வாழ்வின் வண்ணங்கள் – 21 – கை.அறிவழகன்

Share

என்னடா பொட்டப் புள்ள மாதிரி அழுதுக்கிட்டு? ன்னு ஊர்ப்பக்கம் ஒரு பேச்சு வழக்கு உண்டு, ஆம்பள அழுகலாமா? எதுக்கும் கண் கலங்காம கம்பீரமா இருக்கனும்ல…..

ரொம்பக்காலம் இது ஒரு பழக்கம், இது ஒரு பண்பாடுன்னு மனசுல ஆழமாப் பதிஞ்சு போயிருச்சு, வலது கை புனிதம், இடது கை தீட்டுன்னு பழக்கி வச்ச மாதிரி……

ஆம்பளப் புள்ளைன்னா வாரிசு, கெத்து, பொம்பளப் புள்ளைன்னா இளக்காரம்னு சொல்லி வளக்குற ஒரு சமூகமா இடைப்பட்ட காலத்துல தமிழ்ச் சமூகம் எப்பிடி மாறுச்சுன்னு தெரியல?

அதே மாதிரி சிரிப்புன்னா கௌரவம், அழுகைன்னா கேவலம், அதுலயும் சிரிக்கிற பொம்பளையையும், அழுகுற ஆம்பளையையும் நம்பக் கூடாதுன்னு பொன் மொழியெல்லாம் வேற…..

அழக் கூடாது, வீரத் தமிழ் மரபுல அழுகுறவன் கோழைன்னு ஒரு விழுது எனக்குள்ளயும் படர்ந்துருச்சு. என்னோட நினைவு சரியா இருந்தா நான் அஞ்சாவது படிச்சேன்னு நினைக்கிறேன்.

சிவகங்கை St.Joseph ஸ்கூல். நம்மதான் கிளாஸ் லீடர், மொத ரேங்க் எடுக்குறவந்தான் அப்பவெல்லாம் லீடர், லேட்டா வர்றவங்கெ, பிரேயருக்கு வராதவங்கெ, கிளாஸ்ல பேசுறவங்கெ பேரெல்லாம் எழுதனும், கூடவே நமக்குப் புடிக்காதவெங்கெ பேரையும் லிஸ்ட்ல சேக்குறது அதிகாரத்தின் தோரணை இல்லையா?

ஒருநாள் கூட நேரத்துக்கு வராதவன், தெனந்தெனம் பேரெழுனாலும், அதே தப்ப திரும்பத் திரும்பப் பண்ற குமார் மேல ஒரு வன்மம் பரவ ஆரம்பிச்சது, அவம்பேரத்தான் மொதல்ல எழுதுறது.

உடைஞ்சு போன தேகம், கண்ல எப்பவும் தேங்கிக் கிடக்கிற துயரம், வெளுத்துப் போன ஊதா டவுசரும், சுருங்கிப் போன கதர் வெள்ள யூனிபார்மா, அதிகம் பேச மாட்டான் குமாரு.

கிளாஸ் மிஸ் சிவகாமி நல்ல உரிச்ச வேப்பங்கம்பால உள்ளங்கை சிவக்க தெனந்தெனம் அடிப்பாங்க, என்னவோ சிவங்கோயில்ல பிரசாதம் வாங்குற மாதிரி ரொம்ப பயபக்தியோட அடி வாங்கிக்குவான்.

நமக்கு சந்தோஷம் பொங்கும், அதிகாரத்தின் காவலாளி இல்லையா, நம்ம எழுதுன தீர்ப்புக்கு தண்டனை குடுக்குறாங்கன்னு ஒரு கொண்டாட்டம் இருக்கும் மனசுக்குள்ள!!

ரெண்டு பீரியட் முடிஞ்சு ஒன்னுக்கு மணி அடிக்கிறப்ப பல்லு தெரியாம சிரிக்க முயற்சி பண்ணுவான், நம்ம தான் ஆட்சியாளர்களுக்கு நெருக்கமான மொத ரேங்க் காரங்களாச்சே.

