நல்ல அம்மாவாக நல்ல யோசனைகள் – 16 – ஆதனூர் சோழன்

Share

பணியிடங்களில் சிறந்துவிளங்க…

பணம்தான் ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் ஆதாரமாக இருக்கிறது.

சிலர் சொந்தத் தொழில் மூலமாகவும், பலர் நிறுவனங்களில் பணியாற்றுவதன் மூலமும் சம்பாதிக்கின்றனர். பணிக்கு செல்பவர்கள், பணியிடங்களில் தினமும் பல்வேறு பிரச்சினைகளைச் சந்திக்கின்றனர். அந்த பிரச்சினைகளை சரியான வழியில் கையாள வேண்டியது அவசியமாகிறது.

நிறுவனங்கள், தங்களுடைய உற்பத்தி செலவில் 75 சதவீதத்தை ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காகவே செலவிடுகின்றன. ஆகவே, பணியாளர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று ஒவ்வொரு நிறுவனமும் கருதுவது இயல்புதான்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், பணியிடங்களில் சிறந்து விளங்க தொழில்துறை நிபுணர்கள் பல ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.

1. தனித்திறனை வெளிப்படுத்தும் வகையில் பணியாற்றுங்கள். உங்கள் பணித் திறனைப் பற்றி பேசும்போது,
“இவர் நன்றாக வேலை செய்கிறார்” என்பதை விட,
“இவர் தனது வேலையை சிறப்பாக செய்கிறார்” என்று கூறும்படி வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு பணியை உங்களிடம் ஒப்படைத்தால், முதல் தடவையிலேயே அதைச் சிறப்பாக செய்து முடிப்பீர்கள் என்று முதலாளி கருத வேண்டும். அந்த அளவுக்கு உங்கள் பணியில் தெளிவு இருக்க வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

2. உங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலையில் மட்டும் ஈடுபாடு காட்டுங்கள். தேவையில்லாத விஷயங்களில் தலையிடுவதைத் தவிருங்கள். சில பொறுப்புகள் உங்களிடம் ஒப்படைக்கப் பட்டால் அதில் முழு கவனத்தையும் செலுத்தி செயல்படுங்கள். நீங்கள் இதுவரை செய்தது என்ன? செய்ய விரும்புவது என்ன? போன்றவற்றை முதலாளிக்கு தெரிவித்து விடுங்கள். உறுதியளித்தபடி பணியாற்ற முடியாவிட்டாலும் கூட, உங்கள் மீதான மதிப்பு குறைந்துவிடாமல் இருக்க இது உதவும்.

3. நிறுவன முன்னேற்றத்துக்கு உதவும் புதிய முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். அதற்கான வாய்ப்புகளைக் கண்டறிந்து செயல்படுத்துங்கள். உங்களிடம் அளிக்கப்பட்ட வேலைகளை விட கூடுதலாக செய்யுங்கள். புதிய திட்டங்களை செயல்படுத் துவதற்காக புதிய பரிந்துரைகளை நிர்வாகத்துக்கு வழங்குங்கள். ஆனால், நீங்கள் பரிந்துரைக்கும் திட்டங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவுவதாக இருக்க வேண்டும். மாறாக, உங்களுடைய சுயநலம் சார்ந்ததாக இருந்துவிடக் கூடாது.

4. உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்ய முடியும் என்ற நம்பிக்கை எப்போதும் இருக்க வேண்டும். நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு பலன் கிடைக்காவிட்டாலும்கூட, இந்த நம்பிக்கையைத் தளர விட்டுவிடக் கூடாது.

5. உங்களுடைய திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்களைப் பார்த்து மற்றவர்கள் ஆச்சரியப்படும் வகையிலான நல்ல திட்டங்களைச் செயல்படுத்துங்கள். தன்னார்வத்துடன் நிறுவனத்தின் சிறப்புத் திட்டங்களில் பணியாற்றுங்கள். உங்களுடைய திறனை வளர்த்துக் கொள்வதன்மூலம், உங்களுக்கு முக்கியமான பொறுப்புகள் விரைவில் கிடைக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது.

6. உடன் பணியாற்றுபவர்கள் மற்றும் உங்கள் குழுவின் தலைவரைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு நிறுவனத்திலும் ஊழியர்களுக்குள் விருப்பு, வெறுப்பு இருக்கும். சிலர் அடிக்கடி கோபம் கொள்வார்கள். இதை, ஆரம்பத்திலேயே தெரிந்துகொண்டு, அதற்கேற்ப செயல்படுங்கள். அதுமட்டுமல்ல, உடன் பணியாற்றுபவர்களுடன் ஒற்றுமையுடன் இருக்க முயற்சி மேற்கொள்ளுங்கள்.

7. உங்கள் நிறுவனத்தின் மதிப்பை தெரிந்துகொள்ளுங்கள். நிறுவனத்துக்கு போட்டியாளர்கள் யார், அவர்கள் எவ்வாறு பணியாற்றுகிறார்கள் என்பதை நாளிதழ்கள், வார இதழ்கள், வணிக இதழ்கள் ஆகியவற்றின் மூலம் அறிந்துகொள்ளுங்கள். போட்டியாளர்களை விட நமது நிறுவனம் எந்த வகையிலெல்லாம் சிறப்பாக செயல்பட முடியும் என்பதற்கான வழிகளை சிந்தித்து முதலாளியிடம் தெரிவிக்கலாம். ஒரே துறையில் பணியாற்றும் மற்ற நிறுவன ஊழியர்களுடன் தொடர்பு வைத்திருக்க முயற்சி மேற்கொள்ளுங்கள்.

8. புதிய தொழில்நுட்பங்களை அறிந்துகொள்ளுங்கள். நாளுக்கு நாள் பணிச்சூழல் மாறிவருகிறது. எந்த சூழ்நிலையிலும் சிறப்பாக செயல்படுவதற்கான திறனை வளர்த்துக் கொள்வது அவசியம். இதற்காக நிறுவனங்களில் செய்யப்படும் மாற்றங்களை வரவேற்க கற்றுக் கொள்ளுங்கள். அதற்கு தகுந்தபடி உங்கள் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் துறையில் ஏற்படும் புதிய அறிமுகங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் தொழில்துறையில் நிலைத்து இருக்க முடியும்.

9. நிறுவனத்தின் ஒரு திட்டத்துக்கு அல்லது குழுவுக்கு தலைமை தாங்குவதற்கான திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். அதில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டால், உங்களுக்கு என நிறைய வாய்ப்புகள் வரும். இது உங்களின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.

போட்டி நிறைந்த உலகில், ஒவ்வொருவரும் தன்னை அடையாளம் காட்டிக் கொள்ள போராடி வருகின்றனர். இந்த நிலையில் மேற்குறிப்பிட்டுள்ள வழிமுறைகள், ஒரு நிறுவனத்தில் தனது நிலையை உறுதிப்படுத்திக் கொள்ளவும், வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளவும் உதவும் என்பதில் சந்தேகமில்லை.

நல்ல அம்மாவாக நல்ல யோசனைகள் – 17 – ஆதனூர் சோழன்

Leave A Reply