பள்ளிகளில் சினிமா காட்டுங்க… ஆசிரியர்களின் சிரமத்தையும் பாருங்க… – உதயமுகம் வார இதழ் கவர் ஸ்டோரி

Share

பள்ளிக்கல்வித் துறையிலிருந்து வெளியான உருப்படியான அறிவிப்பு பள்ளிகளில் மாணவர்களுக்கான சினிமா திரையிடுவதுதான்.

இளம் மனங்களில் திரைப்படம் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து அனுபவப்பட்டவன் என்ற வகையில் இந்தத் திட்டத்தை மனப்பூர்வமாக வரவேற்கிறேன்.

எனது பள்ளி வாழ்க்கையில் ‘வா ராஜா வாÕ, ‘திக்குத்தெரியாத காட்டில்’, ‘மாணவன்’ போன்ற படங்கள் ஏற்படுத்திய பாதிப்பு இன்னமும் தொடர்கிறது.

தமிழில் பெற்றோர்களுடன் குழந்தைகளும் அமர்ந்து பார்க்கும் திரைப்படங்களைத் தயாரிப்பதற்கு யாரும் முன்வருவதில்லை. இதற்கு காரணம் அத்தகைய படங்களுக்கு போதுமான ஊக்குவிப்பு இல்லை.

பள்ளிகளில் குழந்தைகளுக்கான திரைப் படங்களை திரையிடும் திட்டம் அத்தகைய திரைப்படங்களைத் தயாரிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையை விதைத் திருக்கிறது.

பொதுவாக, ஆங்கிலத்தில் டிஸ்னிலேண்ட் தயாரித்த படங்கள் அனைத்தும் குழந்தைகளின் மனதை பண்படுத்தும் வகையில் இருக்கும். அந்த படங்களுக்கு உலக அளவில் மார்க்கெட் இருப்பதால் தயாரிப்பு நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இல்லை.

அரசு வரிவிலக்குடன், அல்லது அரசு உதவியுடன் படங்கள் தயாரிக்க முடிந்தால், அவற்றை பள்ளிகளில் திரையிட ஊக்கமளித்தால் நிச்சயமாக குழந்தைகள் மனதில் படைப்பாற்றல் வளரும் வாய்ப்பு இருக்கிறது.

வெறுமனே, படங்களைத் திரையிடுவது மட்டுமின்றி அந்தப் படங்கள் குறித்து விமர்சனம் செய்யும் வாய்ப்பும் வழங்கப்படும், அத்தகைய விமர்சனங்கள் செய்யும் மாணவர்களுக்கு போட்டி உண்டு, பரிசு உண்டு, உலகை சுற்றும் வாய்ப்பு இருக்கிறது என்பதெல்லாம் நல்ல முயற்சி.

நாங்கள் படிக்கும்போது நல்ல திரைப்படங்கள் சிலவற்றுக்கு பள்ளியிலிருந்தே அழைத்துப் போயி ருக்கிறார்கள். அப்படித்தான் கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகிய படங்களை பார்த்தோம்.

துப்பறியும் படங்களில்கூட மாணவர்களை திறமையாக பயன்படுத்தி துணிச்சலை மனதில் பதியவைத்த படங்கள் இருக்கின்றன.

ஏதோ ஒருவகையில் கல்வியின் முக்கியத்துவம், நல்ல பழக்கங்கள், சமூகநீதி, நமது வரலாறு, மனிதகுலம் தோன்றி வளர்ந்த விதம் ஆகியவற்றை குழந்தைகளின் மனதில் பதிய வைக்கும் வகையி லான திரைப்படங்கள் மாணவர்களுக்கு திரையிடப்படுவது அவர்களுடைய எதிர்காலத்தை செதுக்க உதவும்.

பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் சாதி உணர்வு, பிரிவினை மனப்பான்மை, மரியாதை இன்மை ஆகியவை தலைதூக்கியுள்ள இந்தக் காலகட்டத்தில் தமிழ்நாடு அரசின் இந்த முன்னெடுப்பு பாராட்டுக்குரிய விஷயமாகும்.

