தேயிலைக்காரி – மலையக எழுத்தாளர் எஸ்தர்

Share

3. மலையகப் பொருளாதாரத்தில் மதுப்பாவனை(?)

இலங்கையில் ஏனைய பிரதேசங்களைவிட மலையகத்தில் அதிகமான மதுபானக் கடையில் உள்ளன. என்னுடைய ஊருக்கு அட்டனிலிருந்து என்னுடைய தோட்டத்துக்கு பஸ் எடுக்கும்போது அட்டன் நகரில் 5 கடைகள் உள்ளன. அப்படி டிக்கோயாவில் 2 கடைகள் உள்ளன. அதைக் கடந்து புளியாவத்தைக்கு ஒரு மதுபானக்கடையும் புளியாவத்தைக்கும் விலாங்கிப்பனை எனும் இடத்தில் கிட்டத்தட்ட இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இன்னுமொரு மதுபானக்கடையும் உள்ளது. அதிலும் தேயிலைத்தோட்டத்தின் மத்தியில் உள்ளது.

அவ்மதுபானக் கடைகளைச் சுற்றியுள்ள தோட்டத்து மக்கள் மது அருந்த வருகிறார்கள். முன்னர் சாஞ்சிமலையிலிருந்து 200/- கொடுத்து முச்சக்கரவண்டியில் சென்று குடித்தவர்கள் தற்போது எரிபொருள் தட்டுப்பாட்டால் எமது ஊரிலிருந்து கிட்டத்தட்ட 5கிலோமீற்றர் தொலைவு நடந்தே சென்று குடித்துவிட்டு நடந்தே வீடு திரும்புகிறார்கள். கடும் மழை குளிர் கடுமையான வேலைப்பளு வேலைச்சூழலினால் குடும்பச்சுமை உட்பட்ட பல உளைச்சலினாலும் அத்துயரங்களை மறப்பதற்குக் குடிப்பதாக கூறுகிறார்கள்.

மலையக எழுத்தாளர் எஸ்தர்

மிகவும் கஷ்டப்பட்டு கடின உழைப்பில் உழைக்கும் பணம் பெரும்பாலும் மதுபானக்கடைகளே உறிஞ்சுகின்றன. சில மதுபானக்கடைகள் தோட்டத்தொழிலாளர்களுக்குப் புத்தகம் போட்டு கடனுக்குக் குடிப்பதாகவும் சம்பளம் போட்டதும் ஆண்கள் அப்படியே மதுபானக்கடைக்கும் போய் அங்கே அவ் உண்டியலில் போட்டுவிட்டு வருகிறார்கள். மதுபானக் கடையில் கடனை அடைத்து விட்டு மேலும் குடித்துவிட்டு வருகிறார்கள். ஏற்கனவே பெண்களின் மிகக்குறைந்த கூலியில் வறுமையில் தள்ளப்பட்டுள்ள குடும்பங்கள் இச்செயற்பாடுகளால் மேலும் துன்பத்தில் தள்ளப்படுவதுடன் தொடர் கடனாலும் உணவுப் பற்றாக்குறையினாலும் மன அழுத்தங்களினாலும் குழந்தை உணவு பிள்ளைகளின் கல்வி, உடல் நிலை போசாக்கின்மை அவ் பெண்களால் பேண முடியாமலும் அவல நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

ஆண்கள் மதுபானத்துக்கு அடிமைப்படும்போது பெண்களே குடும்பத்தின் சுமையைச் சுமக்கும் தொடர் நிலையும் துயர நிலையும் ஏற்படுகிறது. இதனால் குடும்பச் சண்டை வன்முறை ஏற்பட்டுப் பெண்ள் இரவெல்லாம் குடித்து விட்டு வரும் ஆண்களோடு சண்டையிடுவதும் குடும்ப வன்முறையும் இதனால் குழந்தைகள் மனநிலையில் துயரம் வளர்வதாகவும் உள்ளது. இதனால் மீண்டும் பிள்ளைகளின் பசிபோக்க கூடையைச் சுமந்து மீண்டும் அந்த மோசமான பாதையூடாகத் தேயிலைத் தோட்டத்துக்கும் இரப்பர் தோட்டங்களுக்கும் நடக்கிறார்கள்.

தொடர்ச்சியான வறுமையினால் வீட்டிலுள்ள பிள்ளைகளும் தம்முடைய கல்வியைத் தொடர விருப்பம் அற்று குடும்பப் பிரச்சினைக்குப் பணம்தானே தேவையென இளைஞர்களும் யுவதிகளும் கொழும்பு மற்றும் பிற வளர்ச்சியடைந்த நகரங்களைத் தேடிச் செல்கிறார்கள்.

