வாழ்வின் வண்ணங்கள் 33 – கை.அறிவழகன்

Share

மொழி புறவுலகின் சித்திரம் மட்டுமில்லை, மானுடர்களின் நெடிய வரலாற்றின் அகவுலகை சுமந்தபடி ஒய்யாரமாக வீற்றிருக்கும் பெருஞ்சிலை. அதன் ஊடாகப் பயணிப்பவர்களுக்கு சகலத்தையும் காட்சிப்படுத்தும் மாயக்கண்ணாடி.

மொழி பிரபஞ்சத்தின் இருள் சூழ்ந்த கரும்பொருண்மையின் மீதும் வெளிச்சம் பாய்ச்சும் பெருஞ்சுடர். சாம்ராஜ்யங்களின் கோட்டைகள், எளிய மனிதர்களின் நம்பிக்கைகள், மாமன்னர்களின் வாள்முனைகள், முதல் விவசாயியின் ஏர்முனை, புலப்படாத கடவுளின் கண்கள் என்று எல்லாவற்றிலும் படிந்து கிடக்கிற எரிமலைக் குழம்பின் சாம்பல் மொழி.

அதன்மீது ஏறி நின்று நான்தான் நம்பர் 1, நான்தான் உனக்கு சொல்லைக் கொடையளித்தேன் என்று யாரேனும் சொல்வதற்கு முயற்சிக்கும் போது அது பெருங்குரலெடுத்து அழாது. மிக மெல்லிய பெருமூச்செரிந்து விட்டு அதன் போக்கில் ஓடிக்கொண்டே இருக்கும்.

ஆனால், அந்த மூச்சுக் காற்றில் அகங்காரம் எரிந்து நீங்கள் எழுதிய அத்தனையும் சாம்பலாகும்‌. வரலாற்றில் உங்கள் ஒற்றை வரி கூட மிச்சமில்லாமல் துடைக்கப்பட்டிருக்கும். ஏனெனில் மொழிதான் எழுதுகிற வாய்ப்பை உங்களுக்கு வழங்குகிறது.

பேரண்டத்தில் இல்லாத எதனையும் இங்கு நாம் கண்டடைவதில்லை, நாம் எழுதிய சொற்களும் அதன் பொருளும் ஏற்கனவே இங்கு பொதிந்து கிடக்கிற சங்கிலித் தொடர்தான்.

ஆகவே என்னைப் பொறுத்தவரை மொழியானது புலப்படாத மற்றுமொரு கடவுள், ஏற்கனவே கண்டறியப்பட்ட கடவுளர்களும் கூட மொழியின் துணையின்றி தங்களது இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளவியலாத பொதிமூட்டைகள் தான்.

சரி, போதும், இனி நாம் நேரடியாக விஷயத்துக்கு வருவோம். “அறைகலன் (அறைக்கலன்) என்றொரு சொல்லை நான்தான் தமிழுக்குக் கொடையளித்தேன்” என்று ஜெயமோகன் சொல்லியதும் பிறகு அதன் மீதான விவாதங்களும் சொற்களின் பின்புலத்தை அதன் நெடிய பயணத்தை நாம் உணர்ந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பாக இருக்கிறது.

முன்னதாக ஜெயமோகன் ஒரு தமிழ் எழுத்தாளர் என்பதையே நான் மனதளவில் ஏற்றுக் கொள்ளவில்லை, உங்களுக்கு வியப்பாக இருக்கலாம், அல்லது நகைப்பாகக் கூட இருக்கலாம். ஆனால் அப்படி ஒரு எண்ணம் தொடர்ந்து எனக்குள் ஊடுருவி இருக்கிறது.

சில நேரங்களில் ஜெயமோகனை தமிழின் எழுத்தாளராக ஏற்றுக் கொள்ளவியலாதபடிக்கு எது உன்னைத் தடுக்கிறது என்ற கேள்வியை எழுப்பி விசாரணை செய்து கொள்கிறபோது நீதியோடு கூடிய விடை கிடைக்கப் பெறுகிறது.

ஒருவேளை ஜெயமோகனுக்கு நவீன உலகின் அங்கீகாரம் பெறுகிற வயப்படுதிறன் “Lobbying” என்கிற கலை கைவரப்பெற்று நாளை நோபெல் விருதினைப் கூடப் பெற்றுக் கொள்கிற வாய்ப்புக் கிடைக்கலாம். அப்படி நிகழ்கிற கணத்திலும் நான் ஜெயமோகனை தமிழின் எழுத்தாளர் என்று ஒப்புக் கொள்ள மாட்டேன்.

