இலங்கை இந்திய ஒப்பந்த வரலாறு – 14 – அமரர்.அப்பாபிள்ளை அமிர்தலிங்கம்

Share

அமரர் ராஜீவ் காந்தி 02-08-1987 சென்னை மெரினாவில் ஆற்றிய உரை…

இந்த ஒப்பந்தத்தை சீர் குலைக்க பல சக்திகள் முயலக் கூடும். எந்தெந்த சக்திகளின் நடமாட்டங்கள் இந்த ஒப்பந்தத்தால் அகற்றப்படுகின்றனவோ அவை அனைத்தும் இந்த ஒப்பந்தத்தை முனை முறிக்க முயலக்கூடும். வன்முறை மூலமும் கொடுஞ்செயல்கள் மூலமும் பயன் பெற நினைப்போர் இந்த ஒப்பந்தம் நிறைவேறுவதை விரும்ப மாட்டார்கள்.

சென்னையில் பிரதமர் உரை வணக்கம்!

இலங்கையில் அமைதிச் சூழ்நிலை ஒன்று ஏற் பட்டிருப்பதற்காக நாம் இன்று கூடியுள்ளோம்……

ஒப்பந்தத்தில் கையெழுத்திட நான் இலங்கைக்குப் போகும் முன்னர் எல்லாத் தமிழ் போராளிகளிடமும், அதிகளவு மிதவாத உணர்வு கொண்ட இலங்கை தமிழர்களிடமும் நான் பேசினேன். நீதி மற்றும் சமத்தவத்தைப் பெற போராடும் இவர்களிடம் நான் ஆலோசனை மேற்கொண்டேன், நாங்கள் கையெழுத்திட்ட இந்த ஒப்பந்தத்தை தமிழ் போராளிகள் அனைவரும் புரிந்து கொண்டனர்.. இலங்கையின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்காமல், இலங்கை தமிழர்கள் கோரிய அனைத்தையும் தர இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது…..

இலங்கையின் மூன்றில் ஒரு பகுதி தனி மாகாணமாக் கப்பட்டு, தமிழர்கள் அதில் பெரும்பான்மையினராக வசிக்க இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது. இந்திய அரசின் கீழ் இருக்கும் மாநிலங்கள் போன்றே மாநில சுயாட்சி உரிமையும் அவர்களுக்கு உண்டு…

நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவு செய்யப் பட்டுள்ளன. கருத்து வேறுபாட்டையும் வன்முறையையும் போரையும் நிறுத்த வேண்டிய நேரம் இது. இது புனரமைக்க வேண்டிய நேரம். தேசிய இணக்க உணர்வை ஏற்படுத்த வேண்டிய கட்டம் உருவாகி இருக்கிறது.

மறு இணக்கத்தையும் மறு சீரமைப்பையும் மேற்கொள்ள வேண்டிய இந்தக் கடமையில் தம்மால் இயன்ற எல்லா வகையிலும் நாம் உதவ வேண்டும். மேலும் அதிக வன்முறையாலும் மேலும் அதிக உயிரிழப்புக்களாலும் நாம் அடைய வேண்டியது எதுவுமில்லை. அமைதியைக் கொண்டு வருவோம்.

உயிர், உடமை எதுவும் அழிவதைத்தடுப்போம். இந்த ஒப்பந்தத்திற்கு எதிரானோர் மீது நாம் இரக்கம் காட்டத் தேவையில்லை. ஏனென்றால் இந்த ஒப்பந்தத்திற்கு எதிரானோர் இலங்கை தமிழர்களின் நலன்களுக்கு எதிரானவர்கள் ஆவார்கள்.

சில போராளிக் குழுக்கள் ஓரளவு தயக்கம் காட்டுகிறார்கள். அது சொந்த பாதுகாப்பைக் கருதி ஏற்பட்டிருக்கக் கூடும். அல்லது இலங்கையின் எதிர்கால வாழ்வில் தங்களுக்குரிய இடம் என்ன என்பதைக் குறித்த கலக்கமாக இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு நான் உறுதி கூறியிருக்கிறேன்.

இந்த ஒப்பந்தம் அவற்றையெல்லாம் கருத்தில் கொண்டிருக்கிறது. இலங்கையின் வட பகுதியில் இருக்கிற ஒவ்வொருவருக்கும் சீரமைப்புப் பணியில் பங்கும் பாதுகாப்பும் உண்டு என்பதை உறுதிப் படுத்துவோம்…..

இது வன்முறைக்கு முடிவு காணும் நேரம். பூசல்களுக்கும் பழிவாங்குதல்களுக்கும் இது நேரமல்ல. இலங்கையில் உள்ள பல்வேறு வகுப்பினருக்குமிடையே புதிய நட்புறவையும் இணைப்பையும் உருவாக்கி நாட்டை சீரமைப்பதற்கான அமைதியைக் கொண்டு வரவேண்டிய நேரம்.

நல்லெண்ணத்தையும் இணக்க உணர்வையும் ஏற்படுத்த, நம்பிக்கையையும் பற்றையும் ஏற்படுத்த வேண்டிய நேரம். இழப்புத் துயரில் வாடுவோரைத் தேற்ற வேண்டிய நேரம்.

