உலகப் புகழ் பெற்ற ஓவியர்கள் – 2.மைக்கேல் ஏஞ்சலோ

Share

எல்லாக்காலத்திலும் போற்றப்படும் மகத்தான ஓவியர் மைக்கேல் ஏஞ்சலோ.
அவரது பெயர் ‘மகத்தான படைப்பு’ என்ற சொற்றொடருக்கு இணையானது.

ஒரு ஓவியராக அவர் யாரோடும் ஒப்பிட்டு பார்க்க முடியாத அளவிற்கு தனித்தன்மை வாய்ந்த கலைஞனாக திகழ்ந்தார். அவர் தனது ஓவியங்களில் மனித வாழ்க்கையை விரிவாகவும் அழகாகவும் வெளிப்படுத்தினார். அவரது காலத்தில் வாழ்ந்த மற்ற ஓவியர்களை விட மைக்கேல் ஏஞ்சலோ மிகவும் மதிக்கப்பட்டார்.

மைக்கேல் ஏஞ்சலோ 1475, மார்ச் 6 ஆம் தேதி இத்தாலியின் மத்தியப்பகுதியான துஸ்கனியில் உள்ள கேப்ரஸேவில் பிறந்தார். தந்தை பெயர் லுடோவிகோ டி லியனார்டோ டி போனரோட்டோ சிமோனி. தாயார், பிரான்செஸ்கா நெரி.

பெற்றோருக்கு மொத்தம் ஐந்து பிள்ளைகள். மைக்கேல் ஏஞ்சலோ இரண்டாவது மகன். சிறிய கிராமத்தில் பிறந்திருந்தாலும் அவர் தன்னை பிளாரன்ஸ் நகரின் மகனாகத்தான் பாவித்துக்கொண்டார். அவரது தந்தையும் அப்படித்தான்.

மைக்கேல் ஏஞ்சலோவின் தாயார் நெரி அடிக்கடி நோய்வாய்ப்படும் பெண்ணாக இருந்தார். எனவே அவரால் தனது மகனை நன்றாக கவனித்துக் கொள்ள முடியவில்லை. ஏஞ்சலோ கல் உடைக்கும் தொழிலாளியின் குடும்பத்தினரால் வளர்க்கப்பட்டார்.

ஏஞ்சலோவுக்கு 6 வயதான சமயத்தில் தாயார் இறந்தார். சிறுவயதில் மற்ற குழந்தைகளுக்கு கிடைக்கும் அரவணைப்பு கிடைக்கவில்லை.

மைக்கேல் ஏஞ்சலோ இலக்கணம் கற்றுக்கொள்ள சேர்ந்தார். லத்தீன் மொழியின் அடிப்படைகளை கற்-றுக் கொண்டார். அங்கு, ஒரு மாணவரின் நட்பு கிடைத்தது. அவரது பெயர் பிரான்சிஸ்கோ க்ரானகி. ஏஞ்சலோவை விட அவர் ஆறு வயது மூத்தவர். க்ரானகி கிர்லான்டயோ ஓவியக் கூடத்தில் ஓவியப் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார். ஏஞ்சலோவையும் ஓவியப் பயிற்சிக்கு ஊக்கப்படுத்தினார்.

இந்த காலகட்டத்தில் ஏஞ்சலோவின் தந்தை புளோரென் டைனில் சிறு அதிகாரியாக இருந்தார். ஆட்சியில் இருந்த மெடிசி குடும்பத்தாருடன் அவருக்கு பழக்கம் இருந்தது.

ஏஞ்சலோவின் குடும்பப்பெயர் போனரோட்டி. இந்தக் குடும்பத்தினருக்கு பாரம்பரியப் பெருமை இருந்தது. ஆனால் ஏஞ்சலோவின் தந்தை லுடோவிகா காலத்தில் அவர்களுக்கு மிகச்சிறிய அளவிலேயே சொத்துக்கள் இருந்தன.

தனது மகன் மிகப் பெரிய வணிகனாக வளர்ந்து தமது குடும்ப பாரம்பரியத்தை மீண்டும் பழைய நிலைக்கு உயர்த்து வான் என்று தந்தை லுடோவிகோ நினைத்தார். ஏஞ்சலோவின் சிந்தனை முழுக்க ஓவியத்தின் மீதே இருந்தது.


ஏஞ்சலோவுக்கு 13 வயது முடிந்த சமயத்தில், டொமினிகோ கிர்லான்டயோ எனும் ஓவியரின் பள்ளியில் பயிற்சி மாணவராக சேர முடிவு செய்தார். இதை தந்தையிடம் சொன்னபோது அவர் ஆத்திரமடைந்தார். இறுதியில், ஏஞ்சலோவின் முடிவை தந்தை லுடோவிகா ஏற்றுக்கொண்டார். ஒரு வருடம் ஓவியப்பயிற்சிக்குப் பிறகு மெடிசி தோட்டத்தில் இருந்த சிற்பப் பள்ளியில் சேர்ந்தார்.

அதன்பிறகு அவருக்கு லோரென்சோ டி மெடிசியின் இல்லத்திற்கு வருமாறு அழைப்பு வந்தது. அங்கு ஏஞ்சலோவுக்கு இளம் மெடிசிகளுடன் கலந்து பேச வாய்ப்பு கிடைத்தது. அவர்களில் இருவர் பின்னாளில் போப் பதவிக்கு சென்றவர் கள். ஒருவர் போப் பத்தாம் லியோ, இன்னொருவர் போப் ஏழாம் கிளமெண்ட்.

அதைப்போலவே மனிதாபிமான இயக்கத்தை சேர்ந்த மார்சிலோ பிசினோ, கவிஞர் ஏஞ்சலோ போலிசியானோ போன்றவர்களுடைய நட்பும் கிடைத்தது. இவர்கள் அடிக்கடி மெடிசியின் அமைச்சரவைக்கு வந்து சென்றனர்.

சாந்தோ ஸ்பிரிடோ தேவாலயத்தின் தலைவர் பிசிலினிக்கு இயேசு சிலுவையில் அறையப்பட்டிருக்கும் மரச்சிற்பம் ஒன்றை மைக்கேல் ஏஞ்சலோ அனுப்பியிருந்தார். அந்தச் சமயத்தில், சடலங்களை தொட்டு ஆய்வு செய்வதை ஏஞ்சலோ வழக்கமாகக் கொண்டிருந்தார். சடலங்களை ஆய்வு செய்வது கிறிஸ்தவ தேவாலயத்தால் தடை செய்யப்பட்டிருந்தது.

இருந்தாலும், ரகசியமாக அவர் தனது ஆய்வுகளை மேற்கொண்டார். இதன்காரணமாக, ஏஞ்சலோவுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. ஏஞ்சலோவுக்கு இதை பிசிலினி எடுத்துக் கூறினார். அதன்பிறகுதான் அவர் உடலமைப்பு குறித்து படிக்கத் துவங்கினார்.

