நல்ல அம்மாவாக நல்ல யோசனைகள் – 9 – ஆதனூர் சோழன்

Share

தரத்தை பற்றி கற்றுக்கொடுத்தல்

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது சாக்லேட்.

சாக்லேட்டுகளில் ஏராளமான வகைகள் அறிமுகப்படுத்துகிறார்கள்.

ஒரே நிறுவனம் பல்வேறு வகை சாக்லேட்டுகளை உற்பத்தி செய்கிறது. சாக்லேட் தயார் செய்ய பல நிறுவனங்களும் உள்ளன.

ஒவ்வொரு வகை சாக்லேட்டும் எந்த விதத்தில் தரமானது என விளம்பரப்படுத்தப்படுகிறது. அந்த விளம்பரங்களை குறித்து உங்களது குழந்தைகளுக்கு விளக்குங்கள்.

இதில் இனிப்பு சுவை இருக்கிறது. இதில் பால் உட்பட இன்னின்ன பொருட்கள் கலந்திருக்கின்றன என வரும் விளம்பரங்களை உங்களது குழந்தைகளுக்கு விளக்குங்கள். பிறகு பல்வேறு வகை சாக்லேட்டுகளை வாங்கி வந்து உங்களது குழந்தையிடம் கொடுங்கள்.

ஒவ்வொன்றும் பேக் செய்யப்பட்டவிதம் எப்படி? அதில் எது பிடிக்கிறது? ஏன் பிடிக்கிறது? என்று கேட்கலாம். பல்வேறு நிறங்களில் இருக்கும் சாக்லேட்டில் எந்த நிறம் பிடிக்கிறது? என்று குழந்தைகளையே மார்க் போடச் சொல்லலாம்.

அந்த மார்க்கையும் குறிப்பிட்ட அந்த சாக்லேட்டுகளுக்கு செய்யப்பட்டுள்ள விளம்பரத்தையும் ஒப்பிட்டு பார்க்கச் சொல்லாம்.

இதுபோன்ற பயிற்சி குழந்தைகளுக்கு ஒரு பொருளின் தரம் என்றால் என்ன என்பது பற்றி தெரிந்து கொள்ள உதவும்.

சாக்லேட் போலவே புத்தகங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் போன்றவற்றை தேர்வு செய்யும் போதும் ஏன் அதை தேர்வு செய்கிறோம் என்பதை குழந்தைகளுக்கு விளக்கலாம்.

சுயமாக கற்றுக்கொள்ளல்

குழந்தைகளுக்கு சுத்தம், நன்னடத்தை, கல்வி போன்றவற்றை பெற்றோர்களும், ஆசிரியரும் கற்றுக்கொடுத்தல் அவசியம்.

எதை கற்றுக்கொள்வது? எப்படிக் கற்றுக்கொள்வது? என்பதை கற்றுக்கொடுப்பது அதை விட அவசியம்.

உங்கள் மகன் அல்லது மகளை சுற்றி அன்றாடம் ஏராளமான சம்பவங்கள் நடக்கின்றன.

ஒவ்வொன்றிலும் அவர் கற்றுக்கொள்ள ஏராளமான விஷயம் இருக்கிறது. சூழ்நிலைகளில் இருந்து கற்றுக்கொண்டு தன்னை மேம்படுத்திக் கொள்ளும் திறனை அவருக்குள் வளர்க்க வேண்டும்.

பள்ளியை காட்டிலும் வீட்டில் பெற்றோர்களுக்குத்தான் இந்த திறனை வளர்ப்பதில் அதிக பங்கு உள்ளது.

சில குழந்தைகள் இயல்பாகவே நாம் சொல்லாமலே தனது வேலைகளை செய்வார்கள். அத்தகைய குழந்தைகள் சுயமாக கற்றுக்கொள்ளும் ஆற்றல் படைத்தவர்கள். ஆர்வம் உடையவர்கள். பரீட்சை வந்து விட்டால் சில குழந்தைகள் தாங்களாகவே பாடங்களை எப்படி முடிப்பது என திட்டமிட்டுக் கொண்டு முடித்து விடுவார்கள். சிலருக்கு கடைசி நிமிடம் வரையில் படி படி என நாம் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். இத்தகைய குழந்தைகள் சுயமாக கற்றுக்கொள்ளும் திறன் குறைந்தவர்கள்.

இத்தகைய குழந்தைகளுக்கு சுயமாக கற்றுக்கொள்ளும் திறனை வளர்க்க வேண்டியது அவசியம்.

சுயமாக கற்றுக்கொள்ளும் திறனை வளர்க்க தேவையானவை…

சுயகட்டுப்பாடு, உறுதி, விடாமுயற்சி.

உங்கள் குழந்தையை ஒரு இலக்கை தீர்மானிக்க செய்யுங்கள். அந்த இலக்கை நோக்கி செல்லும் போது மனம் அலைபாயக் கூடாது. தீர்மானிக்கப்பட்ட இலக்கை நோக்கி மட்டுமே செல்ல வேண்டும் என்ற சுயகட்டுப்பாடு வேண்டும்.

