சித்தர் வாழ்க்கை – இடைக்காடர் சித்தர் – 3

Share

சுவாசக்கலை குறித்து இடைக்காடர் சித்தர்

தொடர்ச்சி

பொங்கி வரும் ஆசைமோகத்தினால் வெப்பம் மேலிட்டு உலகத்திலுள்ளோர் இந்திரியத்தை இழப்பார்கள். ஆனால் யோகசாதனை செய்யும் சித்தி சந்ததிகள் ஆசையை அடக்கி இந்திரியத்தை ஆவியாக்கி விந்தில் சேர்ப்பார்கள்.

பாம்பின் வாயில் அகப்பட்ட கிணற்றுத்தவளையானது கத்தி கடக்குரலிட்டு இறுதியாக சத்தம் ஒடுங்கி அடங்கி அதிலேயே உயிரைவிட்டு இறந்துமடியும். அதுபோன்று தமது தேகத்தில் நின்ற அறிவை அறியாத மூடர்களாகி மற்றவர் துன்பத்தில் வீழ்ந்து கூக்குரலிட்டு மரணமடைவார்கள்.

தூக்கம் என்பது விசித்திரமானது நினைவுதனை நினைவுகொண்டு நினைந்து பாராமல் அந்நினைவு நின்று போவதால்தான் உடல் மயக்கமாகி இவ்வுலகில் உள்ள மனிதர்கள் யாவரும் உறங்கிறார்கள்.

எவ்வளவோ கற்று யோக ஞானத்தில் சிறந்து தவம் புரிபவராய் இருந்தாலும் சரியை கிரியை என்னும் பக்தியையும் தொண்டையும் வேண்டாம் என்று தள்ளிவிடாதீர்கள் என்று சித்தர் அறிவுறுத்துகிறார்.

வாசி (மூச்சு) நம் வசமாகும்போது மூக்கு வழி மூச்சு ஓடாது, வாசியானது சுழுமுனை வழியாகவே முட்டிப்பாயும் தனக்கு முன் நிற்கும் எதுவும் கண்ணுக்குத் தோன்றாது.

விழியானது மேல்நோக்கும் அப்போது வாசியை இயக்க வேண்டாம். அதுதானாகவே அங்கே இயங்கிக்கொண்டிருக்கும்.

அவ்வாறு அங்குபாயும் வாசியே பரிவாசியாகும். அதுவே எல்லா சித்திகளையும் தரும் இப்படி பரிவாசியை நடத்தி பரம்பொருளை அடைபவனே பரதேசி.

அவனிடத்து ராஜஸ தாமஸகுணங்கள் விலகி எப்பருவத்திலும் சத்வ குணம் நிலைத்திருக்கும் குருவை அறிந்தபின் நெறியோடு தவம் செய்தால் தசநாதங்களும் உள்ளே கேட்கும்.

உடம்பில் துடித்துக்கொண்டிருக்கும் உயிர் அடிநெஞ்சம் எனும் உள்ளத்தின் மத்தியில் உள்ள வாசலில் உள்ளது. அது அங்கே துகளாகவும் புகையாகவும் வாசியாக புதைந்து உள்ளது.

உயிர்காற்றினால்தானே உடம்பு ஓடி ஆடி உழைக்கின்றது. அவ்வுயிரானது காற்றை அறியாமல் அதனை நாயகன் நாயகியாக கூடும் சிற்றின்பத்தில் வாசியினால் தானே நீரைர இரைக்கின்றீர்கள்.

அது ஒவ்வொரு நொடியும் அடிக்கடியே உடம்பின் நடுவில் உள்ள மார்ப்பு பள்ளம் உள்ள நுரையீரல் காற்றுப்பையில் கலந்து வெளியேறும் மூச்சில் நான்கு அங்குலம் சேர்ந்து வெளிவந்து உயிரின் ஆயுள் குறைகின்றது.

இவ்வாறு சுருண்டு சுற்றித்திரியும் உயிர்க்காற்று இரதயத்தின் பள்ளந்தன்னில் வாசியாக நின்றுள்ளது. அங்கு சுற்றிச் சுழலும் காற்றைப்பிடித்து உயிர்வளார்க்கும் கலையே வாசியோகம்.

காற்றாக உயிர் சுழுமுனையில் நின்று சுழல்வதாலே வாசியே மனம் என்றும் நினைவு என்றும் அடையாளம் ஆனது. அம்மனதாலே கோடானகோடி சித்துக்கள் ஆடலாம். அதனை வாயில்லாப்பானை என்று கூட கூறலாம் என்கிறார் காகபுசுண்ட சித்தர்.

