சித்தர் வாழ்க்கை – இடைக்காடர் சித்தர் – 2

Share

மருத்துவ குறிப்புகளும் இடைக்காடச் சித்தரும்

(தொடர்ச்சி)

இரத்தமூலம், சீழ்மூலம், முளைமூலம் நீங்க
நத்தையில் மேல் ஓடுகொண்டுவந்து பழைய பாண்டத்தில் போட்டு மேலே மூடி அடுப்பிலேற்றி எரிக்கவேண்டும். எரிந்து அப்பாண்டத்திலிருந்து ஆவி மேலெழும்போது இரண்டு பலகையை அதற்கு இடை வெளிவிட்டு போட்டு ஆசன வாயில் அந்த ஆவியினாது படும்படி உட்காரவேண்டும். இதுபோல பத்து நாட்கள் ஆசன வாய்க்கு ஆவிபிடித்தால் இரத்தமூலம், சீழ்மூலம் முளைமூலம் போன்றவை குணமாகும்.

மற்றொரு முறை விச்சிப்பூவைக் கொண்டு வந்து பொடியாக எரிந்து ஒரு சட்டியில்போட்டு அதற்கேற்றவாறு பசுவின் நெய்விட்டு அடுப்பிலேற்றி புரட்டி எடுத்த அரைத்து நாலைந்து உருண்டை களாகச் செய்து காலை மாலை இரண்டு உருண்டைவீதம் சாப்பிட இரத்தமூலம், சீழ்மூலம், உள்மூலம், வெளி மூலம் குணமாகும்.

கொட்டிக்கிழங்கை கொண்டுவந்து துண்டு துண்டுகளாக அரிந்து முப்பது பலம் எடுத்து ஒரு பாண்டத்திலிட்டு அதற்கேற்ப பசுநெய் விட்டு அடுப்பிலேற்றி நன்கு புரட்டி வேகவைத்து எடுத்து இதிலிருந்து தினம் ஒரு பலம் வீதம் எடுத்து சாப்பிட்டு வர இரத்தமூலம், சீழ்மூலம் உள்மூலம் போன்றவை குணமாகும்.

ஓரண்ட வாதம் குணமாக
காட்டில் விளைந்த சுண்டைக்காயின் கொழுந்து ஒருபடி கொண்டுவந்து அரைத்து நெல்லிக்காய் போன்றளவுக்கு உருண்டை செய்து அதில் விளக்கெண்ணெய் விட்டு மத்தித்து காலையில் சாப்பிட்டுவர நாட்பட்ட வாதமெல்லாம் குணமாகும் பத்தியமில்லை

பித்த எரிச்சல் காந்தல் குணமாக
ஒரு சட்டியை அடுப்பில் வைத்து அதில் பத்து எலுமிச்சம் பழத்தைப் போட்டு வதக்கி எடுத்து ஒரு பீங்கானில் சாறு பிழிந்து விட்டு அதில் மூன்று காசு எடை மிளகை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

சேர்த்துக்கொண்டதை வறுத்த கல்வத்தில் போட்டு தூளாக்கிக் கெண்டு சர்க்கரையும் சேர்த்து இம்மருந்தில் இரண்டு வேளை அல்லது மூன்று வேளைவீதம் சாப்பிட்டுவர மேற்கண்ட வியாதிகள் குணமாகும். புளி, புகையிலையை நீக்கவும்.

மூலக்கடுப்பு நீங்க
மலம் கழிக்கும்போது உண்டாகும் கடுப்பு, சீதக்கடுப்பு இரத்தம் வெளிப்படுவதுபோன்ற குறைபாடுகள், குணமாவதற்கான புகை முறைஒன்று உண்டு. புளியம் புறணியைக் கொண்டுவந்து ஒரு குழிவெட்டி அதில் போட்டு எரித்து நெருப்பாக்கி அதில் மூங்கில் இலையும் வேப்பிலையையும் போட்டு அதிலிருந்து வருகின்ற புகையை மூலத்தில் படும்படிசெய்ய வேண்டும்.

இதுபோன்ற புகையை தினம் இரண்டு மூன்று வேளை செய்தால் மூலக்கடுப்பு குணமாகும்.

உள்மூலம் வெளிமூலம் குணமாக
பன்றியின் குடலை வாங்கி வந்து சுத்தமாக்கி மூன்று முறை நன்றாகக் கழுவி பொடிப்பொடியாக அரிந்து ஒரு பழைய சட்டியில் போட்டுக்கொள்ளவும்.

