இலங்கை நல்லூர் கந்தசாமி கோயில் பரிபாலனம் – தீர்ப்பு முழுவிபரம்

Share

யாழ்ப்பாணம் பெரிய நீதிஸ்தலத்தில் நல்லூர் கந்தசாமி கோயிற் பரிபாலன முறையை பற்றி 2 ஆம் பிரிவு வியாச்சியத்திற்கு மேற்படி நீதிபதியவர்கள் பின்வருமாறு தீர்ப்பு செய்தனர்.

இத்தீர்ப்பில் கோயிலதிகாரியினுடைய கடமைகள் வரையறுக்கப் பட்டிருத்தலோடு மேற்படி அதிகாரிக்கு துணை செய்வதற்கு கல்வி அறிவும் ஒழுக்கமுற்ற இன்னுமொருவர் (கமிஷனர்) நியமிக்கப்படல் வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

1 குறித்த கோயிலதிகாரி இரு லேககர்களை ஏற்படுதல் வேண்டும். அவர்களுடைய மாச வேதனம் 35 ரூபா தொடக்கம் 50 ரூபா வரை கொடுக்கப்படும் ..

இந்த லேககர்களில் ஒருவர் கோயிலதிகாரியாலும் மற்றவர் கமிஷனராலும் நியமிக்க படல் வேண்டும் .ஆனால் இரு லேககர்களும் கோயிலதிகாரி கமிஷனர் ஆகிய இருவருக்குடைய கட்டுப்பாட்டுகள் அமைந்து நடத்தல் வேண்டும்.

(2) கோயிலதிகாரியாய் உள்ளவர் கீழே சொல்லப்படும் கணக்கு புஸ்தகங்களையும் பதிவு செய்தற்காய புஸ்தகங்களையும் கிராமமாய் எழுதி வரவேண்டும் –

1 – கோயிலில் நேர்த்தி கடனுக்காக கொடுப்பதும் பொன் வெள்ளி ஆபரணங்கள் திரு ஆபரணங்கள் அவைகள் பெறுமதியான விலை என்னும் இவைகள் பதிவு செய்வதற்காகிய புஸ்தகம் -2- கோயிலில் உள்ள தேர் வாகனம் முதலியனவின் விபரம் எழுதப்படுவதற்காக ஒரு புஸ்தகம் இவைகள் வைத்திருக்க பொறுப்பையும் மேற்படி அதிகாரி நிர்வகித்தல் வேண்டும்.

3 – கோயிலில் நிகழும் ன் கிரிகைகளின் பொருட்டு வாங்கப் பெற்ற பொருள்களின் விபரம் கொண்ட ஒரு கணக்கு புஸ்தகத்தை அதிகாரி வைத்திருத்தல் வேண்டும்.குறித்த புத்தகத்தை கோயிலிலேயே வைத்து கொள்ளுதல் வேண்டும் . பின்னர் இந்த பொருளின் வில்லை செலவான தொகை என்னுமிவைகளை எல்லாம் பேரேடு எனப்படும் கணக்கு புஸ்தகத்தில் பதிந்து விடல் வேண்டும்.

4- கோயிலுக்கு உரிய பசுக்கள் மாடுகளின் தொகையையும் அவைகளை பராமரித்ததற் செலவும் ஒரு அதிகாரியால் கிராமமாய் ஒரு புத்தகத்தில் வரையபடுத்தல் வேண்டும்.

5 – கோயிலுக்கு உரிய ஆதனங்களின் விபரம் குத்தைக்கு கொடுக்கப்பட்டனவோ இல்லையோ என்ற விபரம் அவரின் வருவாய் என்னும் இவைகள் எழுதுதற்கான ஒரு புத்தகத்தையும் மேற்படி அதிகாரி வைத்திருத்தல் வேண்டும்.

6 – அலட்சியமாய் வருவாஇன்றி காணப்படும் காணிகளை குத்தகைக்கு கொடுத்தேனும் செய்கை பண்ணியெனும் வருவாயை அவர் ஆக்கிக்கொள்ளுதல் வேண்டும் இந்த ஆதனங்களின் வருவாய் செலவு என்னுமிவைகள் பேரேடு என்னும் கணக்கு புத்தகத்தில் பதியப்பட்டால் வேண்டும்.

7 – கோயிலில் வேலைகாரர் பூசகர் முதலியோரின் விபரத்தையும் மாச வேதனத்தையும் கொண்ட ஒரு கணக்கு புத்தகத்தை அதிகாரி வைத்திருத்தல் வேண்டும் வேதனம் பெறுபவரின் கைச்சாத்து பெற்று கொண்டே மாச வேதனம் உதவப்படல் வேண்டும் .வேண்டிய காலங்களில் இவர்களின் வேதனத்தை உயர்த்தவும் குறைதற்கும் வேலைக்காரர் தொகையை கூட்டுவதற்கும் குறைப்பதற்கும் அதிகாரிக்கு அதிகாரமுண்டு. ஆனால் இவைகளை அதிகாரி கமிஷனரின் சம்மதத்தோடுதான் செய்தல் வேண்டும்.

