ஆர்எஸ்எஸ்சின் நிஜமுகம் தெரியுமா? – சம்சுல் இஸ்லாம் – மொழியாக்கம் ச.வீரமணி

Share

3. மனு(அ)நீதி இந்திய அரசியல் சட்டமானால்           சூத்திரர்கள் நிலை?

இந்திய அரசமைப்புச் சட்டத்தை எவ்வளவு கீழ்த்தரமாக ஆர்எஸ்எஸ் கருதிக் கொண்டிருக்கிறது என்பதை, ஆர்எஸ்எஸ் ஊழியர்களால் புனிதப் புத்தகமாகக் கருதப்படும் கோல்வால்கரின் “சிந்தனைத் துளிகள்” (“Bunch of thoughts”) என்னும் புத்தகத்தை படித்தால் தெரிந்துகொள்ளலாம். அந்தப் புத்தகத்தில் கோல்வால்கர் இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பற்றியும், மனுஸ்மிருதி எனும் மனுநீதி குறித்தும் இப்படி எழுதியிருக்கிறார்….

“நம்முடைய அரசமைப்புச்சட்டம் என்பது மேற்கத்திய நாடுகள் பலவற்றின் அரசமைப்புச் சட்டங்களிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு கதம்ப மாகும். இதில் நமக்குச் சொந்தமானவை என்று கூறக்கூடிய விதத்தில் எதுவும் இல்லை. நம்முடைய தேசியத் திட்டப்பணி (National mission) என்ன என்பது குறித்தோ அல்லது நம் வாழ்க்கையின் குறிக்கோள் என்ன (key note in life) என்பது குறித்தோ ஒரு வார்த்தையாவது இதில் இருக்கிறதா?”

உண்மையில் ஆர்எஸ்எஸ் இயக்கமானது சூத்திரர்களை (தலித்துகளை)யும், பெண்களையும் மிகவும் இழிவுபடுத்திடும் மனுஸ்மிருதி என்கிற மனுநீதியை இந்தியாவின் அரசமைப்புச்சட்டமாக மாற்ற வேண்டும் என்று விரும்புகிறது. 1949 நவம்பர் 26 அன்று அரசியல் நிர்ணய சபை அரசமைப்புச் சட்டத்தை இறுதிப்படுத்தியது. அந்தச் சமயத்தில், ஆர்எஸ்எஸ் சந்தோஷமாக இல்லை. அதன் அதிகாரபூர்வ இதழான ஆர்கனைசர் 1949 நவம்பர் 30 ஆம் தேதி வெளியிட்டிருந்த தலையங்கத்தில் இப்படி எழுதப்பட்டிருக்கிறது…

“ஆனால், நம்முடைய அரசமைப்புச்சட்டத்தில் புராதன பாரதத்தில் இருந்துவந்த நிகரற்ற அரசமைப்புச் சட்ட வளர்ச்சி குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. மனுவின் சட்டங்கள் ஸ்பார்ட்டாவைச் சேர்ந்த லைகர்கஸ் (Lycurgus of Sparta) மற்றும் பெர்சியாவைச் சேர்ந்த சோலோன் (Solon of Persia) ஆகியோர் எழுதிய நீதிச் சட்டங்களுக்கு வெகுகாலத்திற்கு முன்பே மனு நீதிச் சட்டங்கள் எழுதப்பட்டுவிட்டன. இன்றளவும் மனுஸ்மிருதியில் கூறப்பட்டுள்ள சட்ட விதிகள் உலகத்தாரால் போற்றப்படுகிறது. தாமாகவே அதற்குக் கட்டுப்பட்டு பின்பற்றி நடக்கிறார்கள். ஆனால், நம் அரசமைப்புச்சட்டத்தை உருவாக்கிய பண்டிதர்களுக்கோ அதில் எதுவும் இல்லை.”