இன்னும் அதுவே புத்தியில் நடுவாக விளங்கும் சித்தம் என்பார். அவ்வுடம்பில் விளங்கும அறிவே பேரறிவு என்றும் யூகம் என்றும் விவேகம் என்றும் கூறுவர்.

ஒளியைக்கடந்து உலகைக்கடந்து முறையாகத்தவம்செய்து ஒளி ஒலி வெளி என மூன்றையும் ஒன்றாக்கி கண்டவர்களே துன்பங்கள் யாவையும் தாண்டி மெய்யின்பம் அடைந்து சுகமுற்றார்கள்.

அவர்களுக்கு எமனை வெல்லும் சக்தி உள்ளது. உடலைவிட்டு உயிரை எடுத்துப்போகும் எமன் கேடியைப்போல நீரோடு கலந்துகோழையாக ஒளிந்துநிற்கிறான். ஆகையால் தேகத்தில் வாதபித்த சிலேத்துமம் எனும் முப்பிணிகள் நீங்கும்வரை வாசியோகத்தில் இருந்து வல்லமையுடன் இருந்து வருவாயாக என்கிறார் சித்தர்.

நீராகி நின்ற பொருளில் வாசியினை நிறுத்தி தியானத்தில் நீங்கள் நின்றிருந்தால் கோழையும் எமனும் நீங்கிப் போய்விடும். யுத்தகளத்தில் மல்லுக்கு நிற்கும் வீரனைப்போல இந்தபோக ஞானத்தில் உறுதியுடன் சுத்தவீரனாக இருந்தால் அக்கோழை நீர் ஆவியாகி சாம்பலைப்போல அழிந்துபோகும். எனவே வாசியோகம் செய்து வாதபித்த சிலேத்தும நீர்களை போக்கிட முயலவேண்டு என்கிறார் சித்தர்.

வாசியோகமானது விட்டகுறைதொட்டகுறை பற்றிவரும் மனிதப்பிறவிகளுக்கே தெய்வ அனுகூலத்தினால் கிட்டும் என்கிறார் சித்தர்.

மனிதகுலத்தில் இந்த வாசிவித்தையானது சித்திக்கு வேண்டுமெனில் சித்தர் முனிவர் துணை நிற்கவேண்டும்.

பெருமை மிக வாசியானது தெய்வபதம் எனும் திருவடிக்கே கொண்டு போய்ச்சேர்க்கும் என்பது நிச்சயம்.

தானும் தெய்வமும் அங்கே நிலையாக இருந்து வருவதால் சித்தரது நூல்களை ஆய்ந்து கற்று வாசியை அறிந்து வலுவாக்கி சாதனை செய்திட்டால் சித்திகள் யாவும் பெற்று சித்தர்கள் ஆவார்கள்.

குருநிலையாகிய சித்தர் நிலை அடையவேண்டுமெனில் நாள்தவறாது சாதனைகளை செய்துவரவேண்டும். என்கையால் பதமாக சோறு பிசைந்து உன்வாயில் ஊட்டும் சுவையான உணவைப் போல உனக்கு நான் இம்மெய்வழியை ஊட்டுகின்றேன் தினமும் மாறாமல் இச்சாகக்கலையை பயின்றுவாகாகபுசுண்டனாகிய நானே வசிஷ்டருக்கு இவ்வழியைச் சொன்னேன். உனக்குள் மெய்ப்பொருளின் வாசலில் உள்ள புருவப் பூட்டைத்திறக்கவும் உள்ளே நுழையவும் வாசியே திறவுகோல் இந்த வில்லங்கமான பூட்டைஉடைத்து அது கிடந்தால் அங்கே ஒளிவீசும் சோதியே உனக்கு எல்லாம் சொல்லிதரும் என்கிறார் சித்தர்.

உயிர் உடலில் சஞ்சாரம் செய்யும் காலம் வரையில் இதே பாதையில் சோதியை விட்டு அகலாது நிற்கவேண்டும். உன் மனம் ஆகாயம்வரை சென்றாலும் அறிவைமறந்து சோதியைவிட்டு விலகிவிடாதே என்கிறார்.

கல்லைப்போல உடலை உறுதியுடன் ஆசனத்தில் அமர்ந்து நாடி சுத்தி செய்து இடகலை பிங்கலை சுழுமுனை நாடிகளை ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

பிராணன் எனும் உயிர் வளர்ந்து விதியும் மாறிகாலனை விரட்டி சித்தர்கள் உடம்பை பெறவேண்டும். வில்லை வளைத்து அம்பு தொடுப்பது போல உடலை வளைத்து நிமிர்த்தி வாசிப்பயிற்சி செய்துவாசியை வலுப்படுத்தி அதனை விரைந்து மூலாதாரத்தில் செலுத்தவேண்டும்.

