வாழ்வியல் சிந்தனைகள் – 28 – ராதா மனோகர்

Share

ஊரில் ஒரு முகம்! வெளிநாட்டில் வேறொரு முகம்! ஊருக்கு வேறு ஒரு உபதேசம் வேண்டாம்!

அண்மையில் பாடகர் யேசுதாஸ் இந்திய பெண்கள் கலாச்சாரத்தை பேணும் முகமாக ஜீன்ஸ் அணியக்கூடாது. ஆண்களின் மனம் கிளர்ச்சி அடையும் வண்ணம் பெண்கள் தங்கள் உடம்பை காட்டாது கூடுமானவரை மறைக்க வேண்டும் என்று தனது கருத்துக்களை கூறியிருந்தார்.

இவரோ வருஷத்தில் பாதி நாட்கள் அமெரிக்காவில் ப்ளோரிடா மாநிலத்தில் நன்றாக காலூன்றி இருப்பவர். ஊருக்கு வருவது பணம் சம்பாதிக்கவும் மற்றும் ஒரு ஜாலி ட்ரிப் ஆகவும்தான்.

தனது அமெரிக்க வாழ்க்கை முறை இந்திய மக்களுக்கு தெரிந்து விடக்கூடாது என்று இவர் இப்படி கலாசார பாரம்பரிய வேஷம் போடுகிறார். ஏனென்றால் இவரது வருமானம் புகழ் எல்லாம் சாஸ்திரீய சங்கீதத்தில் தங்கி இருக்கிறது. பலர் இவர் மாமிசம் உண்ணாத சுத்த ஆசார சீலர் என்றுவேற நம்புகிறார்கள். (சிக்கென் சாப்பிடுவதை நானே கண்டேன்)அதுவே இவருக்கு வியாபாரம்.

நான் சொல்ல வந்த விடயம் யேசுதாஸ் பற்றியது அல்ல. ஆனால் அது சிறந்த ஒரு உதாரணம்.

நம்மவர் பலரும் வெளிநாடுகளில் முழுக்க அல்லது பாதி பாதி அளவும் மேலை நாட்டு கலாசார விழுமியங்களின் நல்ல தன்மைகளை புரிந்து வாழுகிறார்கள்.

அவர்களுக்கு ஒரு குற்ற உணர்ச்சி இடையிடையே வருகிறது.

தங்கள் சுதந்திர மேல்நாட்டு வாழ்க்கை முறை எங்கே ஊரில் உள்ள உறவினருக்கு தெரிந்து விடுமோ என்று ஏனோ பயப்படுகிறார்கள்.

அதை மறைக்க எத்தனையோ வேஷம் போடுகிறார்கள்.

அந்த மேல்நாட்டு கலாச்சார விழுமியங்களை ஊரில் உள்ள தங்கள் உறவினருக்கு அல்லது நண்பர்களுக்கு தெரியபடுத்த விரும்புவதில்லை.

மாறாக வெளிநாடுகளில் என்னதான் இருந்தாலும் நிம்மதி இல்லை.

அல்லது ஊர் போல வராது, இங்கு எவ்வளவு கோவில் குளம் என்பது போன்ற வார்த்தை ஜாலங்களில் ஊரில் உள்ளவர்களை ஏமாற்றுகிறார்கள்.

அதிலும் வெளிநாடுகளில் சற்று வசதியாக டாக்டர், எஞ்சினியர், பேராசிரியர், எக்கவுண்டன் போன்ற படிப்பு சார் தகமையுடன் வளமான வாழ்வை அமைத்துகொண்ட மேல்தட்டு வர்க்கமாகிவிட்டவர்கள் தான் இந்த பொய்யான நடிப்பு புளுகு வாழ்வில் கைதேர்ந்தவராக உள்ளனர்.

இந்த மாதிரி மனிதர்கள் நிச்சயமாக தங்கள் தங்கள் நாடுகளில் உள்ள கோவில்கள் அல்லது ஆத்மீக சங்கங்கள் அதுவும் இல்லாவிட்டால் ஏதாவது ஓர் அரசியல் சார்ந்த அமைப்புக்களுடன் எதோ தொண்டு செய்வதாக பாவனை பண்ணி ஊரை ஏமாற்றுகிறார்கள். உண்மையில் இவர்களில் பலர் முன்பு புலி ஆதரவு புலம்பல் செய்தவர்கள்தான். அப்படியே அவர்கள் பலரும் தற்போது சமய காவலர்கள் ஆகிவிட்டனர். ரொம்ப வசதியான தங்குமிடம் பாருங்க?

இது ஒரு டிபிகல் யாழ்மையவாத அழுகுணி ஆட்டம்.