மைக்கேல் ஏஞ்சலோ தனது 16 ஆவது வயதில் இரண்டு செதுக்கு ஓவியங்களை உருவாக்கி இருந்தார். தி பேட்டில் ஆப் தி சென்ட்டாரஸ், மடோனா ஆப் தி ஸ்டய்ர்ஸ். 1489ல் இருந்து 92 க்குள் இந்த இரண்டு ஒவியங்களையும் அவர் உருவாக்கினார்.

சின்ன வயதிலேயே அவர் உருவாக்கிய இந்த இரண்டு படைப்புகளிலும் அவரது தனித்தன்மை வெளிப்பட்டது. அவருக்கென்று ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டார். அவரது முதல் இரண்டு படைப்புகள் குறித்து ஏஞ்சலோ தனது நாட்குறிப்பில் எழுதி வைத்திருந்தார்.

‘எனது முதல் படைப்பு ஒரு சின்ன செதுக்கு ஓவியம் ‘மடோனா ஆப் தி ஸ்டய்ர்ஸ்’. இந்த ஓவியத்தில், கடவுளின் தாயான மேரி தேவாலய பாறையில் குழந்தையுடன் அமர்ந்திருக்கிறார். குழந்தை இயேசுவின் மரணத்தையும் சொர்க்கத்திற்கு செல்லும் படிக்கட்டுகளில் அவன் திரும்புவதையும் பார்த்தபடி அமர்ந்திருக்கிறார்.

எனது இரண்டாவது படைப்பு மற்றொரு சிறிய செதுக்கு சிற்பம். லாபித்ஸ், சென்ட்டாரஸ் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற யுத்தம் பற்றிய கதையை எனது ஆசிரியர் சொல்லிக் கொடுத்திருந்தார். வாழ்க்கையின் இயற்கையான ஆற்றல் வீரம் செறிந்த சண்டையில் அடங்கிக் கிடக்கிறது. அதற்கு முன்பே 16 வயதில் எனது மனம் ஒரு யுத்தகளத்தில்தான் இருந்தது. மதத்திற்கு புறம்பான அழகு, நிர்வாணம் போன்றவற்றின் மீது எனக்கிருந்த காதலுக்கும் எனது மத நம்பிக்கைக்கும் இடையில் அப்போது யுத்தம் நடந்து கொண்டிருந்தது’ என்று அவர் எழுதி வைத்திருந்தார்.

1492 ஆம் ஆண்டு இத்தாலியில் அதிகாரத்தில் இருந்த லோரென்சோ டி மெடிசி இறந்தார். அவரது மரணம் இத்தாலி அரசியலில் ஒரு நெருக்கடியை தோற்றுவித்தது. அவர் ப்ளோரென்சில் ஒரு மிகப்பெரும் சொத்தை விட்டுச் சென்றார். ஐரோப்பாவில் மறுமலர்ச்சி காலத்திய இளவரசர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான முன்மாதிரியாக இருந்தவர் லோரென்சோ. அவர் தனது காலத்தில் ஓவியர்கள், கவிஞர்கள், கல்வி அறிஞர்களை ஊக்குவித்தார்.

லோரென்சோ மார்சிலியோ பிசினோவுக்கும் அவரது நியோ பிளேட்டோனிக் அகாடமிக்கும் ஆதரவாளராக இருந்தார். நியோ பிளேட்டோனிக் அகாடமி பிளாட்டோவின் தத்துவங்களை புதிய காலத்திற்கு ஏற்ப கற்றுக் கொடுத்தது.


இளம் ஓவியர்களுக்காக கார்டன் ஆப் சான் மார்கோ என்ற அமைப்பை உருவாக்கினார். மெடிசியன் நு£லகத்தை வளப்படுத்தினார். அங்கு அரிய படைப்பாளர்களின் கையெழுத்துப் பிரதிகள், பழைய மற்றும் நவீன காலத்தைச் சேர்ந்த முக்கியமான புத்தகங்களை கொண்டு வந்து சேர்த்தார். அவரது மரணத்திற்கு பிறகு உள்நாட்டு குழப்பம் ஏற்பட்டது.

சாவனரோலா எனும் மத குருவின் செல்வாக்கு உயர்ந்தது. மெடிசி குடும்பத்தாரின் ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டும் என சாவனரோலா பிரச்சாரம் செய்தார். ஒரு புனிதமான மதம் சார்ந்த அரசை நிர்மாணிக்க வேண்டும் என அவர் கோரினார். வாடிகன் நமது நாட்டில் செல்வாக்கு செலுத்தக் கூடாது. புளோரென்சில் உள்ள 29 வயது நிரம்பிய ஒவ்வொரு குடிமகனும் வாக்களிக்க தகுதியானவன். வரி செலுத்தும் ஒவ்வொருவரும் கிரேட் கவுன்சிலில் இடம் பெற தகுதியானவர் போன்ற பிரச்சாரங்கள் மக்களை கவர்ந்தன. இதற்கிடையில் லோரென்சோவுக்கு பிறகு ஆட்சிக்கு வந்த அவரது மகன் பியெரோ மெடிசியால் தொடர்ந்து பதவியில் இருக்க முடியவில்லை. நாட்டை விட்டு ஓட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அப்போது பிரெஞ்சு அரசர் எட்டாம் சார்லஸ் 20 ஆயிரம் படை வீரர்களுடன் புளோரென்சை கைப்பற்றினார். சிறிது காலம் ஆட்சி செலுத்திய எட்டாம் சார்லஸ் தனது படை வீரர்களுடன் புளோரென்சை விட்டு வெளியேறினார்.

சாவனரோலா ஆட்சிக்கு வந்தார். அவர் ஆட்சிக்கு வந்ததும், புனித மத ஆட்சி என்ற பெயரில் அப்போதைய ஓவியர்கள் மற்றும் கலைஞர்கள் மீது பெரும் தாக்குதலை தொடுத்தார். அரிய புத்தகங்கள் மற்றும் ஓவியங்களை எரித்தார்.

