சும்மா கிடைத்த‌தா சுத‌ந்திர‌ம்..? – 7 – Fazil Freeman Ali

Share

1640-ல் போர்ச்சுக்கீசிய‌ கொழும்பில் கால்வைத்து மெல்ல‌ ஒட்டுமொத்த‌ சிலோனையும் த‌ன் க‌ட்டுப்பாட்டுக்குள் கொண்டுவ‌ந்திருந்த‌ VOC, அடுத்த‌தாக‌ கால்வைத்த‌தும் போர்ச்சுக்கீசிய‌ கால‌னியாக‌ மாறியிருந்த‌ ம‌ல‌பாரில்தான். ஆம், ட‌ச்சுக்கார‌ர்க‌ள் போர்ச்சுக்கீசிய‌ரை ம‌ல‌பாரிலிருந்து விர‌ட்டிய‌டித்த‌து குள‌ச்ச‌ல் போர் ந‌ட‌ப்ப‌த‌ற்கும் ப‌ல‌ ஆண்டுக‌ள் முன்பே ந‌ட‌ந்த‌ நிக‌ழ்வு.

சிலோனை பொறுத்த‌வ‌ரை க‌ண்டி நாட்டு ம‌ன்ன‌ரோடு கூட்டுசேர்ந்துதான் போர்ச்சுக்கீசிய‌ரை இவ‌ர்க‌ள் விர‌ட்டிய‌டித்த‌ன‌ர். மொழியாலும், இன‌த்தாலும், சாதியாலும் ம‌த‌த்தாலும் பிரிந்திருக்கும் ம‌க்க‌ளில் ஒரு கூட்ட‌த்தோடு கூட்டு சேர்ந்து ம‌ற்றொரு கூட்ட‌த்தை வீழ்த்துவ‌து, அத‌ன்பின் த‌ம‌க்கு உத‌விய‌ முத‌ல் கூட்ட‌த்தை ச‌ப்த‌மில்லாம‌ல் ஒழித்துக்க‌ட்டுவ‌து. இதுவே எல்லா ஏகாதிப‌த்திய‌ கால‌னியாதிக்க‌ ச‌க்திக‌ளின் பிர‌தான‌ மூலோபாய‌ ந‌க‌ர்வாக இருந்த‌து. இந்த‌ பிரித்தாளும் த‌ந்திர‌த்திற்கு ட‌ச்சுக்கார‌ர்க‌ளும் விதிவில‌க்கு இல்லை, இக்கால‌ அர‌சிய‌ல்வாதிக‌ளும் விதிவில‌க்கில்லை.

எதிரியின் ப‌ல‌த்தைவிட‌ துரோகிக‌ளின் சூழ்ச்சியால் வீழ்ந்த‌ அர‌சுக‌ளே வ‌ர‌லாற்றில் ஏராள‌ம். இந்திய‌ துணைக்க‌ண்ட‌த்தின் க‌தைக‌ள் இத‌ற்கு மிக‌ப்பெரும் சான்று. இன்றும் அவை தொட‌ர்வ‌துதான் உச்ச‌ப‌ட்ச‌ வேத‌னை. வ‌ர‌லாறு தொட‌ர்ந்து பாட‌ம் க‌ற்பித்துக்கொண்டேதான் இருக்கிற‌து, க‌ற்று ப‌டிப்பினை பெறுவோர் எண்ணிக்கைதான் தொட‌ர்ந்து ச‌ரிந்துகொண்டே வ‌ருகிற‌து.

ம‌ல‌பார் ப‌குதியில் யாரோடு கூட்டுசேர்ந்து போர்ச்சுக்கீசிய‌ரை வென்று வாச‌னை ம‌சாலா வ‌ணிக‌த்தை கைய‌க‌ப்ப‌டுத்த‌லாம் என்று தேடிய‌ ட‌ச்சுக்கார்க‌ளுக்கு கோழிக்கோட்டின் சாமுத்திரி ம‌ன்ன‌னுக்கும் போர்ச்சுக்கிசிய‌ருக்கும் இடையே தொட‌ர்ந்து ந‌ட‌ந்துகொண்டிருக்கும் உர‌ச‌ல்க‌ள் தெரிய‌வ‌ர‌, குழ‌ம்பிய‌ குட்டையில் மீன்பிடிக்க‌ திட்ட‌மிட்ட‌ன‌ர்.

