வாழ்வியல் சிந்தனைகள் 5 – ராதா மனோகர்

Share

5.இறந்தவர்களோடு பேசுதல் சாத்தியமா?

இறந்தவர்களோடு பேசுதல் அல்லது அவர்களோடு தொடர்பு
கொள்ளமுடியுமா என்பது பற்றிய விவாதங்கள் மனித இனத்திற்கு புதிது அல்ல.

உண்மையில் மிகவும் ஆச்சரியம் தரத்தக்க செய்திகள் அல்லது நம்பிக்கைகள் வரலாற்றில் தாராளமாக உள்ளன.

எந்த விடயத்தையும் மிகவும் தர்க்க ரீதியாக ஆராய்வதே ஒரு நேர்மையான ஆய்வாளனின் கடமையாகும்.

ஆய்வுகள் எப்பொழுதும் நேர்மையாக மேற்கொள்ள படுவதில்லை.

பல சமயங்களில் அவை தங்களுக்கு சார்பான கருத்துக்களை நிறுவுவதற்கு செய்யப்படும் ஆய்வாகவே இருந்து விடுவதுண்டு.

பௌதீக இரசாயன கணித ஆய்வுகளை போலவே ஆத்மீகம் கடவுள் போன்ற விவகாரங்களிலும் ஏராளமான போலியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இப்படிப்பட்ட போலி ஆய்வாளர்கள் எல்லா மதங்களிலும் தாராளமாக உலா வந்துள்ளனர்.

ஏனைய ஆய்வுகளிலும் பார்க்க மதங்கள் அல்லது கடவுள் பற்றிய போலி ஆய்வுகள் மிகவும் இலாபம் தரக்கூடிய வியாபாரம் ஆகிவிட்டிருக்கிறது.

இன்று மனித குலத்தின் பெரும் துன்பங்களுக்கு இந்த போலி ஆய்வாளர்களும் ஒரு முக்கிய காரணமாகும். இவர்கள் தங்களை ஆய்வாளர்கள் என்று கூட கூறமாட்டார்கள்.

தாங்கள் உயர்ந்த வழிகாட்டிகள்… மேலான பெரியோர்கள் என்றெல்லாம் மக்களை நம்பவைத்து அவர்களின் சுய சிந்தனையை ஒரே அடியாக நொறுக்கி விட்டனர்.

இந்த விடயத்தை பற்றிய ஆய்வில் நான் ஒரு மாணவன்.

எந்த பள்ளிக்கூடமும் நான் படிக்க விரும்பிய இந்த பாடத்தை சொல்லி தரவில்லை.
இந்த முழு பிரபஞ்சமும் ஒரு பள்ளிக்கூடம்தான் என்று புரிய எனக்கு நீண்ட காலம் ஆகிவிட்டது.

நாம் திறந்த மனதோடு கண்ணை திறந்து பார்க்கும் வரை இந்த பிரபஞ்சம் நமக்கு தெரியவராது.

கண்ணிருக்கும் எல்லோரும் பார்க்கிறார்கள் என்று அர்த்தம் அல்ல.

திறந்த மனதோடு அறியவேண்டும் என்ற ஆவலோடு பார்ப்பவருக்கு மட்டுமே சரியான காட்சிகள் தெரியவரும்.

காது இருப்பதானால் மாத்திரம் நாம் இந்த பிரபஞ்சம் பேசுவதை கேட்கிறோம் என்று ஒருபோதும் கூற முடியாது.

கேட்பதற்கு உங்கள் மனம் தயாராக இருந்தால் மட்டுமே அது பேசுவது உங்களுக்கு கேட்கும்.

பிரபஞ்சத்தை அறியும் ஆற்றல் மனிதர்களை விட இதர உயிரனங்களுக்கு மிகவும் அதிகமாக உண்டு.

இது பற்றி ஏராளமான நல்ல புத்தகங்கள் ஆங்கிலத்தில் வெளியாகி உள்ளன.

மத நம்பிக்கை கலக்காத நூல்கள் ஓரளவாவது நேர்மையான ஆய்வுகளை பற்றி கூறி உள்ளன.

தமிழில் ஏனோ சரியான நூல்கள் இல்லை. அல்லது அது பற்றி எனக்கு சரியாக தெரியவில்லை.

மதம் சார்ந்த விடயங்களில் ஒருபோதும் நேர்மை இருந்ததில்லை.

