வாழ்வியல் சிந்தனைகள் – 15 – ராதா மனோகர்

Share

பயம்…ஒரு எதிரி அல்ல….விளையாட வேண்டிய மைதானம் அது

Santosh Patel: You think tiger is your friend, he is an animal, not a playmate.
Pi Patel: Animals have souls… I have seen it in their eyes. Animals don’t think like we do! People who forget that get themselves killed. When you look into an animal’s eyes, you are seeing your own emotions reflected back at you, and nothing else. …life of pi quotes

பிராணிகளுக்கா அல்லது மனிதர்களுக்கா பய உணர்வு மிக அதிகம்? மனிதர்களுக்குதான் பய உணர்வு அதிமாக இருக்கிறது! மனிதர்கள் ஏன் பிராணிகளை விட அதிகமாக பயப்படுகிறார்கள்?

இந்த கருத்து உண்மையா என்ற சந்தேகம் உங்களுக்கு ஏற்படவும் கூடும். அடிப்படையில் மனிதர்களும் பிராணிகளும் பல சந்தர்ப்பங்களில் பயம் என்ற பொறிக்குள் அகப்படவேண்டிதான் உள்ளது.

பயம் உண்டாவதற்கான காரணங்களும் ஏராளமாக உள்ளன.

மனிதர்களின் பய உணர்வுக்கும் பிராணிகளின் பய உணர்வுக்கும் இடையே உள்ள வேறுபாடு என்னவென்றால் அந்த பயத்தை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் பிராணிகள் எப்படி எதிர்கொள்கின்றன என்பதில்தான் உள்ளது.

பிராணிகள் உண்மையில் கொஞ்சம் இயல்பாக எதிர்கொள்கின்றன. மனிதர்களின் அறிவு அதிகமாக வளர வளர பயமும் வளர்ந்து வளர்ந்து இன்று பூதாகரமாகி விட்டது.

இன்று மனிதர்கள் பயப்படும் விசயங்களுக்கு அளவு கணக்கே கிடையாது. சின்ன பயம் பெரிய பயம் காரணமே இல்லாத பயம் காரணத்தோடு பயம் என்று சதா பயம் பிடித்து ஆட்டுகிறது. நிச்சயமாக பிராணிகள் மனிதர்களை போன்று அதிகம் பயப்படுவது கிடையாது. பிராணிகள் தமது வாழ்க்கையை பெரிய சிக்கல் உள்ளதாக மாற்றவில்லை.

நாம் மனிதர்கள் பிராணிகள் மாதிரி வாழமுடியுமா என்று கேட்பது புரிகிறது. ராணிகள் இயற்கையிடம் இருந்து பல விசயங்களை கற்றுகொள்கின்றன.

நாம்தான் இயற்கையை விட செயற்கையான விஞ்ஞானம் கலாசாரம் ஆத்மீகம் என்ற லேபிள்களை உருவாக்கி அதை நம் தலைக்கு மேல் அளவுக்கு அதிகமாகவே ஏற்றி வைத்துவிட்டோம்.

ஆனால் உண்மையிலேயே இயற்கையிடம் எவ்வளவு அறிவு இருக்கிறது என்பதை பிராணிகளிடம் இருந்துதான் நாம் கற்கவேண்டி இருக்கிறது.

இன்னும் சரியாக சொல்லப்போனால் பயத்தோடு பிராணிகள் ஒரு விளையாட்டை விளையாடுகின்றன. அந்த விளையாட்டில் அவை சில நேரம் தோற்றும் சிலநேரம் வென்றும் வாழ்க்கையை வாழ்க்கையாகவே வாழ்கின்றன.

நாம் வாழ்க்கையை வாழ்க்கையாக பார்ப்பதில்லை. வாழ்க்கையின் மீது ஏராளமான எக்ஸ்ட்ரா லக்கேஜுகளை ஏற்றி த்திருக்கிறோம். அந்த லக்கேஜுக்களுக்கு நாம் பல அழகான பெயர்களை சூட்டி உள்ளோம். அந்த லக்கேஜூகளினால் பலர் மீளா கடனாளிகளாகி ஆனந்தத்தை தொலைத்தும் விட்டனர்.

