வாழ்வின் வண்ணங்கள் – 19 – கை.அறிவழகன்

Share

ஊருக்குப் போவதென்றால் அம்மாவுக்கு அத்தனை ஆசை, ஊருக்குப் புறப்படுகிற நாளுக்கு முந்தைய இரண்டு நாட்களில் அம்மா வழக்கமான தனது அதட்டல்களை விட்டு விடுவார்.

மாலைப்பொழுதில் படிக்கச் சொல்லி அச்சுறுத்த மாட்டார், கழுவி அடுக்கப்பட்டிருக்கும் பாத்திரங்கள் இரவில் குழல் விளக்கின் ஒளிபட்டு எதிரொளிக்கும், வீடு முழுக்கத் துடைத்து தரையின் ஓரத்தில் இருக்கும் சிவப்பு பார்டர் பளிச்சென்று தெரியும்.

அப்பாவிடம் சொல்ல வேண்டிய விஷயங்களை மிக மெல்லிய குரலில் முந்தைய நாள் இரவில் பேசும்போது ஜன்னல் வழியாக வருகிற நிலவொளியில் தெரியும் அம்மாவின் கண்களில் ஊர் குறித்த நினைவுகள் பெருகி வழியும்.

அம்மா அடிக்கடி ஊருக்குப் போக வேண்டும் என்று கனவு கண்டபடி நானும் உறங்கி விடுவேன், அம்மாவிடம் நிறைய புத்தம் புதிய சேலைகள் இருக்கும், அவற்றில் பளிச்சென்று கண்ணைப் பறிக்கும் வண்ணத்தில் இருக்கிற ஒன்றை உடுத்திக் கொண்டு கிளம்பி தார்ச்சாலையைக் கடந்து அரசுப்‌ பேருந்துப் பணிமனை மதில் சுவரை ஒட்டிய ஒற்றையடிப் பாதையில் நாங்கள் நடந்து போவோம்.

அப்பாவின் கைகளில் அம்மாவின் பயணப்பை இருக்கும், பேருந்துகளின் மேற்கூரையை சரிசெய்து கொண்டிருக்கும் காக்கி நிற சீருடை அணிந்தவர்களில் சிலர் எழுந்து நின்று எங்களைப் பார்த்து விட்டு சுத்தியலால் டங் டங்கென்று அடிக்கிற ஓசை மெல்ல மெல்ல மறைகிற போது நாங்கள் ரயில் நிலையத்துக்கு வந்திருப்போம்.

நிலக்கரியும், ஜல்லிக் கற்களும் சிதறிக் கிடக்கும் தண்டவாளத்தை நாங்கள் கடந்து நடைமேடையில் ஏறி நின்று கொள்வோம், நாங்கள் நடந்து வந்த பாதையின் இருமருங்கிலும் மஞ்சள் நிறத்தைப் பரப்பியபடி ஆவாரம் பூக்கள் காற்றில் அசையும்.

ரயிலுக்காகக் காத்திருத்தலின் நாட்களில் எப்போதாவது துளசித்தண்ணீர் சாமியார் வந்து எங்கள் கைகளில் தீர்த்தம் கொடுப்பார், அனைவருக்கும் தீர்த்தம் கொடுப்பது மட்டும்தான் அவரது வாழ்வின் இலக்கு போலிருக்கும்.

யாராவது காசு கொடுப்பார்கள், அவராக ஒருநாளும் கேட்க மாட்டார், அம்மா அவருக்கு மகிழ்ச்சியோடு மணிபர்ஸில் இருந்து காசெடுத்துக் கொடுப்பார், அவரது கையில் ஒரு வெங்கலத்தாலான சிறிய மணியிருக்கும், அதை ஆட்டியபடி அவர் தண்டவாளத்தைக் கடந்து நடந்து போவார்.

புகை கக்கியபடி தூரத்தில் வருகிற வட்டமுகம் கொண்ட ரயிலை நடைமேடையில் இருந்து எட்டிப் பார்ப்பது அற்புதமான காட்சி, அப்பா எங்கள் கைகளை இறுகப் பிடித்துக் கொண்டு அம்மாவிடம் “பிள்ளைகளைப் பத்திரமாகப் பாத்துக்க, சரியா சாப்பிடு” என்று சொல்லும் போது தடதடவென்று நடைமேடையில் அதிர்வைக் கிளப்பியபடி ரயில் எஞ்சின் மெல்ல முன்னேறிச் செல்லும்.

பெரிய டென்னிஸ் மட்டையைப் போலிருக்கும் ரயிலின் சாவியை நடைமேடையிலிருந்து ஒருவர் இஞ்சின் வாசலில் நிற்பவரிடம் தூக்கிப் போடுவார். ரயில் நிற்கிற கொஞ்ச நேரத்தில் அப்பா எங்களை ஏற்றி அமரவைத்து விட்டுக் கீழிறங்கி ஜன்னலோரத்தில் நின்று அம்மாவிடம் பேசிக் கொண்டிருப்பார், பிறகு ரயில் மெல்ல கூக்குரலிட்டபடி நகரத் துவங்கும்.

