நேரம் நல்ல நேரம் – 13 – ஆதனூர் சோழன்

Share

ஆஸ்த்மா

நமது உடலமைப்பில் விரும்பத்தகாத சில நச்சுத்தன்மைகள் சேரும்போது ஏற்படும் விளைவே ஆஸ்த்மா (காசம்) என அழைக்கப்படுகிறது.

உடல் ஏற்றுக் கொள்ளாத புறமாசு, உள்ளே புகும்போது ஒவ்வாமை காரணமாக அதிகரித்த பதட்டம் உருவாகிறது.

ஆஸ்துமா இரண்டு வகைப்படும். விட்டுவிட்டு வருவது ஒருவகை. நீடித்த தொந்தரவு மற்ற வகை ஆகும்.

முதல் வகை ஆஸ்த்மா திடீரென தாக்கும். கடுமையான மூச்சுத்திணறல் ஏற்படும். இரவு நேரத்திலே மட்டும் பெரும்பாலும் இந்த சிரமம் ஏற்படும். கொஞ்ச நேரத்திற்கே நீடிக்கும்.

ஆனால், நீடித்த ஆஸ்த்மா தொடர் சிரமம் ஏற்படுத்தக் கூடியது. மூச்சு விடுவதில் நிலையான கஷ்டம் இருக்கும்.

உடல் உழைப்பின்போது மட்டுமல்ல. படிகளில் ஏறும்போது கூட மூச்சு விடுவதில் சிரமம் இருக்கும்.

மார்புச் சளி உள்ளவர்களுக்கு ஏற்படுவதுபோன்ற சிரமம் காரணமாக இந்த வகை ஆஸ்த்மா அடிக்கடி குழப்பத்தை ஏற்படுத்தும். மார்புச் சளி உள்ள நோயாளி எப்போதும் சுகமாக இருப்பதில்லை.

காசநோயால் பீடிக்கப்பட்ட ஒருவரது நிலை ஒரு குறிப்பிட்ட நாளில் மிக மோசமாக இருக்கும். மற்றொரு நாள் வெகு இயல்பாக இருக்கும்.

மார்புச்சளி உள்ளவருக்கும் காசநோயாளிக்கும் ஏற்படும் துயரம் ஒரே மாதிரியாக இருந்தாலும் காசம் சார்ந்த நோயின்தன்மை தீவிரமானதாகவும், தொடர்பறுந்தும் இருக்கும்.

எல்லாவற்றுக்கும் மேலாக மார்புச் சளி நோயாளிக்கு இருப்பதைப் போல கடுமையான ‘இசிப்பு’ இருக்காது.

மார்பில் இறுக்கம், மூச்சுத்திணறும் உணர்வு, கலங்கிய கண்கள், வேர்த்த தன்மை, மங்கிய பார்வை, தூக்கமின்மை, சோர்வுக்கு ஆட்படுதல் போன்றவை ஆஸ்துமா நோயின் பொதுவான அறிகுறிகளாகும்.

தொடர்ச்சியான இருமல் மற்றும் இளைப்பைத் தொடர்ந்தே ஆஸ்துமா உருவாகிறது.

பால், தயிர், பயறு வகைகள், எலுமிச்சை, பேரிச்சம்பழம் மற்றும் வதக்கிய உணவுகளில் உள்ள அம்சம் இந்த நோய்க்கு முக்கிய தூண்டுதலாக அமைகிறது.

இந்த உணவு வகைகளில் எது தனக்கு ஒவ்வவில்லை என்பதை காச நோயாளி கண்டறிய வேண்டும். பின்னர் அந்த உணவை நிர்த்தாட்சண்யமாக நிராகரித்துவிட வேண்டும்.

பூக்களின் மகரந்தம், படுக்கையில் உள்ள மூட்டைப் பூச்சிகள், நுண்ணிய பூச்சிகள், விலங்குகளின் ரோமத்தில் படிந்த தூசிகள், பஞ்சுத்துகள்கள், ஆஸ்பிரின் மற்றும் தூக்க மாத்திரைகள், சில குறிப்பிட்ட ரசாயனப் பொருட்கள், வீடுகளில் படிந்த ஒட்டடை தூசிகள், புகை, குளிர் பானங்கள், அடர்த்தியான வாசனைப் பொருட்கள் மற்றும் சிகரெட்டுகளும் ஆஸ்த்மா நோயை தூண்டிவிடக் கூடும்.

