இந்திய ஒப்பந்த வரலாறு – 10 – அமரர்.அப்பாபிள்ளை அமிர்தலிங்கம்

Share

10.வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழ் மொழிவாரி அரசாக

 

அமரர் .அ.அமிர்தலிங்கம்: டெல்லி உடன்படிக்கை!

இந்த இருதலைவர்களின் மறைவினால் எமக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு ஏற்பட்டதென்பதை யாரும் மறுக்க முடியாது.

யாழ்ப்பாணத்தில் நாளுக்கு நாள் நடை பெறும் சம்பவங்களை எமக்கு ஒவ்வொரு நாளும் தொலை பேசியில் கொடுத்துக் கொண்டிருந்தவர் திரு. ஆலாலசுந்தரம். எமக்கு மாத்திரமின்றி உலக மக்கள் தொடர்புச் சாதனங்களுக்கெல்லாம் யாழ்ப்பாணத்தில் செய்தி நிலையமாக விளங்கியவர் ஆலாலசுந்தரம் என்று இக் கொலைச் செய்தியைப் பிரசுரித்த இங்கிலாந்து ‘கார்டியன்’ பத்திரிகையே குறிப்பிட்டது.

மோட்டார் வண்டி ஓட முடியாவிட்டாலும் கந்தரோடையிலிருந்து சைக்கிளில் யாழ்ப்பாணம் வந்து ஆலாலசுந்தரத்துக்கு ஆலோசனை வழங்கி உறுதுணையாக இருந்தவர் திரு. தர்மலிங்கம். மக்களுக்கு என்ன துன்பம் ஏற்பட்டாலும் தமிழர் விடுதலைக் கூட்டணியை இயங்க விடக்கூடாது என்று யாரோ தீட்டிய திட்டத்திற்கு யாரையோ கருவியாகப் பாவித்து இப்படுகொலை நடத்தப்பட்டது. இதனால் எமக்கு செய்திகள் கிடைப்பதும் டெல்லியோடு தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுப்பதும் பெரிதும் தடைப்பட்டது.

இந்த நேரத்தில் டெல்லியில் இலங்கை அரசாங்கத் தூதுக்குழுவிற்கும், இந்திய வெளிநாட்டு அமைச்சுக்கும் இடையில் எமது பிரச்னைக்கு தீர்வுகாண அடிப்படை பற்றி ஓர் உடன்படிக்கை ஆகஸ்ட் 31 ந்திகதி ஏற்பட்டது. இந்த உடன்படிக்கை பற்றி தமிழ் இயக்கங்கள் எல்லாம் ஒரே கருத்தை இந்தியாவிற்கு தெரிவிக்க வேண்டியது அவசியம் என்பதைக் கண்டோம்.

எம் சகாக்களை கொலை செய்த துயரத்தையெல்லாம் ஒதுக்கி வைத்து போராளி இயக்கங்களோடு கலந்து உரையாடினோம். பிரதமர் ராஜீவ் காந்திக்கும் ஓர் விரிவான கடிதம் மூன்று அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் தமிழ் மக்கள் விட்டுக் கொடுக்க முடியாது என்பதை வலியுறுத்தி 9.9,85-ல் எழுதினோம்.

1. தமிழர் தாயகத்தின் ஒன்றுபட்ட தன்மை (வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரிக்க முடியாது என்றும் இணைந்த அமைப்பே வேண்டும் என்றும் கூறினோம்.)

2. காணிப்பங்கீட்டு அதிகாரம்.

3. உள்நாட்டுச் சட்டம் – ஒழுங்கு பற்றிய அதிகாரம்.

இம்மூன்று விடையங்களிலும் டெல்லியில் கையெழுத்தான உடன்படிக்கை திருப்திகரமாக இல்லையென்ற காரணத்தினால் இக்கடிதத்தை எழுதினோம். இதைத் தொடர்ந்து டெல்லியில் எம் இயக்கங்கள் எல்லாவற்றையும் அழைத்துப் பேசினார்கள். எவ்வித முடிவும் ஏற்படவில்லை.

தமிழ் குழுக்கள் இந்தியாவின் முயற்சிக்கு ஒத்துழைப்புக் கொடுக்கவில்லை, விட்டுக் கொடுத்துச் சமரசத்தீர்வு காண மறுக்கின்றார்கள், என்ற கருத்து திரு. ராஜீவ் காந்திக்கு அவருடைய ஆலோசகர்களால் தரப்பட்டது. ‘இப்போது பந்து தமிழர்கள் பக்கம் இருக்கிறது. அவர்கள்தான் அடிக்க வேண்டும் (The ball is in the Tamil’s court) என்று அவர் பகிரங்கமாகக் கூறினார்.