இவர்கள் எல்லோரிலும் நிச்சயமாக காணப்படும் ஒரு ஒற்றுமை என்னவென்றால் இவர்கள் தங்கள் சொந்த சகோதர்கள் அல்லது உறவினர்களுக்கு அனேகமாக எதுவித உதவியும் செய்திருக்க மாட்டார்கள்.

சதா கலாச்சாரம், பாரம்பரியம், கோவில், குளம், சைவம், தேவாரம், திருமுறை, என்பவற்றை வைத்தே காலத்தை கடத்தி விடுகிறார்கள்.

இவர்களது சொந்த வாழ்க்கை ஒரு மேலை நாட்டு வெள்ளைகாரனின் வாழ்வாக மாறி பல வருஷங்கள் ஆகியிருக்கும்.

அப்பொழுதெல்லாம் ஒரு குற்ற உணர்வு வரும், அதை மறைக்க தேவாரம், திருவாசகம், அருச்சனை எல்லாம் அப்பப்போ தேவை படுகிறது.

என்னதான் மனசாட்சி தொந்தரவு செய்தாலும் யாருக்கும் உதவி செய்ய மனம் வராது, ஆனால் கோவில் குளம் அல்லது அரசியலில் இவர்களை காணலாம் மற்றும் நேரங்களில் இருக்கவே இருக்கிறது சம்பெயினும் ஸ்கொட்ச் விஸ்கியும், பீச்சுகளும் பார்ட்டிகளும் வெஸ்டர்ன் அட்மோஸ்பயரும் ஊரில் இல்லையே?

அந்த என்டேர்டேயின் மென்ட்களை விட்டு நீங்கள் எந்த காலத்திலும் வரமாட்டீர்கள். நல்லது வரவும் வேண்டாம்.

ஆனால் ஊருக்கு சமயம் கலாச்சாரம் அரசியல் என்று குப்பைகளை வீசுவதை நிறுத்தி கொள்ளுங்கள்.

உங்கள் மனவிகாரங்களை நீங்கள் வசிக்கும் நாடுகளிலேயே வைத்து கொள்ளுங்கள்.

அறிவியல், விஞ்ஞானம், தொழில்வாய்ப்பு போன்ற விடயங்களில் ஏதாவது செய்ய முடிந்தால் செய்யுங்கள், நீங்கள் ஊரில் இருந்த பொழுது கனவிலும் கண்டிராத ஒரு சுயமரியாதை உள்ள நாடுகளில் தற்போது குடிபெயர்ந்து இருப்பது உங்கள் அதிஷ்டம் என்று உங்களுக்கு மிகவும் நன்றாக தெரியும்.

ஆனால் அதை எப்படியாவது ஊரில் உள்ளவர்க்கு தெரிந்துவிடாமல் மறைப்பதில் ஏன்தான் இவ்வளவு வேஷமோ தெரியவில்லை.

அந்த நல்ல விடயங்களை ஊரிலும் படிப்படியாக கொண்டுவர முயற்சிக்கலாமே?

ஆனால் நீங்கள் செய்வதோ எதிர்மறையாக அல்லவா இருக்கிறது.

ஊருக்கு நல்லது செய்யுங்கள் அல்லது சும்மா இருங்கள். அதுவும் முடியாமல் விட்டால் பேசாமல் ஊரோடு வந்து உங்கள் சேவையை அல்லது கலாசார சமய அரசியல் பிரசாரங்களை முன்னெடுங்கள்.

நீங்கள் விஸ்கி குடித்துக்கொண்டு ஊருக்கு திருவாசகமும் தேவாரமும் அல்லவே சப்பிளை பண்ணுகிறீர்கள்?

அது மட்டுமல்ல இவை எல்லாம் ஊரில் உள்ளவருக்கு தெரிந்து விடவும் கூடாது என்று இவர்கள் படும் பாடு இருக்கிறதே?

இவர்கள் தாங்கள் எப்படி அங்கெல்லாம் வாழ்கிறார்களோ அதைபற்றி உண்மையை ஊரில் உள்ள மக்களுக்கு சொல்லவேண்டும். வேஷம் போடகூடாது, அபிவிருத்தி அடைந்த நாடுகளில் உள்ள நல்ல விடயங்களை உங்கள் உங்கள் சொந்த ஊர்களுக்கு அல்லது கிராமங்களுக்கு எப்படி எப்படி எல்லாம் கொண்டுவரலாம் என்று முயற்சி செய்யுங்கள்.

அதை விட்டு விட்டு இங்குள்ள கோவில்களுக்கு கொஞ்சம் வீசி எறிந்து உங்கள் பாவங்களை போக்கலாம் அல்லது ஊரை ஏமாத்தலாம் என்று எண்ணினால் நீங்கள் ஏமாந்து போவீர்கள்.

வாழ்வியல் சிந்தனைகள் 29 –

Leave A Reply