ஜெயமோகன் திடீரென்று ஒருநாள் தனது ஞானமரபின் கீழ் தழைத்திருக்கிற போதி மரத்தடியில் இருந்து எழுந்து தமிழை நாம் இனி ஆங்கில எழுத்துக்களால் எழுதிப் பழகுவோம் என்று ஓலமிட்டார். சகிக்கவியலாத அந்த ஓலம் எமது மொழியின் மீது எறியப்பட்ட காழ்ப்பு.

“அல்லி மலர்” என்று எழுதப்படுகிற போது அதன் சுகந்தமான மணத்தை என்னால் உணரமுடியும், எனது வாழ்நாளில் நான் கண்டுணர்ந்த அல்லிக் குளங்களை, அல்லி மலர் குறித்த கதைகளை, அல்லியோடு தோற்றத்தில் ஒப்பியிருக்கிற பிறநிலத்தின் மலர்களை, அல்லியோடு எனது இதயத்தில் கிடக்கிற நினைவுகளை எல்லாம் தொகுத்து நான் “அல்லி மலர்” என்று எழுதுகிற போது உணர்கிறேன்.

அதுதான் எனது எழுத்தின் மதிப்பீடு, உள்ளடக்கம். “Alli Malar” என்று எழுதிப் பழகு என்று யாராவது சொன்னால் அது மொழி குறித்த எந்த அடிப்படை உணர்வும் இல்லாத பிதற்றல். எழுத்தானது அதன் மீதிருக்கும் வணிக இயல்புகளைக் கடந்து அந்த சமூகத்தின் ஆன்மமாக நிற்கிறது. அதன் எழுத்து வடிவங்கள் மகத்தான வரலாற்றை சுமந்து பயன்படுத்துகிற மனிதர்கள் வழிபடத்தக்க மதிப்பீடு கொண்டவை.

“எமது எழுத்தும் சொல்லும் எமது வணக்கத்துக்குரியவை, எமது உயிர்க்கு நிகரானவை”, இப்போதும் இந்த சொற்களை தட்டச்சுகிற போது இனம்புரியாத சிலிர்ப்புடனும், உணர்ச்சி மயமான பூரிப்புடனும் உடலும் மனமும் சங்கமிப்பதை உணர்கிறேன்‌.

யார் ஒருவர் அத்தகைய உள்ளார்ந்த உணர்வோடு தனது மொழியை நேசிக்கிறவரோ அவரே அந்த மொழியின் எழுத்தாளர் என்கிற உரிமையைக் கோருகிற தகுதியுடையவர்.

அந்த வகையில் முழுக்க ஒரு 5000 ஆண்டுகால மொழியை சில நூறாண்டுகால மொழியின் கைகளின் ஒப்பளித்து விடத்துணிகிற ஒருவரை எமது மொழியின் எழுத்தாளர் என்கிற வரிசையில் வைப்பதற்கான வாய்ப்பே இல்லை.

அவர் மலையாளத்தில் வேண்டுமானால் எழுதிக் கொள்ளலாம். ஆனால் அதற்கான சாத்தியமும் இல்லை, மலையாளம் தாய்மொழி குறித்த இத்தகைய அடிப்படைவாத சிந்தனைகளால் நிரப்பப்பட்டிருக்கிறது. ஆகவே ஆசானால் அங்கும் குப்பை கொட்டவியலாது.

பிறகு எழுத்தாளனின் அறம், எந்த மொழியிலும் இன்றைக்கு நிலைத்திருக்கிற ஒரு எழுத்தாளனின் சொற்கள் யாதெனில் நீதியின் பாற்பட்டவை. மதம், சாதி, இனம், மொழி என்று அனைத்தையும் கடந்து எல்லா நிலத்திலும் பரவிக் கிடக்கிற எளிய மனிதர்களின் குரலாகவே எழுத்தாளனின் குரல் வரலாற்றில் எஞ்சி இருக்கிறது. செகாவ் அப்படித்தான் இன்னும் எண்ணற்ற மானுடர்களின் இதயங்களில் வாழ்கிறான்.

ஜெயமோகன் ஒற்றை மதவாதப் பிணைப்பை முன்னிறுத்தும் ஒரு இந்துத்துவ எழுத்தாளர், அவரால் அறம் சார்ந்து மொழியை இயக்கவியலாது, புனைவுகளில் ஒருவேளை அவர் மானுட அறத்தை எங்காவது முன்வைத்திருக்கலாம், ஆனால் அது எத்தனை உண்மையானது என்பதைக் கண்டறிவது கடினம்.

