உலகப் புகழ்பெற்ற ஓவியர்கள் – 3.ரஃபேல்

Share

இவரும் இத்தாலி நாட்டு ஓவியர்தான்.

மறுமலர்ச்சி காலத்தைச் சேர்ந்த ஓவியர்களில் ரஃபேலுக்கு தனி இடம் இருக்கிறது.

இவரது முழுப்பெயர் ரஃபாயிலோ சான்சியோ. நவீனத்துவம் இவருடைய சிறப்பு. மிகப்பெரிய உருவங்களை வரைந்ததற்காக வாடிகனில் மிகவும் புகழ்பெற்றவர். இவருடைய நேர்த்தியான வேலைகளுக்காக நேசிக்கப்படுகிறவர்.

ஜியோவனி சான்டி மற்றும் மாகியா டி பாட்டிஸ்டா சியார்லா ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவருடைய தாயார் 1419ல் இறந்தார்.

ரஃபேலின் தந்தையும் ஓவியர். ஓவியம் பற்றி ரஃபேலுக்கு கற்றுக்கொடுத்த முதல் ஆசிரியர் இவர்தான். இவர் 1494ல் இறந்தார். அப்போது, ரஃபேலுக்கு வயது 11. ஓவியத்தை தவிர மனிதாபிமான தத்துவத்தையும் தந்தையிடம் கற்றிருந்தார்.

ரஃபேல் குடும்பம் வசித்த உர்பினோ நகரம், இளவரசர் ஃபெடெரிகோ ஆட்சியின் கீழ் பண்பாட்டு மையமாக திகழ்ந்தது. இளவரசர் பெடெரிகோ கலைகளையும் கலைத்திறன் படைத்தவர்களையும் ஊக்குவித்தார். ரோம் மற்றும் உர்பினோவில் இருந்த சிறந்த ஓவியர்களின் பாதிப்பு ரஃபேலுக்கு இருந்தாலும் அவர் தொடர்ந்து கற்றுக்கொண்ட அனைத்து விஷயங்களுக்கும் அடிப்படையாக அமைந்தது உர்பினோதான்.


அந்த நகரின் பண்பாட்டுச் செறிவானது அந்த இளம் ஓவியனை தூண்டிக் கொண்டே இருந்தது. 16ம் நு£ற்றாண்டின் துவக்கத்தில் ரஃபேலுக்கு 17 வயதான சமயத்திலேயே அவர் தனது திறனை சிறப்பாக வெளிப்படுத்தினார்.

ரஃபேல் பெருஜியாவுக்கு எப்போது வந்தார் என்பது தெரியவில்லை. 1945ல் அங்கு பல அறிஞர்கள் இருந்தனர். ரஃபேல் ஓவியராக வெளியில் அறிமுகமானது 1500 டிசம்பர் 10 ஆம் நாள். அப்போது அவர் ஒரு இளம் ஓவியராக இருந்தார். பிறகு அவர் மாஸ்டர் என அழைக்கப்பட்டார். 1502 செப்டம்பர் 13 ஆம் தேதி ஓவிய உதவியாளராக ஆனார்.

பெருஜியாவில் உள்ள ஓடி தேவாலயத்திற்காக காரனேஷன் ஆஃப் தி வர்ஜின் எனும் ஓவியத்தை வரைவதற்கு நியமிக்கப்பட்டார். 1498 மற்றும் 1500க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் ஓவிய ஆசிரியரான பீட்ரோ பெருஜினோ, தனது ஓவியப் பட்டறையில் ரஃபேலையும் உறுப்பினராகச் சேர்த்துக் கொண்டார்.

பெருஜியானோ நேரடியாக சொல்லிக் கொடுத்த பல விஷயங்களை கற்றுக் கொண்டார். 1481, 82க்கு இடையில் ரோமில் உள்ள வாடிகன் அரண்மனையின் சிஸ்டின் தேவாலயத்திற்காக தி கிவிங் ஆப் தி கீஸ் டு செயின்ட் பீட்டர் ஓவியத்தை பெருஜினோ வரைந்தார்.

ரஃபேலை பாதித்த முதல் மகத்தான ஓவியம் இதுதான். இந்த பாதிப்பில் ரஃபேல் வரைந்த ஓவியம்தான் தி மேரேஜ் ஆப் தி வர்ஜின். பெருஜியானோ ஓவியங்களில் உருவங்களுக்கும் கட்டிட அமைப்புக்கும் இடையே ஒரு ஒழுங்குமுறை கடைப்பிடிக்கப் பட்டிருக்கும். உருவங்களில் கவித்துவமான ஒரு இனிமை இருக்கும்.

