லெனினுடன் சில நாட்கள் 3 – மாக்ஸிம் கார்க்கி

Share

லண்டன் காங்கிரஸில் லெனின்!

என்னுடைய சந்தோஷமெல்லாம் முதல் கூட்டம் வரையில் தான் நீடித்தது. அப்புறம் அவர்கள் “தற்கால நடைமுறை” பற்றி, ஒருவரை ஒருவர் மென்னியைப் பிடித்து விவாதிக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த விவாதங்களின் காரணமாக ஏற்பட்ட வெறியையும், ஆவேசத்தையும் கண்டு என் குதூகலமெல்லாம் பறந்துபோய்விட்டது.

இதற்கு முக்கிய காரணம் கட்சியானது சீர்திருத்தக் கோஷ்டி என்றும், புரட்சிக் கோஷ்டி என்றும் பிளவுபடுகிறதே என்பதல்ல. இப்படிப்பட்ட பிளவை 1903லேயே நான் எதிர்பார்த்திருந்தேன். என் குதூகலம் குன்றியதன் காரணம் என்ன? சீர்திருத்தவாதிகள் லெனினிடம் காட்டிய விரோத மனப்பான்மைதான். தண்ணீர் நிரம்பிய ரப்பர்க் குழாயைப் பலமாக அழுத்தியதும் எப்படித் தண்ணீர் கசிந்து வெளியே பாய்கிறதோ, அதுபோல அவர் களின் வாய்மொழிகளில் அந்த விரோத மனப் பான்மை வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.

சொல்லப்பட்ட விஷயம் முக்கியமானதாக எப்பொழுதும் இருந்துவிடுவதில்லை; அது எந்தத் தோரணையில் சொல்லப்பட்டது என்பதே சில சமயங்களில் முக்கியமானதாக ஆகிவிடுகிறது. பிராடஸ்டெண்ட் பாதிரியைப்போல், நன்கு பொத்தான் மாட்டிய இறுக்கமான கோட்டைப் போட்டுக் கொண்டு மகாநாட்டைத் திறந்துவைத்தார் பிளெக்கனாவ்,
பாதிரியாரைப் போலவே அவர் பேசினார். தம் கருத்துக்கள் மறுக்க முடியாதவை என்ற நம்பிக்கையுடனும், தம்முடைய ஒவ்வொரு வார்த்தையும், வார்தைகளின் நடுவில் இடை வெளியாக விழும் மௌனமும் அதிக மதிப்பு வாய்ந்தவை என்ற நினைப்புடனும் அவர் பேசினார். மேடைமீது ஏறி நின்றுகொண்டு, அழகு அழகாக உருட்டித் திரட்டப்பட்ட தம் வாசகங்களை நன்றாக அளந்து, திறமையாக வெளியிட்டுக் கொண்டிருந்தார்.

போல்ஷ்விக் பெஞ்சுகளில் ஏதேனும் ஒரு அரவம் கிளம்பினாலும், யாராவது தம் தோழருக்குக் ‘குசுகுசு’ என்று எதையாவது சொன்னாலும் அந்த மதிப்பு வாய்ந்த வாய் ஜாலாக்காரர் தம் பேச்சைச் சற்று நிறுத்தி, அந்தப் பக்கமாகத் திரும்பி, ஊசியால் குத்துவது போலப் பார்ப்பார்.

அவருடைய கோட்டுப் பொத்தான்களில் ஒன்றின்மீது அவருக்கு ரொம்ப ரொம்பப் பிரியம் போல. அதனால் எப்பொழுதும் அதைத் தம் விரலால் தடவிக் கொடுத்துக் கொண்டும், பேச்சை அவ்வப்போது நிறுத்தும் சமயங்களில் மின்சாரப் பொத்தானை அழுத்துவதுபோல அதை அழுத்திக் கொண்டும் இருந்தார். இப்படி அழுத்துவதுதான் அவருடைய பேச்சின் இழையை அங்கங்கே கத்திரித்து விடுகிறதோ என்றும் தோன்றியது.

