வாழ்வின் வண்ணங்கள் 11 – கை.அறிவழகன்

Share

சாதிய சமூகமாக மாற்றியது யார்?

கி.பி 6 ஆம் நூற்றாண்டு முதல் 9 ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தின் வட பகுதியை‌ப் பல்லவர்களும், தென்பகுதியைப் பாண்டியர்களும் ஆண்டனர்.

முற்று முழுதாக இல்லையென்றாலும் பெரும்பாலான நிலப்பகுதியை இவர்கள் இருவரும் தக்க வைத்திருந்தனர், கி.பி 2 ஆம்‌ நூற்றாண்டில் சோழர்கள் ஒரு‌ சிறு அரச குலத்தவராக இருந்து பல்லவர்களுக்குத் துணை‌ புரிந்தனர்.

இக்காலகட்டத்தில் பல்லவர்களுக்கும், பாண்டியர்களுக்கும் தொடர்ந்து போர்‌ நிகழ்ந்த வண்ணம் இருந்தது, இறுதியில் பல்லவர்களின் கை ஓங்கி பாண்டியர்களை வென்றனர். ஆனால் தொடர்‌ போரினால் பல்லவர்கள் களைப்படைந்திருந்தனர்.

போர்‌ வெற்றியை‌ ஆட்சி அதிகாரமாக மாற்றும் முயற்சியில் பல்லவர்கள் தோற்றுப் போனார்கள்‌ என்றே சொல்லலாம். திருப்புறம்பியத்தில் நிகழ்ந்த ஏறத்தாழ இறுதிப்பெரும் போரில் பல்லவர்கள்‌ அடைந்த வெற்றிக்கு மிக முக்கியக் காரணமாக இருந்தவர்‌ விஜயாலயச் சோழர்.

தஞ்சை உள்ளிட்ட பெரு நிலப்பரப்பை திருப்புறம்பியப் போருக்குப் பின்னரே‌ விஜயாலயச்‌ சோழர் தனி‌ அதிகாரம்‌ கொண்ட நாடாகப் பிரகடனம் செய்கிறார். இவருக்குப் பிறகு பராந்தகச் சோழன்‌ சோழர்‌ தேசத்தைக் கட்டமைப்பதில் முக்கியப் பங்காற்றியவர்.

அன்றைய வரலாற்றில் பொருளாதாரம் எப்படி இருந்தது என்பதைக் குறித்து நாம் அறிந்து கொள்ள வரலாற்றாசிரியர்களின் மேற்கோள்களை‌யும்‌ தேடலாம். மார்க்ஸ் இந்தியப் பொருளாதாரம் குறித்து தனியாக எழுதவில்லை‌ என்றாலும் ஆசியப் பொருளாதாரம் என்ற பதத்தில் இங்கு நிலவிய சமூக நிலைப்பாட்டை முன்வைக்கிறார்.

ஆசிய உற்பத்தி முறை‌ என்ற பெயரின்‌ கீழ் வரும் கிராமங்களில் நிலத்தை உழுது பயிரிட்ட பண்ணை வேலைக்காரர்கள் அரசரிடம் இருந்து மானியம் பெற்றனர், ஆனால் பிரபுக்களின் ஆணைக்குக் கட்டுப்பட்டவர்கள்.

ஆசிய‌ உற்பத்தி முறையில் அரசனே நேரடியான‌ நில உடமையாளன், நிலம் யாருக்கும் தனி உடமையில்லை, மாறாக அந்த கிராமத்திற்கே நிலம் சொந்தமாக இருக்கும். தன்னிறைவு பெற்ற கிராமங்களே ஆசிய உற்பத்தி முறையின் சிறப்பம்சம்.

தனக்குரிய நிலம், தனக்குரிய சமூக அமைப்புடனும், கலை மற்றும் பண்பாட்டுக் கூறுகளோடும் தனியாக உற்பத்தியில் ஈடுபட்ட கிராமங்களில் உற்பத்திக்கான கருவிகளைத் தயாரிக்கும் மனிதர்களும் உள்ளடக்கம். உற்பத்தியை மேற்பார்வையிடுகிற நிலப்பிரபுக்கள் அரசரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்து வரி வசூலிப்பார்கள்.

குறைந்த அளவிலான அடையாள வரியாக இருந்த இந்த வரிமுறை பொருளாதாரத்தை பாதிக்கிற காரணியாக இருக்கவில்லை.