குழந்தைகளுக்கு பிடித்த நடிகர்களின் படங்களில்கூட வன்முறை, காதல் என்று கலந்து அவர்களுடைய பிஞ்சு மனங்களில் சலனத்தை ஏற்படுத்தும் வகையில்தான் இன்றைய திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன.

எதார்த்தத்துக்கு புறம்பான காட்சி அமைப்புகளுடன் தயாரிக்கப்படும் சினிமாக்கள் குழந்தைகளை தவறான பாதையில் திசைதிருப்பும்.

ரஜினி, சிவகார்த்திகேயன், விஜய் உள்ளிட்ட நடிகர்கள் குழந்தைகளுக்கு பிடித்தவர்களில் சிலர். இன்றைய நிலையில் சிவகார்த்திகேயன் குழந்தைகள் விரும்பும் நடிகராக வளர்கிறார்.

ஆனால், அவருடைய படங்களில்கூட குழந்தைகளுக்கு தேவையில்லாத, அவர்களுக்குள் சலனத்தை ஏற்படுத்தும் காட்சிகள் இடம் பெறுகின்றன. அவரைப் போன்றவர்கள் குழந்தை களுக்கான திரைப்படங்களை இனியாவது தயாரிக்க முன்வரலாம்.

மாயாஜாலம், பக்தி என்று இல்லாமல் அறிவுப்பூர்வமான கதையம்சம் கொண்ட படங் களை தயாரிக்க முன்வரலாம். உலக சினிமாக்களை மொழிமாற்றி குழந்தைகளுக்கு திரையிடுவதைக் காட்டிலும், நேரடியாகவே குழந்தைகளுக்கான படங்களை தயாரிக்க அரசாங்கமே உதவலாம்.

குழந்தைகள் விஷயத்தில் பெற்றோரும் கவனம் செலுத்த அறிவுரைகள் வழங்கவேண்டும். நமது வீடுகளிலேயே தொலைக்காட்சித் தொடர்கள் என்ற பெயரில் தினமும் யாரை எப்படி கெடுக்கலாம், எப்படி கொலை செய்யலாம் என்று நச்சுச் சிந்தனைகளை பரப்பும் வேலை நடைபெறுகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக, ஆசிரியர் களின் வேலைச்சுமை கடுமையாக அதிகரித் திருப்பதாகவும், அவர்கள் கற்பிக்கும் வேலையில் முழுமையாக கவனம் செலுத்த முடியவில்லை என்றும் திமுக அரசு அமைந்ததில் இருந்து புலம்புகிறார்கள்.

திமுக அரசாங்கத்தின் பலமே ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும்தான். அவர்களுடைய கோரிக்கையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கவனிப்பதே இல்லை என்று கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள்.

அவரோ, தான் பொறுப்பேற்றுள்ள புதிய துறையைப் பற்றி அறிந்துகொள்ளக்கூட விரும்பா தவராக இருக்கிறார். அவருடைய இந்த அலட்சியம், அவருக்கு மட்டுமல்ல, முதலமைச்சருக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்தி இருக்கிறது.

2024 மக்களவைத் தேர்தலில் திமுக 40 இடங்களையும் கைப்பற்ற வேண்டும் என்றால் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை காது கொடுத்து கேட்கவேண்டும். கேட்டால் மட்டும் போதாது, முதலில் கமிஷனரை நீக்கிவிட்டு, அல்லது அவருடைய அதிகாரத்தை குறைத்துவிட்டு, முடிவெடுக்கும் அதிகாரத்தை பள்ளிக்கல்வியின் வளர்ச்சி குறித்தும், ஆசிரியர்களின் தேவை குறித்தும் அறிந்த இயக்குனர்களிடம் அதிகாரத்தை கொடுக்க வேண்டும்.

அதாவது, அரசு என்னதான் நல்ல திட்டங்களை அறிவித்தாலும், அவற்றை நடைமுறைப்படுத்த ஆசிரியர்களுக்கு நிம்மதியான மனநிலை அவசியம் என்பதை உணரவேண்டும். •

-ஆதனூர் சோழன்

Leave A Reply