கடந்த வருடம் இவ்வாறு குடும்ப வறுமை கடன் நிமித்தம் மலையக சிறுமியொருத்தி கொழும்பிலுள்ள அரசியல்வாதியொரு வரின் வீட்டில் வேலைக்குச் சென்ற நிலையில் தீவைத்து இறந்தமை முக்கிய விடமாகும். இவ்வாறு பல சிறுமிகள் கொழும்பு பங்களாவில் வறுமை நிமித்தம் வேலைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்முறையும் அடிவாங்கியும் கடினமான வேலைகளைச் செய்வதையும் காணமுடிகிறது. நான் கொழும்பு வெள்ளவத்தை தெஹிவளை பம்பலபிட்டி பகுதிகளில் உள்ள ஹோட்டல்களில் சாப்பிடப்போகும் சந்தர்ப்பத்தில் அவ் உணவகங்களில் உணவு பரிமாறவும் எச்சிப்பாத்திரங்களை எடுக்கவும் தேநீர் தயாரிக்கவும் கொத்து ரொட்டி போடவும் தொழிலாளர்களைக் குறைந்த கூலியில் மலையகத்தில் இருந்தே செல்கின்றார்கள்.

அவர்களைக் கண்டதும் நீங்கள் எந்த இடம் எனக் கேட்கும்போது நிச்சயம் அவர்கள் மலையகத்தில் ஓர் இடத்தைக் கூறுவதைக் கேட்க முடியும்.

200 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் பெருந்தோட்டத்துறை தொழில் முயற்சிக்காக அழைத்து வரப்பட்ட பெண் தொழிலாளர்கள் கடந்த பல தசாப்தங்களாக இலங்கையில் அரசியல் சமூக பொருளாதார மட்டத்தில் மிகவும் பின்தள்ளப்பட்டு நிலைப்பாட்டிலே உள்ளனர். அண்மைக் காலமாக அபிவிருத்தி அடைவுகளிலிருந்து எல்லைப்படுத்தப்பட்டுள்ளார்கள். 21ம் நூற்றாண்டில் பெண்ணுரிமை தொடர்பாக பெரும்பாலும் நியதிகளில் இருந்து மலையகப் பெண்கள் புறந்தள்ளப்பட்டும் காணப்படுகின்றனர்.

இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு என வர்ணிக்கப்படும் பெருந்தோட்ட. துறை உற்பத்தியில் தேயிலையினை பெற்றுத்தரும் தொழிலாளர்களின் 65% மலையகப் பெண்கள் ஏனைய சமூக பெண்களின் அடிப்படை வேகத்துடன் ஒப்பிடும்போது இவர்களது இவ் முன்னேற்றமானது திருப்திகரமானதாக இல்லை. வளர்ந்து வரும் நாடுகளில் ஆண்களை விட ஏறத்தாழ இரு மடங்கு அதிகமாக பெண்கள் குறைந்த வேதனத்தைப் பெறுகின்ற தொழில்களிலே ஈடுபடுகின்றனர் நலிந்தும் உரிமையற்றும் வாழ்கின்ற மலையகத் தமிழ்ப் பெண்களைப் பொறுத்தவரையில் உலகமயமாக்குதலின் பாதிப்பில் உருவாகியுள்ள சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

ஆணாதிக்கக் கருத்தியலின் கங்காணி துரைமார் கணக்குப்பிள்ளை சூழலிலே வளர்க்கப்பட்டுள்ள பெருந்தோட்டத்துறை சமூகம் பெண்கள் தொழில் செய்யும் ஓர் இயந்திரப் பொருளாகியுள்ளனரே தவிர வேறில்லை.

அத்துடன் இவ் இலங்கையில் பெரும் பொருளாதார நெருக்கடியில் இன்னும் இன்னும் இன்னலுக்குள் ஆட்படும் பெண்கள் மலைநாட்டுப்பெண்களே. அதிகமான குடிபோதை அடிமையான ஆண்களினை கொண்ட குடும்பங்களில் குடும்ப வன்முறை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மலையப் பெண்கள் எப்போதும் ஓயாது ஒழியாது வேலைச்சுமை அதிகம் கொண்டவர்கள். இங்கே வருமானம் திரட்டும் உழைப்பாளிகளும் தனிப்பட்ட நிலையில் குடும்ப சுமை சுமக்கும் சுமைதாங்கிகளை நாளாந்தக் கடினமான வேலையை அதிகாலை முதல் பத்துக்கும் எட்டுக்கும் உள்ள காம்பிராவில் சுருண்டு படுக்கும் இரவு வரைக்கும் அவர்களின் சுமையும் வேலையும் நாம் பட்டியலிட முடியும்.