அரசர்கள் மாறிக்கொண்டே இருந்தார்கள், பல படையெடுப்புகள் நிகழ்ந்தன, ஆனால் அமைப்பு அப்படியே இருந்தது. தமிழகக் கிராமங்கள் பெரும்பாலும் அப்படியே இருந்தது. ஆசிய உற்பத்தி முறையில் இருந்து ஒரு சிறு‌மாறுபாடாக நிலம் பல பிரிவினருக்கும் உடமையாக இருந்தது.

விளிம்பு நிலைக்கிராமங்கள் அரசர்களின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் வராமல் பிரதிநிதிகளால் மேற்பார்வை‌யிடப்பட்டது. மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்த போதும் தமிழகக் கிராம அமைப்பு‌ முறை‌ தன்னிறைவு‌ பெற்றதாக இருந்தது.

சோழர் காலம் தான் இந்தத் தன்னிறைவு பெற்ற கிராம அமைப்பை அடித்து நொறுக்கியது, சாதி அமைப்பை வலுவாகக் காலூன்றச் செய்த பெருமை சோழர்களையே சாரும் என்றால் அது மிகையில்லை.

நொபுறு கரோஷிமா எனும் ஜப்பானிய வரலாற்றாய்வாளர் தன்னிறைவு பெற்ற கிராம அமைப்பை முதலாம் ராஜராஜன் மையப்படுத்தப்பட்ட அதிகாரத்தின் மூலம் மாற்றியமைத்தான் என்ற வாதத்தை முன்வைக்கிறார்.

முதலாம் ராஜராஜனின் காலத்தில் தான் கோவில்கள் சமூக அமைப்பில் பெரிய மாற்றத்தை விளைவித்ததாகவும், பிராமணர்கள் பெருமளவில் குடியேற்றமானார்கள் என்றும் ஆய்வாளர்கள் மட்டுமின்றி அக்கால வரிசையில் கண்டறியப்பட்ட கல்வெட்டுக்களும் மெய்ப்பிக்கின்றன.

வடக்கிலிருந்து பிராமணர்கள் கொண்டுவரப்பட்டு சதுர்வேதி மங்கலம் என்ற பெயரில் விளைநிலங்கள் பரிசளிக்கப்பட்டன. பிராமணர்கள் மட்டுமில்லாமல் வேளாளர் எனப்படும் படைத்தலைவர்களாக இருந்தவர்களுக்கும் அரசர்களுக்கு நெருக்கமாக இருந்த பெருநிலக்கிழார்களுக்கும் நிலம் தானமாக வழங்கப்பட்டது.

தன்னிறைவு பெற்ற கிராமங்களில் இருந்த உழைக்கும் மக்கள் இந்த நிலங்களில் பண்ணை அடிமை வேலை செய்வதற்காக முதன்முறையாக நியமிக்கப்பட்டார்கள். சோழர் காலத்தில் அரசர்களுக்குப் படைத்தலைவர்களாக பல்வேறு பிரிவினர் இருந்து வந்தார்கள்.

பிராமணர்கள் அதிகாரம் மிக்க மதகுருக்கள் என்கிற சமூக நிலைப்பாட்டையும், வேளாளர்கள் படைத்தலைவர், நில உடமையாளர் என்கிற சமூக நிலைப்பாட்டையும் பெற்று வலிமையான உழைப்பை உறிஞ்சும் பிரிவாக மாறத்துவங்கின.

பள்ளிகள், கள்ளர், மறவர் மற்றும் அகமுடையோர் போன்றோர் படைகளில் முக்கியப் பங்காற்றிய சூழலில் நிலமானியம் பெற்றுக் கொண்டு பலம் பொருந்திய நிலவுடமைச் சமூகமாக மாறத் துவங்கியது.இந்த வளர்ச்சி ஒரு கட்டத்தில் வேளாளர்களுக்கு இணையான அதிகாரமும் செலாவாக்கும் பெற்றவர்களாக மாறத் துவங்கினார்கள்.

தேவேந்திர குல வேளாளர் மற்றும் பறையர் குலத்தின் உழைக்கும் மக்கள் சோழர் காலத்தில் தான் தனித்து விடப்பட்டார்கள், ஊருக்கு ஒதுக்குப்புறமான நிலத்தில் குடியேற்றப் பட்ட இவர்கள் தவிர வண்ணார், மருத்துவர், நாவிதர் ஆகியோரும் பண்ணை அடிமைகளாக உருமாற்றம் பெற்றது சோழர்களின் காலத்தில் தான்.