இதையடுத்து, ஏஞ்சலோ ரோம் சென்றார். அங்கு பழங்காலச் சிலைகள் மற்றும் சின்னங்களை பார்க்க ஏஞ்சலோவுக்க வாய்ப்புக் கிடைத்தது. முதல் முதலாக பெரிய சிலை ஒன்றை செதுக்கினார். ஏஞ்சலோ. அது பாச்சுஸ்(1496&98)&ன் முழு உருவச் சிலையாகும். இதே காலகட்டத்தில் அவர் பியெட்டா (1498-1500) எனப்படும் அற்புதமான சிற்பத்தை உருவாக்கினார். அது இப்போதும் செயின்ட் பீட்டர் பாசிலிகாவில் உள்ளது. ஏஞ்சலோவின் படைப்புகளில் குறிப்பிடத்தக்கது பியெட்டா. அதை அவர் தனது 25வது வயதுக்குள்ளேயே முடித்து விட்டார் என்பது.
இளம் மேரி அமர்ந்திருப்பார். அவரது மடியில் இறந்த கிறிஸ்து கிடத்தப்பட்டிருப்பார். இந்த கரு வட அமெரிக்க கலையில் இருந்து ஏஞ்சலோவுக்கு கிடைத்தது. அந்த சிலையை வைத்து சில நாட்களில் வெளியூர் பயணி ஒருவர் அதைப் பார்த்து ரசித்தார். பிறகு, “இந்த சிலையை கிறிஸ்டோபரோ சோலாரி செதுக்கினார்” என்று கூறினார்.

இதைக்கேட்ட ஏஞ்சலோவிற்கு ஆத்திரம் பொங்கியது. அன்று இரவே ஒரு சுத்தியலும் உளியும் எடுத்துப்போனார்.
அந்த சிலையின் அடியில்,¢ இது மைக்கேல் ஏஞ்சலோ செதுக்கியது என்று செதுக்கி வைத்தார். அவர் எந்தப் படைப்பிலும் இப்படி தனது கையெழுத்தை இட்டதில்லை. பியெட்டா கலைஞர்கள் மத்தியில் மிகப்பெரும் புகழைப்பெற்ற ஒரு படைப்பாக அது திகழ்கிறது.

1501 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் தேதியன்று பல வருடங்கள் நடைபெற்ற அரசியல் குழப்பங்களுக்கு பிறகு பிளாரென்ஸ் மீண்டும் ஒரு குடியரசானது. இதற்கு மைக்கேல் ஏஞ்சலோ ஆதரவு தெரிவித்தார். அதன்பிறகு 12 ஆண்டுகள் கழித்து ஆர்டெடெல்லா லேனா அல்லது வுல் கில்ட் எனப்படும் அமைப்பு பைபிள் கதாபாத்திரமான தாவீது சிலையை வடிவமைக்கும் பணியை ஏஞ்சலோவுக்கு வழங்கியது. இந்த அமைப்பு கதீட்ரலை பராமரிப்பது மற்றும் அலங்கரிப்பது ஆகிய பொறுப்புகளை கவனித்து வந்தது.

தாவீது சிலையை(43 மீட்டர்/14.24 அடி) உருவாக்க ஏஞ்சலோவுக்கு மூன்று ஆண்டுகள் (1501ல் இருந்து 1504 வரை) பிடித்தது. அந்தச் சிலையில் ஏஞ்சலோ தனது தேசபக்தியை வெளிப்படுத்தியிருந்தார். அந்த நேரத்தில் பிளாரென்ஸ் பல்வேறு விதமான நெருக்கடியில் இருந்தது.

தாவீதை வீரமிக்க கதாநாயகனாக உருவாக்கியிருந்தார். புளோரென்டைன் மக்கள் தனது செய்தியை புரிந்துகொள் வார்கள் என்ற நம்பிக்கை ஏஞ்சலோவுக்கு இருந்தது. பைபிள் கதாநாயகனான தாவீது, ஆன்ம பலம் என்பது ஆயுதபலத்தை காட்டிலும் வலிமையானது என்பதை சித்தரித்தான். கடவுள் மீது அவன் வைத்திருக்கும் நம்பிக்கையானது, ஒரு சிறு கவன் கல்லை வைத்து, இஸ்ரேலிய எதிரிகளை தோற்கடிக்க துணை செய்தது.

ஒரு விளையாட்டு வீரனாக, யுத்தத்திற்கு எப்போதும் தயார் நிலையில் இருக்கும் தைரியமிக்க ஆண்மகனாக தாவீதை ஏஞ்சலோ வடிவமைத்திருந்தார். அவனது மன இறுக்கமானது அவனது கவலைதோய்ந்த முகத்திலும், கவன் கல்லைப் பிடித்திருந்த கையிலும் தெரிந்தது. தாவீது சிலையின் முழு அர்த்தத்தையும் நாம் விளங்கிக்கொள்ள வேண்டுமானால் சிலை வடிக்கப்பட்ட காலத்தில் நிலவிய சூழ்நிலையை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். குடியரசுக்காக ஏஞ்சலோ தன்னை ஒப்புக்கொடுத்தார். ஒவ்வொரு குடிமகனும் கடமைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொள்வதோடு, தனது பொறுப்புகள் குறித்து விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என விரும்பினார்.

மைக்கேல் ஏஞ்சலோ தனது நாட்குறிப்பில் இப்படி எழுதியிருந்தார்.
“பிளாரென்சுக்கு திரும்பி வந்தபோது, நான் பிரபலமானேன். நகர கவுன்சிலில் இருந்து தாவீது சிலையை செதுக்கும்படி கேட்டுக் கொண்டனர். கதீட்ரலுக்கு அருகே சுத்தியலும் உளியுமாக தொடர்ந்து மூன்று ஆண்டுகள் என்னை நானே சிறை வைத்துக்கொண்டேன். சக கலைஞர்களின் எதிர்ப்புகளுக்கு இடையில், தாவீதுவின் உருவம் பாலாசோ வெச்சியோவுக்கு முன் அந்த சிலை, நமது குடியரசின் ஒரு குறியீடாக அமைய வேண்டும் என வலியுறுத்தினேன். அந்த சிலையை கொண்டு செல்வதற்கென குறுகலான தெருக்கள் அகலப்படுத்தப்பட்டன. சுமார் நாற்பது பேர் அதை ஐந்துநாட்கள் நகர்த்தி கொண்டு சேர்த்தனர்.

இந்தச் சிலையின் மூலம் அனைத்து மாடர்ன் ஆர்ட்டிஸ்ட்டு களையும் மட்டுமல்ல, கிரேக்கர்கள், ரோமனியர்களையும் கடந்தவர் என்பதை நிரூபித்தார்.

மைக்கேல் ஏஞ்சலோவின் கோபம் அனைவரும் அறிந்தது. போப் இரண்டாம் ஜூலியஸ் ஒருமுறை ஏஞ்சலோவைப்பற்றி, அவர் பயங்கரமானவர். அவரை வைத்து எதையும் செய்யமுடியாது என்று கூறினார்.

ஏஞ்சலோவால் தொடர்ந்து யாருடனும் நட்போடு இருக்க முடியாது. அவருக்கு மாணவர்களே இல்லை. உடனிருந்து பணியாற்றுபவர்களும் இல்லை. சிறு பையன்களைத்தான் அவர் உதவிக்கு வைத்திருந் தார்.