மத நம்பிக்கையாளர்களால் எழுதப்பட்ட ஏராளமான நூல்களை வாசித்துள்ளேன்.

அவை பெரும்பாலும் மிகவும் குழந்தை தனமான அம்புலி மாமா கதைகளாகத்தான் இருக்கின்றன.

அவற்றால் எந்த பயனும் மனித குலத்திற்கு கிடைக்க போவதில்லை.

அழகான பிரபஞ்சத்தின் அற்புதங்களை எல்லாம் தங்கள் மதங்களுக்குள் அடக்கி பின்பு அதையும் கூறு போட்டு விற்றுவிடும் முட்டாள்தனமாகவே அவை உள்ளன.

இன்றிருக்கும் பல விஞ்ஞான வசதிகள் அந்த காலத்தில் இருந்ததில்லை.

அதன் காரணமாக மனிதர்களின் கவனம் பல வழிகளிலும் சிதறுண்டு போகும் ஆபத்து மிகவும் குறைவாக இருந்தது.

ஆனால் இன்று நம்மை சுற்றி உள்ள பொருட்கள் வசதிகள் வாய்ப்பு எல்லாம் கூட கூட அவை எல்லாம் ஒரு பெரிய இயந்திரம் போலாகி விடுகிறது.

இப்படி இயந்திரமாகிவிட்ட சூழல் எமது நுண் உணர்வை மெல்ல மழுங்கடித்து விடும்.
நுண்ணுணர்வுகள் இல்லையேல் மனமும் மெல்ல தனது இருப்பை இழந்து விடும்.

மனதின் இருப்பு மெதுவாக தனது வேகத்தை இழந்தால் வாழ்வின் வேகமும் குறைந்து போகிறது என்று கொள்ளவேண்டும்.

வாழ்வின் வேகம் அதிகமானது போல தோன்றுகிறது. ஆனால் உண்மையில் வாழ்க்கை வெறுமையாகி கொண்டு இருப்பது போலத்தான் தோன்றுகிறது. ஏனெனில் மனதின் உள்ளுணர்வுக்கு மதிப்பளிக்காத தன்மை நம்மில் உருவாக்கி விட்டது. நவீன வசதிகள் வந்ததும் மனம் அந்த கேளிக்கைகளில் கவனத்தை பறிகொடுத்து விட்டது. மனதின் கவனம் என்பது மனத்தின் உயிர் துடிப்பாகும்.

நமது மனதின் உயிர் துடிப்பு குறைந்து கொண்டு வருவது வாழ்வின் வெறுமையைதான் காட்டுகிறது.

மனம்தான் நமது ஆத்மாவின் சாரதி.. சாரதியை இழக்கலாமா?

மதவாதிகள் மட்டுமல்ல பகுத்தறிவுவாதிகள் கூட இன்னும் பல உண்மைகளை சரியாக அணுகவில்லை.

இரு பகுதியினரும் ஒருவரை ஒருவர் வறுத்து எடுக்கிறார்கள். ஆனால் திறந்த மனதோடு விஞ்ஞான ரீதியாக ஆய்வுகளை மேற்கொள்ள இன்னும் தயாராகவே இல்லை.

இரு பகுதியினரும் தாங்கள் ஏற்கனவே நம்பும் கோட்பாடுகளை அழுங்கு பிடியாக பிடித்து கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் கூட ஆய்வுகளை மேற்கொள்ள தயாரில்லை.

புரியாத சொற்களில் மக்களை குழப்பி எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற தோரணையில் நான் ஒன்றும் கூறப்போவதில்ல்லை.

அது மதவாதிகளின் போலித்தனம்! அது எனக்கு கிடையாது.

எனவே எனக்கு தெரிந்ததை நேரடியாகவே கூறுகிறேன்.

அடியேன் கூறுவதை நம்புவதும் நம்பாததும் அல்லது மேற்கொண்டு சுய ஆய்வுகளை மேற்கொள்வதும் அவரவர் விருப்பத்தை பொறுத்தது.

மனிதர்கள் தங்களது இறந்து போன உறவினர்கள் அன்பர்கள் போன்றவர்களோடு தெரிந்தோ தெரியாமலோ சதா தொடர்பில்தான் உள்ளார்கள்.

மனித வரலாறு முழுவதும் இது பற்றி ஏராளமான கதைகள் செய்திகள் உள்ளன. அவற்றை எல்லாம் நம்பவேண்டும் அல்லது நம்ப கூடாது என்று எதுவும் நான் சொல்லவில்லை.

