மீட்பராக வந்த ஆங்கிலேய பாதிரியார் – தோள்சீலை போராட்ட வரலாறு 2

Share

பிரிட்டிஷார் இந்தியாவுக்கு வந்தபிறகுதான், உரிமைப் போராட்டங்களுக்கு மரியாதை கிடைத்தது. அதுவரை, ஆண்டான் அடிமை நடைமுறைதான் இருந்தது. அதிகார வர்க்கத்தினருக்கு எதிராக குரல் எழுப்பினாலே கொடூரமான தண்டனை வழக்கத்தில் இருந்தது.

பிரிட்டிஷாரின் கலாச்சாரத்துக்கும் இந்திய கலாச்சாரத்துக்கும் இடையே மாறுபட்ட அம்சங்கள் ஏராளமாக இருந்தன. அவர்கள், இந்தியாவில் ஒடுக்கப்பட்டு பாதுகாப்பற்று வாழ்ந்த மக்களுக்கு மத அடிப்படையில் பாதுகாப்பு அளித்தார்கள். தொடக்கத்தில் இஸ்லாமிய மன்னர்களும், அடுத்து கிறிஸ்துவத்தை சேர்ந்த பிரிட்டிஷாரும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு வழங்கினார்கள்.

இவர்கள் வந்தபிறகுதான், புதிய இந்தியா உருப்பெறத் தொடங்கியது. சாதி அடிப்படையிலான வர்ணாச்சிரம கொடுமைகள் குறையத் தொடங்கின. சாமான்யர்களின் குரலுக்கு ஓரளவு சட்டபூர்வ பாதுகாப்பு கிடைக்கத் தொடங்கியது.

கல்வியிலும் நாகரிகத்திலும் இன்று நாம் அடைந்துள்ள முன்னேற்றத்துக்கு பிரிட்டிஷார்தான் காரணம். அவர்களிடம் இந்தியாவின் பிற்போக்கு நடைமுறைகளை எடுத்துச் சொல்லி, அவற்றுக்கு எதிரான சட்டங்களை இயற்ற இங்கிருந்த சமூக சீர்திருத்த தலைவர்களின் கோரிக்கைகள்தான் காரணம்.

இன்றைய நமது முன்னேற்றத்துக்கு முன்பிருந்த நிலையையும் அது எப்படி மாற்றப்பட்டது என்பதையும் அறிந்துகொள்வதற்கே பலரும் விரும்புவதில்லை. ஆனாலும், அவற்றை பதிவு செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம். அந்த வகையில்தான் தோள் சீலை போராட்டத்தின் வரலாற்றை நாம் பதிவு செய்கிறோம்.

பதினெட்டாம் நூற்றாண்டில்தான் உலக அளவில் பெண்ணுரிமை போராட்டங்கள் சமுதாய சீர்திருத்த இயக்கமாக உருப்பெற்றது. இந்தியாவில் குமரிமாவட்டத்தில் இத்தகைய உரிமைப் போராட்டத்துக்கான விதைகள் எப்படி தூவப்பட்டன? இந்தக் கேள்விக்குத்தான் நாம் விடைகாணப் போகிறோம்.

குமரி மாவட்டப் பெண்ணுரிமைப் போராட்டத்தின் தொடக்கம் எது தெரியுமா “மங்கையரின் மேலாடைக் கலகம்” அல்லது, “தோள்சீலைக் கலகம்” என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். நிலவுடைமையாளர்களின் கையில் இருந்த அந்த மண்ணில் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெண்கள் விலங்குகளைப் போல அடிமைகளாக நடத்தப்பட்டனர்.

மேலாடை அணியும் உரிமைகூட அவர்களுக்கு தரப்படவில்லை. இக்கொடுமையை எதிர்த்து. தாழ்ந்த வகுப்பைச் சார்ந்த ஆடவர்களும் பெண்டிரும் படிப்படியாக மெல்ல மெல்ல எதிர்ப்புக்குரல் எழுப்பத் தொடங்கினர். அவர்களின் எதிர்ப்புக் குரல்கள் காற்றில் கலந்து, கரைந்து, மறையாமலிருக்க மேல்நாட்டுக் கிறிஸ்தவப் பாதிரியார்கள் உதவினார்கள். அவர்களுடைய உதவியோடு, ஏழைமக்களின் அவலக்குரல்கள் பேரலையின் ஓசையாக மாறியது. இந்தப் போராட்டத்திற்குக் கிறிஸ்தவ சமயத்தின் எழுச்சியும். மேல்நாட்டுப் கிறிஸ்தவ பாதிரிமார்களின் தன்னலமற்ற சமுதாய. சமயத் தொண்டுகளுமே அடிப்படைக் காரணமாக அமைந்தன.