ஒருதடவை, யாரோ கேட்ட கேள்விக்குப் பதில் அளிக்க எழுந்த பிளெக்கனாவ், தம் கைகளை மடக்கிக்கொண்டு உரத்த குரலிலும் மிக அலட்சியமாகவும், ‘ஹா!’ என்று கத்தினார். உடனே போல்ஷ்விக் பெஞ்சில் அமர்ந்திருந்த ஊழியர்கள் சிரித்துவிட்டார்கள். பிளெக்கனாவ் தம் புருவங்களை உயர்த்திப் பார்த்தார். அவருடைய கன்னம் வெளுத்துப் போய்விட்டது. நான் மேடைக்குப் பக்கவாட்டில் அமர்ந்திருந்ததால் அவருடைய கன்னத்தைப் பார்க்க முடிந்தது.

முதல் கூட்டத்தில் பிளெக்கனாவ் பேசிக்கொண் டிருக்கும்போது, போல்ஷ்விக் பெஞ்சில் ஒரேடியாக அமைதியற்றுப்போய் அதிகமான பரபரப்புடன் உட்கார்ந்திருந்தவர் லெனின்தான்.
ஒரு சமயம் பொறுக்க முடியாத குளிரினால் ‘நடுங்குகிறவர்போல்’ உடம்பைக் குறுக்கிக்கொண்டும், மற்றொரு சமயம் உஷ்ண மிகுதியைத் தாங்க முடியாதவர் போலக் கால்கைகளைப் பரத்திப் போட்டுக் கொண்டும் உட்கார்ந்திருந்தார். சட்டைக் கைகளில் விரல்களைத் திணித்துக் கொண்டும், தாடையைத் தேய்த்துக் கொண்டும், தலையை ஆட்டிக் கொண்டும், எம்.பி. டாம்ஸ்கியிடம் எதையோ குசுகுசுத்துக்கொண்டும் இருந்தார் லெனின். கட்சியில் ‘ரிவிஷனிஸ்டுகளே’ கிடையாது என்று பிளெக்கனாவ் சொன்னபோது, லெனின் குனிந்து உட்கார்ந்தார். அவருடைய வழுக்கைத் தலை சிவந்து விட்டது; மௌனமான சிரிப்பால் அவருடைய புஜங்கள் குலுங்கின. அவரை அடுத்தும், அவருக்குப் பின்புறமாகவும் உட்கார்ந்து கொண்டிருந்த ஊழியர்களும் புன்னகை செய்தார்கள். ஹாலின் பின் கோடியிலிருந்து ஒரு குரல், “அப்படியானால் அங்கே உட்கார்ந்திருப்பவர்கள் எல்லாம் யார்?” என்று இரைந்து கேட்டது.

தியோடார் டான் என்ற குள்ளமான மனிதர் எழுந்து பேசத் தொடங்கினார். தமக்கும் உண்மைக்கும் உள்ள தொடர்பு, தகப்பன் – மகள் தொடர்பு போன்றது எனக் கருதும் ஒருவனைப்போல அவர் பேசினார். அவர் இந்த அபிப்பிராயத்தைத் தமக்குத்தாமே கற்பித்துக்கொண்டு, அதை அனுதினமும் வளர்த்துக் கொண்டும் வந்தார். அத்துடன் தாம் காரல் மார்க்ஸின் அவதாரம் எனவும், போல்ஷ்விக்குகள் அரைகுறைப்படிப்புள்ள, ஒழுங்கு மரியாதை தெரியாத சிறுகுழந்தைகள் எனவும் அவர் கருதிக் கொண்டிருந்தார். மென்ஷ்விக்குகளுடன் அவர்கள் கொண்டிருந்த உறவை வைத்தே இந்த உண்மையை அளந்து விடலாம். “மிகச் சிறந்த மார்க்ஸீய சிந்தனை யாளர்”களெல்லாம் மென்ஷ்விக்குகளின் மத்தியில் இருப்பதாக அவர் கூறினார்.

மிக மிக வெறுப்புடன். “நீங்கள் மார்க்ஸிஸ்டுகள் அல்ல; ஆம், நீங்கள் மார்க்ஸிஸ்டுகள் அல்ல” என்று சொல்லிவிட்டு தம் முஷ்டியை முன் பக்கமாக நீட்டினார், அப்போது ஊழியர்களில் ஒருவர், “எப்பொழுது நீங்கள் பழையபடியும் தாராளவாதிகளுடன் (லிபரல்ஸ்) தேநீர் விருந்து சாப்பிடப் போகிறீர்கள்? என்று கேட்டார்.

