சும்மா கிடைத்த‌தா சுத‌ந்திர‌ம்..? – 8 – Fazil Freeman Ali

Share

உல‌க‌ம் முழுக்க‌ 80 ஆண்டுக‌ளாக‌ ஐரோப்பிய‌ ஏகாதிப‌த்திய‌ அர‌சுக‌ளுக்குள் ந‌ட‌ந்த‌ போர் (1566 முத‌ல் 1648 வ‌ரை) என்ப‌து “கால‌னிப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ நாடுக‌ளின் வ‌ள‌ங்க‌ளும் விளைபொருட்க‌ளும் யாருக்கு சொந்த‌ம்” என்ற‌ குடுமிப்பிடி ச‌ண்டைதான். இதில் யார் வென்றாலும் தோற்ற‌தென்ன‌வோ கால‌னிக‌ளாகிப்போன‌ நாடுக‌ள்தான்.

பின்னாட்க‌ளில் மூன்றாம் உல‌க‌ நாடுக‌ள் என்றொரு நீண்ட‌ ப‌ட்டிய‌ல் உருவாக‌ கார‌ண‌மாக‌ இருந்த‌து இந்த‌ கால‌க‌ட்ட‌தின் ஏகாதிப‌த்திய‌ கொள்ளைக‌ளும், சுர‌ண்ட‌ல்க‌ளும், அடித்துப்பிடுங்கல்க‌ளும்தான். அன்று வீழ்ந்த‌ நாடுக‌ளுள் பெரும்பாலான‌வை இன்றுவ‌ரை எழ‌வே இல்லை. அர‌சிய‌ல் விடுத‌லை என்றால் என்ன‌..? பொருளாதார‌ விடுத‌லை என்றால் என்ன‌..? என்ப‌து புரியாம‌லேயே இன்ன‌மும் போலி சுத‌ந்த‌ர‌த்தை அனுப‌வித்துக் கொண்டிருக்கின்ற‌ன‌ பெரும்பாலான‌ தென் அமேரிக்க‌, ஆப்பிரிக்க‌, ஆசிய‌ நாடுக‌ள்…

இந்திய‌ துணைக்க‌ண்ட‌த்தின் ம‌ன்ன‌ர் குடும்ப‌ங்க‌ளுக்குள் திரும‌ண‌ உற‌வுக‌ள் மூல‌மாக‌ கூட்ட‌ணிக‌ள் உருவாகி பின்னாட்க‌ளில் அதுவே கிள‌ர்ச்சிக‌ளுக்கும் போர்க‌ளுக்கும் எப்ப‌டி வ‌ழிவ‌குத்த‌தோ அப்ப‌டித்தான் ஐரோப்பாவிலும் ந‌ட‌ந்த‌து. இந்த‌ உதார‌ண‌ம்கூட‌ பொருத்த‌மான‌துதான், கார‌ண‌ம், இந்திய‌ துணைக்க‌ண்ட‌த்தை போன்றே ப‌ல்வேறு மொழிக்குடும்ப‌ங்க‌ள் வாழும் நில‌ப்ப‌ர‌ப்பு ஐரோப்பா. அள‌வில் சிறிய‌தாக‌ இருந்தாலும் அந்த‌ நில‌ப்ப‌ர‌ப்பு அப்போது த‌னி க‌ண்ட‌மாக‌வே அங்கீக‌ரிக்க‌ப்ப‌ட்டிருந்த‌து. கிருத்த‌வ‌ம் ஐரோப்பாவை முழுக்க‌ விழுங்குமுன் அவ‌ர்க‌ளுக்கும் வெவ்வேறு ச‌ம‌ய‌ங்க‌ளும் க‌ட‌வுள்க‌ளும்கூட‌ இருந்த‌ன‌ர். ஒவ்வொரு மொழிக்குடும்ப‌த்திற்கும் த‌னியான‌ வ‌ர‌லாறு, நாக‌ரிக‌ம், ப‌ண்பாடு, உண‌வு முத‌ல் உடை வ‌ரையிலான‌ ப‌ழ‌க்க‌வ‌ழ‌க்க‌ங்க‌ள் இருந்த‌ன‌. உல‌க‌ம‌ய‌மாக்க‌ல் கார‌ண‌மாக‌ இந்த‌ த‌டைக‌ள் பெரும‌ள‌வுக்கு இன்று உடைந்திருக்கின்ற‌ன என்றாலும் 16 ம‌ற்றும் 17-ஆம் நூற்றாண்டுக‌ளில் நிலைமையே வேறு.