கலைஞர் ஒருமுறை Tab என்கிற தொழில்நுட்ப சொல்லுக்கு நிகரான தமிழ் சொல்லொன்றை மிக எளிமையாக “கணிப்பலகை” என்றழைத்தார். எளிமையான பெருளடர்த்தி கொண்ட அந்த சொற்களை நான்தான் தமிழுக்குக் கொடையளித்தேன் என்று ஒருபோதும் கோரவில்லை.

அவரது சங்கத்தமிழில் உரைநடை வடிவம் பெற்ற பல பாடல்களின் சொற்களை எளிமையான தமிழில் அவர் பயன்படுத்தி இருக்கிறார். “நாவாய்” என்றொரு கப்பலின் வடிவத்தை அவர் விளக்குவது சுவையும், பெருமிதமும் கொண்ட வாசிப்புணர்வு.

கலைஞரையும் தெலுங்கு மொழியின வரிசையில் வைப்பவர்கள் இன்றும் இருக்கிறார்கள், ஒருவேளை அது உண்மையென்றே வைத்துக் கொள்வோம், ஆனால் கலைஞருக்கும், ஜெயமோகனைப் போன்றவர்களுக்கும் என்ன வேறுபாடு என்றால் அவர்கள் கையாள்கிற மொழியின் மீது அவர்கள் காட்டும் அளப்பரிய நேசம். அந்த நேசத்தை அவர்களின் வாழ்வினூடாகப் பயணிக்கிற ஒவ்வொரு சொல்லும் எதிரொலித்தபடியே இருக்கும்.

அறை(க்)கலன் மிகப்பெரிய பித்தலாட்டம் என்றால், தமிழின் நம்பர் 1 என்கிற கோரிக்கை பித்தலாட்டங்களின் நம்பர் 1. ஜெயமோகன் தன்னைப் பின்தொடரும் இளைஞர்களிடம் “Quantity is more important” என்றொரு அறிவுரை சொல்வார். அபத்தமான வணிக மயப்படுத்தப்பட்ட Quantity சிந்தனையே அவரது ஆழ்மனதை எடைபோடுவதற்கு உதவும் ஒரு சோற்றுப்பதம்.

ஜெயமோகனோடு நெருக்கமாக இருக்கும். அவரது எழுத்தை வியந்தோம்பும் பலர் என்னோடு நெருக்கமாக இருக்கிறார்கள், ஜெயமோகன் தமிழ் எழுத்தாளர் இல்லை என்கிற என் போன்றவர்களின் சிந்தனை அவர்களை காயப்படுத்தும், சிலரை எரிச்சலூட்டும், ஆனால், அதற்காக உயிரினும் மேலான எமது மொழியை அதன் மதிப்பீடுகளை சமரசம் செய்து கொள்ளவியலாது.

ஜெயமோகனின் பல கதைகள், கட்டுரைகள் தொழில் முறையிலான எழுத்தாளர்கள் பலருக்கு பயிற்சியளிக்கும் திறன் பெற்றவை. அவரது உழைப்பு போற்றத்தக்கது, அவரது எளிமையான உரையாடல்களை, விவாதங்களை எழுப்புகிற ஈடுபாடு மதிக்கத்தக்கது. ஆனால், அவற்றைத் தாண்டி ஒரு மொழியின் எழுத்தாளன் அந்த மொழி பேசும் சமூகத்தின் மனசாட்சியாக நிற்பவன். அறத்தின் பக்கமாக நின்று தனது மொழியை ஆழமாக நேசிப்பவன்.

ஜெயமோகன், தமிழின் வழியாகப் பிழைக்கும் ஆற்றல் பெற்ற தொழில்முறை எழுத்தாளரேயன்றி தமிழ் சமூகத்தின் ஆழமான சிந்தனை மரபை எதிரொலிக்கும் குரலாக அவரால் ஒருபோதும் மாற்றமடைய முடியாது. அதே வேளையில் ஜெயமோகன் என்கிற தனியுடல் கொண்ட மனிதர் மீது வெறுப்பின் நிழல் ஒருபோதும் படியாது.

புகழும், பொருளும் பெற்று எல்லா நலங்களோடும் அவர் நீடூழி வாழ வேண்டும். அவர் நம்புகிற இந்திய ஞானமரபும், நாம் நம்புகிற எளிய மானுடர்களின் மகத்தான அன்னைத் தமிழும் அவருக்கு நன்மைகளைக் கொண்டு வரட்டும்.

வாழ்வின் வண்ணங்கள் 34 – கை.அறிவழகன்

Leave A Reply