சிந்தனைக் களம் – 4 – பாமினி ராஜேஸ்வரமுதலியார்

Share

என் வாழ்க்கை அனுபவங்கள் உங்களுக்கு படிப்பினையாகட்டும். திருந்துபவர்கள் திருந்தட்டும். உணர விரும்புபவர்கள் உணரட்டும்.

எனது மடமையினால் நான் பட்ட கஷ்டத்தை யாரும்படக் கூடாது என்பதே என் எழுத்தின் நோக்கம்.

எனது கஷ்டங்கள் என்னால் உருவானவை. எனது கஷ்டங்களுக்கும் வலி வேதனைகளுக்கும் நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.

காரணம் என் பக்கத் தவறுகள் என்னவென்று தெரிந்தால்தான் மீண்டும் அப்படியான சந்தர்ப்பத்தை உருவாக விடாமல் தடுக்கலாம்.

அதனால்தான் இன்று நிம்மதியாக வாழ்கிறேன்.

பல சகாப்தங்களுக்கு முன்பு

-இல்லை என கூறத் தெரியாது.

-எனது கருத்தினை கூறினால் கோபப்படுவார்கள் என்ற அச்சத்தில் மௌனத்தை சாதித்தேன்.

-என் முன்னே என்னைப் பற்றி என் பிள்ளைகளைப் பற்றி உண்மையற்ற குறைகளை கூறிய போது வெட்கப்பட்டு வாய் மூடி இருந்தேன்.

-அவர்களின் பிள்ளைகளின் தவறுகளை எனது பிள்ளைகளின் மீது சுமத்திய போது அழுதேனே அன்றி எதிர்த்துப் பேசவில்லை.

அது எவ்வளவு பெரிய தவறு.
(எனது பிள்ளைகள் வளர்ந்தபின்பு இதனைப்பற்றி பேசினார்கள். மன்னிப்புக் கேட்டேன். எனது அறிவீனத்தை , பின்பு அண்ணியின் ஆதரவுடன் துணிந்து உணர்ந்து பிழைகளை திருத்தியதால் மன்னித்தார்கள்)

-நான் செய்த நன்மையான காரியங்களை தாங்கள் செய்ததாக என் முன்னே கூற அதனை மறுக்காமல் பொறுமையுடன் இருந்தேன்.

அது அவர்களுக்கு மேலும் தைரியத்தை கொடுக்க என்னை சிந்திக்க விடாமல் அன்பு எனக் கூறி அருகில் இருந்து பயனைப் பெற்று என்னை குழப்பமான மனமுள்ளவராக்கி மகிழ்ந்தார்கள்.

என்னை பயன்படுத்துகிறார்கள் எனத் தெரிந்த பின்பும் எப்படி விலகுவது எனத் தெரியாமல் , என் பிள்ளைகளுக்கு எனது நேரத்தை கொடுக்க முடியாமல் அழுது வாழ்ந்தேன்.

எனது உருவம், குரல், புன்னகைக்கு பல விமர்சனங்களை கூறி என் சுயநம்பிக்கையை, சுயமரியாதையை சிதைத்தார்கள்.

நான் எதிர்த்துப் பேசமாட்டேன் என்பதால் என்னை கூறுபோட்டது அரக்க கூட்டம்.

நீங்கள் வேகமாக நடப்பது கவர்ச்சியாக இருக்கிறது, அப்படி நடக்காதீர்கள்.

நீங்கள் சிரிக்கும் போது வாய் கோனலாக போகிறது,அது நக்கல் சிரிப்பு போல் இருக்கிறது. அதனால் சிரிக்காதீர்கள்.

உங்கள் குரல் கொஞ்சல் குரலாக இருக்கிறது. அது நல்லதல்ல. உரத்துப் பேசுங்கள்.

இப்படிப் பல குற்றச்சாட்டுகள் பட்டியல் மிகவும் நீளமானது.

இதில் வேதனையான விடையம் என்னவென்றால் நட்பு உறவு என்ற பட்டியலில் இருந்த சில தமிழ் பெண்களே இதனை செய்தார்கள்.

