ஆர்எஸ்எஸ்சின் நிஜமுகம் தெரியுமா? – சம்சுல் இஸ்லாம் – தமிழில் ச.வீரமணி

Share

5.மதச்சார்பின்மை, ஜனநாயகத்தை

ஆர்எஸ்எஸ் நம்புவது இல்லை

மதச்சார்பின்மைக்கு எதிரானது

ஆர்எஸ்எஸ் இயக்கமானது, சிறுபான்மையினர், இந்திய தேசத்திற்கு முழுமையாக விசுவாசமாக இருக்க வேண்டும் என்று கோருகிறது. ஆனால், அதே சமயத்தில் அது, இந்திய அரசமைப்புச்சட்டம் வகுத்துத் தந்துள்ள அரசமைப்புச்சட்டத்திற்கும் மற்றும் நாட்டின் பல்வேறு சட்டங்களுக்கும் விசுவாசகமாக இல்லை என்பதும் முக்கியமான விஷயமாகும்.

ஆர்எஸ்எஸ் இயக்கத்தினரின் ஊழியர் கூட்டங்களில் பின்பற்றப்படும் பிரார்த்தனைகளிலி ருந்தும், உறுதிமொழிகளிலி ருந்தும் உண்மையில் அவர்கள் இந்திய தேசியத்தை, இந்துயிசத்துடன் சமப்படுத்தியே பார்க்கிறார்கள் என்பதைக் காண முடியும். எப்படி, முஸ்லீம் லீக், தேசியத்தை இஸ்லாமுடன் சமப்படுத்திப் பார்க்கிறதோ அதேபோன்றே ஆர்எஸ்எஸ், இந்திய தேசியத்தை இந்துயிசத்துடன் சமப்படுத்தியே பார்க்கிறது. ஆர்எஸ்எஸ் கூட்டங்களில் கூறப்படும் பிரார்த்தனைகளும், உறுதிமொழிகளும், உச்சநீதி மன்றம் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முக்கிய அடிப்படை அம்சமாகக் கூறும் இந்திய மதச்சார்பற்ற அரசு என்பதை நேரடியாக மீறுபவைகளாகவே இருக்கின்றன. பொதுவாக இந்திய அரசமைப்புச்சட்டத்தை எதிர்க்கும் குழுக்கள் துப்பாக்கிகளால் எதிர்கொள்ளப்பட்டு சிறைப்படுத்தப்படும். ஆனால், இந்திய அரசமைப்புச்சட்டத்தின் சட்டபூர்வ தன்மையை நிராகரிக்கும் ஆர்எஸ்எஸ் இயக்கமோ இப்போது நாட்டை ஆட்சி புரியவும் அதன் இஷ்டத்திற்குச் செயல்படவும் அனுமதிக்கப் பட்டிருக்கிறது.

இந்தியாவில் பாஜக சார்பில் ஆட்சி செய்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், உள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானி, இப்போது பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி முதலானவர்கள் பதவியேற்றபோது, ஜனநாயக மதச்சார்பற்ற இந்தியாவின் ஒருமைப்பாட்டை நிலைநிறுத்துவோம் என்றுதான் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள். ஆனால் இதே நபர்கள் ஆர்எஸ்எஸ் ஊழியராக உறுதிமொழி எடுத்துக் கொண்டபோது, இந்து ராஷ்ட்ரத்தை உருவாக்குவதே என் கடமை என்றும் உறுதி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்களுடைய ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பிரார்த்தனை மற்றும் உறுதிமொழியில் கூறப்பட்டுள்ள வாசகங்களைப் படித்தால் தெரிந்துகொள்ள முடியும்.

பிரார்த்தனையில் கூறப்பட்டிருக்கும் வாசகங்கள்:

அன்பார்ந்த தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்.

இந்து பூமியே! நீயே என்னை சுகமாக ஊட்டி வளர்க்கின்றாய்.

மகா மங்கலமயமான புண்ணிய பூமியே! உனது பணிக்கென எனது இவ்வுடல் அர்ப்பணமாகட்டும். உன்னை நான் பன்முறை வணங்குகிறேன்.

சர்வ சக்தி வாய்ந்த இறைவனே! இந்து ராஷ்ட்ரத்தின் அங்கங்களைப் போன்றுள்ள உறுப்பினர்களாகிய நாங்கள் உன்னைப் பணிவுடன் வணங்குகிறோம். அது நிறைவேற எங்களுக்கு ஆசி புரிவாயாக!

உலகத்தால் வெல்ல முடியாத சக்தியை எங்களுக்கு அருள்வாயாக!

