சும்மா கிடைத்த‌தா சுத‌ந்திர‌ம்? – 9 – Fazil Freeman Ali

Share

இது ப‌ல்லாயிர‌ம் ஆண்டுக‌ளாக‌ உல‌கின் ப‌ல்வேறு பாக‌ங்க‌ளில், சின்ன‌ச்சின்ன‌ மாற்ற‌ங்க‌ளோடு வெவ்வேறு வ‌டிவ‌ங்க‌ளில் ந‌ட‌ந்திருந்த‌ க‌தைதான். குறிப்பாக‌ இந்திய‌த் துணைக்க‌ண்ட‌த்தில் அர‌ங்கேறிய‌ க‌தை இது…

அந்த‌ ர‌ம்மிய‌மான‌ நில‌ப்ப‌குதிக்கு ம‌க்க‌ள் குடியேறி சில‌ த‌லைமுறைக‌ளே ஆகியிருந்த‌து. அழ‌கான‌ அர‌ண்போன்ற‌ நீண்ட‌ ம‌லைத்தொட‌ர்க‌ள், புத்துண‌ர்ச்சியூட்டும் நீர்வீழ்ச்சிக‌ள், வ‌ளைந்து நெழிந்து கிளைக‌ள் ப‌ர‌ப்பி ஓடும் நெடிய‌ ஆறுக‌ள், அட‌ர்த்தியான‌ காடுக‌ள், க‌ண்ணுக்கெட்டிய‌ தூர‌ம்வ‌ரை புல்வெளிக‌ள் என்று அப்ப‌டியொரு சுவ‌ர்க்க‌பூமி அது. இதுவ‌ரை ம‌னித‌ர்க‌ள் கால் ப‌தித்திராத‌தால் மாசுப‌டாத‌ ம‌ண்ணும், நீரும், காற்றும் குடிகொண்டிருக்கும் அமைதியான‌ இட‌மாக‌ அது இருந்த‌து. ஏற்க‌ன‌வே வாழ்ந்திருந்த‌ இட‌த்தில் ஆறுக‌ள் வ‌ற்றிப்போன‌தாலோ, அன்னிய‌ர் ப‌டையெடுப்பாலோ, இய‌ற்கை பேர‌ழிவாலோ இவ‌ர்க‌ளின் முன்னோர் இங்கு புல‌ம் பெய‌ர்ந்திருந்த‌ன‌ர்.

சில‌நூறு ஆண்டுக‌ள் க‌ழிந்திருந்த‌தால் புல‌ம்பெய‌ர்வுக்கு ஒவ்வொருவ‌ரும் ஒவ்வொரு கார‌ண‌த்தை சொல்கிறார்க‌ள். இதில் ஏதோ ஒன்றோ, சில‌தோ அல்ல‌து அத்த‌னையுமேகூட‌ கார‌ண‌ங்க‌ளாக‌ இருக்க‌லாம். எது எப்ப‌டியோ இவ‌ர்க‌ளின் முன்னோர் ஒரு வ‌ள‌ர்ச்சிய‌டைந்த‌ நாக‌ரிக‌த்துக்கு சொந்த‌க்கார‌ர்க‌ள் என்ப‌து ம‌ட்டும் உறுதி. கார‌ண‌ம், ஆறுக‌ளை திருத்தி, ஓடைக‌ள் உருவாக்கி, கால்வாய்க‌ள் வெட்டி ஒரு சிற‌ந்த‌ நீர்ப்பாச‌ன‌ முறையும் விவ‌சாய‌ முறையும் உருவாக்கியிருந்தார்க‌ள்.