ஏஞ்சலோவுக்கும் லியனார்டோ டா வின்ஸிக்கும் இருந்த முரண்பாடு மிகவும் பிரபலம். இருவருக்கும் இருபது வயது வித்தியாசம். டாவின்சி பிளாரென்சுக்கு திரும்பி வரும்போது அவருக்கு வயது 50 ஆகியிருந்தது. நகரின் கலை உலகத்தில் தனக்கு இருந்த இடத்தை மீண்டும் பெற்று விடலாம் என்று அவர் நம்பினார்.

ஆனால் அந்த நேரத்தில் ஏஞ்சலோதான் பிளாரென்சில் புகழ்பெற்ற ஓவியராக இருந்தார். நகரில் உள்ள அனைவரும் உச்சரிக்கும் ஓவியர் பெயர் எது என்றால் அது ஏஞ்சலோவின் பெயர்தான் என்ற நிலை இருந்தது. தாவீது சிலையும் ஏஞ்சலோவுக்கு பெரும் புகழை ஈட்டி வைத்திருந்தது.

மைக்கேல் ஏஞ்சலோ நிர்வாண மற்றும் ஆடை அணிந்த மனித உருவங்களை விதவிதமான நிலைகளில் வரைந்தார். பின்னாளில் அவர் வாடிகனில் சிஸ்டின் தேவாலயத்தின் உட்கூரையில் ஓவிங்கள் வரையும் பணிக்கு இது முன்னோடி யாக அமைந்தது.

1508 ஏப்ரலில் அரசர் இரண்டாம் ஜூலியஸ்சிடம் இருந்து ரோமுக்கு வருமாறு அழைப்பு வந்தது. சிஸ்டின் தேவாலயத்தின் உட்கூரையை ஓவியங்களால் அலங்கரிக்கும் பணியும் இயேசுவின் 12 சீடர்களின் ஓவியங்களை வரையும் பணியையும் ஏஞ்சலோவுக்காக வைத்திருந்தார் இரண்டாம் ஜூலியஸ்.

தன்னை எப்போதுமே ஒரு சிற்பியாகக் கருதி வந்த மைக்கேல் ஏஞசலோ தற்போது ஒரு சிறந்த சுவர் ஓவியக்காரராக உருவாகியிருந்தார். மைக்கேல் ஏஞ்சலோ சிஸ்டின் தேவாலயத்தில் பணியாற்றுவது அங்கிருந்த மற்ற ஓவியர்களுக் குப் பிடிக்கவில்லை.

ஆனாலும், இரண்டாம் ஜூலியஸ் ஏஞ்சலோவின் கலைத்திறனால் ஈர்க்கப்பட்டார். இருவருக்கும் நெருக்கம் அதிகமானது. 1512 அக்டோபர் 31ம் தேதியன்று ஏஞ்சலோ தேவலாயத்தின் உட்கூரையில் சுமார் 300 ஓவியங்களை வரைந்திருந்தார்.

1508 மே மாதம் தேவாலயததின் உட்கூரையில் ஆரம்பகட்ட அலங்கார வேலைகளை துவக்கினார். அந்த வேலைகளுக்கு அவர் பிரான்செஸ்கோ கிரானகி, குய்லியனோ புகியர்டினி உட்பட பல்வேறு ஓவியர்களை உதவிக்கு வைத்திருந்தார். கூடிய விரையிலேயே அவரது உதவியாளர்களுக்கும் அவருக் கும் முரண்பாடு ஏற்பட்டது. அவர்களது வேலைகள் அவருக்கு திருப்தி அளிக்கவில்லை. அவர்களது வேலையை கடுமையாக விமர்சித்தார்.

அதுவரையில் வரைந்த ஓவியங்கள் அனைத்தையும் அழித்தார். பின்னர் 1508 ஆம் ஆண்டு டிசம்ப ருக்கும் 1509 ஆம் ஆண்டு ஜனவரிக்கும் இடைப்பட்ட நாட்களில் அவர் அந்த ஓவியங்கள் அனைத்தையும் மீண்டும் வரைந்தார்.

ஓவியங்களை வரையும் போது அவர் அதை போப்பை தவிர வேறு யாருக்கும் காண்பித்ததில்லை. வேலையை விரைவாக முடியுங்கள் என்று போப் ஓயாமல் நச்சரித்துக்கொண்டே இருந்ததால் 1511 ஆகஸ்ட் மாதம் அரைகுறையாக முடிந்த ஓவியங்களை அவருக்கு காண்பித்தார். சிஸ்டின் தேவாலயத் தின் உட்கூரையில் ஏஞ்சலோ வரைந்த ஓவியங்கள் சக ஓவியர்கள் மத்தியில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

இந்த ஓவியங்களை வரைந்த பொழுது ஏஞ்சலோ உடல் மற்றும் மன ரீதியில் பெரும் சித்தரவதையை அனுபவித்ததாக கூறினார். “அந்த சித்ரவதையான நான்கு வருடங்களுக்கு பிறகு, சுமார் 400 க்கும் மேற்பட்ட பிரமாண்டமான ஓவியங்களை வரைந்ததற்கு பிறகு நான் கிழவனாகி விட்டதாக உணர்ந்தேன். ஆனால், அப்போது எனக்கு வயது 37தான் ஆகியிருந்தது” என்று அவர் கூறினார்.

1508 மற்றும் 1512க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் தேவாலயத்தின் மேற்கூரையில் சாரக்கட்டு அமைத்து ஏராள மான ஓவியங்களை வரைந்தார். அதில் மிக அற்புதமான ஓவியங்களை எல்லாம் அவர் தீட்டினார். ஜெனிசிஸ் புத்தகத் தில் இருந்து அவர் வரைந்த ஒன்பது ஓவியங்கள் மிகவும் பிரபலம். இருளில் இருந்து கடவுள் ஒளியை பிரிக்கும் காட்சி, ஆதாம் ஏவாள் படைக்கப்பட்டது, ஆதாமும் ஏவாளும் ஆசை காரணமாக வீழ்ச்சி அடைந்தது, வெள்ளப் பெருக்கு போன்ற காட்சிகளையெல்லாம் அவர் ஓவியங்களாக தீட்டினார்.

இந்த ஓவியங்களில் பளிங்கு சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் தீர்க்கதரிசிகள், பைபிளின் பழைய ஏற்பாட்டில் உள்ள காட்சிகள், கிறிஸ்துவின் மூதாதையர்களுடைய ஓவியங்களை அவர் தீட்டினார். இவற்றில் மனித உடலமைப்பு மற்றும் அதன் இயக்கம் குறித்த ஏஞ்சலோவின் அறிவு வெளிப்பட்டன. இந்த ஓவியங்கள் மேலை நாட்டில் அதுவரையில் நடைமுறையில் இருந்த ஓவிய பாணியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தின.