உறுதிமொழியில் கூறப்பட்டிருக்கும் வாசகங்கள்:

அனைத்துவிதமான வல்லமையும் பெற்ற கடவுள் மற்றும் எம் மூதாதையர்களுக்கு முன் இந்த சபதத்தை மிகவும் ஆணித்தரமான முறையில் தலைவணங்கி எடுத்துக் கொள்கிறேன்.

என்னுடைய புனிதமான இந்து மதம், இந்து சமூகம், இந்து கலாச்சாரம் ஆகியவற்றின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காகவே பாரதத்தை அனைத்து விதங்களிலும் உயர்ந்த இடத்திற்கு உயர்த்துவதற்காகவே ஆர்எஸ்எஸ்-இன் உறுப்பினராக மாறியிருக்கிறேன்.

ஆர்எஸ்எஸ்-இன் வேலைகளில் நேர்மையாகவும், என் உள்ளம்-ஆன்மா இரண்டிலும் எவ்விதமான விருப்பு வெறுப்பின்றியும், செயல்படுவேன் என்றும், என் வாழ்நாள் முழுவதும் இதே லட்சியத்தை ஒழுகி நடப்பேன் என்றும் சபதம் எடுத்துக்கொள்கிறேன்.

வெல்க பாரத அன்னை!

பாரத் மாதா கி ஜே !

இவ்வாறு, இந்தியாவை ஆண்டுகொண்டிருக்கும் ஆர்எஸ்எஸ் ஊழியர்கள், தற்போது அரசமைப்புச் சட்டத்தின் கீழான ஜனநாயக மதச்சாற்பற்ற இந்திய அரசியலுக்கு உண்மையாக இருக்க மாட்டார்கள். மாறாக, அதனை, இஸ்லாம் பெயரிலான அரசினை முஸ்லீம் லீக் உருவாக்கியதுபோன்று, இந்தியாவிலும் இந்து மதத்தின் அடிப்படையில் இந்து ராஷ்ட்ரம் ஏற்படும் விதத்தில் மாற்றியமைத்திடவே விரும்புகிறார்கள்.

ஜனநாயகத்திற்கு எதிரானது

ஆர்எஸ்எஸ் இயக்கமானது, ஜனநாயகத்திற்கு முற்றிலும் விரோதமான முறையில் எப்போதும் சர்வாதிகார ஆட்சியின் கீழ் இருப்பதையே தொடர்ந்து கோரி வருகிறது. கோல்வால்கர், 1940இல் நாக்பூரில் உள்ள ரேஷம் பாக், ஆர்எஸ்எஸ் தலைமையிடத்தில் தேசிய அளவிலான முன்னணி ஊழியர்கள் சுமார் 1350 பேர் கூடியிருந்த கூட்டத்தில் உரையாற்றும்போது அறிவித்ததாவது:

“ஒரே கொடி, ஒரே தலைவர், ஒரே சித்தாந்தத்தின்கீழ் உத்வேகம் பெற்றுள்ள ஆர்எஸ்எஸ், இம்மாபெரும் பூமியின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் இந்துத்துவா சுடரை ஏற்றிக்கொண்டிருக்கிறது.”

‘ஒரே கொடி, ஒரே தலைவர், ஒரே சித்தாந்தம்’ என்கிற இந்த முழக்கம் நேரடியாகவே ஐரோப்பாவில் செயல்பட்டு வந்த நாஜிக்கள் மற்றும் பாசிஸ்ட்டுகளின் திட்டங்களிலிருந்து கடன் வாங்கப்பட்டுள்ளதாகும். இந்தக் கூட்டத்தில் இந்து மகா சபாவின் மூத்த தலைவரான ஷ்யாமா பிரசாத் முகர்ஜியும் பங்கேற்றிருந்தார் என்பது கவனிக்கப்பட வேண்டிய அம்சமாகும். இதே முகர்ஜிதான் நாடு பிரிவினை அடைவதற்கு முன்பு 1942இல் இருந்துவந்த முஸ்லீம் லீக் – இந்து மகாசபா கூட்டணி அரசாங்கத்தில் துணை முதலமைச்சராக இருந்தவர்.

ஆர்எஸ்எஸ் இயக்கமானது அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்படுவதையும்கூட வெறுத்து வந்தது. இவ்வாறு வெறுத்து வந்ததை அது மறைத்திடவும் இல்லை. இந்தியாவின் அரசியல் நிர்ணயசபை நாட்டு மக்கள் அனைவருக்கும் அரசியல் சமத்துவம் அளிக்கத் தீர்மானித்தபோது, அதாவது, ‘ஒரு நபர் – ஒரு வாக்கு’ என்று முடிவு செய்தபோது, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஆங்கில இதழான ஆர்கனைசர் அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கும் முடிவை எதிர்த்து கீழ்க்கண்ட வார்த்தைகளில் எழுதியிருந்ததாவது:

“செயலற்ற தன்மையுடன் உள்ள சாமானியர்கள் அரசியல் பிரச்சனைகள் குறித்து சிந்தித்து, புத்திசாலித்தனமாக வாக்களிப்பார்களா என ஆராயும்போது, நாம் அனைவருக்கும் வாக்குரிமை அளிப்பது குறித்து அதீத நம்பிக்கை கொள்ள முடியாது. பொருளாதார சமத்துவமின்மை மலைக்கவைக்கும் விதத்தில் உள்ள ஒரு நாட்டில் அரசியல் ஸ்திரமின்மை என்னும் அபாயத்துக்கு உட்பட்டுத்தான், அரசியல் பொருளாதாரத்தை அறிமுகப்படுத்த முடியும்.”

பி.எஸ். மூஞ்சே அவர்களின் அறிவுரையின்படிதான் ஹெட்கேவார் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை அமைத்திட்டார். பி.எஸ். மூஞ்சே, 1934 மார்ச் 31 அன்று ஹெட்கேவார் மற்றும் லாலு கோகலே (இவரும் ஹெட்கேவாருக்கு அறிவுரை அளித்துவந்த மற்றுமொரு நபராவார்) ஆகியோருடன் ஏற்பட்ட கூட்டம் குறித்துப் பதிவு செய்திருக்கிறார். அந்தக் கூட்டத்தில் அவர்கள் எடுத்த முடிவின் விவரம் வருமாறு:

“அந்தக் காலத்து சிவாஜியைப் போன்றோ அல்லது இப்போது ஐரோப்பிய நாடுகளில் இத்தாலியில் உள்ள முசோலினி அல்லது ஜெர்மனியில் உள்ள ஹிட்லர் போன்று ஓர் இந்து சர்வாதிகாரியுடன் நாம் நம் சொந்தமான பூரண ஸ்வராஜ்யத்தைப் பெற்றிராவிட்டால், இந்தியா முழுவதும் ஒரு தரப்படுத்தப்பட்ட இந்துயிசம் என்னும் சித்தாந்தத்தை எய்திட முடியாது என ஒப்புக்கொள்ளப்பட்டது. .. ஆனாலும் அதற்காக நாம் இந்தியாவில் அதுபோன்று ஒரு சர்வாதிகாரி வரும் வரைக்கும் நாம் நம் கைகளைக் கட்டிக்கொண்டு வாளாவிருந்துவிட வேண்டும் என்று இதற்குப் பொருள் அல்ல. இதற்காக நாம் ஓர் அறிவியல்பூர்வமான திட்டம் ஒன்றை வகுத்திட வேண்டும் மற்றும் அதற்கான பிரச்சாரத்தை மேற்கொண்டிட வேண்டும்.”

கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது

ஆர்எஸ்எஸ், இந்தியாவின் அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படை அம்சமாக விளங்கும் கூட்டாட்சிக் கட்டமைப்பிற்கும் கடும் எதிர்ப்பை அளித்துவரும் ஓர் இயக்கமாகும். 1961இல் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் கவுன்சில் கூட்டத்தின் முதல் அமர்விற்கு கோல்வால்கர் அனுப்பியிருந்த கடிதத்திலிருந்து இது தெளிவாகத் தெரிகிறது. அதில் குறிப்பிட்டிருந்ததாவது:

“அரசாங்கத்தின் இன்றைய கூட்டாட்சி அமைப்புமுறை பிரிவினை உணர்வினை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல் அதனை ஊட்டி வளர்த்திடவும் இட்டுச்செல்லும். இதன் மூலம் இது ஒரே நாடு என்னும் உண்மையை அங்கீகரித்திட மறுத்திடும். இது முற்றிலுமாக வேருடன் பிடுங்கி எறியப்பட வேண்டும். அரசமைப்புச்சட்டமானது புனிதப்படுத்தப்பட்டு ஒற்றை ஆட்சி அமைப்புமுறை (unitary form of government) நிறுவப்பட வேண்டும்.”

கூட்டாட்சி அமைப்புமீது இவர்களுக்கு இருந்துவரும் இத்தகைய வெறுப்பின் காரணமாகத்தான் மகாராஷ்ட்ரா அமைவதை அது கடுமையாக எதிர்த்தது. கோல்வால்கர், தன்னை ஓர் அரசியலற்ற நபர் எனக் கூறிக்கொண்ட போதிலும், மகாராஷ்ட்ரா எதிர்ப்பு அமைப்பு மாநாடுகள் பலவற்றில் அவர் கலந்துகொண்டார். 1954இல் பம்பாயில் நடைபெற்ற அதுபோன்றதொரு மாநாட்டில் பங்கேற்று அவர் கோரியதாவது: “இந்தியா மத்திய ஆட்சியைப் பெற்றிருக்க வேண்டும். நிர்வாகக் கண்ணோட்டத்தின்படி பார்த்தோமானால் மாநிலங்கள் நிர்வாக எல்லைகளுக்கு உட்பட்டு நிர்வகிக்கப்பட வேண்டும்.”