அதுலயும் கிளாஸ் லீடர் வேற, அப்டியே மொறச்சுக்கிட்டே நகந்து போயிடறது. நான் அவன் பேரை எழுதுறதும் நிக்கல, அவன் அடி வாங்குறதும் நிக்கல, இப்பிடிக்கும் அவன் ஒன்னும் முட்டாளெல்லாம் கெடயாது, நம்மள்லாம் வீட்ல போயி உருப்போட்டு தம்கட்டி பண்றத கிளாஸ்லேயே முடிச்சுருவான்.

வருஷம் உருண்டு போய்க்கிட்டே இருக்கு, காலைல ரிக்சால இருந்து எறங்கி ஸ்கூல் சின்ன கேட்டுக்குள்ள நுழையும் போது கம்பி நல்லா இழுத்து ஆழமா சட்டையக் கிழிச்சுருச்சு, ஒரு பக்கம் கிழிஞ்சு தொங்குது, மெதுவா நகந்து பைப் ஓரமா நிக்கிறேன், உள்ள போக முடியாது, பெரிய அவமானமா இருக்கு.

நேரமாயிக்கிட்டே இருக்கு, பிரேயர் ஆரம்பிச்சு நடந்துக்கிட்டு இருக்கு, காம்பௌண்ட் ஓரமா குமாரு ஓடி வர்றான், என்னையப் பாத்துட்டு நின்னுட்டான், “என்னடா ஆச்சு?” கேட்டுக்கிட்டே அந்த ரெண்டாம் பீரியட் சிரிப்பு சிரிக்கிறான்.

எனக்கு கண்ணுல தண்ணி முட்டுது, விஷயத்த சொன்னா, “வீட்ல, இன்னோரு சட்டை இருக்கு, பக்கத்துல தான் வீடு வா போகலாம்னு, பையையும் வாங்கிக்கிட்டான், ஓட்டமும் நடையுமா கொஞ்சம் ஒதுக்குப் புறமா இருக்குற குமார் வீட்டுக்குள்ள நுழையுறோம்.

முள்ளு வேலி, கம்பு கட்டுன படல் கதவு, ஒரு பாதி வாடுனாப்புல இருந்த கொய்யா மரத்துக்குப் பக்கத்துல நீளமான மூங்கில் கம்புல கயிறு கட்டி ஒரு உரல் இருக்கு, குமாரோட அம்மா, கயித்த இழுத்து காலால அழுத்தி உரல இடிச்சுக்கிட்டு இருக்காங்க.

பர்மால இருந்து அகதிகளா வந்து இருக்க குடும்பம், பச்சரிசி மாவு இடிச்சு செய்யுற புட்டு வித்துத்தான் வாழ்க்கை, கிழிஞ்ச சட்டையப் பாத்தவுடனே இடிக்கிறத விட்டுட்டு வீட்டுக்குள்ள போனவுங்க, கனிவோட கேக்குறாங்க,
“ஏப்பா, போறது வர்றது கவனமா இருக்கனும்ல, கம்பி உடம்புல குத்தி இருந்தா என்னாகுறது?”

சட்டையக் கழட்டி அவங்களே போட்டு விட்டு கிழிஞ்ச சட்டைய பள்ளிக்கூடப் பைல வக்கிறாங்க, குமார், திரும்பப் போகும் போது சொல்றான், 8 மணி வரைக்கும் அம்மாவும், அக்காவும் அடுப்புல இருப்பாங்க.

நாந்தான் மாவு இடிக்கனும், அப்பா இல்லாத பிள்ளைகள். ரெண்டு சட்டைதான் இருக்கும், நம்மள மாதிரி இஸ்திரி போட்ட டெர்லின் சட்டையில்லங்க, ஆனாலும் படக்குன்னு அந்த ஏழைங்கெ கையில இருந்து அடுத்தவங்களுக்கு எடுத்துக் குடுக்குற பெரிய மனசு எப்பவுமே இருக்கு……

நம்ம வீடுகள்ல அப்பிடிக் குடுத்துருவாய்ங்களான்னு தெரியல?

அந்த மூங்கில் கம்பு கட்டுன பச்சரிசி உரலைப் பாத்தப்பறம், தெனமும் குமார் ஏன் லேட்டா வர்றான்னு புரிஞ்சது, எட்டாவது வரைக்கும் ஒன்னாப் படிச்சோம்.