கணக்கு புத்தகங்கள்

கணக்குகள் எல்லாம் கடைசி திகதி வரை பதியப்பட்டிருக்கின்றதுவோ என்பதற்கு அதிகாரியே பொறுப்பாவார்

(a ) வரவு செலவு கணக்குகளை கொண்ட ஒரு கணக்கு புத்தகம் அதிகாரியலெனும் அல்லது அவர் கட்டளைப்படி ஒரு லிகிதராலெனும் அவர் கிரமமாக எழுதப்பட்டால் வேண்டும்.

(b ) எடுக்கப்பட்ட பணத்தின் தொகையும் அப்பணத்தை செலவிட்ட கணக்கு விபரமும் கொண்ட ஒரு கணக்கு புத்தகம் மேற்படி அதிகாரி பொறுப்பிலேனும் இல்லையேல் அவர் மேற்பார்வையில் ஒரு லிகிதர் பொறுப்பிலும் எழுதப்பட்டு வருதல் வேண்டும் . இப்படி எடுக்கப்படும் பணம் ஒருமுறையில் 1500 ரூபாவிற்கு மேற்பட்டவொண்ணாது இதன் செலவு கணக்கு காட்டி சரிபார்த்து அதன் பின்பே வேறு பணம் எடுத்தலாகும்

அதிகாரி ஒருபோதும் 1500 ரூபாவுக்கு மேற்பட்ட பணத்தை ஒருபோதும் ஏககாலத்தில் தம்பொறுப்பில் வைத்திருக்கவொண்ணாது, 1500 ரூபாவுக்கு மேல் வருமானால் எஞ்சியிற் பணத்தை கோர்ட்டார் அங்கீகரிக்கும் ஒரு பண வங்கில் அதிகாரி பெயரில் இட்டு வருதல் வேண்டும்.

(C ) குறிப்பிட்ட பேட்டில் பதியப்பெற்ற நாள்தோறும் இன்னொரு கணக்கு புத்தகத்தில் பதிதல் வேண்டும்.

(D) மற்றைய கணக்கு புத்தகத்தில் உள்ள கணக்குகள் எல்லாம் கிரமமாக பதியப்பெற்ற பேரேடு ஒன்று வைத்திருத்தல் வேண்டும்.

(E) பற்று சீட்டுக்களின் அடி சீட்டுக்கள் 10 ரூபாவுக்கு மேற்பட்ட செலவு கணக்குகள் பணம் பெற்றவருடைய பற்று சீட்டுடன் இருத்தல் வேண்டும். எல்லா வருவாய் கணக்கிற்கும் அத்தாட்சியாக அடி சீட்டு புத்தகம் இருத்தல் வேண்டும்

(F) சேமவங்கு பாஸ்புத்தகம். செக் புத்தகம் என்னும் இரண்டும் இருத்தல் வேண்டும் .

9 – கோயிலதிகாரி கோயிலில் யாதும் திருப்பணி திருத்தங்கள் செய்ய விரும்பினால் கமிஷனருடன் யோசித்த பின்னரே அவற்றை செய்தல் வேண்டும் இருவருக்கும் இடையே அபிப்பிராய பேதம் உண்டானால் இருவரும் விஷயத்தை விண்ணப்பத்திரம் மூலமாக கோர்ட்டருக்கு தனித்தனி மனு ப்பண்ணுதற்குரியராவர் . 100 ரூபாவுக்கு மேற்படாத சிறிய திருப்பணிகளையும் திருத்தங்களையும் செய்வதற்கு மேற்படி அதிகாரிக்கு அதிகாரமுண்டு . ஆனால் அங்ஙனம் செலவிட்ட பணங்கள் எல்லாவற்றிக்கும் பற்று சீட்டு இருத்தல் வேண்டும். கோர்ட்டரின் அனுமதி இன்றி கோயிலின் பொருட்டு எவ்வகையான கடனும் வாங்குதற்கு அதிகாரிக்கு அதிகாரம் இல்லையாகும்.

10 – அதிகாரியா உள்ளவர்கள் மாசந்தோறும் கணக்கு முடித்து தினக்குறிப்பு பேரேடு முத்தையா கணக்கு புத்தங்களிலே உள்ள கணக்கை எவ்வித வித்தியாசங்களும் வராமல் பார்த்து கொள்ளவேண்டும். இந்த கணக்குகள் எல்லாவற்றிலும் அதிகாரியின் கைச்சத்தோடு கமிஷனரின் கைச்சாத்தும் இடபட்டிருக்க வேண்டும்.

