இந்தியப் பிரதமர்கள் – 6.சவுத்ரி சரண்சிங்

Share

சவுத்ரி சரண்சிங் இந்திய குடியரசின் 6வது பிரதமராக 1979 ஜூலை 28ல் துவங்கி 1980 ஜனவரி 14ஆம் தேதி வரை பொறுப்பு வகித்தார்.

உத்திரப்பிரதேசம் மாநிலம் மீரட் மாவட்டம் நூர்பூரில் 1902ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி சரண்சிங் பிறந்தார்.

ஒரு நடுத்தர விவசாயக் குடும்பத்தில் பிறந்த அவர், 1923ல் அறிவியல் துறையில் பட்டம் பெற்றார். 1925ல் ஆக்ரா பல்கலைக்கழகத்தில் தனது முதுகலைப் பட்டப்படிப்பை முடித்தார். சட்டப்பயிற்சி பெற்ற அவர் காசியாபாத்தில் சட்டப்பணி ஆற்றத் துவங்கினார்.

1929ல் மீரட் நகருக்கு இடம் பெயர்ந்த அவர் பின்னர் காங்கிரஸில் நுழைந்தார். சரண்சிங் முதன்முதலில் 1937ஆம் ஆண்டு சாத்ரவ்லி தொகுதியிலிருந்து உத்திரப்பிரதேச மாகாண சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1946,1952,1962,1967 ஆகிய ஆண்டுகளில் அதே தொகுதியிலிருந்து உத்திரப்பிரதேச சட்டமன்றத்திற்கு அவர் தேர்வு செய்யப்பட்டார்.

1946ல் பண்டிட் கோவிந்த் வல்லப பந்த்தின் ஆட்சி அங்கு நடைபெற்றபோது நாடாளுமன்றச் செயலாளரான சரண்சிங், வருவாய், மருத்துவம் மற்றும் பொதுசுகாதாரம், நீதி, தகவல் தொடர்பு போன்ற பல்வேறு துறைகளில் பொறுப்பேற்று பணியாற்றியுள்ளார்.

அவர் விடுதலை இயக்கத்தின் ஒரு பகுதியாகவே அரசியலில் நுழைந்தார். நாடு சுதந்திரம் அடைந்தபிறகு குறிப்பாக 1950களில் நேருவின் சோஷலிச கொள்கைகளையும், நிலங்களை கூட்டாக பயன்படுத்துதல் போன்ற கொள்கைகளையும் எதிர்த்ததை தொடர்ந்தே மக்களிடம் அறியப்பட்டார். இந்திய விவசாயிகளின் நலனுக்காக இந்தக் கொள்கைகளை எதிர்ப்பதாக அவர் கூறினார்.

தான் சார்ந்துள்ள ஜாட் இன மக்களிடையே செல்வாக்கு பெற்றவராக இருந்தார் சரண்சிங். அவருடைய அரசியல் தளமும் அந்த குறிப்பிட்ட இனமக்கள் அதிகமாக வாழும் மேற்கு உத்திரப்பிரதேசம் மற்றும் ஹரியானாவில்தான் இருந்தது. ஜனதா அணியில் ஒரு முக்கிய கட்சியாக இருந்த பாரதிய லோக்தள தலைவரான அவர் 1977ல் பிரதமர் ஆகிவிடலாம் என்ற கனவுடன் இருந்தார். எனினும் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

அந்த சமயத்தில் ஜெயபிரகாஷ் நாரயணன், மொரார்ஜி தேசாயை தேர்வு செய்தார். அப்போது சரண்சிங்கிற்கு துணைபிரதமர் பதவி அளிக்கப்பட்டது. எனினும், தொடர்ந்து ஏற்பட்ட முரண்பாடுகள் அதிகரித்ததின் விளைவாக, அவர் லோக்தள் கட்சியுடன் அரசை விட்டு வெளியேறினார்.

அதற்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியின் ஆதரவு உறுதி என்று இந்திரா காந்தியிடம் வாக்குறுதி பெற்றுக் கொண்டார். காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்தார். அவர் பிரதமராக பதவியேற்றபோது வெறும் 64 உறுப்பினர்களின் பலத்துடன் மட்டுமே ஆட்சி அமைத்தார்.

அவர் பிரதமராக இருந்த காலத்தில் மக்களவைக் கூட்டத்தை சந்திக்கவே இல்லை. மக்களவை கூட இருந்த சமயத்தில் ஒரு நாள் முன்னதாக சரண்சிங் தலைமையிலான பாரதிய லோக்தள் அரசுக்கு இந்திய தேசிய காங்கிரஸ் தனது ஆதரவை வாபஸ் பெற்றுக் கொண்டது. சரண்சிங் ராஜினாமா செய்தார். அதன்பின்னர் 6 மாதங்கள் கழித்து புதிதாக தேர்தல் நடைபெற்றது.