இலக்கை அடையும் வரையில் சோர்ந்து போகக் கூடாது. இலக்கை அடையும் வரையில் இயங்கிக்கொண்டே இருக்க வேண்டும். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என ஒத்திப் போடக் கூடாது. எத்தனை நாளில் இலக்கை அடைவது என தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நாளும் என்ன செய்தால், இலக்கை அடையலாம் என தீர்மானித்துக் கொள்ளவேண்டும். அந்த தீர்மானத்தின்படி ஒவ்வொரு நாளும் உறுதியாக செய்ய வேண்டிய வேலைகளை செய்து முடிக்கவேண்டும்.

இந்த வழிமுறைப்படி உங்களது மகன் அல்லது மகளை இயங்கச் செய்யுங்கள். ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய கடமைகள் இது இது என தீர்மானிக்கும் போது உஙகளது குழந்தையால் ஒரு நாளில் எவ்வளவு வேலையை செய்து முடிக்க முடியும் என அறிந்து, அதற்கேற்றார்போல் வேலைகளை திட்டமிடுங்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக சிரமம் இல்லாமல் முடிப்பது குழந்தைகளுக்கு வேலை மீது ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தும். மொத்தமாக ஏராளமான வேலைகளை குழந்தைகளின் தலையில் சுமத்தினால், குழந்தைகளுக்கு மலைப்பு ஏற்படும். அதன் காரணமாக செய்யும் வேலையை அறைகுறையாக செய்ய நேரிடலாம். அல்லது எதையுமே செய்யாமல் ஒதுங்க துவங்கிவிடலாம்.

இது இரண்டுமே ஆபத்தானது. எனவே உங்களது குழந்தையின் சக்திக்கு ஏற்ற கடமைகளை அவர்களது தலையில் சுமத்துங்கள்.

குணாவை பற்றி அவனது அம்மா எப்போதும் கவலைப்படுகிறாள். குணா 7ம் வகுப்பு படிக்கிறான். அவனது அண்ணன் சிவா 8ம் வகுப்பு. சிவாவிடம் படிக்க வேண்டும் என்று சொல்லவே வேண்டியதில்லை. அவனே தனது வீட்டுப்பாடத்தை முழுமையாக செய்து விடுவான். அன்றாட பாடங்களை படித்து விட்டுத்தான் விளையாட செல்வான்.

ஆனால், குணா அப்படி இல்லை. ஒவ்வொருமுறையும் அவனது அம்மா படி படி என்று சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். மாலை 5 மணிக்கு அம்மா காப்பி போட்டுக்கொடுத்து படிக்க உட்காரச்சொல்வாள். இரண்டு பேரும் ஒரேசமயத்தில்தான் உட்காருவார்கள்.

ஒரு அரை மணி நேரம் கழித்து பார்த்தால் சிவா மட்டும்தான் உட்கார்ந்து படித்துக் கொண்டிருப்பான். குணா எங்காவது விளையாடப் போய்விடுவான். அம்மா குணாவை அடித்து, மிரட்டி மீண்டும் படிக்க உட்கார வைப்பார்.

சிறு சிறு தண்டனைகளுக்கு பயந்து சில குழந்தைகள் படிக்க துவங்கும். பிறகு அதுவே பழக்கமாகி ஒழுங்காக படிக்க ஆரம்பித்து விடும். இது எல்லா குழந்தைகளுக்கும் பொருந்தாது.

பெரும்பாலும் அம்மாவின் கண்டிப்பில் பயப்படும் குழந்தை காலப்போக்கில் புத்தகத்தை பார்த்தே பயப்படும் அளவிற்கு சென்றுவிடும்.

எனவே கண்டிப்பின் போது நாம் கவனமாக இருக்க வேண்டும். பயமுறுத்தலாம். அதே சமயத்தில் குழந்தைகளுக்கு படிப்பின் மீது வெறுப்பு ஏற்படாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அண்ணனைப் பார். யாரும் சொல்லாமல் தானாகவே படிக்கிறான். நீயும் அப்படி படிக்க வேண்டும். உனது கடமைகளை யாரும் சொல்லாமல் நீயே செய்து கொள்ள வேண்டும்.

அண்ணன் அப்படி செய்வதால் அப்பாவிடமும் அவனது ஆசிரியர்களிடமும் பாராட்டை பெறுகிறான். உன்னையும் அண்ணனைபோல அவர்கள் பாராட்ட வேண்டாமா?

உன்னுடைய வேலையை நீ சரியாக முடித்து விட்டால் யாருக்கும் பயப்பட வேண்டியது இல்லை என்று குணாவிடம் அவரது அம்மா கூறுவார்.

இது சரியானது. குழந்தைகளை மிரட்டுவது ஓரளவுக்குத்தான் வேலை செய்யும். தங்களது பொறுப்பை அவர்களே உணரும்படி செய்வதுதான் முழுமையாக அவர்களை வளர்க்கும்.

குழந்தைகளை சுயமாக தங்களது வேலைகளை செய்யவைப்பது பள்ளிகளால் இயலாது. பள்ளி ஆசிரியர்களுக்கு அதற்கான நேரம் இருப்பதில்லை. அதை பெற்றோர்தான் செய்ய வேண்டும்.

ஒரு குழந்தையின் ஆளுமையை வளர்ப்பதில் பெரும்பங்கு வகிப்பது எது தெரியுமா?

வீடுகள்தான்.

uthayamugam.com/home/nalla-ammavaga-nalla-yosanai-10/

Leave A Reply