நல்ல அம்மாவாக நல்ல யோசனைகள் – 3 – ஆதனூர் சோழன்

Share

குழந்தைகளுக்கு ஆசிரியர் யார்?

பள்ளிக்கூட பஸ்ஸிலிருந்து இறங்கினான் சரண். மகனிடமிருந்து பேக்கை வாங்கித் தோளில் போட்டாள் சரஸ்வதி. பிறகு அவனை இடுப்பில் தூக்கி வைத்து நடந்தாள்.

அவ்வளவுதான்.

“அம்மா இனிமேல் திவ்யா பக்கத்தில் நான் உக்கார மாட்டேன். எப்பப் பார்த்தாலும் கிள்ளிக்கிட்டே இருக்கா. தருண்கிட்ட இன்னிக்கு நான் “கா” விட்டுட்டேன். வசந்தி டீச்சர் ரொம்ப மோசம்…”

சரண் அடுக்கிக் கொண்டே போனான்.

சரஸ்வதிக்கு அவனுடைய பேச்சில் கவனம் இல்லை. வீட்டில் எல்லாம் போட்டது போட்டபடி கிடக்கிறது.

அதைப்போய் முதலில் சரி செய்ய வேண்டும் என்ற நினைப்புதான் ஓடிக்கொண்டிருந்தது.

கொஞ்ச நேரத்தில் சரண் பேசுவதை நிறுத்தி விட்டான்.

அவன் முகம் “உம்”மென்று ஆகிவிட்டது.

வீட்டுக்கு வந்ததும் மகனை இறக்கிவிட்ட சரஸ்வதி,

“யூனிபார்மை கழட்டு. நான் பால் கொண்டு வர்றேன்…” என்றாள்.

சரணிடமிருந்து எந்த பேச்சும் வரவில்லை.

மகன் பேசாமல் இருப்பது குறித்து சரஸ்வதி எவ்விதமான அக்கறையும் காட்டவில்லை.

இது நல்லதா?

இல்லை என்கிறார்கள் மனோவியலாளர்கள்.

குழந்தைகளைப் பேசவிட்டு அழகு பார்ப்பதே தனியான சுகம் என்கிறார்கள்.

தான் சொல்வதையும் கேட்க ஆள் இருக்கிறார்கள் என்ற மனப்பான்மையை குழந்தையிடம் உருவாக்க வேண்டியது அவசியம். அப்படி பேசும்போது, அவன் செய்த தவறுகளும் வெளிப்பட வாய்ப்பு இருக்கிறது. பேச்சோடு பேச்சாக அவனுடைய தவறுகளையும் சுட்டிக்காட்ட பெற்றோருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றெல்லாம் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

“குழந்தயை நன்றாக படிக்க வைத்து விட்டால் போதும். எந்த கவலையும் இல்லை”

“குழந்தையின் படிப்புக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்வோம்”

“குழந்தையின் படிப்பு செலவுக்காக வேறு எந்த செலவையும் சுருக்கிக் கொள்வோம்”

எல்லா பெற்றோரும் இப்படித்தான் சொல்வார்கள்.

ஆனால், நமது பிள்ளைகளை நான்றாக படிக்க வைப்பதற்கு நிஜத்தில் நாம் செய்ய வேண்டியது என்ன?

இதுபற்றிய சிந்தனை பெரும்பாலான பெற்றோரிடம் இருப்பதில்லை.

குழந்தைகள் கேட்கும் புத்தகத்தை வாங்கிக் கொடுப்போம். கல்வி கட்டணத்தை கட்டுவோம்.

தினமும் அவர்களை தயார்செய்து பள்ளிக்கு அனுப்புவோம். அத்துடன் கடமை முடிந்து விட்டதாக நம்மில் பெரும்பாலோர் நினைக்கிறோம்.

உண்மையில் அதோடு நமது கடமைகள் முடிவதில்லை. பள்ளியில் குழந்தை சரியாக படிக்கிறாரா? இல்லை எனில் ஏன்? என்ன பிரச்சனை? என்பதை அறிந்து, பிரச்சனை இருந்தால் அதை களைய முயற்சிக்க வேண்டும்.

அதற்கு என்ன செய்வது?

பள்ளியோடும் பள்ளி நடவடிக்கைகளோடும் நாம் உறவு வைத்துக்கொள்ள வேண்டும்.

குழந்தைகள் பள்ளியை விட்டு வந்ததும், இன்று என்ன படித்தாய்? வீட்டுப்பாடம் என்ன கொடுத்து இருக்கிறார்கள்? என்று விசாரிக்க வேண்டும்.

குழந்தைகள் மகிழ்ச்சியாகவும் இயல்பாகவும் இருக்கும் போது, அவர்களது பள்ளி நடவடிக்கைகளை பாந்தமாக விசாரிக்க வேண்டும்.

பக்கத்தில் அமர்ந்திருக்கும் பையன் கிச்சுகிச்சு மூட்டியதில் இருந்து, கோபமாக திட்டியது வரையில்… ஆசிரியர் நடத்திய பாடத்தில் புரிந்த விஷயத்தில் இருந்து புரியாத விஷயம் வரையில்… உங்களோடு பகிர்ந்து கொள்ள குழந்தைகள் ஆசைப்படுவார்கள்.

உங்களுக்கு என்ன வேலை இருந்தாலும் அதை ஒதுக்கி வைத்துவிட்டு, பொறுமையாகவும், ஈடுபாட்டுடனும் கேளுங்கள்.

