இலங்கை இந்திய ஒப்பந்த வரலாறு – 13 – அமரர்.அப்பாபிள்ளை அமிர்தலிங்கம்

Share

உயிரை பணயம் வைத்து ஒப்பந்தம் செய்த பிரதமர் ராஜீவ் காந்தி..

ஜூலை 29 1987…

1.கிழக்கு மாகாணத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தப்படுவதை நாம் முற்றாக எதிர்க்கிறோம். ஏற்படுத்தப்படும் அமைதியை அது குலைத்துவிடும். மீண்டும் கலவரம் ஏற்படும். அன்றியும் சிதறிப்போய் இருக்கும் தமிழ் மக்கள் ஒரு வருடத்திற்குள் திரும்பி வரமுடியாது.

2 .1987 மே மாதத்திற்கு பின் நிறுவப்பட்ட ராணுவ முகாம்கள் மாத்திரமின்றி 1983 இன் பின் நிறுவப்பட்ட முகாம்கள எல்லாம் அகற்றப்பட வேண்டும்.

3.வடக்கு கிழக்கு மாகாண தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு இந்திய நேரடி தலையீடு அவசியம். சிங்கள போலீசையோ இராணுவத்தையோ அங்கு சட்டம் ஒழுங்கு நிலை நிறுத்தும் வேலையில் ஈடுபடுத்த கூடாது.

4.மாகாணங்களுக்கு வழங்கப்படும் அதிகாரங்கள் பற்றி மாத்திரம் மத்திய ஆட்சியில் தமிழ் மக்களின் உரிமை பற்றியும் பேசி தீர்க்கப்பட வேண்டும்.

இந்திய அரசின் சட்ட நிபுணர்களும் இப்பேச்சு வார்த்தைகளில் பங்கு கொள்ள வேண்டும்..

5.பங்கரவாத தடை சட்டம், அவசர கால தடை சட்டம் இவற்றின் கீழ் கைது செய்ப்பட்டவர்கள் மாத்திரம் அல்ல. நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், தண்டிக்கப்பட்டவர்கள் எல்லோருக்கும் மன்னிப்பு வழங்க படவேண்டும்.

பயகரவாத தடை சட்டம் நீக்கப்பட வேண்டும்.

6. ராணுவ போலீசின் வன்முறையினால் பாதிக்கப்பட்ட மக்கள் மாத்திரமின்றி இன கலவரங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் போதிய நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும்.

7.1982 ஆண்டின் இன் பின் தயாரிக்கப்பட்ட வாக்காளர் இடாப்புக்கள் தமிழ் மேற்பார்வை இன்றி தயாரிக்கபட்டவையாகும். எனவே நடைபெறும் தேர்தல் 1982 ஆம் ஆண்டு அத்தாட்சி படுத்த பட்ட தேர்தல் இடாப்புக்களின் படியே நடைபெற வேண்டும்.

8.திரிகோண மலை துறைமுக நிர்வாகம், துறைமுக தேவைக்கு உபயோகப்படும் நிலா விஸ்தீரணம் இவை விவாதிக்கப்பட்டு முடிவு செயல் படவேண்டும்.

இவற்றில் பெரும்பாலனவற்றை பெரும்பாலும் பிரதமர் ஏற்று கொண்டார். தான் ஆவன செய்வதாக கூறினார்.

சில விஷயங்கள் அடுத்த நாள் செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் இடம் பெற்றன. மற்றவை நடைமுறையில் தீர்த்து வைக்கப்படும் என்று நம்ப இடமுண்டு.

ராணுவ முகாம்களை பொறுத்தவரை 1983 ஆம் ஆண்டில் இருந்த முகாம்களின் பட்டியலை தருமாறு பிரதமர் ராஜீவ் காந்தி கேட்டு கொண்டார்.. இரவோடு இரவாக தயாரித்து கொடுத்தோம்.

தன் உயிரையே பணயம் வைத்து இந்த ஒப்பந்தத்தை செய்த பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களுக்கும் இந்திய அரசுக்கும் இதற்கு தூண்டு கோலாக இருந்த தமிழக முதல்வருக்கும் தமிழக அரசுக்கும் தமிழக அரசியல் தலைவர்கள் கட்சிகள் எல்லோருக்கும் எல்லாவற்றிலும் மேலாக எம்மை காக்கும் கேடையமாக அன்போடு பாதுகாத்த தமிழக மக்களுக்கும் எமது நன்றியை இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்து கொள்கிறோம்.

கடந்த காலங்களில் எமது தலைவர்களுக்கும் இலங்கை அரசாங்கங்களுக்குமிடையில் கையெழுத்தான ஒப்பந்தங்களோ பேச்சு வார்த்தை மூலம் ஏற்பட்ட உடன்பாடுகளோ ஏதும் நிறைவேற்றப்பட வில்லை.