1987ஆம் ஆண்டு அவர் மரணமடையும் தருணம் வரையிலும் எதிர்கட்சி வரிசையில் லோக்தளத்திற்கு தலைமை ஏற்று பணியைத் தொடர்ந்தார். இவருக்குப் பின்னர் அக்கட்சியின் தலைவராக அவரது மகன் அஜித் சிங் பொறுப்பேற்றார். வடஇந்தியாவின் விவசாய மக்களின் நலன்களுக்காக தன்னை இணைத்துக் கொண்டதால் புதுடில்லியில் அமைந்துள்ள சரண்சிங்கின் நினைவிடத்திற்கு கிசான் கட் என்றே பெயரிடப்பட்டது.

உத்திரப்பிரதேசத்தில் மீரட் நகரில் உள்ள பல்கலைக்கழகத்திற்கு சரண்சிங் பல்கலைக்கழகம் என்று பெயரிடப்பட்டது.

1937 பிப்ரவரியில் ஒன்றுபட்ட உத்திரப்பிரதேச மாகாண சட்டமன்றத்திற்கு தனது 34வது வயதில் சரண்சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1938ல் சட்டமன்றத்தில் விவசாய உற்பத்திப் பொருட்களுக்கான சந்தைகளை உருவாக்குதல் எனும் மசோதாவை அவர் அறிமுகப்படுத்தினார். இது தொடர்பாக 1938 மார்ச் 31ம் தேதி வெளியான இந்துஸ்தான் டைம்ஸ் நாளேட்டில் விரிவாக கூறப்பட்டுள்ளது.

வியாபாரிகளின் அசுரப்பிடியிலிருந்து விவசாயிகளின் நலன்களை பாதுகாப்பதே இந்த மசோதாவின் நோக்கம். இந்த மசோதா இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் நிறைவேற்றப்பட்டது.

பஞ்சாப் மாகாணம் முதன்முதலில் 1940ல் இம்மசோதாவை நிறைவேற்றி அமுலாக்கியது.

பிரிட்டிஷ் அரசிடமிருந்து விடுதலைப் பெறுவதற்கான போராட்டத்தில் மகாத்மா காந்தி தலைமையிலான அகிம்சை வழி போராட்டத்தில் சரண்சிங் ஈடுபட்டார். இதற்காக பலமுறை சிறையில் அடைக்கப்பட்டார். 1930ல் பிரிட்டிஷ் அரசின் உப்புச் சட்டங்களுக்கு எதிராக செயல்பட்டதால் 6மாத காலம் சிறையில் அடைக்கப்பட்டார்.

அதைத் தொடர்ந்து 1940 நவம்பரில் தனிநபர் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக ஓராண்டுகாலம் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் 1942 ஆகஸ்டில் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். 1943 நவம்பரில் விடுதலை செய்யப்பட்டார்.

1952ல் சுதந்திர இந்தியாவில் மிக அதிக மக்கள் தொகை கொண்ட உத்திரப்பிரதேச மாநிலத்தின் வருவாய் துறை அமைச்சராக அவர் பொறுப்பேற்றார். ஜமீன்தாரி முறை ஒழிப்பு மற்றும் நிலச்சீர்திருத்தச் சட்டம் ஆகியவற்றின் வழிமுறைகளை அமுல்படுத்துவதில் அவர் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். நிலச்சீர்திருத்தம் மற்றும் ஜமீன்தாரி முறை ஒழிப்பில் இந்தியாவில் முன்னின்ற தலைவர்களில் சரண்சிங் ஒருவர்.

இந்திய ஜனநாயகம் வெற்றி பெறுவது என்பது இத்தகைய நிலசீர்திருத்தத்தை வெற்றிகரமாக அமுல்படுத்துவதில்தான் அடங்கி இருக்கிறது என்று முன்னணி அரசியல் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதுபோன்ற சீர்திருத்தங்களை பாகிஸ்தான் மேற்கொள்ளவில்லை. அதனால் அங்கு அதிகாரம் என்பது சில குறிப்பிட்ட சக்தி வாய்ந்த நிலபிரபுக்கள் மற்றும் ஜமீன்தார்களிடம் குவிந்தது. அவர்கள் தங்களது நிலங்களையும், தங்களது செல்வாக்கினையும், தங்களது சொந்த செல்வத்தை பலப்படுத்திக் கொள்வதற்கு மட்டுமே பயன்படுத்திக் கொண்டார்கள்.

நேருவின் சோவியத் மாதிரி பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை சரண்சிங் எதிர்த்தார். அங்கு இருப்பதைப் போன்று கூட்டுறவு முறையிலான விவசாயப் பண்ணைகள் இந்தியாவில் வெற்றிபெறாது என்ற கருத்தினை அவர் முன் வைத்தார்.