மிக அபூர்வமாக எதிர்மறையான உணர்ச்சிகளும், அதிகப்படியான மன அழுத்தமும் ஆஸ்த்மா நோயை தூண்டக்கூடும்.

நல்ல பராமரிப்பின் மூலம் ஆஸ்த்மா நோய்த் தாக்குதலை தடுக்க முடியும். நல்ல உணவு முறை, கவனமான உடற்பயிற்சிகள் ஒவ்வாமைக்கு காரணமானவற்றை எதிர்க்க போதுமான வலுவை தரும்.

சில தடுப்பு முறைகளை இங்கே தருகிறோம்:
– ஆஸ்த்மா நோயால் வாடும் நபர்கள் சளிச்சுரப்புக்கு காரணமான அனைத்து வகை உணவையும் தவிர்க்க வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட கோதுமை மாவு ரொட்டி, பயறுகள், பால், தயிர் உள்ளிட்ட இதர பால் பொருட்கள், இனிப்பு வகைகள், சாக்லெட்டுகள், மாமிச உணவுகள் வதங்கிய உணவுகள் இந்த தன்மை வாய்ந்தவை.

– புகைப் பழக்கத்தை குறிப்பாக கைவிட்டு விட வேண்டும். நமது குறைந்தபட்ச அடிப்படை தேவைக்கு மட்டுமே உணவருந்த வேண்டும்.

– இலகுவான உணவை, பழங்கள் மற்றும் காய்கறிகளுடன் உண்ண வேண்டும். மலச்சிக்கலை தவிர்க்க வேண்டும்.

ஏராளமாக தண்ணீர் குடிக்க வேண்டும். இது மலச்சிக்கலை தவிர்க்கும். அத்துடன் நமது உணவுக் குழலை சுத்தப்படுத்தி சளி கரையவும் உதவுகிறது.

– ஆஸ்துமா நோயாளி தொடர்ச்சியாக மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும். இதன்மூலம் நுரையீரல் கொள்ளளவை அதிகரிக்க முடியும்.

– அடிவயிற்று தசைகளுக்கான பயிற்சியையும், இதர இலகுவான பயிற்சிகளையும் செய்ய வேண்டும். தினந்தோறும் 15 நிமிடங்கள் ஆழ்ந்து மூச்சுவிடுதல் நன்மை பயக்கும்.

– எனினும் சாலைகளில் குதித்து ஓடுவது மற்றும் பயிற்சிகளை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் சாலைகளில் செல்லும் வாகனங்களில் இருந்து வெளியாகும் மாசு, நுரையீரலை சேதப்படுத்தி மூச்சுத் திணறலை ஏற்படுத்தக் கூடும்.

– ஆஸ்துமா நோயாளிகளுக்கு இயற்கை வைத்தியம் விரிவான பலன்களை தரக் கூடியது. வில்வஇலையிலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்து எண்ணெய் சளியை வடிப்பதில் உபயோகமாக இருக்கும்.

வில்வ இலையை அரைத்து எள்ளெண்ணையுடன் அதை நன்கு உஷ்ணப்படுத்தி, நோயாளியின் மார்பில் அழுத்தமாக தேய்த்துவிட வேண்டும்.

வில்வ இலைச் சாறை வெதுவெதுப்பான நீரில் கரைத்து அதில் கொஞ்சம் மிளகுத்தூளை கலந்து சாப்பிட்டால் சளியை கரைத்து. இளைப்பை குறைக்கும்.

அதுபோல, சியாவன பிராஷ் மற்றும் அகஸ்தயா ரசாயன ஆயுர்வேத முறைகளும் ஆஸ்துமா நோய்க்கு சிறந்த பரிகாரங்கள் ஆகும்.

இந்த இரண்டு மருந்து முறைகளிலும் பல சக்திவாய்ந்த மருந்துகள் கலக்கப்படுகின்றன. இவை ஒன்றோடென்று இணைந்து செயல்படக்கூடியவை.

மலச்சிக்கல் உள்ளவர்கள் மற்றும் தீராத தொண்டை அடைப்பு மற்றும் நாசித் துவார அடைப்பால் சிரமப்படுபவர்களுக்கு உபயோகமானவை.