1505ல் சிஸ்டின் தேவாலயத்தின் உட் கூரை வேலைகளை ஒப்புக்கொள்வதற்கு முன் இரண்டாம் ஜூலியஸ் மற்றொரு வேலையை கொடுத்தார். ஜூலியசுக்கு கல்லறை கட்டும் பணியை ஏஞ்சலோவிடம் அவர் கொடுத்தார். அந்த கல்லறை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். சவால் மிகுந்த பணிதான். இருந்தாலும், அதை ஆர்வத்துடன் ஏற்றுக்கொண்டார்.

புனித பீட்டரின் புதிய பாசிலிகாவில் அந்த கல்லறை அமைக்க திட்டமிடப்பட்டது. 40 ஓவியங்களும் அதில் இடம் பெற்றன. கல்லறைக்கான பளிங்கு கற்களை தேர்வு செய்வதற் காக கல்குவாரியில் பல மாதங்களை செலவழித்தார். இதற்கிடையில் ஏஞ்சலோவுக்கு பணப்பற்றாக்குறை ஏற்பட்டது. கல்லறைப் பணியை முடிக்க அதிக நாள் ஆகும் போலத் தோன்றியது. இதையறிந்த போப், அந்தப் பணியை அப்படியே நிறுத்தி விட்டு, சிஸ்டின் தேவாலய உட்கூரை வேலைகளை செய்யுமாறு ஏஞ்சலோவிடம் கூறினார்.

சிஸ்டின் வேலைகளை முடித்து விட்டு கல்லறை வேலைக்கு திரும்பிய ஏஞ்சலோ ஏற்கனவே திட்டமிட்டதை மாற்றி புதிதாக வடிவமைத்தார். அந்தக் கல்லறைக்காக மோசஸ் சிற்பம் (1515) உட்பட மிகச்சிறந்த சிற்பங்களை வடித்தார். அந்த கல்லறை தற்போது ரோமில் உள்ள வின்கோலியில் சான¢பியட்ரோ தேவாலயத்தில் உள்ளது.

1510 மற்றும் 1513க்கு இடைப்பட்ட காலத்தில் மைக்கேல் ஏஞ்சலோ செதுக்கிய சிற்பங்கள் பவுண்ட் ஸ்லேவ்ஸ், டையிங் ஸ்லேவ். இவை இரண்டும் அவரது தனித்தன்மையான செதுக்கும் பாணியை வெளிப்படுத்தின. ஆனாலும் அவை இரண்டு சிற்பங்களையுமே அவர் முழுவதுமாக செதுக்கி முடிக்கவில்லை.

அவரது மிகச்சிறந்த பல படைப்புகள் இப்படி அரைகுறையாக விட்டு வைத்தவைதான். இந்த சிற்பங்களை அவர் பாதியோடு நிறுத்தியதற்கு, அந்த அளவோடு அவர் திருப்தி அடைந்திருக்க வேண்டும் அல்லது அந்த சிற்பத்தை அவர் வீணானது என நினைத்திருக்கலாம். எது எப்படியோ அந்த சிற்பங்கள் மிகச்சிறந்த படைப்புகளாக அமைந்துவிட்டன.

ஜூலியசின் கல்லறை அமைப்பதற்கு கட்டிடக் கலைஞர் ஒருவருடைய பங்கு தேவைப்பட்டது. ஏஞ்சலோவே கட்டிடக்கலைஞராக தனது பணியை 1519ல் துவங்கினார். அப்போது அவர் பிளாரென்சில் உள்ள சான் லோரென்சோ சர்ச்சில் தங்கியிருந்தார். 1520ல் அந்த சர்ச்சில் இருந்த லுத்தரன் நு£லகத்தை வடிவமைக்கும் பணியை மேற்கொண்டார். ஆனால் அந்தப்பணி பல ஆண்டுகளுக்கு பிறகுதான் முடிவடைந்தது.

அதற்கு காரணம் அவர் வழக்கமாக ஓவியங்கள் மற்றும் சிற்பங்களில் கடைப்பிடிக்கும் பாணியை இதிலும் கடைப்பிடித்தார். முதலில் நு£லகத்தின் சுவர்களை ஒழுங்குபடுத்தும் பணியைத்தான் தொடங்கினார். ப்ளோரென் டைனில் அதற்கு முன் இருந்த நடைமுறைப்படி அந்தப் பணியை துவங்கினார். பிறகு பாதியிலேயே அந்த பாணியை மாற்றினார். கட்டிடக் கலையில் பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்ட கிரேக்க மற்றும் ரோமானிய பாணிக்கு அவர் அடிபணிய மறுத்தார். முக்கோண முகப்பு, அரைவட்ட வடிவம் என தனித்த பாணியில் அவர் நு£லகத்தை வடிவமைத்தார்.

1526ல் பிளாரென்சில் மெடிசி ஆட்சியை விட்டு துரத்தப்பட்டார். அதையடுத்து பிளாரென்ஸ் குடியரசாக மாறியது. ஆனாலும் நகரைச்சுற்றி ஜெர்மன் கூலிப்படையினரை நிறுத்தும்படி ஏழாம் கிளெமன்ட் உத்தரவு பிறப்பித்திருந்தார். 1527ல் அந்த கூலிப்படையினர் நகரை தீக்கிரையாக்கியதோடு, ரத்தக்களறியாக்கினர்.

மைக்கேல் ஏஞ்சலோ அதுவரையில் தான் மேற்கொண் டிருந்த அனைத்து பணிகளையும் பாதியில் நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. 1528ல் புதிதாக வந்த அரசு நகரை பாதுகாப்பதற்கான திட்டம் வகுக்கும்படி ஏஞ்சலோவை கேட்டுக்கொண்டது. பாதுகாப்புக்கென்று அமைக்கப்பட்ட நோவா டெல்லா மிலிசியா குழுவில் 1529 ஜனவரி 10 ஆம் தேதி ஏஞ்சலோவும் ஒரு உறுப்பினராக சேர்த்துக்கொள் ளப்பட்டார். அந்தக்குழுவில் 9பேர் இருந்தனர். ரோமன்ஸ் சர்ச்சை பாதுகாக்க ஏஞ்சலோ திட்டம் வகுத்தார்.

ஆனால், நகரைச்சுற்றி நிறுத்தப்பட்டிருந்த கூலிப்படையினர் எந்தநேரமும் நகருக்குள் நுழைந்து நாசத்தை விளைவிக்கலாம் என்று கருதினார். இதையடுத்து, வெனிசுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டார். அவரது திட்டம் அரசுக்கு தெரிந்து விட்டது. குடியரசுக்கு துரோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு நாடு கடத்தப்பட்டார்.