நாம் நியாயமான ஓர் நிலைப்பாட்டைக் கொள்ள மறுக்கின்றோம் என்ற கருத்தை ஏற்படுத்தி, இந்திய அரசின் போக்கை இலங்கை அரசுக்குச் சார்பாகத் திரும்பும் முயற்சியே இக்கட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. எமது போராளி இயக்கங்களுக்கு எதிராக இந்தியாவின் போக்கு மாறும் ஆபத்து ஏற்பட்டது.

பல ஆண்டுகளாக முயன்று, கட்டிவளர்த்த இந்திய ஆதரவை நாம் இழந்தால் எமது மக்கள் மிகவும் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டிருப்பார்கள். இளம் பிரதமர் ராஜீவ் காந்தியின் கருத்தை எமக்குச் சார் பாகத் திருப்புவதற்கு ஒரே வழி அவர் கூற்றை ஏற்று இலங்கை அரசு டெல்லியில் செய்த உடன்பாட்டுக்கு ஓர் மாற்றுத் திட்டத்தை நாம் தருவதுதான் என்று கண்டோம்.

எமது மாற்றுத் திட்டம்:
தமிழ் ஈழத்தைக் கைவிட்ட எந்தத் திட்டத்தையும் இதுவரை நாம் முன் வைக்கவில்லை. மாற்றுத் திட்டத்தைத் தரவேண்டிய பொறுப்பு இலங்கை அரசுடைய தென்றே கூறி வந்தோம். அப்படி அவர்கள் ஏற்புடைய ஓர் திட்டத்தைத் தந்தால் அதை எமக்கு ஆனைதந்த தமிழ் மக்கள்முன் சமர்பித்து அவர்கள் அங்கீகாரத்தோடு நடைமுறைப்படுத்துவோம் என்றே கூறினோம்.

1985 ம் ஆண்டின் பிற்பகுதியில் ஏற்பட்ட மாற்றமான சூழ்நிலையில் நாம் ஒரு மாற்றுத் திட்டம் முன்வைக்காவிட்டால் எமக்குச் சார்பான ஒரே நாடான இந்தியாவின் ஆதரவை இழக்கும் ஆபத்து ஏற்பட்டது. இதைத் தவிர்ப் பதற்காக, இந்தியாவின் நட்பைப் பேணுவதற்காக, இந்தியாவில் நிலை கொண்டிருந்த விடுதலை இயக்கங்களைப் பாதிப்படையாது காப்பதற்காக 1985 டிசெம்பர் 1ந் தேதி நாம் ஒரு திட்டத்தைப் பாரதப் பிரதமரிடம் கையளித்தோம். அத்திட்டத்தின் பிரதான அம்சங்கள் வருமாறு:

“1977 ம் ஆண்டுத் தேர்தலில் தமிழ் மக்கள் தமிழர் விடுதலைக் கூட்டணிக்குத் தமிழ் ஈழம் என்ற சுதந்திர அரசை நிறுவுவதற்கான ஆணை வழங்கினர். கொழும்பில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நாம் எமக்குக் கிடைத்த ஆணையை வலியுறுத்திய போதும் இலங்கை அரசு ஏற்புடைய திருப்திகரமான ஓர் மாற்றுத் திட்டத்தை முன்வைத்தால் அதை ஆலோசிக்க எமது சம்மதத்தைத் தெரிவித்தோம்.

நாம் ஆலோசிக்கத்தக்க தகுதிவாய்ந்த அர்த்தமுள்ள திட்டமெதையும் முன்வைக்க இலங்கை அரசு பிடிவாதமாகத் தவறிவிட்டது. எமது பிரச்சனைக்குத் திருப்திகரமான ஒரு தீர்வைக்கான இந்தியாவின் பெருமுயற்சி வீண்போய் விடக்கூடாதென்பதற்காக கீழ்காணும் திட்டத்தை இந்திய அரசுக்கு சமர்ப்பிக்கின்றோம்” என்ற முன்னுரையோடு ஆரம்பித்த திட்டத்தில்:-

1. இலங்கை மாநிலங்களின் ஐக்கிய ராஜ்யமாக திகழும்
2. பெரும்பாலும் தமிழ் பேசும் மக்களைக் கொண்ட வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒரு தமிழ் மொழி வாரி அரசாக அமையும்.

