எப்போதாவது வரும் கண்ணீர் – கை அறிவழகன்

Share

இலைகளில் இருந்து மழை நீர் சொட்டிக் கொண்டிருந்த ஒரு மழைக்காலத்தின் காலைப் பொழுதில் அந்த சின்னஞ்சிறிய பெண் என்னைப் பார்க்க வந்திருந்தாள்.‌ வழக்கமாக மாநகரத்தின் சாயலைக் காட்டும் எந்த அடையாளங்களும் அவளிடத்தில் இல்லை. அவளது கண்களில் மெல்லிய துயரத்தின் ரேகைகள் படர்ந்திருந்தது.

ஏறத்தாழ 350 பெண் குழந்தைகளுக்கு அவர்களின் பட்டப்படிப்பின் ஒரு மிக முக்கியமான பகுதியான “Internship” மற்றும் “Project” களுக்கு வெளியிலிருந்து உதவுகிற வழிகாட்டியாக “External Guide” ஆக இருந்திருக்கிறேன்.
அதற்காக பெங்களூரின் மகாராணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியும், நேஷனல் கல்லூரியும் என்னை அதிகாரப்பூர்வமாக தங்கள் கல்லூரியின் External Guide ஆக அறிவித்திருந்தார்கள். பேராசிரியர்கள் என்னை அழைத்து மதிப்போடு பேசுவார்கள்.

கிரைஸ்ட் பல்கலைக்கழகம் தனது ஒருங்கிணைந்த மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் நிறைந்த அவையில் என்னை அழைத்துப் பேசச் சொன்னபோது நான் நெகிழ்வாக உணர்ந்தேன். அதே கல்லூரி வளாகத்தில் ஒரு வேலைக்கான நேர்முகத் தேர்வில் தோல்வியுற்று நீண்ட நேரம் மரத்தடியில் அமர்ந்திருந்து வீடு திரும்புவதற்குப் போதிய பணமில்லாமல் நடந்து சென்றிருக்கிறேன்.

அந்தக் கல்லூரி விழாவிற்கு நிறுவனம் எனக்கு வழங்கியிருந்த Honda City மகிழுந்தில் போய் இறங்கியபோது “வெள்ளத்தனைய மலர்நீட்டம்” என்கிற வள்ளுவப் பெருந்தகையின் குரல் நினைவில் வந்தது.

நான் வெறும் பொருளைத் தேடி அடைகிற மனிதனாக இருந்திருந்தால் உறுதியாக வாழ்க்கை அப்படி ஒரு அவையில், கற்றறிந்த சான்றோர் பெருமக்களை எழுந்து நிற்கவைத்து என்னை வரவேற்றிருக்காது.
நான் ஒரு மண் சாலையில் மாட்டு வண்டிகள் மட்டுமே பயணிக்கிற கிராமத்தில் இருந்து திராவிட இயக்கத்தின் எழுச்சி மிக்க அரசியல் மூலமாகக் கிடைத்த கல்வியால் பயனுற்று முதுகலைப் பட்டம் பெற்று அரசுப் பணியாற்றிய தந்தையின் மகனாகப் பிறந்து வளர்ந்தவன்.

கல்வியின் முக்கியத்துவத்தையும் அது தருகிற மாபெரும் பரிசுகளையும் கண்கூடாகப் பார்த்தவன். தலையாய அந்தப் பணிகளைத் தொய்வில்லாமல் நிகழ்த்திய தந்தை பெரியாரையும், அறிஞர் அண்ணாவையும், கலைஞர் கருணாநிதியையும் நன்றியோடு நினைவு கூர்கிறவன்.

மனித வளத்துறையில் முடிவெடுக்கிற ஒரு பதவியில் இருந்ததால் மட்டுமல்ல, பெருநிறுவனங்களின் மனிதவளத்துறைக் கொள்கைகளில் சமூக மேம்பாட்டுக்கான இடத்தில் இருந்துதான் நான் மாணவர்களின் கல்விக்காகப் பணியாற்றினேன்.

குறிப்பாகப் பெண் குழந்தைகளுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறேன். அவர்கள் ஒவ்வொருவரையும் எனது குழந்தைகளாக நான் உணர்ந்திருக்கிறேன், ஆண் குழந்தைகளுக்கு எப்படியாவது கிடைத்து விடுகிற இத்தகைய வாய்ப்புகள் பெண் குழந்தைகளுக்கு அவர்களது தயக்கத்தாலும், ஒடுங்கிய மனத்தாலும் கிடைப்பதில்லை‌ என்பதை நான் அறிந்திருந்தேன்.

அலுவலகத்தில் இதுகுறித்த துணைக்கதைகளை உலவ விட்டிருக்கிறார்கள், என்னை சில நேரங்களில் உடைய வைத்திருக்கிறார்கள். ஆனால் நிறுவனத்தின் துணைத் தலைவரும் தென்னிந்திய இயக்கத்தைக் கவனித்துக் கொண்டவருமாகிய காஷ்மீரிலிருந்து வந்த மனிதர் “ராஜேஷ் பஜ்னூ” எனது உளவியலை அறிந்தவராக மட்டுமில்லாமல் இயல்பாகவே அவரிடமிருந்த சமூக சிந்தனைகள் காரணமாக என்னை ஊக்குவித்தார்.

