ப‌த்தை ம‌ட்டும் நிராக‌ரித்துவிட்டார். நீங்க‌ளும் மற்ற வணிகர்களைப் போலவே சுங்க வரி செலுத்த வேண்டும் என்று க‌றாராக‌ சொல்லிவிட்டார் ம‌ன்ன‌ர்.

இக்கால‌ பெருவ‌ணிக‌ர்க‌ளைப் போன்றே வாஸ்கோவுக்கும் வ‌ரி என்றாலே க‌ச‌ந்த‌து, வ‌ரி க‌ட்ட‌ விரும்ப‌வில்லை. என்ன‌ செய்வ‌து என்று கையைப்பிசைந்துகொண்டு நின்ற‌வ‌ருக்கு ஆப‌த்பாந்த‌னாக‌ கிடைத்தார் திரூர் நாட்டின் அர‌ச‌ன்.

கோழிக்கோட்டின் சாமுத்திரி ம‌ன்ன‌ருக்கு க‌ப்ப‌ம்க‌ட்டி ஆவ‌ருடைய‌ ஆளுமையின்கீழ் ஆட்சி ந‌ட‌த்திவ‌ந்த‌ திரூர் ம‌ன்ன‌ன் போர்ச்சுக்கிசிய‌ருட‌ன் அணி சேர்ந்தான். அவ‌னுடைய‌ விண்ண‌ப்ப‌ம் ஒன்று ம‌ட்டுமே, “நீங்க‌ள் சாமுத்திரி ம‌ன்ன‌னை தோற்க‌டித்து என்னை சுத‌ந்திர‌ ம‌ன்ன‌னாக‌ அறிவித்தால், உங்க‌ளுக்கு என் நாட்டில் முழு வ‌ரிச்ச‌லுகை அளிக்கிறேன்”

வீர‌ வ‌ச‌ன‌ம் பேசிக்கொண்டிருந்த‌ சாமுத்திரி ம‌ன்ன‌னை வீழ்த்த‌ அரிய‌ வாய்ப்பு கிடைத்த‌து வாஸ்கோவுக்கு. அவ‌ரிட‌ம் வெறும் 232 போர்ச்சுக்கீசிய‌ வீர‌ர்க‌ள் ம‌ட்டுமே இருந்த‌ன‌ர், ஆனால் அவ‌ர்க‌ளிட‌ம் துப்பாக்கிக‌ள் இருந்த‌ன‌. க‌ள‌ரி வீர‌ர்க‌ள் ப‌ராக்கிர‌ம‌சாலிக‌ள்தான், ஆனாலும் துப்பாக்கி தோட்டாக்க‌ளை கைக‌ளால் த‌டுக்க‌ முடியுமா..?

இப்ப‌டி சுத‌ந்திர‌ திரூர் நாடு க‌ண்டு இந்திய‌த் துணைக்க‌ண்ட‌த்தில் ஐரோப்பிய‌ர்க‌ளுக்கு வ‌ரியின்றி வ‌ர்த்த‌க‌ம் செய்யும் முத‌ல் ஒப்ப‌ந்த‌த்தில் கையெழுத்திட்டார் திரூரின் ச‌த்திரிய‌ ம‌ன்ன‌ர் த‌னூர் ஸ்வ‌ரூப‌ம். த‌ன் குறிப்புக‌ளில் ச‌த்திரிய‌ ம‌ன்ன‌ரும் ந‌ம்பூதிரி அமைச்ச‌ர்க‌ளும் எந்த‌ அள‌வுக்கு சாமுத்திரி ம‌ன்ன‌னை வெறுத்தார்க‌ளோ அந்த‌ அள‌வுக்கு த‌ன‌க்கு உத‌வினார்க‌ள் என்று சிலாகித்து எழுதியிருக்கிறார் வாஸ்கோ ட‌ காமா.

திரூரை த‌ன்வ‌ச‌மாக்கிய‌தை தொட‌ர்ந்து கொச்சியை நோக்கி த‌ன் க‌வ‌ன‌த்தை திருப்பின‌ர் போச்சுக்கீசிய‌ர். கொச்சி அர‌ச‌ரும் சாமுத்திரிராஜாவின் கீழ் ஆட்சி செய்த‌வ‌ர்தான். ஏற்க‌ன‌வே திரூரில் ச‌றுக்கிவிட்டிருந்த‌ சாமூத்திரி கொச்சியில் சுதாக‌ரித்துக் கொண்டார். த‌ன் முழு ராணுவ‌ ப‌ல‌த்தையும் கொச்சிக்கு அனுப்பி போர்ச்சுக்கீசிய‌-திரூர் ப‌டையை தோற்க‌டித்தார். இதை எதிர்பார்க்காத‌ வாஸ்கோ போர்ச்சுக்க‌லுக்கு உத‌விவேண்டி தூத‌னுப்ப‌, Pedro Álvares Cabral என்ற‌ ஜென‌ர‌ல் பெட்ரோ த‌லைமையில் 1500-ல் ஒரு த‌ர‌மான‌ ப‌டை அனுப்பிவைக்க‌ப்ப‌ட்ட‌து.

க‌ட‌லிலிருந்தும் த‌ரையிலிருந்தும் ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ போரில் சாமுந்திரி தோற்க‌டிப்ப‌ட‌ ஒவ்வொன்றாக‌ கொச்சி, கொல்ல‌ம், திருசூர் என்று குறுநில‌ ம‌ன்ன‌ர்க‌ள் போர்ச்சுக்கீசிய‌ரின் ஆளுமையின் கீழ் வ‌ந்த‌ன‌ர்.