எனது சொந்த வாழ்வில் ஏராளமான அனுபவங்கள் உள்ளது.

அது மட்டுமல்ல உங்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் உங்களோடு பல உன்னத ஆத்மாக்கள் தொடர்பில் உள்ளன.

அவர்களையும் சேர்த்துதான் இந்த பிரபஞ்சம் இயங்குகிறது.

பல சமயங்களிலும் உங்களுக்கு தேவையான் பல செய்திகளை வழிகாட்டுதல்களை அவர்கள் வழங்கி கொண்டுதான் இருக்கிறார்கள்.

இது ஒன்றும் மதம் அல்லது கடவுள் சம்பந்தப்பட்ட விவகாரமே கிடையாது.

இந்த முழு பிரபஞ்சமும் ஒரு மிக சிறந்த, தவறே இல்லாத (Perfect Mechanism) பூரணமான இயங்கியல் ஆகும்.

மூதாதையர் வழிபாடு என்று நமது பார்பம்பரிய வரலாறும் கூறுவது இதுதான்.

மேற்கு நாட்டினரும் Guardian Angels என்று கூறுவதும் இதைதான்.

இதுதான் பின்பு புராணங்கள் மதகோட்பாடுகள் என்று கண் காது மூக்கு எல்லாம் வைத்து பெரிய பெரிய கதைகளாக இயற்றி பரப்பி விட்டனர்.

பிரபஞ்ச இயக்கத்தின் நோக்கம் அல்லது அதன் தன்மைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் சகல உயிரினங்களும் இயங்குகின்றன அதாவது வாழ்கின்றன.

சரி தவறு அல்லது நல்லது கெட்டது என்பதாக ஒன்றும் பிரபஞ்சத்துக்கு கிடையாது.

ஆனால் அதற்கு விதிகள் உண்டு. அவைதான் நாம் சர்வசாதரணமாக கூறும் இயற்கை விதிகள்.

அவை ஏறக்குறைய எல்லோருக்கும் தெரிந்தவைதான்.

சுருக்கமாக கூறுவதாயின் நீ எண்ணுவதும் செய்வதும் உனக்கே திரும்பி வரும். ஏனெனில் நீதான் சிருஷ்டி கர்த்தா.

ஒருவரோடு நீங்கள் பேசினால் அவரும் அனேகமாக பேசுவார்.

அதே போலத்தன இறந்தவர்களும் நீங்கள் பேசினால் அவர்களும் பேசுவார்கள்.

ஆனால் அவர்கள் வேறு ஒரு சிஸ்டத்தில் உள்ளார்கள். உங்கள் சிஸ்டம் இந்த உலகம். அவர்கள் சிஸ்டம் இதை விட பிரமாதமானது.

உங்கள் சிஸ்டம் அவர்களுக்கு ஒரு கிண்டர் கார்டன் மாதிரிதான் தோன்றும். குழந்தைகளுக்கு அவசிய தேவை ஏற்பாட்டால் குழந்தைகள் கேட்காமலேயே ஓடிவந்து உதவி செய்வார்கள் .
பல சமயங்களில் பெரியவர்கள் ஓடிவந்து உதவி செய்வது குழந்தைகளுக்கு தெரிவதும் இல்லை.
இது போன்றதுதான அவர்களின் இயல்பு.

அவர்களின் தொடர்பு முறைகள் மிகவும் நுட்பமானவை.

மென்மையான நுட்பமான திறந்த மனதோடு கூடிய மனிதர்களுக்கு இது ஒன்றும் பெரிய காரியம் அல்ல.

அவர்களின் பேசும் மொழி வேறு..

அந்த மொழிக்கு சொற்களும் பொருட்களும் காட்சிகளும் சத்தங்களும் மற்றும் மனதில் தோன்றும் எண்ணங்களும் கூட பொருள் பொதிந்தவைத்தான்.

ஒரே நாளில் இந்த மொழியில் பாண்டித்தியம் பெற்று விடமுடியாது.

மெதுவாக முயற்சித்தால் நிச்சயமாக முடியும்.

உங்கள் நேரம் பொன்னானது.. அந்த பொன்னான நேரத்தை வீணாக்காமல் இந்த பிரபஞ்சத்தை அறிவதற்கு பயன்படுத்துங்கள்.

அது பேசும் .. அதுமட்டுமல்ல இந்த அழகான பிரபஞ்சத்தில் உங்களுக்கு இதுவரை தெரியாத அழகெல்லாம் தெரியவரும்.