ஏற்க‌வே த‌னூர் விஸ்வ‌ரூப‌த்துட‌னான‌ போரில் போர்ச்சுக்கீசிய‌ரிட‌ம் தோற்று, கொச்சி போரில் ஒரு முறை வென்று இர‌ண்டாம் போரில் தோற்றிருந்தாலும், சாமுத்திரியும் கொச்சி ம‌ன்ன‌னும் போர்ச்சுக்கிசிய‌ரின் ஏகாதிப‌த்திய‌த்தை ம‌ன‌தார‌ ஏற்றுக்கொண்டிருக்க‌விலை. திரூரின் ம‌ன்ன‌ன் த‌னுர் விஸ்வ‌ரூப‌ம் போர்ச்சுக்கிசிய‌ரின் அடிமையாக‌ ஆட்சிசெய்வ‌தைப்போல் இவ்விருவ‌ராலும் இருக்க‌ இய‌ல‌வில்லை.

ஆதேவேளை அவ‌ர்க‌ளை எதிர்க்க‌வும் ப‌ல‌மில்லை. வாஸ்கோவின் ப‌டைக‌ள் ப‌ல்வேறு கோட்டை கொத்த‌ள‌ங்க‌ளை நாடு முழுக்க‌ க‌ட்டிய‌தோடு நிறைய‌ பீர‌ங்கிக‌ளையும் துப்பாகிக‌ளையும் இற‌க்கும‌தி செய்திருந்த‌ன‌ர். கேர‌ளம் ம‌லைப்பாங்கான‌ ப‌குதி, ஆங்காங்கே நிறைய‌ குன்றுக‌ள் இருக்கும். அங்கெல்லாம் நிறுவ‌ப்ப‌ட்டிருந்த‌ பீர‌ங்கிக‌ள் எதிக‌ளை தாக்க‌வா, நாம் அவ‌ர்க‌ளை எதிர்த்தால் ந‌ம்மை கொன்றொழிக்க‌வா என்ற‌ அச்ச‌த்துட‌னேயே குறுநில‌ ம‌ன்ன‌ர்க‌ளும் ம‌க்க‌ளும் வாழ்ந்திருந்த‌ன‌ர்.

ஆர‌ம்ப‌த்தில் வ‌ரிவில‌க்கு கேட்டு சாமுத்திரி ம‌ன்ன‌னிட‌ம் கெஞ்சிய‌வ‌ர்க‌ள் இப்போது ஆளும் ம‌ன்ன‌ர்க‌ளிட‌மிருந்து வ‌ரி என்ற‌ பெய‌ரில் க‌ப்ப‌ம் வ‌சூலித்துக்கொண்டிருந்த‌ன‌ர். துறைமுக‌த்துக்குள் வ‌ரும் க‌ப்ப‌ல்க‌ளுக்கான‌ சுங்க‌வ‌ரியும் இவ‌ர்க‌ளே வ‌சூலித்த‌ன‌ர். துறைமுக‌த்தில் ச‌ர‌க்கு வாங்க‌வும் விற்க‌வும் இவ‌ர்க‌ளிட‌ம் வ‌ரி க‌ட்ட‌வெண்டும். மொத்த‌த்தில் உள்நாட்டு ம‌ன்ன‌ர்க‌ள் கிரீட‌ம் அணிந்த‌ பொம்மைக‌ளாக‌ அரிய‌ணையில் இருக்க‌, போர்ச்சுக்கீய‌ரின் நிழ‌ல் ஆட்சியே ந‌ட‌ந்துகொண்டிருந்த‌து.

கருமிள‌கு, ஏல‌க்காய், கிராம்பு போன்ற‌வ‌ற்றை வியாபாரிக‌ளிட‌ம் வாங்கிக்கொண்டிருந்த‌ போர்ச்சுக்கீசிய‌ர், இப்போது அவ‌ற்றை உற்ப‌த்திசெய்யும் எஸ்டேட் முத‌லாளிக‌ளிட‌மிருந்தே நேர‌டியாக‌ கொள்முத‌ல் செய்ய‌த்துவ‌ங்கின‌ர். அதுவும் சில‌ ஆண்டுக‌ள்தான். விரைவில் எஸ்டேட்க‌ளையே விலைக்கு வாங்க‌த்துவ‌ங்கின‌ர். சில‌ ப‌த்து ஆண்டுக‌ளில் ப‌ல‌ எஸ்டேட்க‌ளின் உரிமை வெள்ளைய‌ர் வ‌ச‌ம் போக, விளைநில‌ங்க‌ள் ப‌ல‌வும் போர்ச்சுக்கீசிய‌ரின் நேர‌டி த‌னியார் முத‌லாளித்துவ‌த்தின்கீழ் வ‌ந்த‌துவிட்டிருந்த‌து.