அங்கு கயிறு போல சுருண்டு கனல் என்ற தனஞ்செயன் வாயு நிமிர்ந்து எழுந்து வாசியுடன் சேர்ந்து முதுகுத்தண்டின் நடுவாக மேலேறி அனலுடன் கலந்திடும்.

இதனை முறைதவறாது செய்துசோதியைக் கண்டால் இருள் அகன்றுவிடும். மாயை விலகி துன்பங்களே உனக்கு வராது. எனவே உடலை நிமிர்த்தி வில்நான்ஏற்றுவதுபோல அடிவயிற்றில் சுருண்டு பாம்புபோல தூங்கும் குண்டலினியை வாசியினால் மேலே ஏற்றி சோதி ஒளியில் கலந்திடச்செய்யவேண்டும்.

இவ்வாறு வாசிகொண்டு தீட்ட தீட்ட மனமாசுக்களும் மாயையும் மறைந்துபோகும். வாலை சொன்ன வார்த்தை யாவும் முக்காலும் உண்மை. வாசியைத்தீட்டி சோதியில் நாட்டிமெய்ப்பாடுபடுங்கள் என்கிறார் சித்தர்.

வாசியோகத்தில்தான் உடலும் உறுதியாகி உயிரும் வளரும். வாசியினால் அன்றி எதனாலும் உண்மையன பலன்களை அடைய முடியாது.

உடலையும் அதில் ஆதியாய் வந்தபொருளையும் கூட்டிவைப்பது வாசியே. வாசியே எங்கும் ஊடுருவிப்பிளந்து செல்லும்.

இதனை நன்கு ஆராய்ந்து அறிந்து அதனைப்பக்குவப்படுத்தி கூர்மையாக்கி செய்யும் சாதனையே மரணத்தை வெல்லும்.

உண்பதிலும் உறங்குவதிலும் இன்பத்திலும் துன்பத்திலும் அது சமமாக நிற்கும் அதுபேரின்பநிலைகாட்டி பிறவாநிலை கொண்ட பேரூரில் கொண்டு சேர்க்கும்.

இந்தவாசி யோகத்தை தவறாகப்பயன்படுத்தி பிடரிபக்கம் செலுத்தினால் அங்கு பித்தம் பெருகும். பித்தத்தோடு வாசியும்சேர்ந்து அங்கேயே நின்றுபோனால் பைத்தியம் பிடித்து கிறுக்கனாகிப்போவான்.

அவை இரண்டும் சேர்ந்து கீழே இறங்கினால் இதயம் நின்று மாரடைப்பு வந்து மரணமாவான்.

எனவே இந்த யோகத்தை செய்ய கவனமாக உடலை பாதுகாத்தாகவேண்டும். சரியாக உணர்ந்து இந்த யோகப் பயிற்சியினை மேற்கொள்ளும்போது வாதம், பித்தம் கோழை என யாவையும் உடம்பல் இருந்து வெளிக்கொணர்ந்து கக்கிவிடும் தேகமும் உறுதியாகும்.

புருவமத்திதான் வெளிச்சம் தரும் வீடாகும். அங்கே நாமத்தின் மத்திபோல் நடுவிலே உட்புகுந்தால் வெள்ளை ஆடை உடுத்திய சரஸ்வதி வந்து நிற்பாள். அதனை வெளிப்படுத்தும் அடையாளமே நெற்றி மத்தியில் உள்ளபொட்டு.

அந்தபொட்டு மத்தியில்தான் வாசியின் இருப்பிடம் உள்ளது. அவ்விடத்தில் நின்ற மெய்குருவை பற்றிநின்று வாசியை எற்றி நிறுத்தினால் அதுநடுநாமப் பாதையில் நின்ற பூட்டைத்திறந்து பத்தாம் வாசல் வழியாக வாசி மூச்சாக ஓடும்.

சித்தர்கள் அனைவரும் இந்த புருவபூட்டு உள்ள இடத்தை சொல்லித்தான் தமது நூல்களில் எல்லாம் எழுதிவைத்துள்ளார்கள். இப்பூட்டை திறப்பதற்கு வாசியோ குருவாகி ஆசானாகி நின்று வழிகாட்டும்.