இது எவ்வளவு ஆனந்தமான வாழ்வு என்று அறிவீர்கள்.

இந்த அற்புதம் அத்தனையும் உங்களுக்குள்ளேதான் இருக்கிறது.
மதங்களில் இல்லை. உங்கள் மனங்களில் இருக்கிறது.

உங்களைவிட மேலானது என்று இந்த உலகில் ஒன்றுமே இல்லை.

ஏனெனில் நீங்கள்தான் அந்த பிரபஞ்சம்..

உங்களை சுற்றி உள்ள இந்த பிரபஞ்சமும் நீங்களும் வேறு வேறு அல்ல.

இரண்டும் ஒழித்து பிடித்து விளையாடும் ஒரு அற்புத நாடகம்தான் இது.

நீங்கள் மட்டும் தனியாக இல்லை.

உங்களோடு பேசுவதற்கு அது தயாரகவே இருக்கிறது… அல்ல, அல்ல. அது ஏற்கனவே பேசிக்கொண்டுதான் இருக்கிறது.

அதை கொஞ்சம் காது கொடுத்து கேளுங்கள்.

நீங்கள் ஆழமாக நேசித்து உங்களை விட்டு பிரிந்து போனவர்களை கொஞ்சம் மனதில் எண்ணி பாருங்கள்.

மெதுவாக அவர்களிடம் மனதில் பேசுங்கள்.

முதலில் நீங்கள் மட்டுமே பேசுவது போல தோன்றும்.

ஆனாலும் தொடருங்கள்.. மெதுவாக அவர்களின் பதில் உங்களை சுற்றி தெரியும். அவை காட்சிகளாக அல்லது ஓசைகளாக அல்லது சம்பவங்களாக உங்களுக்கு தேவையான பதிலை கொண்டிருக்கும்.

இது நம்புவதற்கு மிகவும் இலகுவாக இருக்காது.

ஏனெனில் நீங்கள்தான் ஒரு நம்பிக்கை அற்ற மனிதர்களாக உருவாகி இருக்கிறீர்களே.

உங்களை இன்றைய அவநம்பிக்கையாளராக உருவாக்கியது இன்றைய வரட்டு மதங்கள்தான்.

மதங்கள் உங்களை வெறும் பின் தொடர்ந்து செல்பவர்கள் ஆக்கிவிட்டிருக்கிறது.

தனிமனிதர்களின் எல்லா விடயங்களுக்கும் ரெடிமேட் பதில்களை தருகிறோம் என்று உபதேசித்து உபதேசித்து உங்களை ஒரு அறிவியல் பிராய்லர் சிக்கன் ஆக வளர்த்து விட்டார்கள்.

இந்த பிராய்லர் பாஸ்ட் food ஆத்மீக பிரசாரகர்களிடம் இருந்து விடுபட்டு உங்கள் பிரபஞ்சத்தையும் அதில் நீங்கள் யார் என்பதையும் தேடுங்கள்.

அது உங்களுக்கு உள்ளேயும் அருகேயும்தான் உள்ளது.

உங்களுக்கும் எவருக்கும் என்றும் முடிவே இல்லை. இது ஒரு தொடர்கதை.

அடுத்த அத்தியாயத்தில் கனவுகள் பற்றி எழுத உள்ளேன். அந்த உலகம் இன்னும் விஞ்ஞானம் கண்டு பிடிக்காத உலகம். விஞ்ஞானிகளுக்கு அதைப்பற்றி தெரியாத காரணத்தால் அதை வெறும் மனப்பிரமை என்று புறம் தள்ளுகிறார்கள்.

அவர்களிடம் இருந்து எனக்கு ஒரு அங்கீகாரமும் தேவை இல்லை. அவர்களுக்கே தெரியாத விடயத்தை பற்றி அவர்கள் எப்படி முடிவெடுக்க முடியும்?

மனிதர்களுக்கு கனவு என்பது ஒரு அற்புத வாய்ப்பு. ஆனால் இன்னும் சரியாக அணுக தெரியாமல் உள்ளது.

அதன் பெறுமதி தெரியாமல் அது, ஆடுகளை மேய்ப்பவன் கையில் உள்ள கோஹினூர் வைரம் போலத்தான் உள்ளது.

(தொடரும்)

வாழ்வியல் சிந்தனைகள் 4 – ராதா மனோகர்

Leave A Reply