சில‌ போர்ச்சுக்கிசிய‌ர் உள்ளூரிலேயே திரும‌ண‌ம் முடித்து குடியேற‌, அவ‌ர்க‌ளுக்கு பிற‌க்கும் குழ‌ந்தைக‌ளுக்கு உய‌ரிய‌ அர‌சு ப‌ணிக‌ளில் முன்னுரிமை அளிக்க‌ப்ப‌ட்ட‌து. ‘இந்த‌ இர‌ண்டாம் த‌லைமுறையின‌ருக்கு இய‌ல்பாக‌வே அமைந்துவிட்டிருந்த‌ இருமொழிப்புல‌மை நிர்வாக‌ம் செய்ய‌ பேருத‌வியாய் இருந்த‌து” என்கிற‌து ம‌ல‌பார் க‌வ‌ர்ன‌ர் போர்ச்சுக்கீசிய‌ ம‌ன்ன‌னுக்கு எழுதிய‌ க‌டித‌மொன்று.

சில‌ எஸ்டேட் ஓன‌ர்க‌ள் தாய்நாட்டுக்கு சென்று திரும‌ணம் முடித்து குடும்ப‌த்தோடு கேர‌ளா வ‌ந்து நிர‌ந்த‌ர‌மாக‌ குடியேற‌, அவ‌ர்க‌ளின் ம‌த‌ ந‌ம்பிக்கைக‌ளை பூர்த்திசெய்ய‌ நாட்டின் ப‌ல‌ ப‌குதிக‌ளில் புதிய‌ தேவால‌ய‌ங்க‌ள் உத‌ய‌மாயின‌.

இந்திய‌ரின் ப‌ல‌தெய்வ‌ ச‌ம‌ய‌ ந‌ம்பிக்கையின் தாக்க‌த்தால் போர்ச்சுக்கீசிய‌ரின் கிருஸ்த‌வ‌ ந‌ம்பிக்கை நீர்த்துப்போகிற‌து என்று க‌ருதிய‌ King John of Portugal (அர‌ச‌ர் ஜான்) போப்பாண்ட‌வ‌ரிட‌ம் ஆசோச‌னை கேட்க‌, Saint Francis Xavier (புனித பிரான்சிஸ் சேவியர்) ம‌ற்றும் Ignatius of Loyola (லயோலாவின் இக்னேஷியஸ்) இந்தியாவுக்கு அனுப்பிவைக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர். இவ‌ர்க‌ள் துவ‌ங்கிய‌துதான் Society of Jesus எனும் ஜெசுயிட்ஸ் அமைப்பு. 1542 ஆன்டிலேயே கோவா வ‌ந்திருந்த‌ புனித‌ சேவிய‌ர் ம‌த‌போத‌க‌ம் செய்ய‌ ம‌ல‌பாருக்கு வ‌ர‌ழைக்க‌ப்ப‌ட்டார்.

அடுத்த‌ சில‌ ப‌த்து ஆண்டுக‌ளில் ம‌ல‌பார் நாட்டின் ச‌மூக‌ பொருளாதார‌ அர‌சிய‌ல் சூழ‌லே மாறிப்போன‌து. வ‌ணிக‌ம் செய்ய‌ வ‌ந்த‌வ‌ர்க‌ள் உற்ப‌த்தியாள‌ர்க‌ளாக‌ மாற‌, வ‌ந்தேறிக‌ளின் நில‌த்தில் ம‌ண்ணின் மைந்த‌ர்க‌ள் விவ‌சாய‌க் கூலிக‌ளாயின‌ர். விளைபொருட்க‌ளை ப‌த‌ப்ப‌டுத்த‌வும் சேமித்துவைக்க‌வும் பெரிய‌ தொழில்சாலைக‌ளும் குடோன்க‌ளும் க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ன‌. ப‌ணியாள‌ர்க‌ள் ப‌ல‌ரும் த‌ம் முத‌லாளிக‌ளின் ந‌ன்ம‌திப்பை பெற‌ எஜ‌மான‌ர்க‌ளின் ம‌த‌த்துக்கு மாறின‌ர்.