கொமிஷனர் குறித்த பணத்தை கொண்டு குறித்த குறித்த பொருள் வாங்க பட்டனவா அவைகள் தக்கபடி செலவிடப்படவோ என்னும் இவைகளை பார்த்துக்கொள்ளவேண்டும்

11 – கோவிலுக்கு உரிய அசைவற்ற பொருள்களை அசைவுள்ள பொருள்களை கோர்ட்டார் அது அனுமதி இன்றி அது விற்பதற்கும் நன்கொடை செய்தற்கும் ஈடு வைத்தற்கும் அதிகாரமுள்ளவராக மாட்டார்.

12 – வருஷ முடிவிலேனும் வருஷம் முடிந்து அடுத்த மாதம் இருப்பதாந் திகதியிலுள்ளனெனும் கோயிலதிகாரி வரவு செலவு கணக்கு பத்திரம் முடித்து இரு பிரதிகளில் வரைந்து ஒரு பிரதியை கோயிலில் விளம்பரம் செய்யவே வேண்டும் . மற்ற பிரதியை கோர்ட்டார் மூலம் கமிஷனருக்கு அனுப்பவேண்டும். அங்ஙனம் அனுப்பும் போது கமிஷனருக்கு அதில் தன் அபிப்பிராயத்தை அதில் குறித்து விடல்வேண்டும்

13 – கோயிலதிகாரி தம்முடைய சொந்த செலவிற்கும் இரண்டாம் எதிரியின் செலவுக்குமாக எடுக்கும் பணம் வருஷத்தில் 4000 விற்கு அல்லது மாசத்தில் 333.38 சதத்திற்கு அல்லது வரும்படியில் பதிலொன்றுக்கு மேற்படவொண்ணாது . இந்த தொகையோடு மாசம் முப்பது ரூபா அதிகாரிக்கு பிரயாண செலவாகி உதவப்படும் .

14 – அதிகாரியின் சொந்த செலவு கணக்குகள் மேலே சொல்லப்பட்ட கணக்கு புத்தகங்களில் பதியப்பட வேண்டியன்வல்ல. ஆனால் அவர் சொந்த செலவுக்காக காலந்தோறும் எடுக்கும் பணத்தின் தொகை மாத்திரம் பதியப்பட வேண்டும்.

15 – குறித்த அதிகாரி மேலே சொல்லப்பட்ட நிபந்தனைகளுக்கு அமைய நடவாது ஒழிந்தால் அல்லது நடக்க மறுத்தால் அல்லது இந்த பிரமாணங்களை மீறினால் அல்லது கோயிலுக்குள்ள பொருளை அபகரித்தால் அல்லது இங்கனம் செய்தார் என்று தக்க ஆதாரத்தோடு கொமிஷனரால் கோர்ட்டாருக்கு தெரிவிக்கப்பட்டின் சமயோசிதமாக அவரை கடமையினின்று விலக்குவதற்கும் அல்லது வேலையினின்றும் முற்றாக நீக்குவதற்கும் கோர்ட்டாருக்கும் அதிகாரம் உண்டு இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் கொமிஷனர் அதிகாரியை எதிரியாக கண்டு கோர்ட்டருக்கு மனு பண்ணுதல் வேண்டும்.

16 – கணக்குப்புத்தகங்கள் பணம் திருவாபரணம் முதலிய பொருள்களை சேமித்து வைப்பதற்கு கோயிலில் தக்க பாதுகாப்பில்லாவிட்டால் கோயிலதிகாரி ஒரு இரும்பு பெட்டகத்தை வாங்கி அதில் சேமித்து வைத்தல் வேண்டும்

17 – கோயில் அதிகாரிக்கும் பூசகருக்கும் உள்ள விஷயங்களில் பிரவேசிப்பதற்கு கொமிஷனருக்கு எவ்வித அதிகாரமும் இல்லையாம் . ஆனால் கணக்கு புத்தகத்தை சரிபார்ப்பதற்கும் கையிருப்பு திட்டத்தை சோதித்து பார்ப்பதற்கும் கொமிஷனருக்கு அதிகாரம் உண்டு

மேலே குறிப்பிட்ட விஷயங்களில் எதனையும் காட்டும்படி கொமிஷனர் எழுத்து மூலமாக அதிகாரிக்கு தெரிவிப்பரேல் அதிகாரி உடனே அவ்விஷயத்தை காட்டுதல் வேண்டும்.