வெப்ப‌ம‌ண்ட‌ல‌த்தில் வாழ்ந்திருந்த‌தாலும் க‌டின‌ உழைப்பாளிக‌ளாக‌ இருந்த‌தாலும் ம‌க்க‌ளின் ச‌ரும‌நிற‌ம் ஆரோக்கிய‌மான‌ க‌றுப்பும் ப‌ழுப்பும் க‌ல‌ந்ததாக‌ இருந்த‌து.
காடுக‌ளில் வேட்டையாடித்திரிந்த‌ கால‌ம் ப‌ல்லாயிர‌ம் ஆண்டுக‌ளுக்கு முன்பே க‌ட‌ந்துவிட்டிருந்ததால் மிருக‌ங்க‌ளை துர‌த்தியும் உயிருக்கு அஞ்சியும் ஓட‌வேண்டிய‌ தேவை ஒழிந்துபோய், கால்க‌ளின் நீள‌ம் குறைந்து ஆற‌டிக்கு குறைவான‌ உய‌ரம் உள்ள‌வ‌ர்க‌ளாக‌ இருந்த‌ன‌ர். காடுக‌ளில் வாழ்ந்திருந்த‌ ப‌ல‌ மிருக‌ங்க‌ளை ப‌ழ‌க்கி த‌ம்மோடு வாழ‌வைத்து அவ‌ற்றை த‌ம் அன்றாட‌ தேவைக‌ளுக்கும் விவ‌சாய‌த்துக்கும் உண‌வுக்கும் ப‌ய‌ன்ப‌டுத்திவ‌ந்த‌ன‌ர்.

முழுமையான‌ எண்க‌ணித‌ அடிப்ப‌டையில் அமைக்க‌ப்ப‌ட்ட‌ மொழியும், அத‌ற்கு எழுத்து வ‌டிவ‌மும் உருவாக்கி, அதை க‌ற்க‌ளில் செதுக்கியும் ஓலைக‌ளில் வ‌டித்தும் வைத்திருந்த‌ன‌ர். வியாபார‌ கொடுக்க‌ல் வாங்க‌ல்க‌ளை முத‌லில் எழுத‌த்துவ‌ங்கி பின்னாட்க‌ளில் அருமையான‌ இல‌க்க‌ண‌ இல‌க்கிய‌ ஆக்க‌ங்க‌ளை உருவாக்கியிருந்த‌ன‌ர். இய‌ல் இசை நாட்டிய‌ம் அன்றாட‌ வாழ்வின் அங்க‌மாக‌ இருந்த‌து. விவ‌சாய‌ம் ம‌ட்டும‌ல்லாது மீன்பிடித்த‌ல், கால்ந‌டை வ‌ள‌ர்ப்பு, சுட்ட‌ ம‌ண்ணால் பாண்ட‌ம் செய்த‌ல், நெச‌வு, இரும்புப்ப‌ட்ட‌றை, த‌ங்க‌ ந‌கை செய்த‌ல், இன்னும் ப‌ல்வேறு தொழில்க‌ள் தெரிந்திருந்த‌து அவ‌ர்க‌ளுக்கு. செய்யும் தொழிலே தெய்வ‌ம் என்று வாழ்ந்திருந்த‌ அவ‌ர்க‌ள் த‌ம் கைவினை ம‌ற்றும் விளைபொருட்க‌ளை தொலைதூர‌த்தில் இருக்கும் ச‌ந்தை ஒன்றுக்கு எடுத்துச்சென்று விற்ப‌தும் த‌ம‌க்கு தேவையான‌தை அங்கிருந்து வாங்கி வ‌ருவ‌துமாக‌ வாழ்ந்திருந்த‌ன‌ர்.

த‌லைமுறைக‌ள் தொட‌ர‌, ம‌க்க‌ள்தொகை பெருக‌, வீடுக‌ளின் எண்ணிக்கை அதிக‌ரிக்க‌, வ‌ரிசையாய் ப‌ல‌ வீடுக‌ள் கொண்ட‌ தெருக்க‌ள் உருவாயின‌. தெருக்க‌ளை இணைக்க‌ வீதிக‌ள் உருவாகி, நாளாவ‌ட்ட‌த்தில் ஊர்க‌ள் உருவாயின‌. சிற்றூர்க‌ள் பேரூர்க‌ளாக‌ மாறி ந‌க‌ர‌ங்க‌ள் உருவாயின‌. சிறார்க‌ளுக்கு அறிவூட்ட‌ ந‌க‌ர‌த்திற்குள் க‌ல்விக்கூட‌ங்க‌ளும், ந‌க‌ர‌த்திற்கு வெளியே தொழிற்கூட‌ங்க‌ளும் உருவாக்க‌ப்ப‌ட்ட‌ன‌. சாலை வ‌ச‌திமுத‌ல் சாக்க‌டை வ‌ச‌திவ‌ரை அனைத்தும் திட்ட‌மிட்டு நேர்த்தியாக‌ செய்ய‌ப்ப‌ட்டிருந்த‌து. ஆங், சொல்ல‌ ம‌ற‌ந்துட்டேன்… உல‌கிலேயே சுட்ட‌ செங்க‌ற்க‌ளால் முத‌லில் வீடுக‌ள் க‌ட்டிய‌தும் இவ‌ர்க‌ள்தான்.