மணிகிராமங்கள், வளஞ்சியர், சூஸகர், ராஜராஜப் பெருநிரவையார், ஆயிரத்து ஐநூற்று சபை என்று பல்வேறு பெயர்களில் வணிக சபைகள் இயங்கத் துவங்கின, அரசர், பிராமணர், வேளாளர் என்று மூன்று பிரிவும் சேர்ந்து அதிகாரத்தை இருகப்பற்றிக் கொண்டன.

மூன்று பிரிவும் கோவில்களைக் கட்டமைக்கத் துவங்கின, வேதக்கல்வியும், சமஸ்கிருதமும் பெரும் பொருட்செலவில் கோலோச்சத் துவங்கியது.

உழைக்கும் மக்களின் கலை இலக்கிய வடிவங்கள், வழிபாட்டு முறைகள், வாழ்க்கை முறை என்று எந்த அடையாளங்களும் சோழர் கால வரலாற்றில் இடம்பெறவில்லை. நிலம் பிடுங்கப்பட்டு அவர்கள் ஊருக்கு வெளியே துரத்தப்பட்ட நிலை சோழர் காலத்தில் தான் துவங்கப்பட்டது.

நிலத்தை இழந்த உழைக்கும் மக்கள் போராடிக் கொண்டே தான் இருந்தார்கள், பிரபுக்களின் நிலங்களில் அல்லது அரச கண்காணிப்பில் இருந்த வெளிகளில் கழுத்தை அறுத்துக் கொண்டு கூட்டாகச் தற்கொலை செய்து மடிந்தவர்களின் குரல் இன்னும் தஞ்சைப் பெருமண்ணில் உலவிக் கொண்டே தானிருக்கிறது.

பெரும்பாலான புலவர்களும், பாணர்களும் சோழர் புகழ் பாடிக்கொண்டிருந்த காலத்தில் “வையகம் மன்னுயிராக, அம்மன்னுயிர் உய்யத் தாங்கும் உடலன்ன மன்னவன்” என்று முழங்கிய கம்பனின் குரல் கலகக் குரலானதும், சடையப்ப வள்ளல் என்கிற நிலப்பிரபுவின் ஆதரவுடன் மட்டுமே கம்பன் ராமாயணத்தை அரங்கேற்றியதும் தனிக்கதை. (இது குறித்து தனியாக ஒரு கட்டுரை எழுதுவேன்)

கம்பராமாயணம் முழுக்க முழுக்க நடப்பில் இருந்த சோழர் ஆட்சியை எதிர்த்து எழுதப்பட்ட வீரகாவியம் என்பதற்கான தரவுகள் உண்டு. இதே காலகட்டத்தில் தான். தாத்தன் கனியன் பூங்குன்றன் “பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே”, “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்று பொதுவுடமை பேசியதும் இதே சோழர்களின் காலத்தில் தான்.

முழுமையாக சாதிய சமூகமும், வேதகால மதம் பிரச்சாரமும் நிகழ்ந்தேறியது சோழர்கள் காலத்தில் மட்டுமே என்று அறுதியிட்டுக் கூற முடியாது, ஆனால், தமிழ் சமூகம் பெரிய அளவில் சாதிய சமூகமாகப் பிளவுபட்டதும், கோவில்கள் மூலமாக பிராமணர்களின் ஆதிக்கம் நிலைநாட்டப் பெற்றதும் சோழர்களின் காலத்தில் தான் என்பது சான்றுகளின் அடிப்படையில் நிறுவப்படுகிற உண்மை.

பின்குறிப்பு – இந்தக் கட்டுரையின் மூலம் சோழர்களை இகழ்வதோ, பிராமணக் குடியேற்றத்தைக் கேள்வி கேட்பதுவோ எனது நோக்கமல்ல. மாறாக வரலாறு பெரும்பான்மையாக வாழ்கிற எளிய சமூகத்தின் குரலாக இருக்க வேண்டும் என்பதேயாகும். அதிகாரத்தின் குரலை வியந்தோம்பி எழுதப்பட்டவை எல்லாம் முழுமையான வரலாறு அல்ல, அவை எளியவர்களின் குரலை அடைக்கும் சொற்கட்டைகள்.

References :

1)The History and Society in South India – Noburu Karashima

2) Asiatic mode of production, caste and the Indian left – Murzan Jal

3) The Annihilation of Caste – Dr. B. R. Ambedkar

4) பண்டைத் தமிழர் வரலாறும், இலக்கியமும் – பேராசிரியர் மௌனகுரு

5) தமிழர் வரலாறு – புலவர் கா.கோவிந்தன்

Leave A Reply