ஆஸ்துமாவுக்கு வேறு சில பரிகாரங்களும் உள்ளன.

இவற்றில் அத்திப் பழம் மற்றும் திராட்சைப் பழங்களுடன் கூடிய உணவு முறை முக்கியமானது.

ஒரு கரண்டி நெல்லிக்காய் சாறை ஆரஞ்சு சாறுடன் கலந்து, அதில் ஒரு கரண்டி பாறை உப்பு மற்றும் தேனை கலந்து சாப்பிடுவது கபத்தை வெளிக் கொணர சிறந்த வழியாகும்.

உப்புக் கலந்த மருந்து மூலம் சளியை இறக்குவது, இரண்டாவது முறையாக நுரையீரலில் சளிக்கட்டுவதை தடுக்கும்.

ஒரு கரண்டி சுரைக்கொடி சாற்றுடன். தேன் மற்றும் நசுக்கிய துளசியை கலந்து சாப்பிடுவதும் நல்லது.

தூளாக்கப்படட் குசும்பச் செடியின் விதையுடன் ஒரு கரண்டி தேனைக் கலந்து சாப்பிட்டால், நெஞ்சில் தங்கிய கபம் எளிதில் வெளியேறும். ஆஸ்துமா நோயாளிகள் 5: 3 என்ற விகிதத்தில் கேரட் சாறு மற்றும் பசலிக் கீரை சாறை சாப்பிடலாம்.

அல்லது தினமும் காலையில் இரண்டு டம்ளர் திராட்சை சாறு குடிக்கலாம்.

இளைப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்

ஆஸ்துமா நோயாளிகள் இளைப்புக்கு ஆளாகும்போது அமைதியை கடைப்பிடிக்க வேண்டும். முதலில் அவர்கள் அந்த இடத்தை விட்டு அகல வேண்டும்.

அறையின் ஜன்னல் அருகில் நன்கு நிமிர்ந்து உட்கார வேண்டும்.

மின்விசிறிக்கு அடியில் உட்காருவதை தவிர்க்க வேண்டும்.

சூடான நீரில் பாதங்களை வைத்திருக்க வேண்டும். சூடான தண்ணீரை குடிக்கலாம். நனைந்த துணியால் ஒத்தடம் கொடுக்கலாம்.

5 முதல் 10 நிமிடங்கள் இந்த இளைப்பு அதிகரித்து பின்னர் விரைவாக குறையும்.

மெதுவாக சுவாசித்தபடி, டிவி பார்ப்பதிலோ, பாட்டு கேட்பதிலோ உங்கள் கவனத்தை திருப்புங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக மனோரீதியான பதட்டத்தை தவிர்க்க வேண்டும்.

மூலிகை சிகரெட்டுகள்

புகையிலை சிகரெட்டுகளை மறக்க இப்போது மூலிகைகளை பயன்படுத்தி புதிய சிகரெட் ஒன்று வெளிவந்துள்ளது.

நிர்தோஷ் என்ற பெயரில் வெளி வந்துள்ள இந்த சிகரெட், புகையிலை சிகரெட் புகைப்பதை போன்ற உணர்வை தரும். ஆனால், இந்த சிகரெட்டில் நிகோடின் என்ற நச்சுப் பொருள் இல்லை.

சுமார் 20 ஆண்டுகள் ஆய்வு செய்து இந்திய ஆயுர்வேத முறைப்படி பல்வேறு மூலிகைப் பொருட்களைக் கொண்டு இந்த சிகரெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

பில்டருடன் கூடிய இந்த சிகரெட்டில் உள்ள மூலிகைப் பொருட்கள் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை உறுதிப்படுத்தும். மனதை ஒரு முகப்படுத்தும். தொண்டையை சுத்தப்படுத்தும், மலச்சிக்கலை நீக்கும் என அதன் தயாரிப்பாளர்களான மான்ஸ் புராடக்ட் (இந்தியா) நிறுவனம் கூறியுள்ளது. இந்த சிகரெட்டை பிரபல டாக்டர்களும், வைத்தியர்களும் பரிந்துரை செய்துள்ளனர்.

நேரம் நல்ல நேரம் – 14 – ஆதனூர் சோழன்

Leave A Reply