மீண்டும் மெடிசி ஆட்சிக்கு வந்தார். அப்போது ஏஞ்சலோ வுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது. மீண்டும் அவரிடம் தேவாலயம் மற்றும் லுத்தரன் நு£லக வேலைகள் கொடுக்கப் பட்டன. உர்வினோ இளவரசர் லியோனெர்சோ டி மெடிசி, நிமோர்ஸ் இளவரசர் கிலியானோ டி மெடிசி ஆகியோரின் கல்லறைகள் அமைக்கும் பணியும் ஏஞ்சேலாவிடம் ஒப்படைக் கப்பட்டது.

அந்த கல்லறைகளுக்கு மெடிசி கல்லறைகள் என்று பெயர். இவை முற்றிலும் புதிய பாணியில் அமைக்கப்பட்டன. வழக்கமான கட்டிடக்கலைஞர்கள் யாரையும் அவர் பயன்படுத்தவில்லை. இரண்டாம் ஜூலியசின் கல்லறையில் பயன்படுத்திய தனது சொந்த வடிவமைப்புகளையே மெடிசி கல்லரைகளுக்கும் அவர் பயன்படுத்தினார்.

கல்லறையில் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்கள், அவற்றில் அடக்கம் செய்யப் படுகிறவர்களின் ஆன்மாவை வெளிப்படுத்துபவையாக இருக்க வேண்டும் என விரும்பினார் ஏஞ்சலோ.

ஏஞ்சலோவுக்கு முன் ஓவியர்களும் சிற்பிகளும் இதுபோன்ற கல்லறைகளில் தேவதைகள், புனித மேரி, இயேசு கிறிஸ்து, அவரது சீடர்கள் போன்ற மதக் குறியீடுகளைத்தான் வடிவமைத்தனர்.

ஆனால் கிறிஸ்தவ மதத்தின் அடிப்படைக் கருத்து மனிதாபிமானம். அந்த மனிதாபிமானத்தை வெளிப்படுத்தும் விதமாக கல்லறைகளில் சிற்பங்கள் அமைக்கப்பட வேண்டும் என ஏஞ்சலோ விரும்பினார். அவர் கல்லறைகளில் அமைத்த உருவங்களுக்கு சூரிய உதயம், அஸ்தமனம், இரவும் பகலும் என்று பெயரிட்டிருந்தார்.

அவை வெறும் பெயர்கள்தான் உண்மையில் அவரது சிற்பங்கள் மனிதம் என்பதைத்தான் பிரதிபலித்தன. மனிதனின் பாடுகளை அவை பிரதிபலித்தன. அவற்றில் இருந்த அழுகையும் சோகமும் அந்த சிற்பங்களுக்கு உயிர் கொடுத்தன. அவையே அந்த சிற்பங்களுக்கு அழகையும் கொடுத்தன.
ஒரு முறை ஏஞ்சலோ இப்படி எழுதியிருந்தார்.

“ எனக்கு தூங்குவதுதான் மகிழ்ச்சி. ஒரு கல்லாகக் கூட ஆகி விடலாம்.
பார்ப்பதற்கோ உணர்வதற்கோ எனக்கு எதுவும் இல்லை.
மெதுவாகப் பேசுங்கள்
உங்களை மன்றாடிக் கேட்கிறேன்
தூக்கத்தில் இருந்து
என்னை யாரும் எழுப்பி விடாதீர்கள்.”

மெடிசி கல்லறைப்பணிகள் 1534 வரையில் நீடித்தன. பின்னர் பிளாரென்சை விட்டு ரோமுக்கு சென்றார். அதன்பிறகு அவர் பிளாரென்சுக்கு திரும்பவே இல்லை. அதற்கு காரணம் அலெசான்ரோ டி மெடிசியுடன் ஏஞ்சலோவுக்கு முரண்பாடு கள் ஏற்பட்டது. இறுதியாக பிளாரென்சை விட்டு செல்லும் போது, ஏஞ்சலோ இப்படி சொன்னார்…

“ப்ளொரென்டைனியர்களைப் போல அற்பமான அராஜகமான மனிதர்களை நான் பார்த்ததே இல்லை”

ரோமில், ஏஞசலோவை போப் எட்டாம் கிளெமன்ட் அன்புடன் வரவேற்றார். ஆனால், ஏஞ்சலோ ரோமுக்கு வந்து இரண்டு நாட்களில்(1534, செப்டம்பர் 25) கிளெமன்ட் இறந்து விட்டார். அவர் இறப்பதற்கு முன் சிஸ்டின் தேவாலயத்தில் “இறுதித் தீர்ப்பு’ சுவரோவியம் தீட்டும் பணியை ஏஞ்சலோவுக்கு வழங்கினார்.

அந்த காலகட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கு மத்தியில் ஒற்றுமை இல்லாமல் இருந்தது. அவர்களுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்த இறுதித் தீர்ப்பை வலியுறுத்த வேண்டும் என போப் எட்டாம் கிளமென்ட் விரும்பினார். இறுதித் தீர்ப்பை சித்தரிக்கும் மிகப்பெரிய ஓவியத்தை வரைய வேண்டும் என அவர் மைக்கேல் ஏஞ்சலோவிடம் கேட்டுக்கொண்டார்.

அவருக்கு பின் வந்த போப் மூன்றாம் பால், மைக்கேல் ஏஞ்சலோ சுவரோவியம் தீட்டும் பணிக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்தார். 1535 ஏப்ரல் மாதம் மிகப்பெரிய சாரம் அமைக்கப்பட்டு இறுதித்தீர்ப்பு ஓவியம் வரையும் பணி துவங்கியது. அதில் வரையப்பட்ட ஓவியங்கள் ஏஞ்சலோவின் மற்ற ஓவியங்களை போல நிர்வாண உருவங்களை கொண்டிருந்தது. இது கிறிஸ்தவர்கள் மத்தியில் பெரும் விமர்சனத்தை எழுப்பியது. வாடிகனின் விழாக்கால தலைவரான பியாகியோ டி செசெனா, “இந்த ஓவியங்கள் ஒரு பொதுக் குளியலறைகளிலும் சாராயக் கடைகளிலும் வரைய வேண்டியவை. வெட்கப்படும் விதத்தில அம்மணமாகக் காட்டிக்கொள்ளும் இந்த நிர்வாண ஓவியங்களை ஒரு புனிதமான இடத்தில் வைப்பது வெட்கக்கேடானது என்று கூறினார்.

ஆனால் ஓவியங்களில் இருந்த நிர்வாணம் குறித்து போப் மூன்றாம் பால் கவலைப்படவில்லை. அவருக்கு பின் வந்த மூன்றாம் ஜூலியஸும் கவலைப்படவில்லை. ஆனால் தொடர்ந்து பல்வேறு எதிர்ப்புகள் வந்ததால், 1564 ஜனவரியில் ஓவியத்தை திருத்துவது என ட்ரென்ட் கவுன்சில் முடிவெடுத்தது.