ஒருபுற‌ம் திரும‌ண‌ உற‌வுமுறைக‌ள் மூல‌மும் ம‌றுபுற‌ம் போர்க‌ள் மூல‌மும் இரு நாடுக‌ள் ஒன்றாவ‌தும், ஒன்றான‌ நாடு சில‌ ஆண்டுக‌ளுக்குப்பின் பிரிந்துபோவ‌தும் அடிக்க‌டி ந‌ட‌ந்துகொண்டிருந்த‌து. சில‌ நாடுக‌ள் வ‌லிமைய‌டைந்த‌ன‌, சில‌ வ‌லுவிழ‌ந்து போயின‌.

உதார‌ண‌மாக‌… ஒருகால‌த்தில் 10 மில்லிய‌ன் ஹெக்டேர் விவ‌சாய‌ நில‌த்தை கொண்டிருந்த‌, மிக‌ வ‌லிமையான‌ நாடாக‌ இருந்த‌ ரொமேனியா (Romania) இன்று சொல்லிக்கொள்ளும் அள‌வுக்கு முக்கிய‌த்துவம் இல்லாத‌ ஒரு சாதார‌ண‌ கிழ‌க்கைரோப்பிய‌ நாடு. அதுபோல், 16 ஆம் நூற்றாண்டுவ‌ரை ஐரோப்பாவின் ஆக‌ச்சிற‌ந்த‌ ப‌ல‌ம்வாய்ந்த‌ ராணுவ‌த்தை கொண்டிருந்த, ஒவ்வொரு ஐரோப்பிய‌ நாட்டையும் க‌திக‌ல‌ங்க‌ வைத்த‌ துருக்கியின் ஒட்டோமான் பேர‌ர‌சு, வெறும் மூன்றே நூற்றாண்டுக‌ளில் sickman of Europe என்ற‌ ஏள‌ன‌ப் பெய‌ர்பெற்று ஐரோப்பாவின் நோயாளியாக‌ சீர‌ழிந்துபோன‌து.

இப்ப‌டி கால‌ச்ச‌க்க‌ர‌த்தின் தொட‌ரோட்ட‌த்தில் மேலிருப்ப‌து கீழும் கீழிருப்ப‌து மேலுமாய் சுழ‌ன்று வ‌ந்த‌ நிலையில் 16-ம் நூற்றாண்டில் போர்ச்சுக‌ல், நெத‌ர்லாந்து, பிர‌ஞ்சு, ஸ்பெய்ன், ஜெர்ம‌னி, இங்கிலாந்து ஆகிய‌ நாடுக‌ள் வ‌லிமைபெற‌த் துவ‌ங்கின‌. துப்பாக்கிக‌ளும் வெடிம‌ருந்துக‌ளும் இத‌ற்கு முக்கிய‌ கார‌ண‌ம். இந்த‌ ந‌வீன‌ ஆயுத‌ங்க‌ள் போரின் இய‌ல்பையும் போர் உத்திக‌ளையும் பெரிதும் மாற்றிய‌மைத்த‌து. இந்த‌ கால‌க‌ட்ட‌த்தை ஐரோப்பிய‌ர் age of discovery என்று அழைத்த‌ன‌ர். பெய‌ரை பார்த்த‌தும் ஏதோ விஞ்ஞான‌ க‌ண்டுபிடிப்புக‌ளின் கால‌ம் என்று நினைத்துவிடாதீர்க‌ள். இவ‌ர்க‌ள் discovery என்று குறிப்பிடுவ‌து புதிய‌ தேச‌ங்க‌ளின் க‌ண்டுபிடிப்பு.

