எம்.ஆர்.ராதாவின் சிறை அனுபவங்கள் – 6 – விந்தன்

Share

6. கோவிந்தா, கோவிந்தா!

“ஒரு தீபாவளிக்கு நானே வெடி தயார் சேஞ்சேன்…”
“என்ன வெடி, யானை வெடியா?”
“இல்லை, அதுக்கும் அப்பன் வெடி!”
“நரகாசுரன் ‘நம்ம ஆசாமி’ என்று சொல்வார பெரியார், நீங்கள் தீபாவளி கொண்டாடுவீர்களா, என்ன?”
“வெடி நரகாசுரனுக்காக இல்லே, திருப்பதி கோவிந்தராஜனுக்காக!”
“அட பாவமே!…அவன் என்ன செய்தான் உங்களை?”
“அவன் ஒண்ணும் செய்யலே, அவனுடைய தேவஸ்தான நிர்வாகிங்க நாள் என் வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிட்டாங்க!”
“காரணம்?”

“அது எனக்குத் தெரியாது. அன்னிக்கு என் கையிலே ஒரு காலணாக்கூட இல்லே; ‘இந்த ஏழுமலையான் எப்போ பார்த்தாலும் நம்மை ஏன் இப்படியே வைச்சுக்கிட்டிருக் கான்?’னு அவனையே நேராப் பார்த்து ஒரு வார்த்தை கேட்டுட்டு வரலாம்னு நான் மலையேறிப் போனேன். அந்த நாளிலே மலைமேலே ரோடு ஏது, பஸ் ஏது? இருப்பவன் ‘டோலி’யிலே போவான்; இல்லாதவன், ‘கோவிந்தா, கோவிந்தா’ன்னு ‘அடிதண்டம்‘ போட்டுக்கிட்டுப் போவான். அந்த மாதிரிதான் நானும் போனேன். ‘தரும தரிசனம்‘ இப்ப மட்டும் இல்லே, அப்பவும் காலையிலேதான். லேட்டாப் போனா எங்கே தரிசனம் கெடைக்காமல் போயிடுமோன்னு அவசர அவசரமாப் போனேன்.

கால்லே முள்ளு மட்டுமா குத்துச்சி, கல்லும் குத்துச்சி. அப்பத்தான் என் உடம்பிலும் கொஞ்சம் ரத்தம் இருக்குன்னு எனக்குத் தெரிஞ்சுது. கொஞ்ச தூரம் போனதும் ‘கிளுக், கிளுக்‘ குன்னு சத்தம் போட ஆரம்பிச்ச என் கால் முட்டி ‘நட்டு’ மேலே போகப் போக ‘லொட லொடா’ன்னு ஆடவே ஆரம்பிச்சிடிச்சி. அந்த ‘நட்’டை எந்த ‘ஸ்பான’ ராலே நான் முடுக்குவேன்? ‘அப்பா, வட மலையானே, நீயே முடுக்குடாப்பா ‘ ன்னு பல்லைக் கடிச்சிக்கிட்டுப் போனேன். உதடு வறண்டு, நாக்கு வறண்டு, தொண்டையும் வறண்டு போச்சு, ‘கோவிந்தா, கோவிந்தா!’ன்னர தாடையும் வாயும் தான் அசையுது, சத்தம் வெளியே வரல்லே….”

“ஐயோ பாவம், ஒரு கூஜா தண்ணீராவது கையோடு கொண்டு போயிருக்கக் கூடாதா?”
“தண்ணி வேணும்னா கிடைக்கும்; கூஜாவுக்கு எங்கே போவேன்?”
“அந்தக் கஷ்டம் வேறே இருக்கா?…ஆமாம், உங்களுடன் வந்தவர்கள் யாராவது….”
“என்னோடு எவன் வருவான்? என்னைக் காட்டிலும் ‘அன்னக் காவடி’ தானே வருவான்?’
“ஒரு திருத்தம்…’அன்னக் காவடி’ என்று சொல்லாதீர்கள்; ‘வெறுங் காவடி’ என்று சொல்லுங்கள்…”

“பேப்பர்காரங்கன்னா பேசறப்போ கூட ‘திருத்தம்‘ போடாம இருக்க முடியாது போலிருக்கு.. சரி, அப்படியே வைச்சுக்குவோம்…’என்ன ஆனாலும் சரி,இந்தத் திருவேங் கடத்தானை இன்னிக்குப் பார்க்காம விடறதில்லே’ன்னு நான் விழுந்து எழுந்து போனேன். கடைசியிலே காத்துப் போன பலூன் மாதிரி அங்கே போய்த் துவண்டு விழுந்தா…!

“என்ன ஆச்சு, பாலாஜியே காணாமல் போய் விட்டாரா?

“அது இந்தக் காலத்துப் பக்திமானுங்க செய்யற வேலையில்லே? அந்தக் காலத்துப் பக்திமானுங்க அப்படி யெல்லாம் செய்யறதில்லே. பாலாஜி இருந்தான்; ஆனா, நான் பாக்கும்படியா அவன் இல்லே…”
“ஏன்?”