எனது பணிகளைக் குறித்து பெருமிதம் கொண்டவராக இருந்தார். தனிப்பட்ட சந்திப்புகளில் எல்லாம் இதுகுறித்துப் பேசியது மட்டுமில்லாமல் அவரது நட்பு வட்டத்தில் இருந்து கல்வி பயிலும் குழந்தைகளை என்னிடம் அனுப்புவார்.
துயர் நிரம்பிய கண்களோடு வந்திருந்த ஒரு குழந்தையின்‌ கதையை‌ சொல்ல வந்தவன் சுயபுராணத்திற்குள் நுழைந்து விட்டேன் என்று நினைக்கிறேன்.

மாநகரத்தோடு ஒட்டாத உடைகளோடும், மொழியோடும் வந்திருந்த அந்தக் குழந்தையிடம் குறிப்புகளை வாங்கிப் பார்த்துவிட்டு, கல்லூரி கொடுத்திருந்த கடிதத்தை வாங்கி எந்த மறுப்பும் சொல்லாமல் இந்தத் தேதியில் இருந்து நீங்கள் உங்கள் திட்டப்பணிகளைத் துவங்கலாம் என்று சொல்லி அனுப்பினேன்.

கர்நாடக மாநிலத்தின் குல்பர்காவுக்கு அருகில் இருக்கும் கிராமத்தில் இருந்து வணிக மேலாண்மையில் முதுகலைப் பட்டம் படிக்க வந்திருக்கிறாள் அந்தக் குழந்தை. முதல் நாள் முடிந்து விடை பெறுகிற போது தயக்கத்தோடு நின்றவளிடம் “என்னம்மா? என்றேன். “சார், என்னால் தொடர்ந்து 60 நாட்களும் வரமுடியுமா என்று தெரியவில்லை, வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் வருவதற்கு அனுமதிக்க முடியுமா?” என்றாள் குழந்தை.
ஏன் என்று கேள்வி கேட்டபோது கண்களில் முட்டும் கண்ணீரோடு அவள் சொன்னாள், “பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து உங்கள் அலுவலகத்துக்கு வந்து போவதற்கு தினமும் 50 ரூபாய் செலவாகிறது, என்னிடம் அவ்வளவு பணமில்லை”.

கடுந்துயர் சூழ அவளது முகத்தைப் பார்த்துக் கேட்டேன், “அப்பா என்ன செய்கிறார்?” “அப்பா சாலைகளை செப்பனிடும் வேலை செய்கிற தினக்கூலி, தம்பியும் படித்துக் கொண்டிருக்கிறான், தனியார் நிறுவனத்தில் ஓட்டுனராக இருக்கும் சித்தப்பாவின் உதவியாலும், சில ஆசிரியர்களின் வழிகாட்டுதலாலும் வணிக மேலாண்மையில் முதுகலைப் பட்டம் படிக்க வந்திருக்கிறாள் குழந்தை.

வறுமையும், இடைவிடாது துரத்தும் குடும்பப் பின்னணியும் இருந்தாலும் கல்வியை விடாது பற்றிக் கொண்டிருக்கிறாள், கொஞ்ச நேரம் அமரச் சொல்லிவிட்டு அலுவலகத்தின் பின்பக்கமாகப் போய் எனது பணப்பையை எடுத்துப் பார்த்தேன், 130 ரூபாய் இருந்தது. மாத இறுதி நாட்கள் வங்கிக் கணக்கிலும் பெரிதாக பணம் இல்லை, அலுவலகக் கணக்காளரிடம் போய் 1000 ரூபாய் முன்பணம் வாங்கிக் கொண்டு இருக்கைக்கு வந்தேன்.

“அம்மா, எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறாள், வயதில் சிறியவளாக இருந்தாலும் பார்ப்பதற்கு உன்னைப் போலத்தான் இருப்பாள், அவளது கண்களில் இருந்து எப்போதாவது வருகிற கண்ணீர் என்னை என்ன செய்யுமோ அதைத்தான் உனது கண்ணீரும் செய்கிறது, இதை வைத்துக் கொண்டு தினமும் வந்து விடு” என்றபடி பணத்தை எடுத்து அவளது கைகளில் வைத்து திணித்தேன்.

மறுத்துப் பார்த்தவள், வற்புறுத்தலுக்குப் பிறகு கைகளைக் கூப்பியபடி வாங்கிக் கொண்டாள். விடைபெற்றுப் போனவள் அமர்ந்திருந்த வெற்றிடத்தை வெகு நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன்.

வழக்கமாக வணிக மேலாண்மையில் “Project” செய்கிற குழந்தைகள் ஒரே மாதிரியான தலைப்பைத்தான் தேர்ந்தெடுப்பார்கள், “Working Capital Management”, “Impact of Policy in Profit Loss”, “Employees roll in Organizational Growth” போன்ற தலைப்புகள், வெகு அரிதாகவே சில குழந்தைகள் வேறு தலைப்புகளைத் தேர்வு செய்வார்கள்.