அதாவ‌து, ஐரோப்பா க‌ட‌ந்து ஒரு புதிய‌ நில‌ப்ப‌ர‌ப்பையும், அங்கு செல்லும் க‌ட‌ல்வ‌ழிப் பாதையையும் யார் க‌ண்டுபிடிக்கிறார்க‌ளோ, அவ‌ர்க‌ளுக்கே அந்த‌ புதிய‌ நாடு சொந்த‌ம். அந்த‌ நாட்டின் பூர்வ‌குடிக‌ள் இவ‌ர்க‌ளைப் பொறுத்த‌வ‌ரை கால்ந‌டைக‌ளுக்கு ஒப்பான‌வ‌ர்க‌ள், இல்லை அதைவிட‌வும் கீழான‌வ‌ர்க‌ள். த‌ங்க‌ளுடைய‌ வெண்ணிற‌ தோலும் உய‌ர‌மான‌ உட‌ல‌மைப்பும் பிற‌ ம‌னித‌ இன‌ங்க‌ளைவிட‌ த‌ம்மை உய‌ர்வான‌வ‌ர்க‌ளாக‌ ஆக்குகிற‌து என்று இவ‌ர்க‌ள் ந‌ம்பின‌ர். மொழியாலும் தேச‌த்தாலும் பிரிந்திருந்தாலும் Caucasian என்ற‌ இன‌மாக‌ த‌ம்மை அடையாள‌ப்ப‌டுத்திக் கொள்ப‌வ‌ர்க‌ள் இவ‌ர்க‌ள். ப‌ல‌ நாடுக‌ளில் இன்று ச‌ட்ட‌ப்ப‌டி இது குற்ற‌மாக‌ க‌ருத‌ப்ப‌ட்டாலும் இந்த‌ நிற‌ம்சார்ந்த‌ மேலாதிக்க‌ ம‌னப்பான்மை இன்றும் ஆங்காங்கே நில‌வத்தான் செய்கிற‌து.

இத‌ன் ஒரு தீவிர‌ வெளிப்பாடுதான் “இன‌த்தூய்மைவாத‌ம்” என்ற‌ பெய‌ரில் ஹிட்ல‌ர் கையிலெடுத்த‌ ஆரிய‌ மேலாதிக்க‌ முன்முனைவு. க‌றுப்ப‌ர்க‌ளோடு ஒப்பிட்டால் வெள்ளைய‌ர்க‌ள் மேலான‌வ‌ர்க‌ள். ஆனால் அந்த‌ வெள்ளைய‌ர்க‌ளுள் ஆரிய‌ர்க‌ள் மேலான‌வ‌ர்க‌ள் (best of the best) என்ப‌து ஹிட்ல‌ரின் பிர‌தான‌ பிர‌ச்சார‌மாக‌ இருந்த‌து. த‌ன் பின்னால் பெரும்பான்மை ஜெர்மானிய‌ர்க‌ளை ஒருங்கிணைக்க‌வும் துருவ‌ப்ப‌டுவ‌ப்ப‌டுத்த‌வும் ஒரு பொது எதிரி அவ‌னுக்கு தேவைப்ப‌ட்டான், அவ‌ர்க‌ள்தான் யூத‌ர்க‌ள். த‌ன் ஒவ்வொரு ப‌ல‌வீன‌த்தையும் த‌வ‌றையும் “யூத‌ர்க‌ள் ந‌ம் எதிரிக‌ள், அவ‌ர்க‌ள் ந‌ம்மை அழித்துவிடுவார்க‌ள். என‌வே என் பின்னால் அணிதிற‌ளுங்க‌ள்” என்ற‌ முழ‌க்க‌த்தின் மூல‌ம் மூடிம‌றைத்தான் ஹிட்ல‌ர். இதைப்ப‌ற்றி விரிவாக‌ முதலாம் உல‌க‌ப்போருக்குப்பின்னான‌ காக‌க‌ட்ட‌ம்ப‌ற்றி பேசுவோம்போது பார்ப்போம். இந்திய‌ சுத‌ந்திர‌த்தின் ச‌ரித்திர‌த்தில் இவ‌ர்க‌ளுக்கும் ப‌ங்குண்டு.