அந்தச் சட்டியை அடுப்பிலேற்றி வறுத்துக்கொண்டு அதில் ஆட்டு வெண்ணெய், தேங்காய் திருகல் போட்டு குழம்பு பதம்போல வரும்போது எலுமிச்சம் பழத்தின் சாற்றைவிட்டு வேகவைத்து குழம்பு பதத்தில் எடுத்துப்பத்திரப்படுத்தி அந்த குழம்பை எடுத்து நாற்பது நாட்கள் சாப்பிட்டால் மூலநோய் குணமாகும்.

கை கால் நடுக்கம் அகல
காட்டிலுள்ள உசில மரத்தின் இலையைக் கொண்டு வந்து வரகு அரிசியினை அத்துடன் சேர்த்து நன்றாக இடித்து எடுத்து தினம் மூன்று வேளை சாப்பிட்டுவர நடுக்கமெல்லாம் அகன்றுவிடும்.

வயிற்று கடுப்பு குணமாக
வயிற்றுவலி வயிற்றுக்கடுப்பு ஏற்பட்டால் நெல்லிவற்றல், அபின்மாங்கொட்டை, மாதுளை ஓடு, இலவங்கபத்திரி புளியன் கொட்டையின் மேல்தோல் சாதிக்காய், தேத்தான்வித்து வெங்காயம் ஆகிய சரக்குகளில் வகைக்கு சமமாக எடுத்து ஒன்றாக சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

அரைத்தெடுத்த மருந்தின் எடைக்கு சமமாக பசுவின் வெண்ணெய் கலந்து ஒரு அளவாக சாப்பிட வேண்டும். சாப்பிடும்போது ஆண்டவனை மனதில் நினைத்து வீணாக ஏதும் பேசாது சாப்பிடவும். இதனால் வயிற்றுகடுப்பும் வயிற்றுளைவு அகலும் புளி புகையிலையைத்தவிர்த்து உணவில் சிறுபயிறு சேர்த்து சாப்பிடவேண்டும்.

மற்றொரு மருத்துவமுறை பெருமரத்துப்பட்டை, ஆயிலியப் பட்டை, மாவிலிங்கம்பட்டை, வசம்பு, இந்துப்பு, ஆதொண்டை காந்தம், பெருங்காயம் அதிவிடயம், கடுக்காய்ப்பூ ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.

எடுத்துக்கொண்ட சரக்குகளிலெல்லாம் சமஅளவு எடுத்து நன்றாக இடித்து சூரணமாக்கி, ஒரு பாத்திரத்தில் அளவாக விளக்கெண்ணைய் ஊற்றி அதில் சூரணத்தை கொட்டி கலந்து அடுப்பேற்றி காய்ச்ச வேண்டும். மெழுகு பதம் வந்ததும் வடித்து எடுத்து விநாயகருக்கு பூசைசெய்துவிட்டு இம்மருந்திலிருந்து தினம் இரண்டு வேளை அல்லது மூன்று வேளை சாப்பிட வயிற்றுவலி, குடற்புரட்டு குணமாகும்.

அஷ்ட குன்மம் குணமாக
இஞ்சி சாறு ஒருபடி, எலுமிச்சம்பழச்சாறு, கொம்புத்தேன், வரிக்குமட்டி பழச்சாறு, இவைகளில் வகைக்கு கால்படிவீதம் எடுத்து எல்லா சாறுகளையும் ஒரு பாண்டத்திலிட்டு அடுப்பிலேற்றி எரித்து பாகுபதம் வரும்வரை எரிக்கவும் பாகுபதம் வந்ததும் இறக்கிக்கொள்ளவும். பின்னர் திரிகடுகு திரிபலாதி, சீவதை வேர், தரை வேர், ஓமம், செவ்வியம், திப்பிலி மூலம், கோஷ்டம், அதிமதுரம், இலவங்கப் பத்திரி, வாய்விளங்கம், சித்திரமூலம், கடுகு ரோகிணி ஆகிய சரக்குகளில் வகைக்கு நாலு விராகனெடை வீதம் எடுத்து இளவறுவலாய் வறுத்துக்கொள்ளவும் வறுத்ததை எடுத்து நன்றாக இடித்துத் தூள்செய்து சுத்தமான துணியில் சலித்தெடுத்து முன்னர் காய்ச்சி வைத்துள்ள பாகுபண்டத்தில் கொட்டி மேல் நன்றாக மூடி சீலைசெய்து பாத்திரத்தில் பாதிகொட்டி அதன்மீது சீலை செய்ததை வைத்து அதன்மேலும் குருவை நெல்லைக் கொட்டி மேலே மூடி சீலைசெய்து வெள்ளாட்டுத்தொழுத்தில் வைத்து பத்து நாட்கள் கழிந்ததும் எடுத்துக்கொள்ளவும்.