இறுதித்தீர்ப்பு ஓவியத்தை ஏஞ்சலோ 1541ல் முடித்தார். அதன்பிறகு 23 ஆண்டுகளுக்கு பிறகு ஓவியத்தை திருத்துவது என முடிவெடுத்தனர். மற்றொரு ஓவியரை வைத்து அந்த ஓவியத்தை திருத்தினர். இவ்வாறு ஓவியங்களை திருத்துபவர் கள் பிரிச்சஸ் மேக்கர் என அழைக்கப்பட்டனர். 1540ல் ஏஞ்சலோவுக்கு பவுலின் தேவாலயத்தை அலங்கரிக்கும் பணி அளிக்கப்பட்டது.

இறுதித்தீர்ப்பு ஓவியத்தை முடிப்பதற்கு மூன்று ஆண்டுக ளுக்கு முன் 1538ல் விட்டோரியா கொலோனா எனும் பெண்மணியை ஏஞ்சலோ சந்தித்தார். இவர் ஒரு கவிஞர். அப்போது விட்டர்போ வட்டம் எனும் பெயரில் ஒரு குழு செயல்பட்டு வந்தது.

சர்ச் நடவடிக்கைகளில் மறுமலர்ச்சியை கொண்டு வரவேண்டும் என்பது இக்குழுவின் நோக்கம். இக்குழுவில் ஒரு அங்கத்தினராக இருந்தார் விட்டோரியா. கிறிஸ்தவர்கள் தங்களது வாழ்க்கையில் மனிதனின் நடவடிக்கைகளை காட்டிலும் கடவுளின் கிருபைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பது இக்குழுவின் கொள்கை.

ஏஞ்சலோவுக்கும் விட்டோரியோவிற்கும் இடையில் ஆழமான நட்பு ஏற்பட்டது. அப்போது ஏஞ்சலோவுக்கு வயது 61. விட்டோரியாவுக்கு 46.
இருவருக்கும் இடையே 1538ல் அறிமுகம் ஏற்பட்டாலும், 1544ல் இருந்துதான் நெருக்கம் ஏற்பட்டது. ஓவியங்கள், கடவுள் நம்பிக்கை, வாழ்க்கை, கவிதை என பல்வேறு விஷயங்கள் குறித்து கடிதம் மற்றும் உரையாடல்கள் மூலம் இருவரும் பரிமாறிக்கொண்டனர். விட்டோரியாவுக்கு மூன்று ஓவியங் களை ஏஞ்சலோ கொடுத்தார்.

துறவிகளுக்கான மடம் ஒன்றை கட்டுவதற்கு இருவரும் சேர்ந்து திட்டமிட்டனர். இந்த பரிமாற்றங்களும் சுவையான உரையாடல்களும் மூன்று ஆண்டுகள் மட்டுமே நீடித்தன. 1547ல் விட்டோரியாவை மரணம் தழுவிக்கொண்டது.

ஏஞ்சலோ விட்டோரியாவுக்கு எழுதிய கடிதங்கள் அனைத்துமே தன்னை விட மேம்பட்ட ஒரு பெண்மணியை போற்றும் விதத்தில் அமைந்திருந்தன. விட்டோரியா ஏற்படுத் திய பாதிப்பில் ஏஞ்சலோவும் பாடல்கள் புனைந்தார். ஆன்மீகம் மற்றும் மாயாவாதம் சார்ந்த பாடல்களை அவர் இயற்றினார்.

புகழ்பெற்ற ஓவியராக சிற்பியாக விளங்கினாலும், ஏஞ்சலோ தனது மனத்தளவில் விரக்திநிலையிலேயே காணப்பட்டார். ஒருமுறை அவர் இப்படி கூறினார்…

“நான் எளியவன். தரம் குறைந்தவன். கடவுள் எனக்கு ஓவியக் கலையைக் கொடுத்திருக்கிறார். அதைக் கொண்டு இயன்ற அளவுக்கு எனது ஆயுளை நீட்டிப்பதற்காக உழைத்துக் கொண்டிருப்பவன்”

ஒரு கட்டிடக்கலைஞனாக மைக்கேல் ஏஞ்சலோவின் சாதனையாக செயின்ட் பீட்டரின் பாசிலிகாவில் அவர் மேற்கொண்ட பணி அமைந்தது. இந்த பணியில் 1546ல் அவர் தலைமை கட்டிடப் பொறியாளராக இருந்தார்.

டோனடோ பிரமன்டேயின் திட்டப்படி அக்கட்டிடம் கட்டப்பட்டது. எனினும் கட்டிடத்தின் இறுதி மாற்றங்களும் வடிவமைப்பும் ஏஞ்சலோவினுடையதுதான். அதன் இறுதிக்கட்ட மாட அமைப்பு அவருடையதுதான்.

இந்தக்காலகட்டத்தில் ஏஞ்சலோவுக்கு எழுபது வயது நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதற்கு முன் இவர் ஒப்புக் கொண்ட பணிகளை விட மிகவும் சுமை நிறைந்ததாக இருந்தாலும் சந்தோஷமாக செய்தார். இதற்கு போப் மிகவும் வலியுறுத்தியது மட்டும் காரணமல்ல. இந்தப்பணி கடவுளுக்கு செய்வது என அவர் கருதினார்.

வாழ்நாள் முழுவதும் ஏஞ்சலோ போப்புகளுக்காகத்தான் பணி செய்து வந்தார். தனது கடைசிக் காலகட்டத்தில் கடவுளுக்காக பணி செய்ய வேண்டும் என அவர் விரும்பினார். அவரது உறவினர் லியனார்டோவுக்கு அவர் எழுதிய கடிதம் ஒன்றில்,

“இந்த பணியை மேற்கொள்வதற்காக கடவுள் என்னை நியமித்துள்ளார் என நான் நம்புகிறேன். பலரும் அவ்வாறே நம்புகின்றனர். எனக்கு வயதாகிவிட்டாலும் அப்பணியை நான் விட்டு விட விரும்பவில்லை. கடவுளின் மீதுள்ள பிரியத்தினால் அவர் மீது எனது முழு நம்பிக்கையையும் வைத்து நான் இப்பணியை மேற்கொண்டேன்.” என எழுதியிருந்தார்.

இந்தப் புனிதமான பணிக்கு அவர் பணம் எதுவும் வாங்கவில்லை. ஆனால், அவர் எதிரிகளை சம்பாதிக்க வேண்டியிருந்தது. ஏஞ்சலோ பொறுப்புக்கு வருவதற்கு முன் சாங்காலோ கிளான் எனப்படும் கட்டிட ஒப்பந்ததாரரிடம் இப்பணி ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவர்கள் ஏராளமான பணத்தை சுருட்டுவதையும் ஊழல் செய்வதையும் ஏஞ்சலோ கண்டுபிடித்தார். ஊழலை தடுத்தால், இந்த கட்டிடப் பணியை முடிப்பதில் ஐம்பது ஆண்டுகளையும் ஏராளமான பணத்தையும் மிச்சம் செய்ய முடியும் என்று அவர் கூறினார். ஆனால் சர்ச்சில் இருந்த சிலரே ஏஞ்சலோவை தவறாகப் புரிந்து கொண்டனர்.