மனுஸ்மிருதியை சுதந்திர இந்தியாவின் அரசமைப்புச் சட்டமாகப் பிரகடனம் செய்ய வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் கோருவ தற்கு, அவர்களுடைய மூளையாகவும், தத்துவ ஞானியாகவும் வழிகாட்டியாகவும் கொண்டிருக்கிற வி.டி.சாவர்க்கரும் இதையே வலியுறுத்தியிருந்தார் என்பதுதான் காரணமாகும். அவர் இது தொடர்பாக என்ன கூறியிருந்தார் தெரியுமா?

“… மனுஸ்மிருதியில் கூறப்பட்டுள்ள சட்டங் கள் உலகில் பலராலும் போற்றப்படுகிறது, தன்னிச்சையான கீழ்ப்படிதலையும் இணக்கத்தை யும் வெளிப்படுத்துகிறது. ஆனால் நம் அரசமைப்புச்சட்ட பண்டிதர்களுக்கோ அதில் எதுவுமே இல்லை.”

மனுஸ்மிருதியை சுதந்திர இந்தியாவின் சட்டமாகப் பிரகடனம் செய்ய வேண்டும் என்று கோருவதன் மூலம், ஆர்எஸ்எஸ் தங்களின் வழிகாட்டியான வீ.டி.சாவர்க்கர் மனுஸ்மிருதி குறித்துக் கூறியதையே பின்பற்றிக் கொண்டிருக்கிறது. மனுஸ்மிருதி குறித்து வீ.டி.சாவர்க்கர் இப்படி அறிவித்திருந்தார்…

“மனுஸ்மிருதி, நம்முடைய இந்து தேசத்திற்கு வேதங்களுக்குப் பின்னர் மிகவும் பூஜிக்கத் தகுந்த மறைநூலாகும். புராதனக் காலத்திலிருந்தே நம்முடைய கலாச்சாரப் பழக்க வழக்கங்களுக்கும், சிந்தனைகளுக்கும், நடைமுறைகளுக்கும் அடிப் படையாக இருந்து வந்திருக்கிறது. இந்தப் புத்தகம் பல நூற்றாண்டுகளாகவே நம் தேசத்தின் ஆன்மீக மற்றும் தெய்வீக பயணத்திற்கு ஒரு சட்டப்புத்தகமாக இருந்து வந்திருக்கிறது. இன்றைக்கும் கூட கோடிக்கணக்கான இந்துக்களின் வாழ்க்கைக்கும் நடைமுறைகளுக்கும் மனுஸ்மிருதியில் கூறப்பட்டுள்ள விதிகள்தான் அடிப்படையாக பின்பற்றப்பட்டு வருகின்றன. இன்றையதினம் மனுஸ்மிருதிதான் இந்து சட்டமாகும்.”

ஆர்எஸ்எஸ்-இன் இந்து தேசத்துக்கு சாதியக் கட்டமைப்பு அவசியமாகும்.

ஆர்எஸ்எஸ் மனுஸ்மிருதியின் அடிப்படையில் நம்பிக்கைகள் இருக்க வேண்டும் என்று கூறுவதன்மூலம், இயல்பாகவே அது சாதியக் கட்டமைப்பிற்கும் இட்டுச் செல்கிறது. ஆர்எஸ்எஸ்-ஐப் பொறுத்தவரைக்கும் இந்துயிசத்திற்கும் இந்து தேசியத்திற்கும் சாதியம் அடிப்படை சாராம்சமாகும். கோல்வால்கர் இந்து தேசத்துடன் சாதியம் ஒத்துப்போகக் கூடிய ஒன்று என்று அறிவிப்பதில் சிரமப்படவில்லை. அவரதுகூற்றின்படி, இந்துக்கள் என்பவர்கள்…,