ம‌ன்ன‌ர்க‌ள் த‌லைவ‌ண‌ங்கினாலும் மாப்பிள்ளைமார் என்ற‌ழைக்க‌ப்ப‌ட்ட‌ வியாபாரிக‌ள் அடிப‌ணிய‌ ம‌றுத்த‌ன‌ர். இது ம‌த‌மோ அர‌சிய‌லோ சார்ந்த‌ எதிர்ப்புண‌ர்வ‌ல்ல‌. முழுக்க‌ பொருளாதார‌ம் சார்ந்த‌து (பின்னாளில் சில‌ வ‌ர‌லாற்று எழுத்தாள‌ர்க‌ள் இந்த‌ போராட்ட‌த்துக்கு ம‌த‌ அர‌சிய‌ல் சாய‌ங்க‌ள் பூசிய‌து த‌னிக்க‌தை) என்றாலும் இதுவும் சுத‌ந்திர‌த்திற்கான‌ போர்க‌ளில் ஒன்று என்ப‌தை ஏற்ப‌தில் த‌வ‌றில்லை.

“தாம் வ‌ரிக‌ட்டி வியாபார‌ம் செய்யும்போது போர்ச்சுக்கீசிய‌ருக்கு வ‌ரி வில‌க்கு அளிப்ப‌து த‌ம் வ‌ணிக‌த்தை அழித்துவிடும்” என்ற‌ அச்ச‌மே எதிர்ப்பின் மூல‌கார‌ண‌ம் என்ப‌துதான் உண்மை. இந்த‌ வ‌ணிக‌ர்க‌ளுள் குஞ்ஞாலி ம‌ரைக்கார் ப‌ற‌ங்கிய‌ருக்கு சிம்ம‌சொப்ப‌ன‌மாக‌வே விள‌ங்கியிருக்கிறார்.

அடிமை வியாபார‌த்திலும் அப்போது கொடிக‌ட்டிப்ப‌ற‌ந்த‌ போர்ச்சுக்கீசிய‌ரின் க‌ப்ப‌ல் ஒன்றை தாக்கிய‌போது அதிலிருந்த‌ சீன‌ச்சிறுவ‌னை ம‌ரைக்கார் காப்பாற்றி வ‌ள‌ர்க்க‌, அவ‌ன் ஒரு மிக‌ச்சிற‌ந்த‌ வீர‌னாக‌ வ‌ள‌ர்ந்து குஞ்ஞாலியின் முக்கிய‌ போர்ப்ப‌டை த‌ள‌ப‌தியாக‌ உருவாகி போர்ச்சுக்கீசிய‌ரின் க‌ண்ணில் விர‌ட் விட்டு ஆட்டிய‌தாக‌ ப‌ல‌ குறிப்புக‌ள் காண‌ப்ப‌டுகிற‌து. ம‌ரைக்கார் என்ற‌ சொல்லே ம‌ர‌க்க‌ல‌ம் ஓட்டிய‌வ‌ர்க‌ள் என்று குறிப்ப‌தில் இருந்தே அவ‌ர்க‌ளின் க‌ட‌ல் ஆளுமையை அறிய‌லாம். எங்கிருந்தோ வ‌ந்த‌ ஐரோப்பிய‌ரைவிட‌ அர‌பிக்க‌ட‌லை ந‌ன்கு அறிந்திருந்த‌ இவ‌ர்க‌ள் க‌ட‌லில் ஒருவித‌ கொரில்லா தாக்குத‌லில் ஈடுப‌ட்டு நிறைய‌ பொருள் ம‌ற்றும் உயிர் சேத‌ங்க‌ளை த‌ம் ப‌டைக்கு ஏற்ப‌டுத்திய‌தாக‌ பெட்ரோ அல்வார‌ஸ் குறிப்பிடுகிறார்.

ப‌ல்லாண்டுக‌ளாக‌ ந‌ட‌ந்த‌ தொட‌ர் போரின் இறுதியில் போர்ச்சுக்கீசிய‌ர் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ நில‌ங்க‌ளை கைப்ப‌ற்ற‌, ஏற‌க்குறைய‌ கிழ‌க்கு ம‌ற்றும் தெற்கு ம‌ல‌பார் முழுவ‌துமே போர்ச்சுக்கிசிய‌ கால‌னியாக‌ மாறிப்போன‌து. இதுதான் இந்திய‌ ம‌ண்ணில் ஐரோப்பிய‌ரின் முத‌ல் கால‌ணி. Viceroy Francisco de Almeida-தான் இந்த‌ கால‌ணிக்கான‌ முத‌ல் போர்ச்சுக்கீசிய‌ வைஸ்ராய்.

கொச்சியை த‌ன் த‌லைமைய‌க‌மாக‌ கொண்டு கால‌ணியாட்சி ந‌ட‌த்திய‌ ப்ரான்சிஸ்கோ கொச்சி துறைமுக‌த்தை விரிவுப‌டுத்தி அர‌பிக்க‌ட‌லின் முக்கிய‌ துறைமுக‌மாக‌ அதை மாற்றினார். இன்றும் அந்த‌ ப‌குதியில் சிதில‌மடைந்த‌ போர்ச்சுக்கீசிய‌ கோட்டை கொத்த‌ள‌ங்க‌ளை காண‌லாம்.

இப்ப‌டி சேர‌நாட்டை ஏற‌க்குறைய‌ கைப்ப‌ற்றியிருந்த‌ போர்ச்சுக்கீசிய‌ர் அங்கிருந்து விர‌ட்ட‌ப்ப‌ட்டு கோவா-வுக்கு சென்ற‌து ஏன்…?

சும்மா கிடைத்த‌தா சுத‌ந்திர‌ம்..? – 5 – Fazil Freeman Ali

Leave A Reply