பெரிய கூட்டமில்லாத அமைதியான அந்தப் பயணத்தில் கடந்து போகிற சின்னஞ்சிறு ஊர்களும், வீடுகளும், வயல்களும், பனை மரங்களும் என்னைப் போல சின்னஞ் சிறுவர்களுக்கு வாழ்க்கையை அறிமுகம் செய்கிற மகத்தான காட்சிகளாக இருக்கும்.

அந்தப் பயணங்களில் நிகழும் உரையாடல்கள் தான் வாழ்வின் பேரியக்கத்தை அறிந்து கொள்கிற ஆழ்மன அச்சாக இன்றும்‌ சுழன்று கொண்டிருக்கிறது, இளம் உயிர்களின் மீது நிலமும், மனிதர்களும் காட்டுகிற பரிவுதான் வாழ்வைக் குறித்த அச்சத்தைப் போக்குகிறது.

அப்படி ஒரு பயணத்தின் இடையில் அம்மாவிடம் அடம்பிடித்து ஒரு டிக்கி டிக்கியை வாங்கிக் கொண்டேன் நான். டிக்கி டிக்கி என்பது சோடா பாட்டில் மூடியில் ஒரு தகடு பொருத்தி தயாரிக்கப்படுகிற குழந்தைகளுக்கான இசைக்கருவி, தகட்டை அழுத்தும் போது டிக்டிக்கென்று அது எழுப்பும் ஓசை மனதை ஆட்டுவிக்கும்.

எங்கள் ரயில் பயணம் முடிந்து ஒரு வீடுகளில்லாத வனப்பகுதியில் இருக்கும் ரயில் நிலையத்தில் நாங்கள் இறங்கிக் கொண்டு விடுவோம், இறங்கி நடக்கிற போது எதிர்ப்படும் நிலக்காட்சி அழிக்க முடியாதது.

பனைமரங்கள் மண்டிக் கிடக்கிற செம்மண் நிலத்தின் நடுவே நீண்டு தனித்துக் கிடக்கிற கருப்பு நிறத்தாலான சாலையைப் பார்க்க முடியும், கொஞ்சம் தள்ளி ஒரு பஞ்சாலை, குறுஞ்செடிகளையும், சில பறவைகளையும் கடந்து ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்தால் கொஞ்சமாக ஓடுகிற தண்ணீரை நிரப்பிக் கொண்டிருக்கும் பாலம்.

எப்போது வந்திறங்கினாலும் அம்மா தவறாமல் சொல்கிற சொற்கள், “இங்கதான் ஏங்கூடப் படிச்ச கல்யாணி இருக்கா”, நாங்கள் நடந்து அடர்ந்த புளியமரத்தில் இருந்து கரைகிற பறவைகளின் ஓசையினூடாக அந்த சின்னஞ்சிறு வீட்டை அடைவோம், அங்கு வீடிருப்பதை யாரும் அத்தனை எளிதாக அறிந்து கொள்ள முடியாது.

கல்யாணி என்கிற அம்மாவின் வகுப்புத் தோழி அந்த வீட்டின் உள்ளிருந்து வந்து காட்சியளிப்பார்கள், உச்சி முகர்ந்து கன்னத்தில் கைகளை உரசி நெட்டி முறித்து மடியில் ஏற்றிக் கொள்வார்கள், பிறகு விசாரிப்புகளும், உரையாடல்களும் நடந்து கொண்டிருக்கிற இடைவெளியில் தேநீரும் பிஸ்கெட்டுகளும் கிடைக்கும்.

கூரை வேயப்பட்ட மரங்கள் சூழ்ந்த வீடுதான், ஆனால் இரயில் நிலையத்தை விடவும் வலிமையானது, கல்யாணி பெரியம்மாவின் கண்களில் இருந்து எப்போதும் அதே கனிவும், மகிழ்ச்சியும் பல ஆண்டுகள் தொடர்ந்து கிடைத்தது.

பேருந்து வருகிற நேரமானதும் நாங்கள் மீண்டும் பாலத்துக்கு வந்து விடுவோம், பாலத்தின் அருகிலிருந்து அன்று நான் அழுத்திய டிக்கி டிக்கி தெறித்துக் கை நழுவிக் கீழே விழுந்தது.

அம்மாவிடம் சொல்லி எடுக்கச் சொல்கிற நேரத்தில் பேருந்து பஞ்சாலைக்குப் பக்கத்தில் வந்தே விட்டது. அம்மா டிக்கி டிக்கியை தியாகம் செய்ய முடிவு செய்து விட்டார். நானோ அந்தப் பாலத்திலேயே தேங்கிப் போனேன்.

பேருந்தின் கடைசி நிறுத்தம் தான் அம்மாவின் ஊரென்பதால் எல்லோரும் நிதானமாக இறங்கி அவரவர் பாதையில் நடப்பார்கள், நாங்கள் சாலையில் இருந்து இறங்கி நடக்கத் துவங்கினால் சொற்களும், கைகளும் பரபரக்க மனிதர்கள்‌ எங்களை சூழ்ந்து கொண்டு விடுவார்கள்.