எடுத்துக்கொண்ட அந்த மருந்தில் கொட்டைப்பாக்களவு எடுத்து காலை மாலை என தினசரி சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி குடல்வாயு மற்றும் அட்டகுன்மம் குணமாகும். பத்தியமாக உணவில் புளி, உப்பு நீக்கி உண்ணவும். மாங்கொட்டை புளிப்புடன் சாதம் சாப்பிடவேண்டும்.

ஈளை சுவாச கோசம் குணமாக
ஆடாதோடை, நொச்சில், தழுதாழை, செம்முள்ளி, இம்பூரல், தூதுவளை, கண்டங்கத்திரி, காட்டுத்துளசி, முருங்கையிண்டு, உசில மரத்துப்பட்டை, அப்பக்கோவை இவைகளையெல்லாம் உரலில் போட்டு இடித்தெடுத்து தண்ணீர்விட்டு பிட்டவியல் செய்து தண்ணீரை பீங்கானில் வடித்தெடுத்துக்கொண்டு சுக்கு மிளகு திப்பிலி சிற்றிரத்தை, ஓமம் சீரகம், இப்போது பட்டவியல் செய்த தண்ணீரை பீங்கானில் ஊற்றிக்கொண்டு சுக்கு மிளகு திப்பிலி, சிற்றரத்தை ஓமம், சீரகம் பெருஞ்சீரகம் கோஷ்டம், சிறு தேக்கு ஆகிய சரக்குகளை சமனாக சேர்த்து கருகாமல் வறுது நன்கு தூளாக்கி முன்னர் தயாரித்துள்ள நீரில் ஒரு விராகன் எடை சூரணத்தைப் போட்டு தேன் விட்டுக்கிண்டி லேகியம் போல் செய்து தினம் காலை மாலை இருவேளை மூன்று நாட்கள் சாப்பிட்டால் சயம் இருமல் குணமாகும். பெண் சேர்க்கை கூடாது. புளி புகை இறைச்சி மீன் விலக்க வேண்டும்.

பெரும்பாடு அகல
பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு காலத்தில் உண்டாகும் பெரும்பாடு என்னும் இரத்தம் அதிகமாக வெளியேறுவதை தடுப்பதற்கான மருந்து வாழைக் கொழுந்து, மெருகன் கிழங்குச் செடியின் மொட்டு பிரண்டை, மிளகு, இலுப்பை புண்ணாக்கு இவைகளை கல்வத்திலிட்டு எலுமிச்சம் பழத்தின்சாறுவிட்டு மெழுகு அரைத்து அடிவயிற்றில் பூசிட இரத்தப்பெருக்கு அகன்று நலமாகும்.

மண்டைக்குத்தல் பீனிசம் நீங்க
கருநொச்சில், பச்சை மஞ்சள், வெண்ணொச்சில் ஆகிய இவற்றின் சாறுவகைக்கு அரைக்கால் படிவீதம் எடுத்து ஒரு பாண்டத்திலிட்டு அத்துடன் வெள்ளாட்டு நெய் கால்படிவிட்டு கலந்து அடுப்பிலேற்றி காய்ச்சி எடுத்து தடவ மண்டைக்குத்து பீனிசம் குணமாகும். புளி, புகை நீக்க வேண்டும்.

மாறல் சுரம் தீர
நாள் வேளை, வேலிப்பருத்தி, கஞ்சங்கோரை, தாழை, முடக்கொத்தான், சுக்கு, சிறுதேக்கு சிறுகாஞ்சோரி வேம்பின்பட்டை, சங்கன் பட்டை இவைகளை நீரிலிட்டு காய்ச்சிக்குடிக்க சீதம் சீதசுரம், குளிர்சுரம் மாறல் சுரம் இவைகள் தீரும்.