1983 இன் பின் இரண்டு புது சக்திகள் எமக்கு புது நம்பிக்கையை கொடுத்தன.

ஒன்று இந்தியாவின் ஈடுபாடு. தமிழ் இளைஞர்களின் தீவிரவாதமும் தியாகமும், தீவிரவாத இயக்கங்களில் சில எம்மை தவறாக புரிந்து கொண்டிருக்கலாம்.

ஆனால் தமழர் விடுதலை கூட்டணியினராகிய நாம் எப்போதும் அவர்களை பாதுகாத்தே செயல்பட்டு வந்திருக்கிறோம்.

முன்பு இலங்கை அரசினால் அவர்களுக்கு துன்பம் ஏற்பட்ட போதெல்லாம் பாராளுமன்றத்திலும் நீதிமன்றங்களிலும் அவர்கள் நலன் காத்து அவர்களுக்காக வாதாடியே வந்தோம்.

எமது தலைவர் திரு. சிவா சிதம்பரம் போன்றோர் கடந்த சில ஆண்டுகளாக அவர்களுக்காக வாதாடினார்.

இந்தியாவிலும் தமிழ் நாட்டிலோ மத்திய அரசிலோ அவர்களுக்கு பாதகமான நிலை ஏற்பட்ட போதெல்லாம் அக்கறையோடு ஈடுபட்டு அவர்கள் நலனுக்கு பாதிப்பு ஏற்படாமல் கண்காணித்து வந்தோம்.

இத்தீவிர வாத இயக்கங்களின் பங்களிப்பு இல்லாமல் அவர்கள் தமது இரத்ததால எழுதிய வீரகாவியம் இல்லாமல் தமிழ் மக்களின் போராட்டம் உலகின் கவனத்தை இந்த அளவுக்கு பெற்றிருக்க முடியாது.

இந்தியாவின் முயற்சிகளும் வெற்றி பெற்றிருக்க முடியாது.

இக்கட்டுரையில் நாம் ஆற்றிய பங்கை மக்கள் அறியாது இருப்பதால் எடுத்து கூற முற்பட்டோமேயன்றி போராளிகளின் பங்கை குறைத்து மதிப்பிடுவதாக யாரும் நினைத்து விடக்கூடாது.

ஒப்பந்தத்தில் ஏற்படும் அமைப்பில் அவர்களும் ஒரு முக்கிய பங்கை பெற்றே தீரவேண்டும்.

இலங்கை தமிழ் மக்களுக்கு ஆதரவாக நடைபெற்ற கிளர்ச்சிகளில் தமது உயிரை அர்பணித்த தமிழ் நாட்டு தியாகிகளை நாம் எப்போதும் மறக்க முடியாது.

அதேபோல சிறை சென்றும் பதவிகளை துறந்தும் இன்னல்கள பல ஏற்ற தலைவர்கள் தொண்டர்கள் எல்லோருக்கும் இக்கட்டத்தில் நாம் நன்றி கூற கடமைப்பட்டு உள்ளோம்.

ஒப்பந்தம் நிறைவேறுமா இல்லையா என்று ஆருடம் சொல்ல தேவையில்லை.

அரசியலில் எதுவும் சாத்தியமே. என்ன நடந்தாலும் தமிழக மக்களின் அன்பும் ஆதரவும் . இந்தியாவின் மேலான ஆதரவும் பாதுகாப்பும் எப்போதும் எமக்கு இருக்கவேண்டும் . அதுவே எமது பாதுகாப்புக்கு உத்தரவாதம்.

அதற்கு பாத்திரமானவர்களாக நாம் நடந்து கொள்வோம்.

இந்த ஒப்பந்தம் தமிழ் மக்களுக்கு ஒரு புதிய சந்தர்ப்பத்தை கொடுத்து இருக்கிறது.

கடந்ததை மறந்து இந்தியாவின் உதவியுடன் ஓர் புதிய வாழ்வை கட்டி எழுப்புவோம்.

இதனால் தமிழ் மக்கள் பயன் பெறுவதற்கு எம்மத்தியில் பூரண ஒற்றுமை வேண்டும்.

போராளிகளின் இயக்கங்களும் அரசியல் இயக்கங்களும் ஒன்று பட்டு, போராளிகள் தமக்கு உரிய முக்கிய பங்கை பெறக்கூடிய வகையில் இணைந்து எமது மக்களின் துன்ப வாழ்க்கைக்கு முற்று புள்ளி வைத்து அவர்களின் வாழ்வு மீண்டும் மலர உறுதியோடு உழைக்க முன் வருமாறு எல்லா தமிழ் மக்களையும் தமிழர் விடுதலை கூட்டணி அழைக்கிறது.

இலங்கை இந்திய ஒப்பந்த வரலாறு – 14 – அமரர்.அப்பாபிள்ளை அமிர்தலிங்கம்

Leave A Reply