அதுக்கப்பறம், ஒருநாளும் குமார் பேர நான் என்னோட அதிகாரத்துக்கு நெருக்கமான நோட்ல எழுதவே இல்ல, ரொம்ப நாளைக்கி அப்பறம், ஒரு 4-5 வருஷம் கழிச்சு, ஒருநாள் காலைல குமாரையும் அவங்க அம்மாவையும் பாத்தேன்.

தெனமும் குமாருக்கு அடி வாங்கிக் குடுத்த மனசையும் அதுல இருந்த வன்மத்தையும் தாங்க முடியாம தாரை தாரையாக் கண்ணுல தண்ணி வந்துருச்சு, அந்தக் கண்ணீர் ரொம்ப மதிப்பு மிக்கது.

சக மனுசனோட வலியத் தெரிஞ்சு, அவன் சூழல் புரிஞ்சு அவனுக்கு முன்னொரு நாள்ல செஞ்ச அநீதிக்கு எதிராக உடம்புல இருக்குற செல்கள் கசிந்து வருகிற கண்ணீர் அது. நல்லா மனசார அழுதேன் அன்னைக்கி, அன்னையோட அழுகுறது கேவலமில்ல, அது ஒரு உயர்ந்த மனித இயல்புன்னு நானாவே உணர்ந்துக்கிட்டேன்.

இந்த மாதிரி, பல நேரங்கள்ல நாம சக மனுஷங்க மேல, அவங்க சூழல் தெரியாம வன்மம் காட்டுறோம், எரிஞ்சு விழுறோம், அதுலயும் நம்மள விட எளியவங்க மேல, வலிமையற்றர்கள் மேல நாம காட்டுற அதிகார போதை இருக்கே, ரொம்ப அறுவறுப்பானது.

ஒரு முன்னிரவு பிரயாணத்துல ஒரு 6 வயசுக் குழந்தையோட இருந்த அப்பாவையும், அம்மாவையும் கைக்குழந்தை நடுவுல படுத்திருக்குறது தெரியாம, இடம் குடுக்கலன்னு எரிஞ்சு விழுந்து திட்டினேன், அவங்க திரும்ப ஒரு கடுஞ்சொல் கூடப் பேசல, எப்பிடியாவது நெருக்கியடிச்சு எனக்கு எடம் குடுக்க முயற்சி பண்ணாங்க.

இறங்கிப் போகும் போது பாத்தா கைக்குழந்தை இருக்குறதே அப்பத்தான் எனக்குத் தெரியுது. இன்னைக்கி வரைக்கும் அந்தக் குற்ற உணர்ச்சி இருக்கு, பச்சக் குழந்தையோட இருக்குற தாய், பிள்ளைகளோட பயணிக்கிற தந்தை, சுடுசொற்களை ஒரு பயணத்தில் நள்ளிரவில் எதிர்கொள்றது எவ்வளவு பெரிய துயரம்.

இப்பவும் அந்தத் தாயையும் தகப்பனையும் பாத்து கையப் புடிச்சு மன்னிப்புக் கேக்கனும், கண்ணீர் விடனும், இல்லைன்னா அந்தக் குற்ற உணர்ச்சியோடயே தான் செத்துப் போற மாதிரி இருக்கும், மோனாலிசாவின் புன்னகையை விடவும், புத்தனின் போதனைகளை விடவும், செய்த தவறுக்காக மன்னிப்புக் கேட்டுக் கண்ணீர் சிந்துறது புனிதமானது.

பெண்கள் ஒரு Balanced மனநிலைல இருந்து துயரங்களையும், வலிகளையும் எப்படிக் கடக்குறாங்கன்னு யோசிச்சுப் பாருங்க, யோசிக்காம வர்ற அவங்க அழுகை, அழனும்னு தோணினா அழுதுருவாங்க, இடம், பொருள், கௌரவமெல்லாம் கெடயாது, சொல்லப் போனா அதுதான் Devine, அதுதான் Dignity.

பாரதி கிருஷ்ணகுமார் அண்ணன், எப்பப் பாத்தாலும் சொல்லுவாரு,

“மாபெரும் சமுத்திரங்களைத் துளிக்கூட நனையாமல் கடந்து விடலாம், வாழ்வெனும் சிறுநதியைக் கண்ணீரின்றிக் கடக்க எந்தக் கொம்பனாலும் முடியாது”.

வாழ்வின் வண்ணங்கள் – 22 – கை.அறிவழகன்

Leave A Reply