வாத சுரம் தீர
முத்தக்காசு, பஷ்படாகம், விலாமிச்சை, இருவேலி, சுக்கு சந்தனம் இவைகள் சரி எடை கூட்டி நீரிலிட்டு காய்ச்சி குடிக்க பித்தம் வாதசுரம் இவைகள் நீங்கும்.

விஷ சுரம் தீர
சுக்கு, கடுக்காய், நிலவேம்பு, ஆடாதோடை, சீந்தி பேயப்புடல் இவைகளில் தூள் வகைக்கு கழஞ்சி இவைகளை இருநாழி அளவு நீரிலிட்டு உழக்காக காய்ச்சி குடிக்க விஷசுரம் தீரும்.

சத்தி குன்மம், கிறுகிறுப்பு அழலை குணமாக
நெல்பொரி, பசும்பயறு, சிற்றேலம், நெல்லிமுள்ளி இவைகளை இருநாழி நீரிலிட்டு எட்டொன்றாக காய்ச்சி குடிக்க சத்திகுன்மம் சுரம், கிறுகிறுப்பு அழலை இவைகள் குணமாகும்.

அதிசாரம், சுரம் நீங்க
அதிவிடையம், முத்துக்காசு, பெருமரப்பட்டை மாவு, சுக்கு, விளாங்காய், சமனாக வகைக்கு ஓர் கழஞ்சி எடுத்து இருநாழி நீரிலிட்டு உழக்களவு காய்ச்சி குடிக்க அதிசாரம் சுரம் இவைகள் தீரும்.

மஞ்சள் காமாலை குணமாக
சிறு மல்லியிலை எனப்படும் முல்லை இலைச்சாறு இரண்டு ஆழாக்கு, கையான் தகரைச்சாறு இரண்டு ஆழாக்கு, வெள்ளரி இலைச்சாறு இரண்டு ஆழாக்கு, இவை மூன்றையும் ஒரு பாண்டத்தில் ஊற்றி இரும்புச்சிட்டம் ஐந்து பலம், அரப்பெடி ஐந்துபலம், மிளகு சுக்கு பூண்டு இவைகள் வகைக்கு ஒருபலம் வீதம் எடுத்து சேர்த்து முதலில் தயாரித்துள்ள சாற்றை கொஞ்சம்விட்டு அரைக்கவும் அரைப்பதைமைபோல அரைத்து முன்வைத்துள்ள சாற்றில்போட்டு வெயிலில் வைத்துக்கிண்டினால் களிபோல இறுகிப்போகும். இதனை எடுத்துவைத்துக்கொள்ளவும். அரிசிப்பொங்கல் செய்த அதில் எள்ளெண்ணெய் சிறிதுவிட்டு எடுத்து வைத்துள்ள மருந்தில் வெருகடி அளவு எடுத்து இதில் சேர்த்து சாப்பிடவும். இதுபோன்று எட்டு நாட்கள் சாப்பிட்டு வர வயிறு பேதியாகும் காமாலை நோயும் பூரண குணமாகிவிடும்.

ஊதுகாமாலை நோய் குணமாக
காமாலை நோய்களில் ஊது காமாலை என்பதும் ஒன்று கையான் தகரை, கீழ்க்காய் நெல்லி எலுமிச்சம்பழம் ஆகிய இவைகளின் சாறு வகைக்கு ஒரு ஆழாக்கு வீதம் எடுத்துக்கொள்ளவேண்டும். பின்னர் அரப்பொடி, சுக்கு, கடுக்காய், இவைகளில் வகைக்கு இரண்டு பலம்வீதம் எடுத்து அரைத்து ஒரு பாண்டத்திலிட்டு முன்னர் கூறிய பழச்சாறுகளை கலந்து நன்கு மூடி பூமியில் புதைத்து பத்து நாட்கள் வரை வைத்திருந்து எடுத்து பூசையில் வைத்து எடுத்த மருந்தில் தினம் தினம் காலை மாலை என இரு வேளை இருபது நாட்கள் சாப்பிட்டால் ஊதுகாமாலை நோய்குணமாகும். மோர் சாதத்துடன் வெங்காயம் சேர்த்து சாப்பிட வேண்டும் புகையிலை புளி உப்பு இவற்றை நீக்க வேண்டும்.

(தொடரும்)

சித்தர் வாழ்க்கை – இடைக்காடர் சித்தர் – 2

Leave A Reply