இந்தக் குழந்தை நான் வழக்கமான தலைப்பிலிருந்து மாறுபட்டு உங்கள் நிறுவனத்தோடு தொடர்புடைய வேறு தலைப்பில் பணிபுரிகிறேன் என்றபோது நானாகவே “சொட்டுநீர்ப்பாசனத்தின் எதிர்காலம்” என்றொரு தலலப்பைக் கொடுத்தேன்.

மூன்றாவது நாளில் அவள் கொண்டு வந்திருந்த குறிப்புகளும், விளக்கமும் கண்களை விரியச் செய்தது, பல்வேறு நாடுகளில் நிகழும் சொட்டுநீர்ப்பாசன செயல்முறைகள், வரைபடங்கள், குறிப்புகள் என்று பிரம்மாண்டமாக இருந்தது அவளது கற்றல்.

நானும் கூடுதல் நேரம் செலவிட்டு Synospsis ஐ வடிவமைக்க உதவினேன், எனது வழிகாட்டுதலில் மிகச்சிறப்பாக செய்யப்பட்ட Project அதுதான் என்று இப்போதும் நம்புகிறேன். பல நாடுகளில் நடக்கும் சொட்டுநீர்ப்பாசன வழிமுறைகளை ஒப்பிட்டு அற்புதமாக முடித்து Viva விலும் நல்ல வரவேற்போடு முடித்துக் கொண்டாள்.
கேக் பொட்டலத்தோடு வியர்க்க விருவிருக்க ஒரு நண்பகலில் வந்து இருகைகளையும் சேர்த்து வணக்கம் சொன்னவளைப் பார்த்தபோது நெகிழ்வாக இருந்தது. நிறைமொழி வளர்ந்து ஏதிரில் நிற்பது போல் மனம் நிறைந்திருந்தது.

வளாகத்தில் நடக்கும் தேர்வில் வெற்றி பெற்று உடனடியாக வேலைக்குப் போனாள் அந்தக் குழந்தை, Norton Trust எனும் பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தாள் அந்தக் குழந்தை. இரண்டு ஆண்டுகளில் இன்னொரு நிறுவனம், அலுவலகத்துக்கு வந்து தகவல் சொன்னவளை உற்றுப் பார்த்தேன்.

மாநகரத்தின் சாயல் உடைகளில் தெரிந்தது, எனது அறையெங்கும் நறுமணம் நிறைந்திருந்தது, கண்களில் அந்தக் குழந்தையை முதல் நாளில் பார்த்த துயரத்தின் சாயல் இல்லை, மகிழ்ச்சியும் நம்பிக்கையும் தெறிக்கும் உடல்மொழி. ஆனால் குறையாத நன்றியுணர்வும், என் மீதான மதிப்பும் அப்படியே இருந்தது.

“சார், நான் உங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும்” என்றாள். மெலிதாகப் புன்னகைத்து “நான் உனக்கு என்ன செய்தேனோ அதையே நீ மற்றவர்களுக்கும் செய்தால் மகிழ்வேன் அம்மா” என்றேன். மற்றொரு நாளில் திருமண அழைப்பிதழைக் கொண்டு வந்து கொடுத்தவள் கூடவே ஒரு இளைஞனையும் அழைத்து வந்து நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறவர் என்று அறிமுகம் செய்தாள்.

ஆண்டுகள் கடந்து மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேயிருந்த இன்னொரு மழை நாளில் நான் அந்த நிறுவனத்தில் இல்லை, தெரியாத எண்ணில் இருந்து வந்த அழைப்பை எடுத்து “ஹலோ”, என்றேன், “சார், வீணா பேசுகிறேன், எப்படி இருக்கிறீர்கள்?” “ஒரு குறையுமில்லை அம்மா” “சார், பையன் பிறந்திருக்கிறான்” மகிழ்ச்சியும் பெருமிதமும் பொங்கும் குரல்.

முடிக்கும் போது கேட்டேன், “அம்மா, குழந்தைக்கு என்ன பெயர்‌ வைத்திருக்கிறீர்கள்?” மென்மையான குரலில் என்னுடைய கர்நாடகப் பெயரைச் சொன்னாள் வீணா என்கிற அந்தக் குழந்தை.

“உங்க பேர்தான் சார்”
வாழ்க்கையின் பொருள் நிறைவுற்றதாக எண்ணி நெகிழ்ந்து போனேன். மகிழ்ச்சியாகவும் மனநிறைவோடும் காலத்தை வென்று வாழ்வதற்கும், மரணத்தை எட்டி உதைப்பதற்கும் ஒரே ஒரு எளிய வழிதான் இருக்கிறது, சக மானுடர்க்கு எளிய, அளவற்ற அன்பை வழங்குவது தான் அது. நமது குழந்தைகளைப் போல பிற குழந்தைகளை நேசிப்பது தான் அது.

Painting Courtesy : Daddy Carry Me by “Vickie Wade”
கை.அறிவழகன்

Leave A Reply