விண்வெளி ஆராய்ச்சி வரலாறு – 2 – ஆதனூர் சோழன்

Share

விண்வெளிக்கு சென்ற நாய் (நவம்பர் 03, 1957)

சோதனைச் செயற்கைக் கோள் அனுப்பி ஒரு மாதம்தான்.

சோவியத் ரஷ்யா தனது இரண்டாவது செயற்கைக் கோளை அனுப்பியது.

இந்தமுறை செயற்கைக் கோளில் லைக்கா என்ற நாய் பயணம் செய்தது.

ஸ்புட்னிக்-2 என்று பெயரிடப்பட்ட அந்த செயற்கைக் கோள் முதல் செயற்கைக் கோளைக் காட்டிலும் எடை கூடியது. அது 508 கிலோ எடை இருந்தது.

அதில் ரஷ்ய வகை பெண் நாயான லைக்கா பொருத்தப் பட்டது. பயணத்தின் போது, நாயின் இதயத் துடிப்பையும் மற்ற சமிக்ஞைகளையும் கண்காணிக்க கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன.

1957 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3 ஆம் தேதி ஸ்புட்னிக்-2 செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. செயற்கைக் கோள் புறப்பட்ட தொடக்க மணித்துளிகளில் லைக்காவின் இதயத்துடிப்பும் மற்ற செயல்பாடுகளும் இயல்பாகவே இருந்தன.

இந்த இரண்டாவது சோதனையில், சூரியனின் கதிர்வீச்சுத் தன்மை, உயிரினங்களின் எடை இழப்பு ஆகியவற்றில் ஏற்படும் பாதிப்புகளை அறியவே சோவியத் விஞ்ஞானிகள் ஆர்வம் காட்டினார்கள்.

சோவியத் புரட்சியின் 40 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் இரண்டாவது செயற்கைக் கோள் அனுப்பப்பட்டதாக அந்த நாட்டு விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

செயற்கைக் கோளின் உள்ளடக்கம், அதன் சுற்றுப்பாதை ஆகியவை குறித்து சோவியத் ரேடியோவான டாஸ் தெரிவித்தது.

ஸ்புட்னிக்-2ல் சூரியக் கதிர், காஸ்மிக் கதிர், தட்பவெப்ப நிலை, அழுத்தம் ஆகியவற்றை ஆய்வு செய்யும் கருவிகள் பொருத்தப்பட்டு இருந்தன. இரண்டு ரேடியோ டிரான்ஸ்மிட்டர்கள், ஒரு காற்றுப் புகாத கண்டெய்னர் ஆகியவையும் இருந்தன. அந்த கண்டெய்னரில்தான் லைக்கா இருந்தது. அதற்கு தேவையான ஆக்ஸிஜன் மற்றும் உணவும் செயற்கைக் கோளில் இருந்தது.

முதல் செயற்கைக் கோள் 900 கிலோமீட்டர் தூரத்தில் பூமியை சுற்றியது. இந்த இரண்டாவது செயற்கைக் கோள் பூமியிருந்து ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரத்தில் பூமியை சுற்றியது. சுற்றுப்பாதையின் அளவு அதிகமாக இருந்ததால் வினாடிக்கு 8 கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றினாலும், ஒரு மணி 42 நிமிடத்துக்கு ஒருமுறை இது பூமியைச் சுற்றியது.

இந்தச் செயற்கைக் கோளில் இருந்து அனுப்பப்பட்ட டெலகிராப் சமிக்ஞைகள் உலகின் பல பகுதிகளில் இருந்த ஆய்வு நிலையங்களுக்கு கிடைத்தன.

முக்கியமான ஆராய்ச்சி வெற்றி பெற்றாலும், செயற்கைக் கோளில் நாயை அனுப்பியதற்கு விலங்கு நல அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.

செயற்கைக் கோள் பூமிக்கு திரும்பும் சமயத்தில் லைக்காவை மீட்க சோவியத் விஞ்ஞானிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

விண்வெளி பயணத்துக்காகவே பயிற்சி அளிக்கப்பட்டிருந்த அந்த நாய் பயணத்தில் உயிர் பிழைக்கவில்லை. சோவியத் விஞ்ஞானிகள் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.

தொடக்கத்தில் விண்வெளிப் பயணம் செய்த நாயின் பெயர் அறிவிக்கப்படவில்லை. செயற்கைக் கோள் அனுப்பப்பட்ட அடுத்தநாள் சோவியத் விஞ்ஞானிகளை நிருபர்கள் கேள்விக ளால் துளைத்தனர்.

அதைத் தொடர்ந்தே, விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதல் உயிரினத்தின் பெயர் லைக்கா என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

லைக்கா சென்ற செயற்கைக் கோள் ஐந்து மாதங்கள் விண்வெளியில் பயணித்தது. 1958 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி பார்படோஸ் தீவுக்கு நேர் மேலாக பூமியின் வளி மண்டலத்தில் எரிந்து சாம்பலானது.

மொத்தத்தில் ஸ்புட்னிக்-2 செயற்கைக்கோள், லைக்கா என்ற நாயை பிரபலமாக்கியது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்கு தேவையான விவரங்களை சோவியத் விஞ்ஞானிகள் அறிந்துகொள்ள உதவியது.

விண்வெளி ஆராய்ச்சி வரலாறு – 3 – ஆதனூர் சோழன்

Leave A Reply