கமிஷனரின் கடமைகள்

1 – கமிஷனராயுள்ளவர் கோர்ட்டாரின் பிரமாணங்களை நிறைவேற்றுவந்தற்கு வரவு செலவு கணக்குகளை செவ்வனே வைத்திருப்பதற்கும் கோயிலதிகாரிக்கு துணை செய்தல்வேண்டும்

2 – கோயிலதிகாரியும் அவருடைய லேகர்களும் வைத்திருக்கும் கணக்கு புத்தகங்களை எந்த நேரமும் பார்ப்பதற்கு அதிகாரம் உண்டு .

3 – வேண்டிய காலங்களில் வரவு செலவு கணக்கை சரிபார்ப்பதற்கும் கணக்குகள் சரியாக இருந்தால் தாமும் கைச்சாத்திடுவதற்கு அவருக்கு அதிகாரமுண்டு.

4 – வருவாயுள்ள பணத்தை கணக்கு புத்தகங்களில் பிழைகளின்றி பதிதற்கு செலவு கணக்கை பதிதற்கும் பிழைகளிருந்தால் திருத்துதற்கும் அவருக்கு அதிகாரமுண்டு.

5- குறிக்கப்பட்ட தொகைக்கு அதிகமான தொகையை கோயிலதிகாரி தன் சொந்த உபயோகத்திற்கு எடுத்து செலவு செய்யும் பொழுது கமிஷனர் அதை கோர்ட்டருக்கு அறிவிக்கலாம். அங்ஙனம் செய்வாராயின் கோர்ட்டார் கோயிலதிகாரியை விசாரணை செய்வர்.

6 – கமிஷனருக்கு கோர்ட்டார் உத்தரவு படி ஒரு பெருந் தொகை கொடுக்கப்படுவதோடு அவருடைய பிரயாண செலவிற்காகவும் ஒரு தொகை பணம் உதவப்படும். இந்த தொகைகளை கேட்ட நேரம் கோயிலதிகாரியே கோர்ட்டில் கட்டி விடுதல் வேண்டும்.

7 – பிழை செய்தார் என்னும் குற்றச்சாட்டின்பேரால் கோர்ட்டார் விலகினால் அல்லாமல் கமிஷனர் இரண்டு வருட காலத்திற்கு உத்தியோகம் பார்க்கலாம் . குறித்த இரண்டு வருட காலத்தின் பின் கமிஷனர் விஷயமாக எவ்வகையான ஒழுங்கையும் செய்வதற்கு கோர்ட்டருக்கு அதிகாரம் உண்டு.

நீதிபதி கூறிய குறிப்பு

சென்ற ஏழு வருட காலமாக குறித்த கோயில் அதிகாரி வழக்கு விஷயமாக ஆயிரம் ரூபா வரையில் வீணே செலவு செய்திருக்கிறார்.

அந்த பணத்திலும் பார்க்க வேதனமாக அல்லது சன்மானமாக கொடுக்கும் பணம் அதிக நன்மையை தரத்தக்கது .

அவர் நேர்மை உள்ளவராக இருந்தால் வரவு செலவு கணக்குகளை வெளியிடுவதற்கும் தான் வைத்துவரும் கணக்குகளை .பிறர் சரிபார்க்க விடுவதற்கும் பின்நிற்க மாட்டார்.

நாங்கள் கோயிலுக்கு கொடுக்கும் பொருள் எவ்வாறு செலவு செய்யப்படுகின்றதென்பதை அறிவதற்கான அதிகாரம் ஊரவர்களுக்கு உண்டு.

ஊரவர்களில் அநேகர் இக்கோயிலை கட்டவேண்டும் புதுப்பித்தல் வேண்டும் என்னும் எண்ணமுடையவர்களாக இருத்தலினால் பலர் ஒரு சபையாக திரண்டு பணம் சேர்த்து அப்பணத்தை கோயில் நன்மைக்காக எங்கனம் செலவு செய்யலாம் என்பதை கோயிலதிகாரியுடன் யோசித்து செலவிடலாம் அங்ஙனம் செய்யின் செலவை கட்டுப்படுத்துவதற்கு ஊரவர்களுக்கு அதிகாரம்முண்டு,

மேற்படி கோயிற் பரிபாலன் முறையை எவ்வாறு நிர்வகிக்க வேண்டும் என்பதையிட்டு எதிரிகள் எவ்வகையான வழியையும் எடுத்து காட்டாமையினால் பிரதிவாதிகள் இவ்வழக்கு செலவை இறுத்தல் வேண்டும் .

யாழ்ப்பாணம் திராவிடன் பத்திரிகை 23 – ஜூன் 1929

மூல பதிவு இந்துசாதனம் பத்திரிகை

Leave A Reply