“அன்னிக்குக் காலையிலே ‘தரும் தரிசனம்‘ இல்லையாம்; மாலையிலேதானாம்….. எப்படி இருக்கும் எனக்கு….?”

“என்னைக் கேட்காதீர்கள்; அந்தத் தரிசனத்துக்காக நீங்கள் பட்ட பாட்டைக் கேட்டுக் கொண்டிருந்த எனக்கே இப்போது எப்படியோ இருக்கிறது!”

“பசி வேறே, தாகம் வேறே; கையிலே ஒரு தம்பிடிகூட இல்லாத கஷ்டம் வேறே, அன்னிக்குச் சாயந்திரம் அந்த ஊரிலே நடத்தவிருந்த நாடகத்துக்காக ஒத்திகை பார்ப்பாங்களே, அதிலே கலந்துக்கணுமேங்கிற கவலை வேறே….இத்தனையும் வைச்சுக்கிட்டுத் தரும தரிசனத்துக்காக அங்கே காத்துக்கிட்டிருக்க முடியாதேங்கிற ஆதங்கம் வேறே… எல்லாமாச் சேர்ந்து என்னை ஒரு வெறியனாவே ஆக்கிடிச்சி…தலை முடியைப் பிடிச்சி இழுத்துக்கிட்டுச் சுற்றுமுற்றும் பார்த்தேன்…

தீபாவளி வர ஒரு வாரம் ரெண்டு வாரம் இருக்கிறப்பவேதான் நம்ம ஊர்ப் பயலுங்க ‘டப், டுப்புன்னு பட்டாசு கொளுத்த ஆரம்பிச்சுடுவானுங்களே?.. அந்தச் சத்தம் அங்கேயும் கேட்டுக்கிட்டிருந்துச்சி.. அதைக் கேட்டதும், கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டதும் ‘கண்டேன், ‘கண்டேன்‘ன்னு கூவியமாதிரி நானும் கூவிக்கிட்டே தட்டுத் தடுமாறிக் கீழே வந்தேன்… அந்தக் காலத்து நாடக மேடையிலே ராஜாவுங்க வரப்போ வேட்டுச் சத்தம் கிளம்பும்…”

“ஏன், இந்தக் காலத்து நிஜ ராஜாக்கள், நிஜ ராஜப் பிரதிநிதிகள், நிஜ ஜனாதிபதிகள், நிஜப் பிரதம மந்திரிகள், நிஜ கவர்னர்களெல்லாம் நாடக மேடைக்கு வராமல் இருக்கும்போதே வேட்டுச் சத்தம் இன்னாருக்கு இவ்வளவு என்று கணக்குப்படி கிளம்பிக் கொண்டிருக்கிறதே, அதை நீங்கள் கவனிக்கவில்லையா?”

“எல்லாத்தையும் கவனிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன்… சரியான தலைவன் இல்லேன்னா, நாடே மேடையாத்தான் போவும்.. ஆள வரவனெல்லாம் கூத்தாடி ராஜாவாத்தான் இருப்பான்…அப்புறம் அவன் நாடக தனக்கு வோட்டுப் போட்டுட்டுத் தூங்கற ஜனங்களை ஜனங்களை எழுப்ப வேட்டுச் சத்தத்தையாவது கிளப்பிக்கிட்டிருக்க வேண்டியது தானே?”

“கரெக்ட்…அப்புறம்?”

“வேட்டுச் சத்தம்னா சும்மாவா, அதுக்கு வெடிகள் வேண்டாமா? அந்த வெடிகள் கிடைக்காத ஊரிலே அதை நாங்களே தயார் சேஞ்சுக்குவோம். அதுக்கு வேண்டிய மருந்தும் எங்கக்கிட்டே ‘ஸ்டாக்‘கிலே செய்யற வெடி செய்யற வெடி வெறும் எப்போதும் இருக்கும்…ஆனா கருமருந்து வைச்சுச் வேறே… கருமருந்து வைச்சிச் சத்தத்தோடு சரி; மனோசிலை வைச்சிச் செய்யற வெடியோ மலையைக்கூடப் பொளந்துடும். அந்த மாதிரி வெடிகுண்டு ஒண்ணைத் தயார் சேஞ்சி, அதை வைக்கிற அதை வைக்கிற இடத்திலே வைச்சித் திருப்பதி தேவஸ்தானத்தையே தூள் தூளாக்கிடணுங்கற ஆத்திரம் எனக்கு…”

“ஆமாம், உங்களுக்கு வெடிகுண்டு வேறே செய்யத் தெரியுமா?

“நான்தான் சொன்னேனே, பகத் சிங் கோஷ்டி பயலுங்களுக்கு கலெக்டர் என்று?… வெள்ளைக்காரக் வைக்கிறதுக்காக அதை நான் கத்துக்கிட்டிருந்தேன்..

“அவர்கள் நல்ல காலம், உங்கள் குண்டிலிருந்து தப்பிப் பிழைத்தார்கள்; திருப்பதி வேங்கடமுடையானின் போதாத காலம்….”

