உலகப் புகழ்பெற்ற ஓவியர்கள் – 1.லியனார்டோ டா வின்ஸி

Share

இவர் இத்தாலி நாட்டு ஓவியர்.

இவருடைய இளமைப் பருவம் சோகம் நிறைந்தது. அப்பாவின் பெயரை இனிஷியலாக போடக்கூட முடியாத நிலைமை.

ஆம். இவருடைய அப்பா செர் பியெரோ, ஒரு வழக்கறிஞர்.

அவருடைய குடும்பத்துக்கு பெரிய பண்ணை இருந்தது. அந்தப் பண்ணையில் ஓய்வெடுக்க வருவார். அப்போது, அந்த பண்ணையில் வேலை செய்த காத்தரினா என்ற அழகிய பெண்ணை அவருக்குப் பிடித்திருந்தது.
அந்த பெண்ணுடன் அவர் உறவு வைத்துக் கொண்டார். அதன் விளைவாக அந்த பெண் கர்ப்பமானார்.
இருவருக்கும் பிறந்தவர்தான் லியனார்டோ.


இத்தாலியில் உள்ள வின்ஸி என்ற சிறு நகரில் 1452 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி பிறந்தார். இந்த நகரம் பிளாரன்ஸ் நகருக்கு சற்று வெளிப்புறத்தில் இருக்கிறது.

இவர் பிறந்த சில காலத்தில் இவருடைய அம்மா வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டு அருகிலிருந்த நகருக்குச் சென்றுவிட்டார்.

தந்தையும் திருமணம் செய்துகொண்டார்.

இவரை தந்தை அழைத்துக் கொண்டார். ஐரோப்பாவில், திருமணம் செய்துகொள்ளாமல் வேறு பெண்களுடன் எத்தனை குழந்தை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ள அந்தக் காலத்தில் அனுமதி இருந்தது.
தந்தையின் வீட்டில் வளர்ந்தார் லியனார்டோ.

அவருடைய ஊர் பெயரும் சேர்ந்து லியனார்டோ டா வின்ஸி என்று ஆகியது.

வின்ஸி நகரம் ஓவியத்திற்கு புகழ்பெற்ற நகரம். அந்த வழியில் டாவின்ஸியும் தனது ஓவியத் திறமையை வளர்த்துக் கொண்டார்.


அவருக்கு 15 வயது ஆனபோது, அவரை, பிளாரன்ஸ் நகரில் உள்ள ஆன்ட்ரியா டெல் வெரோச்சியா என்ற ஓவியக் கூடத்தில் பயிற்சியாளராக சேர்த்து விட்டனர்.

வெரோச்சியாவின் ஓவியக் கூடத்தில் அவருடைய திறமை பளிச்சிடத் தொடங்கியது. வெரோச்சியாவே வியக்கும் அளவுக்கு அற்புதத் திறமையுடன் டாவின்ஸி இருந்தார்.

குருவின் ஓவியத்தை செப்பனிடும் அளவுக்கு அவருக்கு தகுதி இருந்தது. வெரோச்சியாவின் ஓவியங்கள் பலவற்றை டாவின்ஸி மெருகேற்றினார்.
ஐந்து ஆண்டுகள் அவர் அங்கு பயிற்சி பெற்றார்.

வெரோச்சியா வரைந்த பாப்டிஸம் ஆஃப் கிறிஸ்ட் என்ற ஓவியத்தை அவர் செப்பனிட்டார். அந்த ஓவியத்தில் அவர் வரைந்த தேவதை வெரோச்சியாவை அதிர்ச்சியடையச் செய்தது. அந்த அளவுக்கு அது அந்த ஓவியத்துக்கு சிறப்பை ஏற்படுத்தியது.


அதன்பிறகு வெரோச்சியா ஓவியம் வரைவதையே நிறுத்திவிட்டதாக கூறப்படுவதுண்டு.
டாவின்ஸி 1477 வரை அங்கேயே தங்கியிருந்தார். பிறகு தனக்கென்று ஓவியக் கூடம் ஒன்றை உருவாக்கிக் கொண்டார்.