ஆர‌ம்ப‌த்தில் ஊருக்கு ம‌த்தியில் ம‌ர‌த்த‌டியில் ம‌க்க‌ளுக்கு பொழுதுபோக‌ மாலை வேளைக‌ளில் க‌தை சொல்லிக்கொண்டிருந்த‌வ‌ர்க‌ள் நாட‌க‌ம் என்ற‌ புதிய‌ க‌லைவ‌டிவ‌ம் மூல‌ம் அபிந‌ய‌த்தோடு க‌தை சொல்ல‌த்துவ‌ங்க‌, அதுவே ஒரு பிர‌தான‌ பொழுதுபோக்கும் துறையாயிற்று. ஒரு புற‌ம் இத‌ற்கு வ‌லுசேர்க்கும் வித‌த்திலும் ம‌றுபுற‌ம் இத‌ற்கு போட்டியாக‌வும் ந‌ட‌ன‌ம் என்ற‌ நாட்டிய‌ அர‌ங்குக‌ள் தோன்றின‌. க‌டின‌ உழைப்பும் க‌ளைப்புதீர‌ பொழுதுபோக்கும் செறிவான‌ வாழ்வை ம‌க்க‌ளுக்கு வ‌ழ‌ங்கியிருந்த‌து.

இய‌ற்கையோடு இசைந்து வாழ்ந்திருந்த‌ ம‌க்க‌ள் ம‌ழையையும் ம‌லையையும் த‌ம் வாழ்வாதார‌த்தின் முக்கிய‌ தூண்க‌ளாக‌க்க‌ண்டு அதற்கு ந‌ன்றிசெலுத்தும் வித‌மாக‌ அறுவ‌டைகால‌ம்தோறும் வ‌ண‌ங்கி வ‌ழிப‌ட‌த்துவ‌ங்கின‌ர். குடும்ப‌ங்க‌ள் கூடுமான‌ரை த‌ம் முன்னோரை நினைவுகூர்ந்து அவ‌ர்க‌ளுக்கும் ந‌ன்றிசெலுத்தும் வித‌மாக‌ வ‌ண‌க்க‌ம் செலுத்தி வ‌ந்த‌ன‌ர். தொழில் சார்ந்த‌ ச‌மூக‌ அடுக்குக‌ள் உருவாகியிருந்தாலும் பிற‌ப்பால் யாரும் சிறுமைப்ப‌டுத்த‌ப்ப‌ட‌வில்லை. அறிவும் ஆற்ற‌லுமே அங்கீகார‌த்தின் அள‌வுகோலாய் இருந்த‌து. “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்” என்ப‌தே ச‌மூக‌ ஒழுங்காக‌ இருந்த‌து.

பெரும் நில‌ப்ப‌ர‌ப்பை சொந்த‌ம் கொண்டாடியிருந்த‌ தொல்குடியின் சில‌ குடும்ப‌ங்க‌ள் இப்போது குறுநில‌ ம‌ன்ன‌ர்க‌ளாக‌ உருவாகிவிட்டிருந்த‌ன‌ர். ப‌ல‌ ஊர்க‌ளையும் சில‌ ந‌க‌ர‌ங்க‌ளையும் உள்ள‌ட‌க்கியிருந்த‌ இந்த‌ அர‌சுக‌ள் த‌ம‌க்குள் அவ்வ‌ப்போது ச‌ண்டையிட்டுக்கொள்வ‌தும் பிற‌கு ச‌மாதான‌மாகிப்போவ‌தும் வாடிக்கையாகிப்போன‌து. த‌ன் நாட்டு ம‌ன்ன‌ர்க‌ளை புக‌ழ்ந்தும் பிற‌ ம‌ன்ன‌ர்க‌ளை இக‌ழ்ந்தும் பாடி ப‌ரிச‌ல்பெற்று வாழும் புல‌வ‌ர் எனும் மொழி ஆளுமைகொண்ட‌ குழு ஒன்று உருவாயிற்று.

