1967 தேர்தலில் கொடிபிடித்து கோஷம் போட்ட அனுபவம் – ஆதனூர் சோழனின் நினைவுக் குறிப்புகள்

Share

1966ல் உணவுப்பஞ்சம் தலைவிரித்தாடியது. 5 படி அரிசிக்கு மேல் பஸ்சில் கொண்டுபோக முடியாது. அந்த அளவுக்கு அரிசிக் கடத்தலை கடுமையாக தடுத்தது காங்கிரஸ் அரசு.

ஆனால், வியாபாரிகள் அரிசியையும் அத்தி யாவசிய பொருட்களையும் பதுக்கி வைத்து செயற்கையாக உணவுத் தட்டுப்பாட்டை ஏற்படுத் திநார்கள். அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வில்லை. ஆனால், பஸ்சில், சைக்கிளில் அரிசி கொண்டுபோகும் சாமானியர்களை வாட்டிப் பிழிந்தது.

அப்போதெல்லாம் ரேஷன் கடையே கிடையாது. அரிசிச் சோறு எல்லா வீடுகளிலும் கிடைக்காது. மூன்று வேளை சாப்பாடு என்பது நிறைய வீடுகளில் சாத்தியமே இல்லை.

எங்கள் ஊரில் எங்களுக்கு சொந்த விவசாயமே இல்லை. எங்கள் நிலத்தை யாராவது குத்தகைக்கு உழுது விளைச்சலில் பங்கு கொடுப்பார்கள்.

நெல், வெள்ளைச் சோளம், சிவப்புச் சோளம், கேழ்வரகு, குதிரைவாலி மூடைகள் அடைந்து கிடக்கும். நெல்லை கொட்டி வைக்க தொம்பரை என்று தனியாக ஒரு இடத்தில் இருக்கும்.

தேவையான அளவு அதில் கொட்டி வைப்பார் கள். தானியங்களை குழுமை அல்லது குதிருக்குள் கொட்டி வைப்பார்கள். மண் குழுமைக்குள் ஒரு ஆள் முழுசாக இறங்கி நிற்கலாம். வசதிக்கு தகுந்தபடி குழுமை எண்ணிக்கை இருக்கும்.

எல்லா வீடுகளிலும் தானியங்கள், பயறு பச்சைகள் வைக்க அடுக்குப் பானைகள் இருக்கும். குழுமை மீது அந்த மண் பானைகளை சைஸ் வாரியாக அடுக்கியிருப்பார்கள்.

எங்கள் ஊரிலிருந்து நெல் அரைக்க வண்டியில் நெல் மூடைகளை ஏற்றி அலங்காநல்லூர் வர வேண்டும். ரைஸ் மில்லிலேயே மூடைகளை இறக்கி, அங்கேயே அவித்து, காயப்போட்டு அரைப்பார்கள்.
வண்டியில் அப்பத்தா வரும். எங்களுக்குத் தேவையான அரிசியை கொடுத்துட்டு தவிடு, அரிசி மூடைகளை ஊருக்கு கொண்டு போகும்.

பரீட்சை முடிந்து லீவ் விடும்போது, ஊருக்கு போவோம். சமயத்தில் எங்கள் விறகுக்கடைக்கு அருகில் வசிக்கும் குடும்பத்தினரும் ஊருக்கு வருவார்கள். அந்தக் குடும்பத்தில் ஒரு பொண்ணு என்கூட படித்தாள்.

அப்படி ஒருமுறை ஊருக்குப் போனபோதுதான், கூட்டு வண்டியில் ஏறி விளையாடும்போது கீழே விழுந்து எனது முழங்கையில் எலும்பு பிசகியது.

அப்போவெல்லாம் எலும்பு முறிவுக்கு மருத்துவ மனை செல்ல முடியாது. அலங்காநல்லூரில்கூட எக்ஸ்ரேயோ, மாவுக்கட்டு வசதியோ கிடையாது. உள்ளூரிலேயே ஆண்டி என்பவர் முட்டைப் பத்து கட்டு, தப்பைக் கட்டு வைத்தியம் செய்வார். எனக்கும் முட்டைப்பத்து கட்டு போட்டார். வேதனைக்கெல்லாம் மருந்து கிடையாது. வலியை தாங்கிக்கொள்ள வேண்டும்.

ஊரில் இரண்டு நாட்கள்கூட தங்க முடியாது. உடனே கிளம்பியாகனும். இப்போவும்கூட எனது இடது கை லேசாக தூக்கியிருக்கும். இரண்டு கைகளையும் நேராக நீட்டினால் இடது கை வளைந்து தெரியும்.

நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போதுதான் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வந்தது. அலங்காநல்லூரில் அடுத்தடுத்து பொதுக் கூட்டங்கள் நடக்கும். பேச்சாளர்கள் ஆவேசமாக பேசுவார்கள். மேடைக்கு முன்தான் நானும் நண்பர்களும் உட்கார்ந்து வேடிக்கை பார்ப்போம். அதிக நேரம் பொறுமையாக இருக்க முடியாது. நானாகவே வீட்டுக்கு போய்ருவேன். அல்லது அம்மா என்னை தேடி வந்து கூட்டிப் போயிரும்.