சாதாரணமான ஓவியங்களை வரைவதில் அவருக்கு ஆர்வம் இல்லை. புதிய சவால்களை தேடிக்கொண்டே இருந்தார். பெரிய அளவில் சாதிக்க விரும்பினார்.

1482 ஆம் ஆண்டு அவருக்கு அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தது. மிலன் இளவரசரின் வேண்டுகோளை ஏற்று அவருடைய அரண்மனையில் வேலைக்கு சேர்ந்தார்.


அங்கு. 1499ல் இளவரசர் தோல்வியடையும் வரை 17 ஆண்டுகள் வேலை செய்தார். இந்தக் காலகட்டத்தில்தான் டாவின்ஸி சிகரங்களைத் தொட்டார். ஓவியக் கலையில் சாதனைகளைச் செய்தார்.

மிலன் இளவரசர் டாவின்ஸியிடம் வெறும் ஓவியங்களை மட்டும் வரையச் சொல்லவில்லை. மாறாக, சிற்பங்களைச் செதுக்கச் சொன்னார். அரண்மனை விழா நிகழ்ச்சிகளை வடிவமைக்கச் சொன்னார். ராணுவத்திற்கு புதிய ஆயுதங்களை வடிவமைக்கவும், கட்டிடங்களை வடிவமைக்கவும், இயந்திரங்களை வடிவமைக்கவும் அனுமதி அளித்தார்.

1485 முதல் 1490 வரை டாவின்ஸி மேற்கொண்ட ஆய்வுகள் ஏராளம். இயற்கை, பறக்கும் எந்திரங்கள், கணிதம், எந்திரப் பொறியியல், நகராட்சி கட்டுமானங்கள், வாய்க்கால்கள், கோட்டைகள் முதல் தேவாலயங்கள் வரை கட்டிட கலை என அவருடைய பணிகளின் பட்டியல் நீண்டது.

இந்தக் காலகட்டத்தில்தான் நவீன யுத்தக் கருவிகள் பலவற்றை இவர் வடிவமைத்தார். இவர் வடிவமைத்த பீரங்கியும் ராணுவ தளவாடங்களும், எதிர்த்துத் தாக்கும் கருவிகளும் நீர்மூழ்கிகளும் புகழ்பெற்றவை. அவற்றை மாதிரியாகக் கொண்டுதான் பின்னர் நவீன தளவாடங்கள் உருவாக்கப்பட்டன.

மிலனில் இருக்கும்போதுதான் மனித உடற்கூறு அமைப்பு குறித்து இவர் ஆய்வுகளை மேற்கொண்டார். மனித உடலை அறுப்பது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்பட்ட காலம் அது.


மருத்துவமனை பிண அறைகளுக்கும், கல்லறைத் தோட்டங்களுக்கும் சென்று ரகசியமாக தனது ஆய்வுகளை நடத்தினார். இதயம், நுரையீரல் உள்ளிட்ட உறுப்புகள் எப்படி இருக்கும் என்றே தெரியாத காலகட்டத்தில் இவர் அவற்றின் அமைப்பை வரைந்து வெளிப்படுத்தினார்.

மிலன் நகரில் இவருடைய ஓவியக்கூடம் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கியது. பயிற்சியாளர்களும் மாணவர்களும் நிறைந்து வழிந்தனர்.

டாவின்ஸியின் ஆர்வம் பலதரபப்ட்டது. ஓவியம் மட்டுமே அவர் உயிர்மூச்சு அல்ல. எனவே, அவருடைய பல ஓவியங்கள் நீண்டகாலமாக முடிக்கப்படாமல் இருந்தன. 17 ஆண்டுகளில் இவர் முழுமையாக முடித்த ஓவியங்கள் ஆறு மட்டுமே.