அதிகாலை 5 மணிக்கு எழுந்து பின்னர் உணவுத் தயாரித்து 6.30 மணிக்குப் பிள்ளைகளை ஆயத்தப்படுத்தி 7 மணிக்குப் பிள்ளை மடுவத்தில் பிள்ளையைக் கையளித்துவிட்டு 7.30 மணிக்குத் தேயிலை மலைக்கு ஏறி தேயிலையை 11 மணிவரை பறித்து அதன் பின்னர் சிறுதேநீர் இடைவேளை பெற்று மதியம் வீடுதிரும்பி பிள்ளைமடுவத்தில் பிள்ளையை எடுத்து அக்குழந்தையைப் பராமரித்து உணவு ஊட்டி வீட்டாருக்கும் உணவு தந்து மீண்டும் அவ்தொழிலாளிகள் உண்ணும் உண்ணாமலும் கழுவியும் கழுவாமலும் பிள்ளைமடுவத்தில் மீண்டும் குழந்தையைக் கையளித்து விட்டு 2 மணி முதல் 5 மணிவரை தேயிலை மலையில் வேலை செய்கிறார்கள். வேலைக்குப் பின்னால் ஓய்வு, கொண்டாட்டம், பொழுதுபோக்கு, எதுவுமேயில்லை. அதை அவர்கள் உணர்வதும் இல்லை.

24.822மில்லியன் ரூபாய் வருமானம் பெறும் இலங்கை தேயிலைச் சபையின் தலைவர் ஜெய முல்லி சொய்சா தெரிவித்தார். குறுகிய காலத்தில் 2020 இல் 867.70 ரூபாய் கொண்ட ஒரு கிலோ கிராம் தேயிலை விலை 2021 ம் ஆண்டு இறுதியில் 926.76 ரூபாயாக அதிகரித்தது. ஆனால் மலையக மக்கள் 1000 என்ற ஒருநாட்கூலி என்பது மிகவும் எட்டமுடியாத உயரத்தில் தொங்கிக் கொண்டிருக்கின்றது. 24.822 மில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டித்தரும் மலையக மக்களுடைய வாழ்க்கைத்தரம் 1% ஆலும் தகுதி அடையவில்லை.

ஆங்கிலேயர் காலத்தில் காம்பிராவில் லயம் வாழ்க்கை முறையும் தோட்டுப்புறங்களால் பெரும் போராட்டமாக உள்ளது.மலசல கூடங்கள் சுத்தமான பாதுகாப்பான நீர் வசதியுமின்றி தோட்டத்து மக்கள் காடுகளுக்கும் நீர் நிலைகளாலும் மலம் கழிக்கச் செல்லவேண்டியுள்ளது.மலையக மக்களின் உழைப்பை மட்டுமே எடுத்துக்கொண்டு இவ்வளவு காலம் இலங்கை அரசும் மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மலையக அரசியல் கட்சிகளும் இன்று வரை அவர்களின் வாக்கு வங்கிகளுக்கென பங்காளியாகவுமே வைத்திருக்கிறார்கள். அல்லாது தரமான வாழ்க்கை நீடித்த பொருளாதார கட்டமைப்பை இன்றுவரை அவர்களுக்குத் தரவில்லை என்பது உலகம் அறிந்த பேருண்மை

கடந்த ஆனி மாதத்திலிருந்து தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் சம்பளம் பெறும் விகிதம் மாறியிருக்கின்றது. தேயிலைத் தோட்டங்களால் சிதைந்து வரும் நிலையில் சம்பளமென்பது மாறி தற்போது பறிக்கும் தேயிலையின் அளவுக்கேற்ப கூலி வழங்கப்படுகின்றது. போதிய உரமின்மை பராமரிப்பின்மை ஆகிய பிரச்சினைகளால் தேயிலை கொழுந்து போதியளவு கிலோவுக்கு எடுக்க முடியவில்லை. இந்நிலையில் இத்தொழிலாளர்கள் பறிக்கும் தேயிலை அளவும் கிடைக்கும் கூலியும் தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்த நிலையில் இலங்கை பொருளாதார நிலை அம்மக்களைக் கடுமையாகத் தாக்குகின்றது. அதிலும் மலையக பெண்களின் நிலை மிகவும் மோசமான பேரிடரை அவர்களிடம் விழுந்திருக்கின்றது.

ஒரு நாளைக்குப் பெண்கள் 20-கிலோ கிராம் தேயிலை பறிக்க வேண்டும். ஒரு கிலோ 45/- ரூபாய்களாகும்.பல சமயத்தில் 500-600ரூபாய்தான் சம்பளமாகக் கிடைக்கும். இச்சம்பளத்தை இவ் மலையக மக்கள் இலங்கையின் இக்கட்டான பொருளாதார நிலையில் ஒரு வேளை உணவைக் கொள்ளுமளவு செய்ய இயலாத நிலைக்குள் மீள முடியாதவாறு தள்ளப்பட்டுள்ளனர். பாண் இறாத்தல் ஒன்று 290/- ரூபாய்களாகும் கோதுமை கிலோ 400/- இதனால் சில அங்கத்தவர்கள் கொண்ட குடும்பத்திலோ அல்லது பல அங்கத்தவர்கள் கொண்ட குடும்பத்திலும் முழுமையான பசியினை போக்க இயலாத நிலையே உள்ளது.

தேயிலைக்காரி – மலையக எழுத்தாளர் எஸ்தர்

Leave A Reply