இவை, இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவம் தொடர்பாக ஆர்எஸ்எஸ் சிந்தனாவாதியின் ஒருசில அபூர்வமான சிந்தனைகள் அல்ல. ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் புனித நூலாகக் கருதப்படும், “சிந்தனைத் துளிகள்” (“Bunch of Thoughts”) என்னும் புத்தகத்தில் “ஒற்றை ஆட்சி தேவை”  என்று தலைப்பிட்டு ஒரு அத்தியாயமே ஒதுக்கப்பட்டிருக்கிறது. இப்போதுள்ள கூட்டாட்சி அமைப்புமுறைக்கு மாற்றாக அதில் கூறப்பட்டிருப்பதாவது:

“மிகவும் முக்கியமான மற்றும் வலுவான நடவடிக்கை என்பது, நம் அரசமைப்புச்சட்டத்தில் கூட்டாட்சிக் கட்டமைப்பு தொடர்பாக பேசப்பட்டுவரும் அனைத்து வாதங்களையும் ஆழக் குழிதோண்டிப் புதைப்பதாகும். இதன்மூலம் ‘பாரதம்’ என்பதற்கு எதிரான அனைத்து மாநிலங்களின் ‘சுயாட்சி’ அல்லது பாதி அளவிலான ‘சுயாட்சி’ போன்ற பேச்சுக்கள் அனைத்தையும் துடைத்தெறிந்திட வேண்டும். பிராந்திய அடிப்படையிலான, மதத்தின் அடிப்படையிலான, மொழியின் அடிப்படையிலான அல்லது பெருமை பீற்றிக்கொள்ளும் இதர எவ்விதமான அடிப்படையும் இல்லாத விதத்தில், நம்முடைய ஒருங்கிணைந்த நல்லிணக்கத்திற்குக் கேடு பயக்காத விதத்தில், ‘ஒரே நாடு, ஒரே அரசு, ஒரே சட்டமன்றம், ஒரே நிர்வாகம்’ (‘One Country, One State, One Legislature, One Executive’) என்பதனைப் பிரகடனம் செய்திட வேண்டும். இதன்மூலம் பிரிட்டிஷாராலும் அதனைத்தொடர்ந்து இப்போதைய தலைவர்களாலும் சொல்லப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் விஷமத்தனமான பிரச்சாரத்தை வலுவானமுறையில் நிராகரித்திடுவோம். அந்நிய ஆதிக்கத்தின் கீழ் அடுத்தடுத்து இருந்துவந்த பல்வேறு ‘இனக் குழுக்களையும்’(‘ethnic groups’) அல்லது ‘தேசிய இனங்களையும்’ (‘nationalities’) இணைத்திருந்தவற்றை ஒற்றை ஆட்சி முறையை ஏற்படுத்தும் விதத்தில் ஒன்றுபடுத்திட அரசமைப்புச் சட்டத்தை மறு ஆய்வுக்கு உட்படுத்தி, மாற்றி எழுதிடுவோம்.”

உச்சநீதிமன்றத்தின் தீர்வறிக்கைகளின்படி இந்திய அரசமைப்புச்சட்டத்திற்கே அடிப்படைக் கட்டமைப்பாக விளங்கும் இந்தியக் கூட்டாட்சித் தத்துவம் குறித்து, ஆர்எஸ்எஸ் இயக்கமானது இப்படியொரு பகைமையான அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருகையில் அதன்கீழ் உறுதிமொழி எடுத்துக்கொண்டு செயல்படும் அதன் ஊழியர்கள், ஒன்றிய அரசிலும் பல மாநிலங்களிலும் ஆட்சி புரிகையில் கூட்டாட்சித் தத்துவத்தை எந்த அளவிற்கு அழித்து ஒழித்திடமுடியுமோ அந்த அளவிற்கு ஆட்சி செய்யவே முயற்சிக்கிறார்கள். இவ்வாறு ஒற்றை ஆட்சிமுறையைக் கொண்டுவர வேண்டும் என்று விரும்புகிறவர்கள் பல மாநிலங்களில் தற்போது ஆட்சிபுரிந்து வருவது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். உண்மையில் மோடி அரசாங்கமானது உத்தர்காண்ட் மற்றும் அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநில அரசாங்கங்களைக் கலைப்பதற்காக அரசமைப்புச்சட்டத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்தபோது, அதற்கு எதிராக உச்சநீதிமன்றம் தலையிட வேண்டியிருந்தது.

(தொடரும்)

Leave A Reply