தி லாஸ்ட் ஸப்பர், தி வர்ஜின் ஆஃப் தி ராக் ஆகிய ஓவியங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியவை.
டஜன் கணக்கான வேலைகளை இவர் நிறைவு செய்யாமலேயே விட்டுவிட்டார்.

தன்னுடைய பெரும்பாலான நேரத்தை அறிவியல் ஆய்வுகளிலேயே செலவிட்டார். வெளியில் சென்று இயற்கை அமைப்புகளின் மூலத்தை தேடுவார். அல்லது, தனது ஓவியக்கூடத்தில் இருந்த தனிமையான இடத்தில் இறந்த உடல்களை அறுத்துக் கொண்டிருப்பார்.

1490 முதல் 1495 வரையிலான காலகட்டத்தில் தான் கண்டுபிடித்தவற்றை படங்களுடன் குறிப்புகளாக எழுதும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். அவருடைய இந்த வேலை நான்கு முக்கிய கருக்களை உள்ளடக்கி இருந்தது.
ஓவியம் தீட்டுவது, கட்டிடக்கலை, இயந்திரப் பொறியியல், மனித உடற்கூறு என அவை பிரிக்கப்பட்டிருந்தன.

அவருடைய கையெழுத்துக் குறிப்புகள் இப்போதும் பலரால் சேகரிக்கப்பட்டு வருகின்றன. பில்கேட்ஸ் கூட சமீபத்தில் மூன்று கோடி டாலர் கொடுத்து டாவின்ஸியின் குறிப்புகள் சிலவற்றை வாங்கினார்.

மிலன் இளவரசரின் வீழ்ச்சிக்குப் பிறகு, அங்கிருந்து வெளியேறி புதிய விஷயங்களைத் தேடினார். அடுத்த 16 ஆண்டுகளுக்கு அவர் இத்தாலி முழுவதும் சுற்றித் திரிந்தார். பல்வேறு நபர்களுக்காக வேலை செய்தார்.

கொடுங்கோலன் என்று கருதப்பட்ட செஸர் போர்ஜியா என்ற இளவரசனுடன் இணைந்து வேலை செய்தார்.

அவனுடைய ராணுவத்தில் பொறியாளராக பல்வேறு ராணுவ தளவாளங்களை வடிவமைத்துக் கொடுத்தார்.

அன்றைக்கு புகழ்பெற்ற அரசியல் நிபுணரான மாக்கியவல்லியின் உதவியோடு பேட்டில் ஆஃப் ஆங்கியாரி என்ற ஓவியத்தை டாவின்ஸி வரைந்தார்.


1503ஆம் ஆண்டு டாவின்ஸி தன்னுடைய புகழ்பெற்ற மோனாலிஸா என்ற ஓவியத்தை வரையத் தொடங்கினார். 1504ஆம் ஆண்டு தன்னுடைய தந்தையின் மரணச் செய்தி கிடைத்தது. ஆனால், அவருடைய சொத்துக்களிலிருந்து டாவின்ஸிக்கு சிறிதளவு பங்குகூட கிடைக்கவில்லை.

அதேசமயம் டாவின்ஸியின் சித்தப்பா இறந்தபோது அவருடைய சொத்துக்களில் இருந்து டாவின்ஸிக்கு கணிசமான நிலமும், பணமும் கிடைத்தது.

1513 முதல் 1516 வரை அவர் ரோமில் வேலை செய்தார். தனக்கென்று ஒரு ஓவியக்கூடத்தை உருவாக்கினார். போப்பாண்டவரின் வேலைகள் பலவற்றை எடுத்துச் செய்தார். அதேசமயம் மனித உடற்கூறியல் தொடர்பான தனது ஆராய்ச்சிகளையும் தொடர்ந்தார்.

டாவின்ஸியின் முன்னோடி என கருதப்பட்ட மெடிஸி 1516ல் இறந்தார். இதையடுத்து அவருக்கு முதன்மை ஓவியர், பொறியாளர், கட்டிடக்கலை நிபுணர் என்ற பதவியை பிரான்ஸ் மன்னர் முதலாம் பிரான்சிஸ் வழங்கினார்.