”கடவுளால் உருவாக்கப்பட்ட இந்த பிரபஞ்சத்தில் சூரியனும் சந்திரனும் அவருடைய கண்கள். நட்சத்திரங்களும் வானங்களும் அவருடைய தொப்புள்கொடி. அவருடைய தலையிலிருந்து பிராமணன் பிறந்தான், கைகளிலிருந்து சத்திரியன் பிறந்தான், தொடைகளிலிருந்து வைசியன் பிறந்தான், கால்களிலிருந்து சூத்திரன் பிறந்தான். இதன் பொருள் இந்துக்கள் என்போர் இவ்வாறு நான்குவிதமாக அமைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதாகும். கடவுளைப்பற்றிய இந்த உன்னத தரிசனம், நம் தேசம் என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையாகும். இது நம் சிந்தனையில் ஊடுருவியிருக்கிறது. நம் கலாச்சாரப் பாரம் பர்யத்தின் நிகரற்ற கருத்தாக்கங்கள் பலவற்றிற்கு எழுச்சியூட்டுகிறது.”

இவ்வாறு மனுஸ்மிருதியைத் திணிக்க விரும்புவதன் மூலம் ஆர்எஸ்எஸ் இயக்கமும், இந்துத்துவா முகாமும் என்னவிதமான நாகரிக உலகைப் படைத்திட விரும்புகிறார்கள்? குறிப்பாக மனுஸ்மிருதியில் சூத்திரர்கள் குறித்தும் பெண்கள் குறித்தும் என்ன கூறுகிறது? மனிதாபிமானமற்ற முறையிலும், கேவலமான முறையிலும் இருக்கக்கூடிய சில சட்டப் பிரிவுகளைக் கூறுவதன் மூலம் ஒட்டுமொத்த மனுஸ்மிருதியின் லட்சணத்தையும் நாம் தெரிந்துகொள்ள முடியும்.

சூத்திரர்கள்/தலித்துகள் குறித்து மனுஸ்மிருதி கூறுவது என்ன?

1. உலகங்களைச் செழிப்புறச் செய்வதற்காக கடவுள் (பிரம்மா) தன்னுடைய வாயிலிருந்து பிராமணனையும், கைகளிலிருந்து சத்திரியனையும், தொடைகளிலிருந்து வைசியனையும், பாதங்களி லிருந்து சூத்திரர்களையும் படைத்தார். (I/31)

2. ஆனாலும் இந்த பிரபஞ்சத்தைப் பாதுகாப் பதற்காக அவர், தன்னுடைய வாயிலிருந்தும், கைகளிலிருந்தும், தொடைகளிலிருந்தும், பாதங்களிலிருந்தும் படைத்தவர்களுக்குத் தனித்த னியே கடமைகளையும் ஒதுக்கினார். (I/87)

3. பிராமணர்களுக்கு வேதங்களைப் போதிப்ப தும் படிப்பதும் ஒதுக்கப்பட்டது. அவர்கள் தங்கள் சொந்த பயன்களை மற்றவர்களுக்குத் தியாகம் செய்திட வேண்டும், மற்றவர்கள் பிச்சை போடுவதை வாங்கிக் கொள்ள வேண்டும். (I/88)

4. சத்தியர்கள் மக்களைக் காத்திடும் பணியை மேற்கொள்ள வேண்டும், பரிசுகளை வழங்க வேண்டும், தியாகங்கள் புரிந்திட வேண்டும், வேதங்களைக் கற்க வேண்டும், சுகபோக வாழ்க்கையைத் தவிர்த்திட வேண்டும். (I/89)

5. வைசியர்கள் கால்நடைகளை மேய்க்க வேண்டும், பரிசுகளை வழங்க வேண்டும், வேதங்களைக் கற்க வேண்டும், வர்த்தகம் புரிய வேண்டும், பணம் கடன் கொடுக்க வேண்டும், நிலங்களை உழ வேண்டும். (I/90)