நாம் ஏற்றி வைத்திருக்கும் லக்கேஜுக்களிலேயே மிகவும் மோசமான பாரமான லகேஜ் எது தெரியுமா? அதுதான் சமயகோட்பாடுகள்!

அடுத்த லக்கேஜுகள் கலாச்சாரம் சமுக அபிப்பிராயங்கள் எனப்படுகின்ற ஏராளமான காலாவதி சமாச்சாரங்கள் ஆகும். மேற்கண்ட தேவையற்ற பாரமான லக்கேஜுகள் உருவாக்கும் பயம் கொஞ்ச நஞ்சம் அல்ல.

இந்த காலாவதி கோட்பாடுகள் கண்டுபிடித்த மிக மோசமான ஒரு வார்த்தை வீரம் என்பதாகும். வீரத்தை மேலும் மேலும் சிறப்பாக சொல்லி சொல்லியே மனிதர்களின் இயல்பான பயத்தை மேலும் பூதகரமான அளவு வளர்த்து விட்டார்கள்.

பயம் மிகவும் இயல்பான ஒரு உணர்வாகும். அது எனக்கு இல்லை என்று யாரும் சொன்னால் அவர் நிச்சயமாக பொய் சொல்கிறார் என்றுதான் அர்த்தமாகும். அந்த பயத்தை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதில்தான் எமது அழகு, எமது ஆனந்தம் அல்லது எமது பெருமை எல்லாமே தங்கி இருக்கிறது.

எது எம்மை பயப்படுத்துகிறதோ அதை நாம் ஒதுக்கி தள்ளாமல் தாண்டி சென்று முன்னேற வேண்டும். அதுதான் வாழ்வின் சிறப்பு அல்லது இனிமை.

இந்த தத்துவத்தை பிராணிகள் மிகவும் அழகாக உணர்ந்து கொண்டுள்ளன. எமக்கு இது கொஞ்சம் கூட புரியாத சமாச்சாரமாகிவிட்டது. பயம் எம்மை நோக்கி வரும்போது அதனோடு நாம் ஒரு விளையாட்டுக்கு தயாராகும் மனநிலையோடு அடியெடுத்து வைக்கவேண்டும். அது உண்மையில் ஒரு விளையாட்டுத்தான்.

எமக்கு முன்னே ஒருவன் பெரிய ஆயுத பலத்தோடு எம்மை எதிர்த்து அழிக்க நின்றால் அவனை அவன் பாணியிலேயே மோதுவது வீரம் என்று எமது சமுகம் எமக்கு சொல்லி தந்தது.

இது மிக முட்டாள் தனமான கோட்பாடாகும். அந்த சந்தர்ப்பத்தில் எம்மை பாதுகாத்து கொள்ள எந்த யுக்தியை பயன்படுத்த வேண்டுமோ அதைதான் பயன்படுத்த வேண்டும். வீரம் என்ற சொல் முக்கியம் அல்ல. நாம் எப்படி அந்த சந்தர்ப்பத்தில் விளையாடுகிறோம் என்பதுதான் வாழ்வின் வெற்றிக்கு உரிய வழி.

எந்த பெரிய ராச்சத பிராணியும் தப்பி ஓடவேண்டிய நேரத்தில் ஓடும். வீரம் கோழைத்தனம் என்ற வார்த்தைகளே அதற்கு கிடையாது. இந்த பொய்யான வீரம் என்ற கோட்பாட்டை கண்டுபிடித்தவர்கள், மனிதர்களை வைத்து சதுரங்க வேட்டை ஆடிய மன்னர்களும் சமயங்களும்தான்.

இதை வேறு காவியப்படுத்தி காலம் காலமாக கற்று தந்துள்ளார்கள். அதனால்தான் ஆயிரக்கணக்கான வருடங்களாக நாம் தோற்று கொண்டே இருக்கிறோம். சொந்த வாழ்விலும் சரி பொது வாழ்விலும் சரி நாம் வாழ்ந்தது குறைவு. எம்மைவிட இதர ஜீவராசிகள் நன்றாக வாழ்கின்றன என்றே கருதுகிறேன்.