மார்ட்டோவ் பேசியது முதல் கூட்டத்தில் தானா இல்லையா என்பது எனக்குச் சரியாக ஞாபகமில்லை. மிகவும் கவர்ச்சிகரமான தோற்றம் படைத்த இந்த மனிதர் வாலிப வேகத்துடன் பேசலானார். கட்சியில் அபிப்பிராய வேற்றுமை உண்டாகிப் பிளவு ஏற்பட்டுக் கொண்டிருக்கும் சோக நாடகத்தைக் கண்டு அவர் மிகவும் வேதனையடைந்திருந்தார். உடம்பையெல்லாம் ஆட்டிக் கொண்டும் முன்னும் பின்னுமாக அசைந்து கொண்டும், தம் சட்டையின் காலரைப் படபடப்புடன் கழற்றிக் கொண்டும், கைகளை ஆட்டிக் கொண்டும் பேசினார் மார்ட்டோவ், அவர் உள்ளே போட்டிருக்கும் சட்டையின் கைகள், மேல் கோட்டின் கைகளின் வழியாக வெளியே வந்து தொங்கின. உடனே தம் கைகளை மேலே தூக்கி. சட்டைக் கைகள் உள்ளே தம் பழைய இடத்திற்குப் போகும் வண்ணம் குலுக்கினார்.

அவர் விவாதம் செய்வது போலப் பேசவில்லை; வற்புறுத்திக் கூறுகிறவர் போல, வேண்டிக்கேட்டுக் கொள்ளுகிறவர் போலத்தான் பேசினார் “கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவுக்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கட்சி மிகவும் பலவீனமாக இருக்கிறது. அது பிளவைத் தாங்காது. ஊழியர்கள், மற்ற எதையும் விட முதலில் சுதந்திரம் அடையவேண்டும். அவர்கள் மனம் உடைந்து போகும்படி நாம் விட்டுவிடக் கூடாது.”

பிரசங்கத்தின் முதல் பகுதியில் சில இடங்களில் அவர் மட்டுக்கு மிஞ்சிய படபடப்புடன் பேசினார். வார்த்தைகளை ஏராளமாகக் கொட்டியதால் அவருடைய கருத்து இன்னதென்று தெளிவுபடாமல் போய்விட்டது. அத்துடன் அவர் அங்கு நின்ற நிலையே கொஞ்சம்கூடப் பிடிக்காமல் இருந்தது. பேச்சின் முடிவில் அவர் யாதொரு அவசியமும் இல்லாமலே, மேலோங்கிய “போராட்ட”க் குரலில் உணர்ச்சி வேகத்துடன் பேச ஆரம்பித்தார். ஆயுதந்தாங்கிய புரட்சிக்கு அடிகோலும் சகல முயற்சிகளையும், தீவிரவாதிகளையும் எதிர்த்துக் கூப்பாடு போட்டார்.

அப்பொழுது போல்ஷ்விக் கோஷ்டியிலிருந்து ஒருவர், “நீங்கள் சொல்லுவது ரொம்ப சரி!” என்று இரைந்து சொன்னது எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. அந்தச் சமயத்தில் டாம்ஸ்கி,.
“தோழர் மார்ட்டோவ் மனச்சாந்தி பெற வேண்டுமென்பதற்காக நாங்கள் எங்கள் கைகளை வெட்டி எறிய வேண்டுமா?” என்று கேட்டதாக எனக்குத் தோன்றுகிறது. மார்ட்டோவ்பேசியது, முதல் கூட்டத்தில்தானா இல்லையா என்பது எனக்கு ஞாபகமே இல்லை. அங்கு வந்திருந்தவர்கள் பற்பல தினுசாகப் பேசினார்கள் என்பதைத் தெரிவிக்கவே இதைக் குறிப்பிடுகிறேன்.

மார்ட்டோவ் பேசி முடித்தபிறகு, தொழிலாளி களின் அறையில் உணர்ச்சி உத்வேகமற்ற விவாதம் நடைபெற்றது. விவாதம் இருள் மூடிப்போயிருந்தது. “உங்கள் கட்சியில் மார்ட்டோவ் இருக்கிறார்! அவர் ‘இஸ்க்ரா’ *கோஷ்டியைச் சேர்ந்தவர்” என்றும், “நம் அறிவாளிகள் தம் சுயரூபத்தை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்” என்றும் அவர்கள் பேசிக்கொண்டார்கள்.

(தொடரும்)

Leave A Reply