இதனை அறியாத மாந்தர்கள் மனத்தை மாடுபோல அலைய விட்டு எல்லா நேரங்களிலும் வாசியை வெவ்வேறு விதங்களில் வீணாக்கி காலனிடம் சென்றார்கள். மாடாகத்திரிந்த மனதை தன்வயப்படுத்தினால் மனமே வாசியாகவும் வாசியே உயிராகவும் ஆகும். அந்தவாசிதான் குருவாகி புருவப்பூட்டை திறக்கும்.

அன்பே சிவமாய் இருப்பதை அறிந்து அறிவெனும ஆயுதத்தால் குருவோடு சேருங்கள். சாஸ்திரங்கள் கூறும் பிரமத்தை அறிந்துகொள்ளவேண்டும். மந்திரங்களை வாயால் கத்தி சத்தமாக சொல்லாது மனதிலேயே நிறுத்தி மௌத்தில் சொல்லிப் பார்க்கவேண்டும். தன்வயிற்றில் தங்கியிருக்கும் சிசுவளர்வதற்காக தாய் தனக்கு பிடிக்காத பத்திய உணவை உண்பதுபோல உனக்குள் இருக்கும் உயிர்வளர நான் கூறியமுறையில் இருந்திட வேண்டும் என்கிறார் சித்தர்.

சித்தமோ, சிந்தனையோ, சீவனோ சக்தியோ, கடவுளோ, சாதி பேதங்களோ இல்லாது முக்திக்காக வேண்டிய சமாதிவந்தது. குருதேவர் கற்பித்தபிரம்ம ஞானம் அகல்வெளி முழுவதையும் ஆட்கொண்டது.எல்லாகர்மபந்தகங்களும் தொலைந்து போய்விட்டதால் இனிப்பிறப்பதற்கு எதுவும் எஞ்சி இருக்கவில்லை.

பூரண சமாதியை சாதகன் குருவருளால் தரிசிக்கிறான். கோடானகோடி நுட்பங்கள் மலிந்த அகல்வெளி முழுவதையும் தனது ஆன்மாவையும் அவன் அறிந்து கொண்டான். எவ்விதமான பற்றுக்களோ ஆசாபாசங்களோ இனி அவனுக்கு எஞ்சி இருக்கவில்லை. எல்லா கர்மபந்தங்களும் தொலையப்பெற்று சுத்த சீவனானவன் குருவருளோடு மீண்டும் பிறவாத முக்தி நிலை அடைந்து ஆன்ம விடுதலை பெறுகிறான்.

சமாதி தத்துவாலயசமாதி, சவிகற்பசமாதி நிர்விகற்பசமாதி, சஞ்சார சமாதி, ஆரூடசமாதி என ஐந்து வகைப்படும்.

யோகப் பயிற்சியினால் பரமார்த்திகப் பிரம்ம நிலையை அடைய லாம். இந்நிலையில் குகைக்குள் இருக்கும் தீபம்போல் மாறுவர். அதனால் அசையாமல் எரிவதைப்போலிருப்பர் தான் என்னும் பேரண்டமாக மாறுவர். தோற்றமில்லா உடலை அடைவர் இதுவே தத்துவாலய சமாதி.

தத்துவாலய சமாதியில் இருக்கும்போது யோகப்பயிற்சியோடு மட்டுமே தொடர்பு இருக்கும் இந்நிலையில்தான் என்ன என்பதை நன்றாக ஆராய்ந்து கொள்ளவேண்டும் அதில் தெளிந்தால் அந்நிலை சவிகற்பசமாதி நிலையாகும்.

தத்துவங்களை மறந்து கவலையற்று இருந்தால் உள் இருக்கும் எல்லாம் அற்புதமாயிருக்கும் எந்நினைவு மின்றி இருக்கும் காலை சித்தம் உண்மை வடிவில் நுழையும் இதுவே பூரணத்தில் நிர்விகற்பமாகும்.

சமாதியில் தடுமாறும்போது பாசம்பற்றும் அப்போது சடங்குகளையும் உலகையும் கனவாக எண்ணிப்பாசத்தை நசுக்கினால் ஏகமாக நிற்கலாம். பிரபஞ்ச விகற்பம் என்னும் மலத்தை ஓட்டினால் அறுபோக நிருவிகற்ப சமாதியை அடையலாம். அப்போது சொரூபத்துள் ஈர்க்கப்பட்டு உடல்தோன்றமில்லா தோற்றம் பெறும் இந்நிலையே அதுபோக நிருவிகற்ப சமாதி என்பர்.

(தொடரும்)

சித்தர் வாழ்க்கை – இடைக்காடர் சித்தர் – 3

Leave A Reply