நிறைய முத்தங்களும், திண்பண்டங்களும் தின்று திளைக்கும் பொழுதில் இரவு சூழத் துவங்கும், வேப்பமரத்தின் கிளைகளின் ஊடாக அடர்மஞ்சள் நிற ஒளி நிரப்பி நீண்ட நிழல் சாய்த்து மறையப் போகிற சூரியன் கண்களைக் கூச வைத்து விடைபெறுகையில் அடர் மஞ்சள் நிறத்தில் சுடர் விடுகிற லண்டியன் விளக்குகளும், சிம்னி விளக்குகளும் ஊருக்குள் கண்சிமிட்டத் துவங்கி விடும்.

மாமாக்கள் ஊரிலிருந்து கொண்டு வந்திருக்கிற மேரி பிஸ்கட்டுகளும், லக்ஸ் சோப்புகளும் தவிர அந்த மாலைப் பொழுதுகளில் சண்டைகளும் களைகட்டும், அம்மா நாங்கள் இருப்பதையே கண்டு கொள்ளாமல் ஊரின் பழங்குடி மகளாக மாறி இங்குமங்குமாக ஓடிக் கொண்டிருப்பார்.

மங்கிய லண்டியன் விளக்கு வெளிச்சத்தில் மனிதர்கள் அழகு நிறைந்தவர்களாக இருப்பார்கள், அந்த நாட்களில் வரிசையாக அமர்ந்து இலைகளில் பரிமாறப்பட்ட சோற்றுக் குழிகளில் இருந்து தான் இந்தக் கதைகள் கூட உருவாகின்றன.

ஊர்களுக்கும், மனிதர்களுக்குமான தொடர்பு என்பது ஒரு 300 ஆண்டு பழமையான புனைவில் இருந்து வருகிற நிலவொளியைப் போலவோ, கடலலையைப் போலவோ பிரம்மாண்டமான அழகு நிறைந்தது, அம்மாக்களின் பயணம் முடிந்து அவர்களின் சொந்த ஊர் வரும் பொழுதில் தான் அவர்கள் தங்கள் வாழ்வைத் துவங்குகிறார்கள்.

அம்மாவுடனான அத்தகைய கடைசிப் பயணம் ஒரு துயர் நிரம்பிய நாளில் நிகழ்ந்தது, ஊரிலிருந்து வரவேண்டிய தாத்தாவுக்குப் பதிலாக தந்தி வந்தது, அம்மா தாத்தாவை நெடுநாளைக்குப் பிறகு பார்க்கப் போகிற மகிழ்ச்சியில் இருந்த அந்தக் காலைப் பொழுதில் அவர் மறைந்து போனாரென்ற செய்தியை சுமந்தபடி தந்தி வந்தது.

அம்மா அழுது புரண்டபடி நெடுநேரம் தரையில் கிடந்தார், முதல் முறையாக தாத்தாவைப் பார்க்கப் போகிறோம் என்ற எங்கள் கனவு சிதறி இனி ஒருநாளும் தாத்தாவை நாங்கள் பார்க்க இயலாதென்ற நாளானது அது.

அந்தப் பயணத்தில் அப்பாவும் உடனிருந்தார், அன்று நாங்கள் ரயில் நிலையத்தில் இறங்கி கல்யாணி பெரியம்மாவைப் பார்க்கவில்லை. பாலத்தின் அருகே பேருந்துக்காக நாங்கள் நின்றிருந்தபோது தாத்தாவின் மரணத்தை விடவும் அதிக துயர் தருவதாக இருந்தது தொலைந்து போன எனது டிக்கி டிக்கியின் நினைவு.

பிறகு அத்தகைய பயணங்கள் மறைந்து போயின, மகிழுந்தில் ஒருநாள் அதே பாதையில் பயணித்த போது மீண்டும் அந்தப் பழைய பயணங்கள் குறித்த நினைவுகள் வந்தது, பாழடைந்த பஞ்சாலைக் கட்டிடம் இருந்தது, பாலம் இருந்தது, டிக்கி டிக்கியின் நினைவுகள் ஆழமாக இருந்தது. கல்யாணி பெரியம்மா வசித்திருந்த வீட்டு வாசலில் புளியமரம் மட்டுமிருந்தது, வீடில்லை.

வீடில்லையென்றால் என்ன, அந்த நிலத்திலிருந்து கன்னத்தை உரசி நெட்டி முறிக்கும் கல்யாணி பெரியம்மாவின் கைகள் காற்றில் கொஞ்சமாகக் கரைந்திருக்கும்.

ஊர் குறித்த நினைவுகள் பெண்களுக்கும், ஆண்களுக்கும் வேறு வேறானவை. பெருமகிழ்ச்சி தந்த ஊர்களை அவர்கள் பெருந்துயரோடு பிரிந்து போகிறார்கள்.

வாழ்வின் வண்ணங்கள் – 20 – கை.அறிவழகன்

Leave A Reply