இன்று சமுதாயத்தின் எல்லா வகுப்பைச் சார்ந்த பெண்களும் நாகரிகமான மேலாடைகளை அணிந்து தோற்றமளிக்கின்றனர். உயர்குலத்தைச் சார்ந்த பெண்கள் பொறாமை அடையும் அளவிற்குக்கூட தாழ்த்தப்பட்ட வகுப்பினைச் சார்ந்த பெண்களின் ஆடைகள் இருக்கின்றன. இந்த நவீன மேலாடைகளை அணியும் உரிமை தங்களுக்கு எவ்வாறு கிடைத்தது என்பதை இன்றைய தலைமுறையினைச் சார்ந்த இளம்பெண்கள் அறிவதற்குரிய வாய்ப்புகள் இல்லை.

அதை அறிந்துகொள்வதே அவமானம் என்று கருதும் நிலை இருக்கிறது. அல்லது, அப்படி கற்பிக்கப்பட்டு, தங்களுடைய முன்கால அடக்குமுறைகள் இளம் தலைமுறைக்கு தெரியாமல் செய்ய உயர்ஜாதியினர் சதி செய்திருக்கிறார்கள்.

ஆம், வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு போராட்டத்தின் விளைவாகத்தான் நவநாகரிக உடை அணியும் உரிமை இன்றைய தலைமுறையினருக்கு கிடைத்தது என்பதை சொல்ல வேண்டியது அவசியம். ஒருஆண்டு இரண்டு ஆண்டுகளில் இந்த உரிமை கிடைத்துவிடவில்லை. முப்பத்தைந்து ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்ற ஒரு பெரிய போராட்டத்தின் பயனாகத்தான் இந்த உரிமை நமது பெண்களுக்குக் கிடைத்தது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற பலர் கொடூரமாக கொல்லப்பட்டனர். பலர் சிறையில் சித்திரவதைகளை அனுபவித்தனர்.

19 ஆம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக குமரி மாவட்டம் இருந்தது. அந்த சமஸ்தாத்தின் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெண்களுக்கு உடலின் இடைப்பகுதிக்கு மேல்பாகத்தை ஆடையால் மூடி மறைக்கும் உரிமை மறுக்கப்பட்டிருந்தது. திருவிழாக்கள், சந்தை வெளிகள், வீதி ஓரங்கள் ஆகியவைகளில்கூட மேலாடைகள் இல்லாமல் அரைநிர்வாணமாக அலைந்து திரிந்தனர். அளும்வர்க்கமும் அரசியல் செல்வாக்குமிக்க அதிகார வர்க்கத்தின் கொடிய மனப்போக்கே இதற்கு காரணம்.

1806-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி, முதல் கிறிஸ்தவத் தொண்டரான வில்லியம் தோபியாஸ் ரிங்கல் தவ்பே என்பவர் ஆரல்வாய் மொழிக் கணவாயைக் கடந்து திருவிதாங்கூர் மாநிலத்தில் நுழைந்தார். அவருடைய வரவுதான், பெண்ணுரிமைப் போராட்டத்தின் தொடக்கத்திற்கும், குமரிமாவட்ட மக்களின் வாழ்க்கையில் புது அத்தியாயம் எழுதப்படவும் காரணமாகியது. அவரை, வேத மாணிக்கம் என்பவர், வரவேற்று மயிலாடி என்ற ஊருக்கு அழைத்துக் சென்றார். அங்கு, தனது வீட்டில் தங்க வைத்தார்.

மேல்நாட்டு கிறிஸ்தவ தொண்டர் பத்து ஆண்டுகள் தொடர்ந்து உழைத்து, இந்தப் பகுதியில் ஏழு திருச்சபைகளைக் கட்டியெழுப்பினார். மயிலாடி என்ற ஊரில் 1809-ஆம் ஆண்டு இவர் கிறிஸ்தவத் திருக்கோயிலைக் கட்டினார். அதுதான் புராட்டஸ்டாண்ட் பிரிவைத் சார்ந்த இம்மாவட்டக் கிறிஸ்தவர்களின் முதல் கோயிலாகும். 1816-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23 ஆம் தேதி மிஷன் பொறுப்புகளை வேதமாணிக்கத்திடம் ஒப்படைத்துவிட்டுத் தனது நாட்டுக்கு திரும்பினார்.

(தொடரலாம்)

Leave A Reply