என் அண்ணி Vaithehi Rajathelakan இவற்றை பார்த்து உணர்ந்து , பாமினி இவைகள் அனைத்தும் உண்மையல்ல. உங்களை சிறுமியான காலம் முதல் எனக்குத் தெரியும். சிங்களம் பேசிவிட்டு தமிழை பழகியதால் உங்கள் சிங்களத்தழிழ் இனிமையாக இருக்கிறது. நீங்கள் பயந்த குரலில் பேசுவதே பலர் உங்களிடம் இப்படிப் பேசுவதற்கான காரணம். நான் இருக்கிறேன் இனிமேல் துணிந்து பேசுங்கள் என்றார்.

இப்போது எனது தமிழில் நல்ல திருத்தம் உண்டு.

சில காலங்கள் GTBC என்ற வானொலி நிகழ்ச்சிகளில் பங்கெடுத்த போது, எனது குரலை நானே கேட்டு உச்சரிப்பை திருத்திக் கொண்டேன்.

GTBC வானொலியும் எனது சுயமரியாதையை, தைரியத்தை வளர்க்க மாபெரும் வகையில் உதவியது.
Thank you Nadarajah Kuruparan, Poorani Kuruparan

அன்புள்ளங்களே!
நான் அமைதியானவரென பேசவேண்டிய இடத்தில, பேசாமல் இருப்பது பல தவறுகளை வளர்க்க ஏதுவான சூழலை உருவாக்குகிறது.

தன்நம்பிக்கை இன்மையால் நான் பேச வேண்டிய இடத்தில் வாய் மூடிஇருந்ததால்தான் நானும் கஷ்டப்பட்டு சிறுவர்களான எனது பிள்ளைகளையும் கஷ்டத்திற்கு உள்ளாக்கினேன்.

நெருங்கிய உறவினர் பெண்மணி ஒருவர் எனது மகன் தீபன்( who has Autism) தனது மகளை ஒருமாதிரி பார்ப்பதாக மகள் கூறியதாக கூறினார். அப்போது தீபனுக்கு 12 வயது இருக்கும்.

எவ்வளவு சாக்கடையான சிந்தனை.
அப்போதே தனது மகளின் எண்ணங்கள் மாறுகிறது, மகளை கவனிக்க வேண்டும் என்ற சிந்தனை அந்தப் பெண்மணிக்கு வந்திருக்க வேண்டும்.

அதனை விடுத்து குழந்தை மனமுள்ள எனது special needs மகனை மேசமான முறையில் விமர்சித்தார்.

இப்படி அவர்கள் என்னிடம் துணிந்து பேச நான் எவ்வளவு மடையுள்ள பெண்ணாக இருந்திருக்க வேண்டும்.

எனது மௌனம்தானே அவர்களை வளர்த்தது.

அன்புள்ளங்களே!
-பிள்ளைகளை யாரிடமும் விட்டுக் கொடுக்காதீர்கள்.

-பேசவேண்டிய இடத்தில் துணிந்து பேசுங்கள்.

-அன்பென வருந்தி அழைத்து அவமானப்படுத்துபவர்கள் வாசலை மிதியாதீர்கள்.

– அவர்களை உங்கள் வீட்டுவாசலை மிதக்க அனுமதிக்காதீர்கள்.

-அவர்களின் மன்னிப்பு என்ற சொல்லை நம்பாதீர்கள்.

உங்களை குறைத்தால்தான் அவர்கள் பெரியவராக முடியும். வஞ்சகர்களை விலக்கி விடுங்கள். நிம்மதி வீட்டில் பெருகும்.

-உங்களை, உங்கள் பிள்ளைகளை குறைத்துப் பேசினால் , உங்களிடம் அப்படி மீண்டும் பேசாதபடி நல்ல பதிலைக் கொடுங்கள்.
அத்துடன் விலகிச் செல்லுங்கள்.

எமது சமுதாயம் நட்பு உறவு என்ற பெயரால் தவறுகளை மன்னித்துமன்னித்து, புறம் பேசி பிரச்சனைப்பட்டு வாழ்கிறது. (அனைவரும் அல்லர்)
சிந்திக்கவும்.

‘இரகசியங்களே தவறுகளை வளர்க்கிறது. அதனால் உண்மைகளுக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறேன்’ உணருபவர்கள் உணரட்டும். திருந்துபவர்கள் திருந்தட்டும்.

நன்றி

சிந்தனைக் களம் – 5 – பாமினி ராஜேஸ்வரமுதலியார்

Leave A Reply