வங்கத்தை உலுக்கிய தேபாகா போராட்டம் – விவசாயிகள் போராட்டம் 1

Share

1946ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியில் ஒன்றுபட்ட வங்கத்தில் மாபெரும் உழைப்பாளர் போராட்டம் வெடித்தது. அந்தப் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தியவர்கள் பெண்கள் என்றால் வியப்பாக இருக்கும். விவசாயத்தை பின்புலமாக கொண்ட எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் “நாரி பாகினி” என்ற பெண்கள் படையை முன்னின்று நடத்தினார்கள்.


தேபாகா என்றால் “மூன்று பங்கு” என்று பொருள். வங்கத்தில் நிலத்தின் உரிமையாளருக்கு, அதில் உழைப்பவர்கள் விளைச்சலில் பாதியை தந்தாக வேண்டும். ஆனால், உழைப்பவர்களுக்கு இரண்டு பங்கும், உரிமையாளருக்கு 1 பங்குமாக குறைக்க வேண்டும் என்றுதான் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.


வங்கத்தில் நிலவுடமைச் சமூகத்துக்கு ஜோதிதர் என்று பெயர் வழங்கப்பட்டிருந்தது. அந்தச் சமூகத்துக்கு ஆதரவாக ஆங்கிலேய அரசு தன் காவலர்களை நிறுத்தியது. அதன் பின்தான் போராட்டம் போர்க்களம் ஆனது.


தீனஜ்பூர், மைமென்சிங், ஜெசூர் போன்ற பகுதிகளில் பெண்கள் களம் இறங்கினார்கள். விவசாய கிராமங்களில் அறுவடை செய்யப்பட்டு உரிமையாளர் பதுக்கி வைத்திருந்த விளைச்சலை குடியானவ பெண்கள் கையகப்படுத்தி தங்களுக்குள் பகிரத் தொடங்கினார்கள்.

ஓவியர் சோம்நாத் ஹோரே வரைந்த தேபாகா போராட்ட ஓவியங்கள், 1946


ஆண்களை காவல்துறை ஊரை விட்டு விரட்ட, கைகளில் துடைப்பம், குச்சி, கத்தி, ஈட்டி என்று கிடைத்த பொருள்களை கொண்டு தங்களை காத்துக்கொள்ள இந்த கிராமத்துப் பெண்கள் குழு அமைத்தார்கள்.


ஒடுக்கப்பட்ட சாதி இந்துப் பெண்களும், ஹசோங் பழங்குடி இனப் பெண்களும், அவர்களுக்கு ஆதரவாக இஸ்லாமியப் பெண்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றார்கள்.


காவல்துறையினராலும், ஜோதிதர் நிலவுடமைச் சமூகத்தைச் சேர்ந்தோரால் ஆபத்து வருகிறது என்றால், இந்தப் பெண்கள் சங்கு ஊதியும், மணிகள் அடித்தும் பக்கத்து ஊர் பெண்களுக்கு தெரியப்படுத்தினார்கள். பெரும் படையாக பெண்கள் ஒன்று திரண்டு காவலர்களை துடைப்பம் கொண்டு அடித்து விரட்டினார்கள். ஒரு முறை இப்படி கூடிய 2000 பெண்களிடம் 30 காவல்துறை ஆண்கள் அடிவாங்கிய நிகழ்வும் உண்டு.


கம்யூனிஸ்ட் கட்சி இந்தப் பெண்களை ஆரம்பத்தில் ஒருங்கிணைத்த போது அவர்களுக்கு வழிகாட்டியாக தானே தோன்றிய தலைவிதான் பிமலா மாஜி. 13 வயதில் விதவையான மித்னபூர் பிமலா, தனது கணவர் மூலம் தனக்கு சேரவேண்டிய பங்கு நிலத்தை, தனது புகுந்த வீட்டில் சண்டையிட்டு பெற்றார்.


இவரது வெற்றியை அறிந்து இவரைத் தேடி பெண்கள், குறிப்பாக இளம் விதவைகள் வரத் தொடங்கினார்கள். பெண்கள் நிலத்தை எப்படி கையகம் செய்வது என்று பெண்களுக்கு வழிகாட்டத் தொடங்கினார் பிமலா. கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவும் கிடைக்க, 24 பர்கானாஸ் மாவட்டத்தின் போராட்ட முகமாக உருவெடுத்தார்.

ஓவியர் சோம்நாத் ஹோரே வரைந்த தேபாகா போராட்ட ஓவியங்கள்,1946


பல காலம் தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டிய சூழலும் அவருக்கு ஏற்பட்டது. கட்சியோ தலைமையோ பின்னாளில் போராட்ட களத்தில் இருந்து ஒதுங்கிக் கொள்ள, வழிகாட்ட யாருமில்லாமல் போராட்டம் நீர்த்துப் போனது. வீடு ஒன்றில் பதுங்கி இருந்த பிமலா, கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட ஒரு மாதம் விலங்கு போல கூண்டில் அடைக்கப்பட்டார். அவர் மேல் 140 வழக்குகள் இருந்தன. சிறைக்கும் நீதிமன்றத்துக்கும் அலைக்கழிக்கப்பட்டவர் ஒரு வழியாக 1947 பிரிவினைக்குப் பின் விடுதலையானார். இந்த விவசாயிகள் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் இறந்து போனார்கள்.
சில மாதங்களே நடந்த போராட்டம் என்றாலும், தேபாகா போராட்டம் சாதாரணப் பெண்களின் அசாதாரண போராட்டமாக வரலாற்றில் பதிவானது. இந்த போராட்டத்தில் பெண்கள் பெருவெற்றி பெற ஒரே காரணம்தான் இருந்தது என்று குறிப்பிடுகிறார் ஆய்வாளர் கஸ்ட்னர். “நில உடைமை சமூகம் ஒரு பக்கம் அவர்களை அழுத்தியது என்றால், ஆணாதிக்க சமூகமும் அவர்களை ஒடுக்கியது. இதுவே இரட்டை முனைப்புடன் இந்தப் பெண்கள் சமர் புரிய காரணமாகி விட்டன.”


போராட்டத்தில் பெண்களும் குழந்தைகளும் கலந்துகொள்ளவில்லை என்று இப்போது நடந்துவரும் விவசாயிகளின் டெல்லி முற்றுகைப் போராட்டம் குறித்து உச்ச நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது! பெண்கள் களத்தில் இல்லை என்று நீதியரசர்கள் எப்படி நினைத்தார்கள் என்று தெரியவில்லை. பெண் இல்லாமல் புரட்சி இல்லை. A woman’s place is in the revolution.

டெல்லி முற்றுகைப் போராட்டத்தில் பெண்கள்

Leave A Reply