“தேவாலய கட்டிடப் பணிகளை மேற்பார்வையிடுவதில் நான் எனது நாட்களை செலவழித்தேன். ஆனால் வாடிகனில் உள்ள நிதி கண்காணிப்பாளர் நான் அளித்த ஒரு அறிக்கைக் காக என்னை கடுமையாக விமர்சித்தார்.

நான¢ அவருக்கு அளித்த பதிலில், நான் உங்களிடம் சொல்ல எதுவுமில்லை. திருடர்களிடம் பணம் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதும், பணம் பாதுகாக்கப்படுவதும் உங்களது நோக்கம். கட்டிடத்தை கட்டுவது எனது நோக்கம் என்று கூறினேன்”
என்று ஏஞ்சலோ ஒருமுறை கூறியிருந்தார்.

அதன்பிறகு பியேரோ லிகோரியோ எனும் கட்டிடக்கலைஞர் இப்பணிக்கு வந்தார். அவரோடும் ஏஞ்சலோவுக்கு முரண்பாடு ஏற்பட்டது. தொடர்ந்த பிரச்சனை கள் காரணமாக ஏஞ்சலோ புளோரென்சுக்கே திரும்பிவிட லாமா என்று கூட யோசித்தார். இதற்கிடையில் ஜியார்ஜியோ வசாரி, கட்டிடப்பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளுமாறு ஊக்கப்படுத்தினார். ஆனால், முதுமை காரணமாக தொடர்ந்து மரணத்தைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தார். தான் இறுதி நாட்களில் இருப்பதாக அடிக்கடி கூறி வந்தார்.

தனது கடைசி படைப்பை பற்றி பற்றி ஏஞ்சலோ இவ்வாறு கூறினார்.

“எனது வாழ்க்கையின் லட்சியத்தை அடைந்து விட்டேன். அதன் வலிமையில்லாத படகில் புயல் நிறைந்த கடலுக்கு மத்தியில் பயணம் செய்து, எங்கே நமது கடந்த கால செயல்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டுமோ, அங்கே… அந்த துறைமுகத்தை சென்றடைந்து விட்டேன். ஓவியங்களோ சிற்பங்களோ எனது ஆன்மாவை அமைதிப்படுத்த முடியவில்லை. தற்போது கடவுளின் கைகள் தழுவியிருக்க கருணை நிறைந்த அன்புக்கு திரும்பியிருக்கிறேன். சுமார் 10 ஆண்டுகள் உறங்காமல் ஒரு பியெட்டாவை வடிவமைத்தேன்.

நமது கடவுள் இறந்து போனதால் அவரது உடல் கனமாகிவிட்டது. அவருடைய தாயார் து£க்கி வைத்துக் கொள்வதற்கு சிரமமாக இருக்கிறது. அவரது தலை பூமியோடும் நிஜத்தோடும் சம்மந்தப்பட்டிருக்கிறது. எனவே, நான் கடவுளின் தலையை வெட்டினேன். ஒரு புதிய விஷயத்தின் மாதிரியாக நான் அவரது தோள்பட்டைகளை மட்டும் விட்டு விட்டேன். கன்னியின் தோளில் இருந்து புதிய தலையை செதுக்கினேன். அவர் தனது தாயாரின் உடலோடு இரண்டறக்கலந்து விட்டார். அவரை உயர்த்தி து£க்குவதற்காக அன்னை தனது உடலை முன்னோக்கி வளைத்திருக்கிறார். தாயும் மகனும் உயிர்ப்பும் இறப்பும் ஒரே இறப்பாக மாறி ஒரு புத்துயிர்ப்பாய் மாறியது.”

ஏஞ்சலோவால் சரியாக து£ங்க முடியவில்லை. திடீரென்று நடு இரவில் உளியோடு எழுந்துகொள்வார். வேலையை செய்ய துவங்குவார். இரவில் வேலை செய்யும் போது அவர் தனது தலையில் ஒரு ஹெல்மெட் மாட்டிக்கொள்வார். அதன் மீது ஒரு மெழுகுவர்த்தி எரிந்துகொண்டிருக்கும். இந்த வெளிச்சத்தில்தான் அவர் சிலையை செதுக்குவார். வயதாக வயதாக அவர் தனிமையையே மீண்டும் மீண்டும் விரும்பினார். ரோம் நகரம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும். அந்த இரவு இவருக்கு நண்பராக இருந்தது. அந்த அமைதி இவரை ஆசிர்வதித்தது. ஏகாந்தமாக வேலையை செய்து கொண்டிருந்தார்.

இறுதிக்காலத்தில் ஏஞ்சலோ தன்னைப்பற்றி இப்படி எழுதியிருந்தார்.

“நான் தனியாக கவலையுடன் வசிக்கிறேன். சிதைந்து கொண்டிருக்கும் எலும்பும் தோலுமான ஒரு குளவியின் குரலைப் போல எனது குரல் இருக்கிறது. எனது பற்கள் நடுங்குகின்றன. எனது முகம் சோளக்கொல்லை பொம்மை போல உருக்குலைந்து போனது. எனது செவிகள் அடைத்துக் கொள்கின்றன. இருமல் என்னை து£ங்க விட மறுக்கிறது. இந்த நிலையில்தான் கலை என்னை வழிநடத்துகிறது. மரணம் விரைவாக வந்து என்னைக் காப்பாற்ற வேண்டும். தற்போது மரணம் என்னும் விடுதி மட்டும்தான் எனக்காக காத்துக் கொண்டிருக்கிறது.”

1564 பிப்ரவரி 18ம்தேதியன்று அவருக்கு சிறு காய்ச்சல் ஏற்பட்டு இறந்தார். இறக்கும் போது தனது நண்பர்கள் டொமாசோ காவலியெரி, டேனியல் டா வொல்டெரா ஆகியோரிடம்,

“எனது ஆன்மா கடவுளுக்கு. எனது உடல் மண்ணுக்கு. எனது பொருளுடைமைகள் நெருங்கிய எனது உறவினர்க ளுக்கு.” என்று கூறியதாக வசாரி தெரிவித்திருக்கிறார். உண்மையில் ஏஞ்சலோவின் வீட்டில் குறைந்த ஓவியங்களே இருந்தன. ஏனெனில், அவர் வரைந்த பல ஓவியங்களை அவரே எரித்து விட்டிருந்தார்.

Leave A Reply