6. பிராமணர்கள், பிரம்மாவின் வாயிலிருந்து உதித்திருப்பதாலும், அவர்களே முதலில் உதித்த வர்களாதலாலும், அவர்கள் வேதங்களைக் கற்றவர்கள் என்பதாலும், உருவாக்கப்பட்டுள்ள அனைவருக்கும் அவர்களே கடவுள் போன்று இருப்பதற்கு உரிமை படைத்தவர்கள். (I/93)

7. கடவுள் சூத்திரர்களுக்கு விதித்துள்ள ஒரே வேலை இதர மூன்று சாதியினருக்கும் பணிவுடன் சேவை செய்வதேயாகும். (I/91)

8. ஒரு பிறப்புள்ள சூத்திரன், இரு பிறப்புள்ள வர்களைக் (துவிஜர்களை) கொடுமையாகத் திட்டினால், சூத்திரனின் நாக்கு வெட்டப்பட வேண்டும். ஏனெனில் அவன் பாதங்களில் பிறந்தவன். (VIII/270)

9. சூத்திரர்கள், இரு பிறப்புள்ளவர்களின் பெயர்களையும், சாதிகளையும் இகழ்ச்சியாகக் குறிப்பிட்டால், பத்து விரல்கள் நீளமுள்ள இரும்புக்கம்பியைக் காய்ச்சி அவனுடைய நாக்கில் சூடு வைக்க வேண்டும். (VIII/271)

10. சூத்திரன், அகங்காரத்துடன் பிராமணனுக்கு அவனுடைய கடமையை சுட்டிக்காட்டி உபதேசித்தால், அரசன் சூத்திரனுடைய வாயிலும் காதிலும் எண்ணெய்யைக் காய்ச்சி ஊற்ற வேண்டும். (VIII//272)

11. சூத்திரன் தன்னைவிட மேலான மூன்று சாதிக்காரர்களில் யாரையாவது அடித்தான் என்றால், சூத்திரன் எந்த இடத்தில் அடித்தானோ, சூத்திரனின் அந்த இடத்தை வெட்டிவிட வேண்டும். (VIII//279)

12. சூத்திரன் இவ்வாறு கையினாலோ, தடியினாலோ அடித்தால் சூத்திரனின் கையையும் வெட்டிவிட வேண்டும். (VIII//280)

13. உயர்சாதியினர் உட்கார்ந்த இடத்தில் சூத்திரன் உட்கார்ந்தால் அவனுடைய இடுப்பில் சூடு போட வேண்டும், அரசன் அவனுடைய ஆசன பாகத்தை அறுத்திட வேண்டும். (VIII//281)

இப்படி எண்ணற்ற தண்டனைகள் சூத்திரர்களுக்கு எதிராக மனு நீதியில் அளிக்கப்பட்டிருக்கின்றன. அதே சமயத்தில் இதே குற்றங்களை பிராமணர்கள் செய்தால் அவர்களுக்கு மிகவும் கருணையுடனான தண்டனை விதித்திட வேண்டும் என்றும் மனு நீதி கோருகிறது. ஏனெனில் பிராமணர்கள்தான் இந்த உலகை உருவாக்கியவர்களாம். எனவே அவர்களுக்கு எதிராகப் பயனற்ற வார்த்தைகளையோ, கடுமையான வார்த்தைகளையோ எவரும் பிரயோகிக்கக்கூடாது. (XI/35)

பிராமணர்கள் எவ்விதமான குற்றம் செய்திருந்தாலும் அவர்களைத் தண்டித்திடக் கூடாது, அவர்களின் சொத்துக்களையும் பறிமுதல் செய்திடக்கூடாது. (VIII//380)

இதுதான் மனு நீதியாகும். இதனைத்தான் அரசமைப்புச்சட்டமாக இயற்றிட வேண்டும் என்று ஆர்எஸ்எஸ்/பாஜக வகையறாக்கள் கோரி வருகின்றன.

(தொடரும்)

Leave A Reply