ஒருபுற‌ம் கொக்கேசிய‌ன் உய‌ர்வு ம‌ன‌ப்பான்மை த‌லைதூக்கி நின்ற‌தென்றால், ம‌றுபுற‌ம் colored skin என‌ப்ப‌டும் பிற‌ரின், குறிப்பாக‌ க‌றுப்பாக‌வும் மாநிற‌மாகும் இருப்ப‌வ‌ர்க‌ளின் தாழ்வு ம‌ன‌ப்பான்மை இத‌ற்கு மேலும் தூப‌ம் இட்ட‌து. பூர்வீக‌ அமேரிக்க‌க்குடிக‌ள், ஆப்பிரிக்க‌ர்க‌ள், ஆசிய‌ர்க‌ள் என்று யாரும் இத‌ற்கு விதிவில‌க்கில்லை.

வ‌ந்தாரை வ‌ர‌வேற்ப‌தும் அவ‌ர்க‌ளை வாழ‌வைப்ப‌தும் த‌வ‌றில்லை. ஆனால் அவ‌ர்க‌ளை த‌லைக்குமேல் தூக்கிவைத்து கொண்டாடும்போது “நாம் இவ‌ர்க‌ளைவிட‌ உண்மையிலேயே உய‌ர்ந்த‌வ‌ர்க‌ள்தானோ” என்ற‌ எண்ண‌ம் வ‌ந்தாருக்குள் வேரூன்றுவ‌து ஆச்ச‌ரிய‌மில்லை அல்ல‌வா..? அதுவும் ஏற்க‌ன‌வே superiority complex உள்ள‌வ‌ர்க‌ளுக்கு இந்த‌ அங்கீகார‌ங்க‌ள் அவ‌ர்க‌ளின் ம‌ன‌நோயை மேலும் அதிக‌ப்ப‌டுத்த‌வே செய்யும், செய்த‌து.

இந்த‌ சிந்த‌னையின் உச்ச‌ம்தான் “தான் க‌ண்டுபிடித்த‌ புதிய‌ நாடு த‌ன‌க்கே சொந்த‌ம், அத்திணையின் செல்வ‌ம் த‌ன‌க்கே சொந்த‌ம், அத‌ன் பூர்வ‌குடிக‌ள் த‌ன் அடிமைக‌ள்” எனும் ஐரோப்பிய‌ரின் பொதுப்புத்தியில் வேரூன்றிப்போன‌ ஆதிக்க‌ ம‌ன‌ப்பாண்மை.

போர்ச்சுக்கீசிய‌ர், ட‌ச்சுக்கார‌ர்க‌ள், ஆங்கிலேய‌ர், பிர‌ஞ்சுக்கார‌ர்க‌ள் என்று வ‌ரிசையாய் இந்திய‌ துணைக்க‌ண்ட‌த்தை சுர‌ண்டிக் கொழுத்த‌ ஐரோப்பிய‌ர்க‌ள் வ‌ரிசையில் அடுத்த‌தாக‌ பிரித்தானிய‌ கிழ‌க்கிந்திய‌ க‌ம்பேனியைப்ப‌ற்றி விரிவாக‌ பார்ப்போம்.

அத‌ற்குமுன் ஒரு க‌தை சொல்கிறேன், கேளுங்க‌ள்…

சும்மா கிடைத்த‌தா சுத‌ந்திர‌ம்? – 9 – Fazil Freeman Ali

Leave A Reply