இது “ராம‌ப்புலைய‌ன் தோம‌ப்புலைய‌ன் ஆன‌ க‌தை”தான் என்றாலும் ப‌ல‌ நூற்றாண்டுக‌ளாக‌ ந‌ம்பூதிரிக‌ளை உச்ச‌த்தில் வைத்து க‌ட்ட‌மைக்க‌ப்ப‌ட்டிருந்த‌ கேர‌ள‌ ச‌மூக‌ அமைப்புமுறை மெல்ல‌ ஆட்ட‌ம்காண‌த் துவ‌ங்கிய‌ங்கியது. கிருஸ்த‌வ‌ர்க‌ளாக‌ ம‌த‌ம் மாறிய‌ உள்ளூர்கார‌ர்க‌ள் முன்ன‌ர் கொடுத்திருந்த‌ அதே உச்ச‌ப‌ட்ச‌ ம‌ரியாதையை இப்போது ந‌ம்பூதிரிக‌ளுக்கு கொடுப்ப‌தில்லை.

இது ஏற்க‌ன‌வே தெய்வத்துக்கு நிக‌ரான‌ ம‌ரியாதை பெற்று போற்றுத‌லோடு வ‌ல‌ம் வ‌ந்துகொண்டிருந்த‌வ‌ர்க‌ளுக்கு எரிச்ச‌லூட்டுவ‌தாக‌வும் கோப‌மூட்டுவ‌தாக‌வும் இருந்த‌து. வெடித்துக்கிள‌ம்ப‌வில்லை என்றாலும் ம‌த‌வெறுப்பு எனும் நெருப்பின் ஆர‌ம்ப‌ப் பொறிக‌ள் உள்ளுக்குள் க‌ன‌ன்றுகொண்டிருந்த‌து.

இதை ந‌ன்றாக‌ புரிந்துகொண்ட‌ VOC க‌ம்பேனியின‌ர், கொச்சி அர‌ச‌னுக்கு தூத‌னுப்பின‌ர். “நாங்க‌ள் ஒரு த‌னியார் நிறுவ‌ன‌ம், வ‌ணிகம் ம‌ட்டுமே எங்க‌ள் குறிக்கோள். உங்க‌ள் ம‌த‌ம் ச‌ம்பிர‌தாய‌ம், ப‌ழ‌க்க‌வ‌ழ‌க்க‌த்திலெல்லாம் நாங்க‌ள் த‌லையிட‌மாட்டோம்” என்ப‌தே முக்கிய‌ செய்தியாக‌ முன்வைக்க‌ப்ப‌ட்ட‌து. பிடிகொடுக்காம‌ல் பேச்சுவார்த்தை ந‌ட‌த்திக்கொண்டிருந்த‌ கொச்சி அர‌ச‌ன் ஒருநாள் ந‌க‌ர்வ‌ல‌ம் வ‌ந்துகொண்டிருந்த‌போது, அவ‌ரும் அவ‌ர‌து மெய்க்காப்ப‌ள‌ர்க‌ளும் அடையாள‌ம் தெரியாத‌ சில‌ரால் கொல்ல‌ப்ப‌ட‌, கொலைக்கு கார‌ண‌ம் போர்ச்சுக்கீசிய‌ர்தான் என்று அர‌ச‌ குடும்ப‌ம் கொலைப்ப‌ழி சும‌த்திய‌து.

போர்ச்சுக்கீசிய‌ர் இதை முற்றாக‌ ம‌றுத்த‌தோடு அர‌ச‌ குடும்ப‌த்தின‌ர் த‌ம்மீது அபாண்ட‌மாக‌ ப‌ழிசும‌த்துவ‌தாக‌ கூறி அர‌ச‌ குடும்ப‌த்தின‌ர் சில‌ரை கைது செய்த‌ன‌ர். இந்த‌ கைதுக‌ள்தான் கொச்சி-போர்ச்டுக்கீசிய‌ உற‌வின் ச‌வ‌ப்பெட்டியில் இறுதி ஆணியாக‌ அமைந்த‌து. போர்ச்சுக்கிசிய‌ருட‌ன் ச‌ம‌ர‌ச‌ம் செய்ய‌ ம‌ன்ன‌ன் த‌யாரான‌தால் அர‌ச‌ குடும்ப‌த்தின‌ரே ட‌ச்சுக்கார‌ர்க‌ள் ஆத‌ர‌வோடு ம‌ன்ன‌னை கொன்றிருக்க‌க்கூடும் என்றும் சில‌ வ‌ர‌லாற்று ஆய்வாள‌ர்க‌ள் க‌ருத்து தெரிவிக்கிறார்க‌ள். இருத‌ர‌ப்பின‌ரிட‌மும் ஆதார‌ங்க‌ள் இல்லை, அதேவேளை இருத‌ர‌ப்பின‌ரிட‌மும் ஏற்றுக்கொள்ள‌த்த‌க்க‌ த‌ர்க்க‌ ரீதியான‌ கார‌ண‌ங்க‌ள் இருக்கின்ற‌ன‌.