தேர்தல் அறிவிக்கப்பட்ட சமயத்தில்தான் எம்ஜியாரை எம்.ஆர்.ராதா சுட்டதாக செய்தி வெளியாகி பரபரப்பாகியது. 1967 ஜனவரி 12 ஆம் தேதி எம்ஜியார் சுடப்பட்டார். தேர்தல் பிப்ரவரி 5 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதிவரை மூன்று கட்டமாக நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அந்த அளவுக்கு போக்குவரத்து வசதி படுமோசமாக இருந்தது. இணைப்புச் சாலைகளே இல்லை. வாக்குப் பெட்டிகளை கொண்டுபோவதில் அவ்வளவு சிரமம் இருந்தது.

இந்தி எதிர்ப்பு பிரச்சாரம், விலைவாசி உயர்வு பிரச்சாரம், இவற்றுடன் எம்ஜியார் சுடப்பட்ட விவகாரமும் சேர்ந்து திமுகவுக்கு ஆதரவு அதிகரித்தது.

அப்போவெல்லாம் இப்போமாதிரி பொதுக்கூட்ட மேடையில் வாட்டர் பாட்டில் இருக்காது. கோலி சோடாதான் கொடுப்பார்கள். சால்வை போடும் பழக்கம் பெருசா இல்லை. மாலைகள்தான் போடுவார்கள்.

இந்த மலர் மாலையை மாணிக்க மாலையாக அணிவிக்கிறேன் என்றும், இந்தக் கைத்தறி ஆடையை பொன்னாடையாக அணிவிக்கிறேன் என்று தவறாமல் சொல்வார்கள்.

ஆளுங்கட்சி பொதுக்கூட்டம் போட்டால் அதற்கு போட்டியாக அதே இடத்தில் திமுக சார்பில் கூட்டம் ஏற்பாடு செய்வார்கள். திமுக கூட்டத்தில் மட்டும் உண்டியல் வசூல் நடக்கும்.

இந்தி எதிர்ப்பு போராட்டம் குறித்து ஆவேசமாக பேசுவார்கள். விலைவாசி மக்களை வாட்டுவதாக கூறுவார்கள். அவசியமான பொருட்களை ஒளித்து வைத்து முதலாளிகள் விலையை ஏற்றுவதாக குறை சொல்வார்கள். அவர்களுக்கு காங்கிரஸ் அரசு உதவுவதாக பேசுவார்கள்.

சோழவந்தான் பொன்னம்மா ஓட்டுக் கேட்டு வந்தால், சோள விலையை கேளுங்கள். காமராஜர் வந்தால் கருப்பட்டி விலை என்னாச்சுனு கேளுங்க. கக்கன் வந்தால் மாணவர்களை சுட்டுக் கொன்றாயே அவர்கள் என்ன கொக்குகளா என்று கேளுங்கள். இப்படியெல்லாம் பேசுவார்கள். தேர்தல் பிரச்சாரம் தொடங்கியதும், பள்ளிக் குழந்தைகளான எங்களுக்கு மிட்டாய் கொடுத்து திமுக கொடியைக் கொடுத்து தெருக்களில் கோஷம் போட அனுப்புவார்கள்.

காங்கிரஸுக்கு ஓட்டுக் கேட்க சிறுவர்கள் யாரும் போக மாட்டார்கள். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகளே போக மாட்டார்கள்.

தேர்தல் நெருங்க நெருங்க திமுகவுக்கு ஆதரவு அதிகமாகியது. எம்ஜியார் ஏன் சுடப்பட்டார் என்பதை காங்கிரஸ் பேச்சாளர்கள் தயக்கமே இல்லாமல் பேசுவார்கள். எம்ஜியாரால் பாதிக்கப் பட்டவர்களை பட்டியல் போடுவார்கள்.

பிரச்சாரத்துக்கு வருகிற பிரபலங்கள் அலங்கா நல்லூர் வாடிவாசல் அருகேயுள்ள ஊர் பஞ்சாயத்து மேடையில் நின்றுதான் பேசுவார்கள். எங்கள் வீட்டுக்கு அருகிலிருந்து பார்த்தாலே நன்றாகத் தெரியும். அங்குதான் எஸ்.எஸ்.ஆர்., சிவாஜி ஆகியோர் பிரச்சாரம் செய்வதை பார்த்தேன்.

எங்கள் வீட்டில் ஒரு சித்தப்பா காங்கிரஸில் தாலுகா தலைவராக இருந்தார். கடைசிச் சித்தப்பா திமுகவில் பொறுப்பில் இருந்தார். காங்கிரஸ் சித்தப்பா அன்றைய எம்எல்ஏ ஏ.எஸ்.பொன்னம்மாளுக்கு தம்பி மாதிரி இருந்தார். இவர் பெயரும் ஏ.எஸ்.பெருமாள் என்பதால் இருவரையும் உடன்பிறந்தவர்களாகவே நினைப்பார்கள்.

தேர்தல் முடிந்தது. திமுக கூட்டணி வெற்றி பெற்றது. அண்ணா அமைத்த கூட்டணியே வெற்றிக்கு காரணம் என்று சொன்னார்கள். அதுவரை இந்திய அளவில் யாருமே இந்த கூட்டணித் தந்திரத்தை கையாண்டதில்லை. வெறும் 17 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. திமுக கூட்டணி திமுக கூட்டணி 179 இடங்களையும், காங்கிரஸ் 51 இடங்களையும் பெற்றது.

(தொடரலாம்)

Leave A Reply