3. அமைக்கப்பட்ட ஓர் அரசின் நிலப்பரப்பு அவ்வரசின் சம்மதம் இன்றி மாற்றப்பட மாட்டாது.

4. பாராளுமன்றம் முதலாவது பட்டியலில் உள்ள விடையங்களை ஒட்டி சட்டம் இயற்றும்.

5. பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் நாட்டின் இனவாரி ஜனத்தொகை விகிதத்தை பிரதிபலிக்கும்.

6. தொடர்பான பிரதேசத்தில் வசிக்காத முஸ்லீம்கள், இந்திய வம்சாவழித்தமிழ் மக்கள் ஆகியோருக்கு போதிய பிரதிநிதித்துவம் கிடைக்கக்கூடியதாக விசேட ஏற்பாடு செய்யப்படும்.

7. எந்த ஒரு இனத்தையும் பாதிக்கும் சட்டமெதுவும் அவ்வினத்தைச் சேர்ந்த பெரும்பான்மைப் பாராளுமன்ற உறுப்பினரின் சம்மதத்தைப் பெற்றாலன்றி நிறைவேற்றப்படமாட்டாது.
8. அரசியல் அமைப்பிலோ குடியுரிமை பற்றிய சட்டத்திலோ என்ன கூறப்படினும், வேற்று நாட்டு பிரசைகளாக இல்லாமல், 1981-ம் ஆண்டு நவம்பர் மாதம் 1-ம்… திகதி இலங்கையில் வசித்தவர் எவரும் அவருடைய வழித் தோன்றல்களும் இலங்கை குடியுரிமை பெற்றவர் ஆவர்.

9. தமிழும் ஒர் ஆட்சிமொழி ஆவதற்கு அரசியல் அமைப்பில் ஏற்பாடு செய்யப்பெறும்.

10. ஆயுதப்படைகள், பொதுத்துறை நிறுவனங்கள் உட்பட அரசசேவை எல்லாவற்றிலும் > இனவாரி சனத்தொகை விகிதம் பிரதிபலிப்பதாக உறுதிப்படுத்தும் வகையில் அரசியல் அமைப்பில் ஏற்பாடு செய்யப்படும்.

11. இந்தியாவின் மாநில அரசுக்கு உள்ள அமைப்பும் அதிகாரமும் கொண்ட தமிழ் மொழிவாரி அரசுக்கு வேண்டிய கவர்னர், சட்டமன்றம், முதலமைச்சர், அமைச்சரவை, அமைக்கும் முறை, மாநிலத்திற்கு நிதி, நிதி ஆணைக்குழுவின் அமைப்பு, மாநிலத்தின் உயர்நீதி மன்றம் மாநில அரச சேவை இவற்றை எல்லாம் விரிவாக விளக்கிப் பல பிரிவுகள்.

12, தமிழ் மொழிவாரி மாநிலத்தில் முஸ்லீம் மக்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் கிடைக்கக் கூடிய வகையில் தொகுதிகள் பிரிக்கப்பட வேண்டும்.

13. மலைநாட்டுத் தமிழ் மக்களுக்கு விஷேச ஏற்பாடுகள், தமிழ் தொழிலாளர்கள் பெரும்பான்மையாக வாழும் தோட்ட பகுதிகளை ஒன்றாக்கிக் கிராமசேவையாளர் பிரிவுகளும், அப்படியான தமிழ் பெரும்பான்மை கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்த்து உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளும், அவற்றை இணைத்து மாவட்டங்களும் அமைத்து மலைநாட்டில் தமிழ் பெரும்பான்மை நிர்வாக, அமைப்புகள் ஏற்படுத்த வேண்டும்.

14. இப்படியான பகுதிகளுக்கு வெளியில் வாழும் தமிழ் தொழிலாளர்கள் தாம் வாழும் பகுதிகளை விட்டு தமிழ் மொழிவாரி மாநிலத்திற்கோ மலைநாட்டில் உருவாகும் தமிழ் பெரும்பான்மை நிர்வாகப் பிரிவுகளுக்கோ தாம் விரும்பினால் சென்று வாழும் உரிமை இருக்க வேண்டும்.

15. வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த தமிழ் மாநிலம் அமைய வேண்டிய காரணங்களை விளக்கியும், காணிப் பங்கீட்டு அதிகாரம் மகாவலி குடியேற்றம் ஆகியவற்றில் எமது நிலைப்பாட்டை விளக்கியும், மாநிலத்திற்கு வேண்டிய அதிகாரங்களை விளக்கியும் மூன்று விரிவான அட்டவணைகளும் இணைக்கப்பட்டன.

Leave A Reply