இற‌ந்துவிட்ட‌ ம‌ன்ன‌னின் ஈம‌க்கிரியைக‌ள் முடிந்த‌ கையோடு அர‌ச‌ குடும்ப‌த்தின‌ர் ஒன்றுகூடி புதிய‌ ம‌ன்ன‌னை தேர்ந்தெடுத்த‌ன‌ர். கூட‌வே, ட‌ச்சுக்கார‌ர்க‌ளுக்கு நேர‌டியாக‌வே முழு ஆத‌வு கொடுத்து இருக‌ர‌ம் நீட்டி வ‌ர‌வேற்ற‌ன‌ர்.
இந்த‌ ப‌னிப்போரின் முடிவுக்காக‌வே இதுவ‌ரை காத்துக்கொண்டிருந்த‌ ட‌ச்சுக்கார‌ர்க‌ள் த‌ம் க‌ட‌ற்ப‌டையோடு கொச்சி துறைமுக‌ம் நோக்கி ப‌ய‌ணித்து, பெரிய‌ எதிர்ப்பு எதுவும் இல்லாம‌லேயே துறைமுக‌த்தை முற்றுகையிட்டு கைப்ப‌ற்றியும் விட்ட‌ன‌ர். நேர‌டியாக‌ போரில் ஈடுப‌டாவிட்டாலும் கோழிக்கோடு, கொச்சி ம‌ன்ன‌ர்க‌ள் ட‌ச்சுக்கார‌ர்க‌ளுக்கு உண‌வு முத‌ல் ச‌க‌ல‌ உத‌விக‌ளும் வ‌ழ‌ங்கின‌ர் என்று VOC அறிக்கைக‌ள் தெரிவிக்கின்ற‌ன‌.

துறைமுக‌த்தை இழ‌ந்த‌போதும் போர்ச்சுக்கீசிய‌ர் உட‌னே பின்வாங்கி ஓடிவிட‌வில்லை. நீண்ட‌கால‌மாக‌ ம‌ல‌பார் ம‌ண்ணில் வாழ்ந்து, ஓர‌ள‌வுக்கு குடும்ப‌ உற‌வுகளாலும் வேரூன்றிவிட்ட‌வ‌ர்க‌ளால் ச‌ட்டென்று ஓடிவிட‌முடியுமா என்ன‌..? தாக்குத‌ல்க‌ள், முற்றுகைக‌ள், முற்றுமை முறிய‌டிப்பு, பின்வாங்க‌ல், மீண்டும் தாக்குத‌ல் என்று ஓராண்டு தொட‌ர்ந்து இடைவிடாது போர் ந‌ட‌ந்த‌து.

5 February 1662-ல் துவ‌ங்கிய‌ போர் 8 January 1663 -ல் ஒருவ‌ழியாக‌ முடிவுக்கு வ‌ந்த‌து. உள்ளூர் அர‌ச‌ர்க‌ளின் செல்வாக்கையும், ந‌ம்பூதிரிக‌ளின் ந‌ம்பிக்கையையும் இழ‌ந்துவிட்டிருந்த‌ நிலையில் ம‌த‌ அர‌சிய‌லும் க‌ள‌த்தில் எதிரொலிக்க‌, போர்ச்சுக்கீசிய‌ருக்கு தொட‌ர்ந்து போரிட‌ வ‌லு இல்லாம‌ல் போயிற்று. ம‌ல‌பார் பிர‌தேச‌த்துக்கான‌ க‌டைசி போர்ச்சுக்கீசிய‌ க‌வ‌ர்ன‌ர் Inácio Sarmento (இனாசியோ சர்மென்டோ) வேறு வ‌ழியின்றி ட‌ச்சு ஜென‌ர‌ல் Hendrik van Rheede (ஹென்ட்ரிக் வான் ரீட்) உட‌ன் ஒரு ச‌மாதான‌ ஒப்ப‌ந்த‌த்தில் கையெழுத்திட்டார்.
ஒப்ப‌ந்த‌த்தின்ப‌டி…

