மார்பகங்களை அறுத்தெறிந்த பெண் – தோள் சீலை போராட்ட வரலாறு 1

Share

இந்தியா பிரிட்டனுக்கு அடிமைப்பட்டதை எல்லோரும் குறைசொல்லித் திரிந்தார்கள். இப்போதும் ஏதோ மிகப்பெரிய கொடுமையைப் போல பேசுகிறவர்கள் இருக்கிறார்கள். பிரிட்டிஷார் வருவதற்கு முன் ஏதோ இந்த துணைக்கண்டத்தில் வாழ்ந்த மக்கள் சுதந்திரமாக வாழ்ந்ததைப் போலவும், கல்வி மற்றும் பொருளாதார நிலைமைகளில் மேம்பட்ட வாழ்க்கை வாழ்ந்ததைப் போலவும் கதைகளைக் கட்டித் திரிகிறார்கள்.

ஆனால் நிஜம் என்ன? சாதிகளாய் பிரிக்கப்பட்டு, ஒரு சாதிக்கு இன்னொரு சாதி அடிமை என்ற நிலையில் மக்கள் இருந்தார்கள். உழைக்க ஒரு சாதி, உட்கார்ந்து சாப்பிட ஒரு சாதி. நிலம் வைத்திருப்பவன் ஒரு சாதி. அந்த நிலத்தில் வேலை செய்பவன் ஒரு சாதி என்று அடிமைப்பட்டுத்தான் கிடந்தார்கள்.

உயர்சாதியினர் வசிக்கும் தெருக்களில் செருப்புப் போட்டு நடக்கக்கூடாது. பார்ப்பனர்கள் வசிக்கும் தெருக்களில் பிற சாதியினர் நடக்கவே கூடாது. கோவிலில் கருவறைக்குள் பார்ப்பான் மட்டுமே போகலாம். பிற சாதியினர் குறிப்பிட்ட இடம் வரைக்குமே செல்ல முடியும். தாழ்த்தப்பட்டோர் கோவிலுக்கு வெளியே நின்றுதான் சாமி கும்பிட வேண்டும் என்ற நிலைமை இருந்தது.

எல்லாவற்றுக்கும் மேலாக, தான் நடக்கும் கால்தடத்தை அழித்தபடி நடக்க வேண்டும். அதற்காக பனை ஓலையை பின்புறம் கட்டி நடக்க வேண்டும். உயர்சாதியினர் வரும்போது எதிரே வரக்கூடாது, அப்படி வந்தால் தீட்டு என்றெல்லாம் இழிநிலையில் பல சாதிகள் இருந்தன.

எல்லாவற்றுக்கும் மேலாக, பெண்கள் மாராப்பு போடக்கூடாது. மார்புகளின் அளவுக்கு தகுந்தபடி வரி கட்ட வேண்டும் என்றெல்லாம் கட்டாயப்படுத்தப்பட்ட நிலைமை இருந்தது.

அதிலும் குறிப்பாக இந்து நாடாக இருந்த திருவாங்கூர் சமஸ்தானத்தில் இந்தக் கொடுமை மிகக் கொடூரமாக நிலவியது. இந்த சமஸ்தானத்தில் இன்றைய கேரள மாநிலத்தின் பெரும் பகுதியும் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களான கன்னியாகுமரி திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளும் இருந்தன. தாழ்த்தப்பட்டவர்களும் சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட சாணார் [நாடார்], பரவர், ஈழவர், முக்குவர், புலையர் உள்ளிட்ட 18 சாதியைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணியமுடியாது. அப்படி அணிவது மாபெரும் குற்றம் என வகுக்கப்பட்டிருந்தது.

இந்த ஜாதிப் பெண்கள் தங்கள் உயர் சாதியினருக்கு எப்பொழுதும் மார்பகங்களைக் காட்டி மரியாதை செய்யவேண்டும். பிறந்த குழந்தையிலிருந்து இறக்கும் வரை எல்லா பெண்களும், மார்பகங்களைக் காட்டிக் கொண்டுதான் இருக்கவேண்டும். பெண்களின் மார்பகங்களுக்கு முலைக்கர்ணம் எனும் வரி விதிக்கப்பட்டது.