குழந்தைக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களோடு அடிக்கடி சந்திப்பு வைத்துக் கொள்ளுங்கள். கட்டணம் கட்டுவதற்கு மட்டும் பள்ளிக்குப் போனால் போதும். ஏதேனும் முக்கியமான நேரங்களில் மட்டும் பள்ளிக்கு சென்றால் போதும் என்று நினைக்காதீர்கள்.

பெற்றோர் ஆசிரியர் சங்கத்தில் பங்கெடுங்கள்.

இதுபோன்ற நடவடிக்கைகள், பள்ளியில் படிக்கும் உங்களது குழந்தையை பற்றி மட்டுமல்ல. ஒட்டுமொத்தமாக பள்ளியைப் பற்றியே நாம் நன்றாக தெரிந்து கொள்ள உதவும்.

பள்ளியின் சூழ்நிலை தெரிந்தால், அதில் நமது குழந்தைக்கு சாதகமான அம்சங்கள் மற்றும் பாதகமான அம்சங்களை அறிந்து கொள்ள முடியும். அவற்றுக்கு ஏற்றார்போல நமது குழந்தைக்கு நம்மால் உதவமுடியும்.

நீங்களே ஒரு ஆசிரியர்

பள்ளியில் பாடம் நடத்தும் ஆசிரியரை விட நீங்கள்தான் முதலும் முக்கியமுமான ஆசிரியர் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

பொதுவாக ஒரு குழந்தை பிறந்ததில் இருந்து அந்தக்குழந்தை எப்படி நடந்து கொள்ள வேண்டும். என்ன செய்ய வேண்டும். எதை செய்யக் கூடாது போன்ற விஷயங்களை பெற்றோரிடம் இருந்துதான் கற்றுக்கொள்கிறது.

நாம்தான் நமது குழந்தைகளுக்கு மனிதர்களுடனான உறவுகள் குறித்து கற்றுத் தருகிறோம். யாரை விரும்ப வேண்டும் என்பதில் இருந்து யாரை வெறுக்க வேண்டும் என்பது வரை…

ஒருவரை எப்படி மகிழ்ச்சிப் படுத்த வேண்டும் என்பதில் இருந்து, ஒருவரை எப்படி காயப்படுத்த வேண்டும் என்பது வரையில்… நாம்தான் நமது குழந்தைகளுக்கு சொல்லித் தருகிறோம்.

எனவே நாம்தான் குழந்தைக்கு முதல் ஆசிரியர்கள்.

ஆனால், முதல் ஆசிரியர்களான நாம், குழந்தை பள்ளிக்கு செல்லத் தொடங்கியதும் நமது ஆசிரியர் கடமையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பிக்கிறோம்.

அது தவறு.

குழந்தையின் உடல் நலத்தில் அக்கறை கொண்டு, இதைச் சாப்பிட வேண்டும். இதை சாப்பிடக் கூடாது. மழையில் நனையக் கூடாது. வெயிலில் விளையாடக் கூடாது என்று எத்தனையோ கூடும் கூடாதுகளை நாம் நமது குழந்தைகளுக்கு சொல்கிறோம்.

உடல் நலம் போன்றதுதான் கல்வி நலனும்.

ஆனால், கல்வி நலனைப் பொறுத்தவரையில் நமக்கு பொறுப்பு இல்லை. அதை பள்ளிகளும் ஆசிரியர்களும் பார்த்துக் கொள்வார்கள் என்று நினைக்கிறோம்.

இந்த நினைப்பு தவறானது.

குழந்தைகளின் பள்ளி நடவடிக்கைகள், படிப்பு போன்றவற்றில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளும் பெற்றேர்களின் குழந்தைகள் பெரும்பாலும் நன்றாக படிக்கிறார்கள் என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

ஒவ்வொரு நாளும் உங்களது குழந்தை உங்களிடம் இருந்து கற்றுக்கொண்டது என்ன என்று, உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.

குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பதற்கு என்னால் முடியாது. நான் ஒன்றும் ஆசிரியர் அல்ல என்று நினைப்பது கூடாது.

பாடங்களை ஒருவேளை நம்மால் கற்றுக்கொடுக்க முடியாமல் போகலாம். ஆனால், படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை நம்மால் கற்றுக்கொடுக்க முடியும்.

அதுதான் முதல் பாடம்.

வாழ்க்கையின் அடிப்படையான பல பாடங்களை நாம் குழந்தைக்கு கற்றுக்கொடுத்தது போலவே படிப்பின் மீதான ஆர்வத்தையும் நாம் கற்றுக் கொடுக்கலாம்.

இதற்கு குழந்தைகளுக்கென்றேநாம் சிறிது நேரத்தை ஒதுக்கி செலவழிக்க வேண்டும்.

இந்த செலவு ஒரு மூலதனம்தான்.

எவ்வளவுக்கு எவ்வளவு நாம் மூலதனம் போடுகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நமக்கு லாபம் கிடைக்கும்.

தொழிலில் எப்போது, எப்படி, எவ்வளவு மூலதனம் போட வேண்டும் என்று அறிந்து மூலதனம் செய்வது நல்ல லாபத்தை கொடுக்கும்.

அப்படித்தான் பிள்ளைகளுடன் எப்போது, எப்படி, எவ்வளவு நேரம் செலவழிக்க வேண்டும் என்று அறிந்து நேரம் செலவழிப்பது, குழந்தைகளின் அறிவு மேம்படுவதற்கு உதவும்.

நல்ல அம்மாவாக நல்ல யோசனைகள் – 4 – ஆதனூர் சோழன்

Leave A Reply