1. போர்ச்டுக்கீசிய‌ர் உரிமை கொண்டாடிய‌ விளைநில‌ங்க‌ள் அனைத்தும் நேர‌டியாக‌ ட‌ச்சுக்கார‌ர்க‌ள் வ‌ச‌ம் கைமாறும், இதில் தொழிற்சாலைக‌ளும் குடோன்க‌ளும் அட‌ங்கும்.

2. திரும‌ண‌மாகாத‌ அனைத்து போர்ச்சுக்கீசிய‌ரும், ச‌க‌ வெள்ள‌ய‌ரை ம‌ண‌முடித்த‌வ‌ர்க‌ளும் தாய்நாடான‌ போர்ச்சுக்க‌ல் திரும்பவேண்டும்.

3. உள்ளூரில் ம‌ண‌முடித்த‌ போர்ச்சுக்கீசிய‌ரும் அவ‌ர்த‌ம் குழ‌ந்தைக‌ளும் கோவாவுக்கு செல்ல‌வேண்டும்.
இத‌ன்ப‌டி 4,000-த்துக்கும் அதிக‌மானோர் கோவாவுக்கு நாடுக‌ட‌த்த‌ப்ப‌ட‌, திருவிதாங்கூர் த‌விர்த்து அனைத்து கேர‌ள‌ ப‌குதிக‌ளும் ட‌ச்சுக்கார‌ர்க‌ள் வ‌ச‌மாயிற்று.
1510 முத‌லே கோவா போர்ச்சுக்கீசிய‌ரின் ஆதிக்க‌த்தில் இருந்ததால் அவ‌ர்க‌ள் ம‌ல‌பாரிலிருந்து கோவா சென்று த‌ம் மேலாண்மையை மீண்டும் த‌க்க‌வைத்துக்கொண்ட‌ன‌ர், கொஞ்ச‌ம் கால‌த்துக்கு. மீண்டும் வாச‌னை ம‌சாலா வ‌ணிக‌ம் VOC வ‌ச‌ம் வ‌ந்த‌து.

கேர‌ள‌த்தை பொறுத்த‌வ‌ரை இது கருமிள‌குக்கான‌ போராக‌ இருந்தாலும், இது வெறும் பிராந்திய‌ப்போர் அல்ல‌. அப்போது ச‌ர்வ‌தேச‌ அள‌வில் போர்ச்சுக்க‌லுக்கும் நெத‌ர்லாந்துக்கும் ந‌ட‌ந்த‌ 80 ஆண்டு போரின் ஒரு ப‌குதியே இது. தென் அமெரிக்கா முத‌ல் இந்தோனேசியா வ‌ரை ந‌ட‌ந்த‌ இந்த‌ ஐரோப்பிய‌ கால‌னிக்கார‌ர்க‌ளுக்கு இடையேயான‌ ஆதிக்க‌ப்போரில் பெரும்பாலும் ஒதுங்கியிருந்து வேடிக்கை ம‌ட்டுமே பார்த்த‌ன‌ர் ஆங்கிலேய‌ர், ஆடுக‌ள் த‌ம‌க்குள் ச‌ண்டையிடுவ‌தை பார்த்து நாக்கை தொங்க‌விட்டு காத்துக்கொண்டிருக்கும் ஓனாயைப்போல‌…
சின்ன‌ மீன் போர்ச்சுக்கீசிய‌ரை ம‌ல‌பாரிலிருந்து விர‌ட்டிய‌டித்த‌ ட‌ச்சுக்கார‌ர்க‌ளுக்கும் அப்போது தெரிந்திருக்க‌வில்லை த‌ம்மை விழுங்க‌ பிரித்தானிய‌ கிழ‌க்கிந்திய‌ க‌ம்பேனி என்ற‌ பெரிய‌ மீன் த‌ன் பின்னே காத்திருக்கிற‌து என்பது…

சும்மா கிடைத்த‌தா சுத‌ந்திர‌ம்..? – 8 – Fazil Freeman Ali

Leave A Reply