இந்த இந்துத்துவ அடக்குமுறையை நாங்கிலி என்ற பெண் எதிர்த்து நின்ற வரலாறை தெரிந்து கொள்ள வேண்டும். இது 100 ஆண்டுகளுக்கு முன் திருவிதாங்கூர் இராஜ்யம், நாங்கிலி கிராமத்தில் நடந்தது. இப்போது கேரள மாநிலத்தில் இருக்கிறது. ‘நாங்கிலி’ என்ற சொல்லுக்கு ‘அழகு’ எனப் பொருள். ‘நாங்கிலி’ என்பது தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஒரு பெண்ணின் பெயர்.

முப்பது வயதான இந்தப் பெண்ணின் மார்பகங்கள் மிகப்பெரியது. நாங்கிலி தன்னுடைய மார்பகத்திற்கு விதிக்கப்பட்ட வரியைக் கட்டமுடியாது என்று உறுதியாக இருந்தார். ஆனால், உயர்சாதி ஆட்சியாளர்கள் விடுவதாக இல்லை. (மார்பகங்கல் அளவுக்கு தகுந்தபடி வரி கட்ட முடியாவிட்டால் மார்பகங்கள் அறுத்து எறியப்பட்ட காலம் அது.

தொடர்ந்து வரி வசூலிப்பவர்கள் நாங்கிலியின் வீட்டுக்கு வந்து கட்டாயப்படுத்தினார்கள். ஆனால், அழகி நாங்கிலி இந்த வரியைச் செலுத்துவதை மிகப் பெரிய அவமானமாகக் கருதினார். அதனால் மார்பக வரியை தருவதில்லை என்று உறுதியாக இருந்தாள்.

தொடர்ந்து மறுத்து வந்ததால் வரி பாக்கி அதிகரித்துக் கொண்டே சென்றது. மார்பகம் பெரியதாக இருந்ததால் வரியும் அதற்குத் தகுந்தாற் போல் அதிகமாக இருக்கும். எனவே, ‘முலைக்கர்ணம் பார்வத்தியார்’ அதாவது மார்பக வரியை வசூல் செய்யும், பார்வத்தியார் ஒரு நாள் நாங்கிலியை தேடிப் போய்விட்டார்.

நாங்கிலி தன் வீட்டுக்கு வந்த அவரை, சற்றுப் பொறுங்கள் இதோ வரித் தொகையோடு வருகிறேன் என்று சொல்லிவிட்டு உள்ளே போனாள்.

ஓர் வாழை இலையை எடுத்து விரித்தாள். விளக்கொன்றை ஏற்றி வைத்தாள். தன் மார்பகங்களை ஒவ்வொன்றாக அறுத்து வைத்தாள். அப்படியே சாய்ந்து இறந்தாள். நூறு ஆண்டுகளுக்கு முன் அழகி நாங்கிலி அறுத்து வைத்த மார்பகங்கள் தாம் ‘முலைவரி’ என்ற மார்பக வரிக்கு எதிராக எழுந்த முதல் எதிர்ப்பலை.

இந்த அதிர்வான நிகழ்ச்சிக்குப் பின் அவள் வாழ்ந்த இடம் ‘முலைச்சிபரம்பு’ (மார்பகப் பெண் வாழ்ந்த இடம்) என்றே அழைக்கப்பட்டது. பின்னர் இந்த போராட்ட வரலாற்றை வரலாற்றுச் சுவடுகளிலிருந்து மறைத்திட விரும்பிய ஆதிக்ககார்கள். அதனால் அந்த இடத்தை ‘முலைச்சிபரம்பு’ என்பதற்குப் பதிலாய் ‘மனோரமா காவலா’ என மாற்றினார்கள்.

ஆனால், அவள் வாழ்ந்த அந்த ஓலைக்குடிசை இடிபாடுகளுடன் அதே இடத்தில் இருக்கின்றது. முரளி என்ற ஓவியர் இந்த வரலாற்றைச் சித்திரமாகத் தீட்டி அந்த இடத்தில் வைத்திருக்கின்றார். அந்த ஊர் மக்கள் ஒவ்வொருவரும் “நாங்கள் இந்த வரலாற்றை செவி வழி செய்தியாகக் கேட்டு வளர்ந்தோம். இந்த ஓவியம் எங்கள் உள்ள கொந்தளிப்பை பிரதிபலிக்கிறது என்கிறார்கள்.

சரி, இந்த முலைவரி, மற்றும் அது எப்படி ஒழிந்தது என்பது பற்றி அடுத்தடுத்து நாம் பார்க்கலாம்.

(தொடரலாம்)

Leave A Reply