புல‌வ‌ர்க‌ள் என்று அழைக்க‌ப்பட்ட‌ இவ‌ர்க‌ளில் சில‌ மொழி அறிஞ‌ர்க‌ள் ஆக்கிய‌ பெருங்க‌தைக‌ள் காவிய‌ங்க‌ளாக‌ எல்லோராலும் சிலாகித்து போற்றி பாராட்டப்ப‌ட்ட‌ன‌. இவை நாட‌க‌ங்க‌ளாக‌வும் நாட்டிய‌ங்க‌ளாக‌வும் காட்சிப்ப‌டுத்த‌ப்ப‌ட்டு ம‌க்க‌ளை க‌வ‌ர்ந்த‌ன‌. இன்னும் சில‌ த‌லைமுறைக‌ள் சென்ற‌பின் இவை த‌ம் முன்னொரின் உண்மை க‌தைக‌ளென்று சில‌ர் ந‌ம்ப‌த்துவ‌ங்கி, அந்த‌ க‌தாப்பாத்திரங்க‌ளுக்கும் ந‌ன்றியும் வ‌ண‌க்க‌மும் செலுத்த‌த்துவ‌ங்கின‌ர்.

இத‌ற்கிடையே த‌ம் நில‌ப்ப‌ர‌ப்பில் புல்வெளிக‌ள் காய்ந்துபோன‌தால் ஆடுமாடுக‌ளுக்கு நீரும் புல்லும் தேடி அலைந்து திரிந்த‌ நாடோடிக்கூட்ட‌மொன்று இந்த‌ நில‌ப்ப‌ர‌ப்பை வ‌ந்த‌டைந்த‌து. இங்குள்ள‌ ம‌க்க‌ளின் வாழ்க்கைத் த‌ர‌த்தையும் ம‌ண்ணின் வ‌ள‌த்தையும் க‌ண்டு அதிச‌ய‌த்து நின்ற‌ அவ‌ர்க‌ளை வாஞ்சையோடு வ‌ர‌வேற்ற‌ன‌ர் இத்தினையின் ம‌க்க‌ள். ஒருவேளை உண‌வுக்கே சிர‌ம‌ப்ப‌ட்டிருந்த‌ இவ‌ர்க‌ளுக்கு வந்துசேர்ந்த‌ இட‌ம் சுவ‌ர்க்க‌புரியாக‌வே தோன்றிய‌து.

இவ‌ர்க‌ளைப்போன்றே போர்க‌ளால் அக‌தியாக்க‌ப்ப‌ட்டு அப‌ய‌ம் தேடி வ‌ந்த‌வ‌ர்க‌ள்; இங்கு விளையும் பொருட்க‌ளை வாங்க‌ வ‌ந்த‌ வ‌ணிக‌ர்க‌ளில் சில‌ர்; கைவினைப் பொருட்க‌ளின் ம‌கிமை கேள்விப்ப‌ட்டு இங்கு வ‌ந்த‌ வியாபாரிக‌ளில் ஊர் பிடித்துப்போய் இங்கேயே குடியேறிய‌வ‌ர்க‌ள் என்று ம‌க்க‌ள் தொகை நாளுக்குநாள் ப‌ல்கிப்பெருகிய‌து.

வ‌ந்துபோன‌ வ‌ணிக‌ர்கூட்ட‌ம் இந்த‌ ம‌ண்ணின் பெருமையையும் ம‌க்க‌ளின் நாக‌ரிக‌த்தையும் செல்வ‌ச்செழிப்பையும் சென்ற‌ இட‌மெல்லாம் கூற‌, தேனாறும் பாலாறும் ஓடும் இந்த‌ நாட்டை காண‌ தூர‌தேச‌த்து ம‌ன்ன‌ர்க‌ளும் வ‌ணிக‌ர்க‌ளும் பேர‌வா கொண்ட‌ன‌ர்.

இப்ப‌டி வாழ்க்கை அமைதியாய் ஓடிக்கொண்டிருந்த‌ சூழ‌லில், ஒருநாள்….

சும்மா கிடைத்த‌தா சுத‌ந்திர‌ம் – 10 – Fazil Freeman Ali

Leave A Reply