பயம் என்பது எம்மை நோக்கி வரும் ஒரு உணர்ச்சி. அது எமக்கு உள்ளே இருந்து வருவதல்ல. புறத்தே இருந்துதான் எம்மை நோக்கி வருகிறது. அதை எதிர்கொண்டு அதனோடு விளையாடுவதற்கு எமக்கு உள்ளே உள்ள சக்தியை நாம் பாவிக்க வேண்டும். அதைதான் மனிதரை தவிர்ந்த ஏனைய ஜீவராசிகள் செய்கின்றன.

எமக்குள் ஒரு மிக பெரிய சக்தி இருக்கிறது. அது அறிவின் அத்திவாரத்தில் இருக்கிறது. எம்மை இந்த பிரபஞ்சத்தில் நிலைநிறுத்தி கொள்வதற்கு அது எல்லையில்லாத அளவு நுட்பமாக அன்போடு இயங்குகிறது.

அதன் இயங்குமுறையை நாம் பிராணிகளிடம் இருந்துதான் கற்கவேண்டும். எமக்கு தேவையே இல்லாத ஏராளமான கோட்பாடுகள் எமக்கு ஒரு சிறையாகி விட்டன. அவை எல்லாமே ஓரளவு எமக்கு பயத்தைத்தான் அளிப்பனவாக உள்ளது.

அவற்றில் இருந்து விடுபடுவது மிகவும் மெதுவாக ஆரம்பிக்க வேண்டிய ஒரு process கருமம் ஆகும். எமக்கு வாழ்வில் பயத்தில் இருந்து விடுதலை வேண்டும். அதற்கு ஒரே வழி பயத்தின் அளவை குறைக்கவேண்டும்.

பயமும் வீரமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகும். ஒன்றோடு ஒன்று தங்கிதான் தங்கள் டிராமாவை காட்டுகின்றன. பயத்தை அகற்றுவதற்கு முதல் படி வீரம் பற்றிய அளவுகடந்த மேக்கப்புக்களை தூக்கி வீச வேண்டும்.

வீரம் பற்றிய கோட்பாடுகள் பலவற்றை தேவை இல்லாமல் எமது தலைக்குள் பொதிந்து வைத்திருக்கிறோம். எமது சகல மதங்களிலும் புராணங்களிலும் ஏராளமான வீர கதைகள் இருக்கின்றன. அவை எமது தலைக்குள் பாரமாக அழுத்திக்கொண்டு இருக்கிறது.

அவற்றை தூக்கி கொஞ்சம் கொஞ்சமாக அல்ல து ஒரே அடியாக வெளியேற்ற வேண்டும். ஏனென்றால் அவைதான் வீரத்தை பற்றிய ஒரு பொய்யான கோட்பாடுகளின் அத்திவாரமாகும்.

வீரத்தை மேன்மைபடுத்துதல் Glorifying என்பது உண்மையில் பய உணர்ச்சிக்கு ஆட்படுத்துவதாகும். வீரமும் பயமும் இணைபிரியாத கூட்டாளிகள். இவற்றோடு விளையாடலாம் ஆனால் இந்த இரு உணர்வுகளையும் வைக்கவேண்டிய இடத்தில வைக்கவேண்டும். இந்த கலையை பிராணிகள் மிகவும் நன்றாக தெரிந்து விளையாடுகின்றன.

எமக்குள் நீண்ட காலமாகவே நிலைபெற்று விட்ட பயத்தை தரும் விடயங்களில் இருந்து படிப்படியாக நாம் விடுதலை பெறவேண்டும். அதில் நாம் செய்யும் முயற்சி ஒரு விளையாட்டு போன்று எமக்கு வாழ்வில் உற்சாகத்தை தரும்.

நமது வாழ்க்கை என்பது உண்மையில் பிரபஞ்சத்தால் மிகச்சரியாக வடிவமைக்கப்பட்ட ஒரு அற்புதமான அழகான விளையாட்டு…… விளையாடுவோம்.

வாழ்வியல் சிந்தனைகள் – 16 – ராதா மனோகர்

Leave A Reply