“அவசரப்படாதீங்க, முழுக்கக் கேளுங்க… அங்கே நாங்க தங்கியிருந்த வீடு ஒரு மொட்டை மாடி வீடு. அந்த வீட்டு மாடியிலே நான் வெடி குண்டைத் தயார் சேஞ்சிக் காய வைச்சேன்…சாயந்திரம் அது காய்ஞ்சிடிச்சான்னு பார்க்கப் போனேன். மேலே அப்ப என் வாயிலே புகைஞ்சுக்கிட்டிருந்த சிகரெட் நெருப்பிலிருந்து ஒரு பொறி தெறித்து அந்த வெடிகுண்டு விழுந்துடிச்சி…அவ்வளவுதான்; ‘டமாரி’னு ஒரு சத்தம்.. வெடிச்சது வெடிகுண்டு மட்டுமில்லே; மாடியுந்தான் …நான் எங்கேயோ தூக்கியெறியப்பட்டேன்; அந்த வீட்டிலிருந்த நாற்பது ஐம்பது பேருக்குச் சரியான அடி….“

“கோவிந்தா, கோவிந்தா!”

“என்ன, ‘கோவிந்தா’ன்னு கையெடுத்துக் கும்பிட ஆரம்பிச்சிட்டீங்க?”

“மன்னிக்க வேண்டும்…நான் ஏழுமலையானின் பக்தன்; அவருடைய சக்தியை நினைத்து…”

“விஷயம் தெரிஞ்சப்புறம் எல்லாரும் அப்படித்தான் பேசிக்கிட்டாங்க…அதுக்கு மேலே கேட்கணுமா?… தகவல் எதுவும் வந்தது…காயம் பட்டவங்களைக் கொண்டு போய் ஆஸ்பத்திரியிலே சேர்த்தாங்க; என்னை ‘அரெஸ்ட்’ சேஞ்சிக் கொண்டு போய் ‘லாக்அப்’ பிலே வைச்சாங்க…அய்யர் ஆடியே போய்விட்டார்… நல்ல வேளையா அப்போ அந்த ஊர் போலீஸ் சூப்பிரெண்ட்டாயிருந்தவர் எங்க கம்பெனி ஹீரோ எஸ்.வி. சொந்தக்காரராயிருந்தார். சமாளிச்சோம்.. வேங்கடராமனின் அவரைச் சரிக்கட்டி நிலைமையைச் ‘வெடிச்ச வெடி சாதாரண வெடிதான்; நாடகமேடை ராஜாக்களுக்கு மரியாதை குண்டு போடறதுக்காகச் சேஞ்சிக் காய வெச்சிருந்த வெடி’ன்னோம். ‘அந்த வெடியிலே மனோசிலை ஏன் வந்தது?ன்னு கேட்டாங்க. ‘அது வெறும் கருமருந்துதான்; மனோ சிலை மாதிரி தெரியுது’ன்னு அவங்க கண்ணிலே மண்ணைத் தூவினோம். வெடி சாதாரண மாடி யே பொளப்பானேன்?’னு வெடியாயிருந்தா கேட்டாங்க; ‘பழைய கட்டடம், அதான் பொளந்து போச்சு’ன்னோம்…”

“வேறே சூப்பிரெண்ட்டாயிருந்தால் இதையெல்லாம் நம்பியிருக்க மாட்டார்..”

‘அதிலே என்ன சந்தேகம்?…..இதிலிருந்து நீங்களும் நானும் தெரிஞ்சிக்க வேண்டியது என்னன்னா, ‘சூப்பிரெண்ட் வேண்டியவராயிருந்தா குற்றவாளியை நிரபராதி யாக்கிடலா’ங்கிறதுதான் மனுஷனுக்கு மனுஷனே வழங்கிக்கிற நீதியிலே உள்ள குறை இது…”

“அந்தக் குறையை நிவர்த்தி செய்யத்தான் கடவுள் இருப்பதாகச் சொல்கிறார்கள்…”

“அவர் வழங்கிற நீதி மனுஷனுக்கு எங்கே தெரியுது?…மனுஷனுக்கு மனுஷன் வழங்கிற நீதிதானே தெரியுது…?”

“அதெல்லாம் பெரிய விஷயம் என்று சொல்வார்கள்; நாம் நம்முடைய விஷயத்துக்கு வருவோம்…”

‘நம்முடைய விஷயம் இருக்கு?….கேஸ் அதுக்கு மேலே என்ன போகல்லே, கோர்ட்டுக்குப் சூப்பிரெண்ட்டோடு நின்னு போச்சு. நான் விடுதலையா யிட்டேன்…”

“கோவிந்தா, கோவிந்தா!”
“திரும்பவும் ஏன் ‘கோவிந்தா’ போடறீங்க?”
“நீங்கள் விடுதலையானதும் அவன் அருள்தானே?”

“அப்படியா? ‘இன்னிக்கு இதுக்கு மேலே சொல்ல வேணாம்‘னு நான் நினைக்கிறேன். இதுவும் இதுவும் அவன் அருளாத்தான் இருக்கணும். நீங்க போயிட்டு வறீங்களா?”

“தாங்க்ஸ்!”

எம்.ஆர்.ராதாவின் சிறை அனுபவங்கள் – 7 – விந்தன்

Leave A Reply