அரண்மனைக்கு அருகிலேயே அழகிய வீடு. போதுமான அளவுக்கு ஊதியம். டாவின்ஸி விரும்பிய வேலை. எல்லாமும் கிடைத்தன.

இந்த காலக்கட்டத்தில் டாவின்ஸியின் வலதுகை செயலிழந்தது. இருந்தாலும் அவர் தொடர்ந்து ஓவியங்களை வரைந்தார். மாணவர்களுக்கு ஓவியப்பாடம் நடத்தினார்.

பூனைகள், குதிரைகள், டிராகன்கள் என்று தனது ஆராய்ச்சிகளை விரிவுபடுத்தினார். உடற்கூறியல், தண்ணீரின் இயல்பு, பலதரப்பட்ட எந்திரங்கள் என்று ஓயாத ஆராய்ச்சியில் ஈடுபட்டார் டாவின்.

1519ஆம் ஆண்டு மே மாதம் 2ஆம் தேதி டாவின்ஸி காலமானார். பிரான்சில் அவர் இறந்த சமயத்தில் மன்னர் பிரான்சிஸ் அவர் அருகில் இருந்து தனது கரங்களில் டாவின்ஸியின் தலையை தாங்கிப் பிடித்திருந்தார்.

லியனார்டோ டா வின்ஸி வெறுமனே ஓவியராய் மட்டும் வாழவில்லை. அவருடைய காலத்தில் நிலவிய அறிவியலுக்கு எதிரான கருத்துக்களில் முரண்பட்டு வாழ்ந்தார். நவீன அணுகுமுறையை கடைபிடித்தார். அறிவியல் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

எதிர்கால தலைமுறைக்கு ஏராளமான விஷயங்களை அவர் விட்டுச் சென்றார். உடற்கூறியல், விலங்கியல், தாவரவியல், பூகோளவியல், விமான தொழில்நுட்பம், நீர்மின்சக்தி ஆகிய பல்வேறு அறிவியல் விஷயங்களுக்கு அவர் தொடக்கப் புள்ளியாக இருந்தார்.

புராதன கிரேக்க மற்றும் ரோம நூல்களை படித்தார். அவருடைய காலக்கட்டத்தில் வாழ்ந்த எல்லோரும் முன்னோரின் எழுத்துக்களை அல்லது பைபிளை கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொண்டனர். ஆனால் டாவின்ஸி எதையும் கேள்வி கேட்டார். அந்த கேள்விகள் அறிவியல் பூர்வமாக இருந்தன.

“பறவைகள் எவ்வாறு பறக்கின்றன?”

இப்படியான கேள்விகளை அவர்தான் தொடங்கி வைத்தார். பறக்கும் எந்திரங்களை படைத்தார். ரைட் சகோதரர்கள் விமானத்தை கண்டுபிடிக்க டாவின்ஸி வரைந்த ஓவியமும் ஒரு காரணம்.

விஞ்ஞானியாக மட்டும் இல்லாமல் பல்வேறு விஷயங்களை இவர் முதன்முறையாக கண்டுபிடித்து அறிமுகப்படுத்தினார். கட்டிடக்கலைக்கும், ராணுவ பொறியியலுக்கும், கால்வாய்கள் கட்டுவதற்கும், ஆயுதங்கள் வடிவமைப்பதற்கும் இவருடைய பங்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.


புதிய உலகுக்கான புதிய எந்திரங்கள் பலவற்றை அவர்தான் உருவாக்கிக் கொடுத்தார். இஸ்தான்புல் வளைகுடாவுக்கு ஊடாக பாலம் கட்டும் யோசனையை அவர்தான் முதன்முதலில் வெளியிட்டார். ஆனால், அப்படி பாலம் கட்டினால் அது எவ்வளவு பிரமாண்டமாக இருக்கும் என்பதை நவீன பொறியாளர்கள் கற்பனை செய்து வியந்தனர். ஆனால் டாவின்ஸியின் கற்பனை நிஜமானபோது பிரமிப்பு ஏற்பட்டது.