ஒரு விவசாயியின் மகனான சரண்சிங், ஒரு விவசாயியை தொடர்ந்து விவசாயத்தில் ஈடுபடுகிற ஒரு நபராகவே நீடிக்க வைக்க வேண்டுமானால் அவர் பாடுபடும் அந்த நிலத்திற்கான உரிமை அவருக்கு சொந்தமானதாக இருக்க வேண்டும் என்ற கருத்தினை உறுதிபடத் தெரிவித்தார்.

நேருவின் பொருளாதாரக் கொள்கையை பகிரங்கமாக விமர்சித்ததால் சரண்சிங்கின் அரசியல் வாழ்க்கை கடும் பாதிப்பைச் சந்தித்தது. 1950களில் இந்திய தேசத்தில் பண்டிட் ஜவஹர்லால் நேருவை நோக்கி கேள்வி கேட்கும் துணிச்சல் எவருக்கும் இருக்கவில்லை.

1951 ஜுன் மாதம் உத்திரப்பிரதேசத்தில் கேபினட் அமைச்சராக நியமிக்கப்பட்ட சரண்சிங் நீதி மற்றும் தகவல் தொடர்பு துறையை கவனித்தார். பின்னர், வருவாய் துறையை தமது பொறுப்பில் எடுத்துக் கொண்டார்.

விவசாயத்துறைக்கும் அமைச்சரானார். 1959 ஏப்ரலில் மாநில அமைச்சர் பொறுப்புகளிலிருந்து அவர் ராஜினாமா செய்யும்போது வருவாய் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சாராக இருந்தார்.

1960ல் உத்திரப்பிரதேசத்தில் ஆட்சி செய்த சி.பி. குப்தாவின் அரசில் உள்துறை அமைச்சராகவும், விவசாயத்துறை அமைச்சராகவும் சரண்சிங் செயல்பட்டார். சுசேதா கிருபாளனி அமைச்சரவையிலும் (1962-63) விவசாயத்துறை அமைச்சராகவும், வனத்துறை அமைச்சராகவும் செயல்பட்டார். 2 ஆண்டுகள் கழித்து விவசாயத் துறையை திருப்பிக் கொடுத்துவிட்ட அவர் உள்ளாட்சித் துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.

1967ல் சரண்சிங் காங்கிரஸை விட்டு வெளியேறினார். சொந்த அரசியல் கட்சியை உருவாக்கினார். 1967லும் பின்னர் 1970ன் பிற்பகுதியிலும் இரண்டுமுறை உத்திரப்பிரதேச முதலமைச்சராக மிக குறுகிய காலம் அவர் பொறுப்பு வகித்தார்.

1975ல் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த முறை தனது முன்னால் எதிரி நேருவுக்கு பதிலாக அவரது மகள் இந்திரா காந்தி அவருக்கு எதிரியாக மாறியிருந்தார். அவசரநிலையை பிரகடனம் செய்து, தனது அனைத்து அரசியல் எதிரிகளையும் இந்திரா காந்தி சிறையில் தள்ளிக் கொண்டிருந்த நேரம் அது.

இந்திய மக்கள் அவரை தேர்தலில் வீழ்த்தினர். எதிர்கட்சி ஆட்சிக்கு வந்தது. எதிர் கட்சிகளின் மூத்த தலைவர் என்ற அடிப்படையில் அவர் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தார். ஏற்கெனவே மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா அரசில் அவர் துணை பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.

1979ல் சரண்சிங் இந்தியாவின் பிரதமர் ஆனார். அந்த வருடம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திரதின விழாவில் அவர் ஆற்றிய உரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பாகிஸ்தானின் அணு ஆயுத சிந்தனை இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று அன்றைய தினம் அவர் தீர்க்க தரிசனத்துடன் கூறினார்.

உலகப் பொருளாதாரத்தில் போட்டிப்போடுகிற பொருளாதாரமாக மாறும் நிலையில் இந்தியாவின் தொழிலாளர் சட்டங்கள் மறு சீரமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். இஸ்ரேலுடனான ராஜிய உறவுகளையும் அவர் துவக்கி வைத்தார். இதை பின்னர் 1980 தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்த பின்னர் இந்திரா காந்தி ரத்து செய்தார்.

1987 மே 29ஆம் தேதி சரண்சிங் காலமானார். அவருக்கு காயத்ரி தேவி என்ற மனைவியும், ஐந்து மகள்கள் (சத்யா, வேதவதி, ஞானவதி, சரோஜ், மற்றும் சாரதா) மற்றும் அஜீத் சிங் என்ற ஒரே மகனும் உள்ளனர்.

எளிய வாழ்க்கை வாழ்ந்த சரண்சிங் தனது ஓய்வு நேரத்தை படிப்பதிலும், எழுதுவதிலும கழித்தார். ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். ஜமீன்தாரி முறை ஒழிப்பு, கூட்டுப்பண்ணை முறை – ஒரு பார்வை, இந்தியாவின் வறுமையும் தீர்வும், விவசாயிகளின் நில உரிமை போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கவை.

Leave A Reply