புனரமைக்கவும் புத்துயிர் ஊட்டவும் உழைக்க வேண்டிய நேரம். வேதனையும் துயரமும் நிறைந்த ஒரு கட்டத்திற்கு இந்த ஒப்பந்தம் முடிவு காண்கிறது. வேதனைகளையும் இன்னல்களையும் முடித்து வைத்து, அமைதி யுகம் மலர வகை செய்கிறது. இலங்கை வரலாற்றின் திருப்பு முனையாக அமையும்.

இந்த நேரத்தில் இறந்தோரின் நினைவுக்கு அஞ்சலி செலுத்துகிறோம். விதவைகள் அனாதையாக்கப்பட்டோர் ஆகி யோருக்கு அனுதாபம் தெரிவிக்கிறோம். புதல்வர்களை இழந்த தாய்மார்களுக்கும் தந்தையரை இழந்த புதல்வியருக்கும் நமது இரங்கல்களைத் தெரிவிக்கிறோம்.

ஆனால் இவற்றை நினைவு கூறும் போது மேலும் இரத்தம் சிந்துதல் தவிர்க்கப்பட வேண்டும்; இலங்கையில் அமைதியோடும், கௌரவத்தோடும், கண்ணியத்தோடும் தமிழர்கள் தொடர்ந்து வாழும் போது இந்த நினைவுக்கு சிறப்பான அஞ்சலி செலுத்தியவர்களாவோம். இந்த ஒப்பந்தத்தின் மூலம் அது சாத்தியமாகியிருக்கிறது…….

அமைதி மீண்டும் கொண்டுவரப்பட்டுவிட்டாலும் நாம் எதார்த்த உணர்வோடு இருக்க வேண்டும இப்போது ஏற்பட்டிருக்கும் இந்த அமைதிக்கு நம்மால் இயன்ற வகையில் பாதகமான எதையும் செய்துவிடலாகாது. முழுமையாக அமைதி ஏற்பட்ட நிலையிலும் நமது பங்கு தேவை.

இந்த அமைதியை மிக விரைவாகவும் மிக எளிமையாகவும் பெற்று விடவில்லை. இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் இடர்பாடுகளும் பிரச்னைகளும் எழலாம்.

அப்படி வன்முறைகளும், அத்தகைய கோபதாபங்களும் ஏற்பட்டாலும் அவற்றை உடனடியாக போக்கி விட முடியும் என்றும் நாம் எதிர்பார்க்க இயலாது. விவாதித்தும், கூடிப் பேசியும் இப்போது அமைதியை ஏற்படுத்தியதைப் போன்று இனி வரும் பிரச்னைகளையும் அணுக வேண்டும், தீர்வு காண வேண்டும். அந்த வகையில் தீர்வு காண்பது சாத்தியமானதுதான்.

இந்த ஒப்பந்தத்தை சீர் குலைக்க பல சக்திகள் முயலக் கூடும். எந்தெந்த சக்திகளின் நடமாட்டங்கள் இந்த ஒப்பந்தத்தால் அகற்றப்படுகின்றனவோ அவை அனைத்தும் இந்த ஒப்பந்தத்தை முனை முறிக்க முயலக்கூடும். வன்முறை மூலமும் கொடுஞ்செயல்கள் மூலமும் பயன் பெற நினைப்போர் இந்த ஒப்பந்தம் நிறைவேறுவதை விரும்ப மாட்டார்கள். ஆனால் நாம்தான், இலங்கையும் இந்தியாவும்தான், பொறுமையோடும் விடா முயற்சியோடும் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றியாக வேண்டும்.

இரு தரப்பிலும் இருக்கிற தீவிரவாதிகள் இந்த வெளிசக்திகளின் பகடைக்காய்களாக ஆகிவிடக் கூடாது. அமைதியைக் குலைக்க அவைகளை அனுமதிக்கலாகாது. பழிவாங்கும் போக்கிற்கு அவர்கள் நம்மைத் தூண்ட அனுமதிக்கலாகாது. நடைமுறைச் சாத்தியம் உள்ள, செயல்படுத்தத்தக்க நீண்டகால தீர்வுகளைக் காண்பதற்கான ஒரே வழி, ஜனநாயக முறைதான். ஜனநாயகத்தில்தான் தீர்வுகள் கிடைக்கும்.

பலரும் இந்த ஒப்பந்தம் காணும் முயற்சியில் ஈடுபட்டதினால் இது சாத்தியமாயிற்று. 1983-ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் முதன் முதலில் மேற்கொள்ளப்பட்ட தாற்காலிக நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக அதிபர் ஜெயவர்த்தனா, மறைந்த திருமதி இந்திராகாந்தியை உதவிக்காக அணுகிய திலிருந்துதான் நமது தரப்பிலிருந்து பலரும் இதில் ஈடுபாடு காட்டத் துவங்கினர். வரலாற்றில் இடம்பெறும் இந்த ஒப்பந்தத்தை எட்டுவதற்கு தங்கள் பங்கினை அளித்த ஒவ்வொருவருக்கும் நான் நன்றி தெரிவித்தாக வேண்டும்.

(02-08-1987ல மெரினா கடற்கரையில், பாரதப் பிரதமர் ஆற்றிய உரையிலிருந்து)

முடிவுற்றது.

Leave A Reply