கலிலியோ வாழ்ந்த காலத்திற்கு ஒரு நூறு ஆண்டு முன்வாழ்ந்த டாவின்ஸி வின்வெளி ஆராய்ச்சியிலும் முன்னோடியாக இருந்தார்.

தண்ணீரின் பல்வேறு வடிவங்களை அவர் ஆய்வு செய்தார். திரவமாக, நீராவியாக, பனிக்கட்டியாக தண்ணீரின் வடிவம் மாறும்போது நிகழும் மாற்றங்களை அவர் குறிப்பு எழுதி வைத்தார். தண்ணீரின் சக்தியால் இயங்கும் எந்திரங்களை அவர் வடிவமைத்தார். தண்ணீருக்கு அடியிலிருந்து கப்பல்களை தாக்கி அழிக்கும் நீர்மூழ்கிகளை அந்த காலத்திலேயே டாவின்ஸி அறிமுகப்படுத்தினார்.

ஓவியராகவும் டாவின்ஸி மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டார். தசைப்பிடிப்புள்ள மனித உடல்களை வரைந்து வந்த தனது சமகால ஓவியர்களை அவர் கிண்டல் செய்தார். நிகழ்வுகளையும் புதிய சிந்தனைகளையும் அவர் உருவப்படுத்தி னார். எதிர்கால தலைமுறை அவர் விட்டுச்சென்ற இடத்திலி ருந்து தொடங்கும் வகையில் டாவின்ஸியின் படைப்புகள் இருந்தன.

டாவின்ஸியின் மோனலிஸா ஓவியத்தைப் பற்றி பேசாதவர்கள் யாரும் இருக்க முடியாது.

அவள் ஏன் சிரிக்கிறாள்? அவளுடைய கதை என்ன?

மோனலிஸா நகரின் புகழ்பெற்ற செல்வந்தர் ஒருவரே காதலி என்று சிலர் கூறுவார்கள். ரகசியமாக அவள் கற்பமடைந்ததை எண்ணி சோகத்துடன் சிரிப்பதாக சிலர் கூறுவார்கள். அந்த ஓவியத்தில் இருப்பதே டாவின்ஸிதான் என்றும் சிலர் கதைப்பார்கள். ஓவியத்தை பல்வேறு கோணத்தில் எக்ஸ்ரே எடுத்து ஆய்வு செய்ததில் இந்தக்கூற்றில் உண்மை இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

ஏசுகிறிஸ்துவின் லாஸ்ட் ஸப்பர் (கடைசி விருந்து) ஓவியத்தை டாவின்ஸி வரைந்தார். புகழ்பெற்ற இந்த ஓவியம்தான் டாவின்ஸியின் ஓவியங்களில் மிக மோசமாக பராமரிக்கப்பட்ட ஓவியம் ஆகும். இந்த ஓவியத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட டாவின்ஸி கோட் என்ற நாவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

18ஆம் நூற்றாண்டில் இந்த ஓவியம் இருமுறை வண்ணம் தீட்டப்பட்டது. 19ஆம் நூற்றாண்டில் இது மேலும்மேலும் சேதமடைந்தது. நெப்போலியனின் வீரர்கள் இதை சேதப்படுத்தினார்கள். அடுத்து சில சாமியார்கள் இந்த ஓவியம் வரையப்பட்ட சுவற்றின் அடியில் கதவு வைப்பதற்காக உடைத்து சேதப்படுத்தினர்.

இரண்டாம் உலகப்போர் நடைபெற்றபோது கூட்டுப்படையி னர் வீசிய குண்டுகளிலிருந்து இந்த ஓவியம் அதிஷ்டவசமாக தப்பியது. எஞ்சிய ஓவியத்தை இப்போது பத்திரப்படுத்தி உள்ளனர்.

Leave A Reply