இந்த பாணியை ரபேல் தனது ஓவியங்களிலும் கடைப்பிடித்தார். பெருஜியானோவின் பாதிப்பு இருந்தாலும் ரபேலின் ஓவியத்திற்கு என்று ஒரு தனி பாணியும் இருந்தது.

தி மேரேஜ் ஆப் தி வர்ஜின் ஓவியத்திற்குப் பிறகு விஷன் ஆப் எ நைட், திரி கிரேசஸ், செயின்ட் மைக்கேல் ஆகிய மூன்று ஓவியங்களை வரைந்தார் ரஃபேல். இவை மூன்றுமே விவரிப்பு ஓவிய பாணிக்கு மிகச்சிறந்த உதாரணங்கள். ரஃபேலின் தனித்தன்மையும் இளம் புத்துயிர்ப்பும் இந்த ஓவியங்களில் வெளிப்பட்டன. 1504ம் ஆண்டின் இறுதியில் பெருஜியானோ பாணியை முற்றிலுமாகக் கடந்தார். புதிய வடிவங்களை முயற்சித்தார்.

புளோரென்ஸ் சென்ற ரஃபேல் லியனார்டோ டா வின்சி, மைக்கேல் ஏஞ்சலோ போன்ற ஓவியர்களின் பாணியைப் பின்பற்றினார். 1504 ஆம் ஆண்டுதான் ரஃபேல் முதன்முதலாக புளாரென்ஸ் சென்றாரா என்பது தெரியவில்லை. ஆனால் அந்த ஆண்டில்தான் அவர் தனது பழைய பாணியை முற்றிலும் கடந்தார். இந்த காலகட்டத்தில் புளாரென்சில் உள்ள ஓவியர்களோடு நெருக்கம் ஏற்பட்டது. அவர் அப்போது லியானார்டோ, மைக்கேல் ஏஞ்சலோ, பிரா பார்த்தலோமோ போன்ற ஓவிய மேதைகளின் படைப்புகளை ஆய்வு செய்தார்.

டா வின்ஸியையும் ஏஞ்சலோவையும்தான் தனது முன்னோடியாக கொண்டிருந்தார். 1505&07 காலகட்டத்தில் ரஃபேல் ஏராளமான படைப்புகளை உருவாக்கினார். அவற்றில் பெரும்பாலானவை மடோனா பற்றியவை. அந்த தொகுப்பில் அவர் வரைந்த தி மடோனா ஆப் கோல்ட்பின்ச், மடோனா டெல் பிராட்டோ, தி ஈஸ்டர்ஹேசி மடோனா, லா பெல்லி ஜார்டினியர் போன்ற ஓவியங்கள் குறிப்பிடத்தக்கவை.

இந்த ஓவியங்களில் டாவின்சி படைப்புகளின் பாதிப்பு இருக்கும். 1480ல் இருந்து டாவின்சி ஓவிய உலகில் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர். டாவின்சியின் குழந்தையுடன் மாதா, புனித மாதா போன்ற படைப்புகள் ரஃபேலை மிகவும் பாதித்த படைப்புகள். இந்தப் படைப்புகள் ஒரு வித நெருக்கத்தையும் எளிமையையும் கொண்டிருந்தன.

இந்த பாணி 15 ஆம் நு£ற்றாண்டில் கலை உலகில் பொதுவாக காணப்படாத புதிய பாணி ஆகும். ரஃபேல் புளோரென்டைன் பாணிகளை கற்றுக் கொண்டார்.

இந்த பாணியில் வரையப்பட்டுள்ள ஓவியங்களில் ஒரேமாதிரியான கூட்டம் வரையப்பட்டிருக்கும். அந்த கூட்டத்தில் உள்ள ஒவ்வொரு உருவமும் தனித்தன்மையும் தனித்த வடிவமும் கொண்டிருக்கும். புளாரென்சில் ரஃபேல் வரைந்த ஓவியங்களில் வழக்கமான பாணியில் கடைப்பிடிக்கப்பட்ட தேவையற்ற விஷயங்கள் நீக்கப்பட்டு, புதிய வண்ணக்கலவை இருந்தது. இது அவரது ஓவியத்தை பிறர் ஓவியங்களில் இருந்து வித்தியாசப்படுத்தியது.
லியானார்டோவின் ஓவியங்களில் பின்பற்றப்பட்ட வெளிச்ச உத்திகளை தானும் கடைப்பிடிக்க விரும்பினார் ரஃபேல். வெளிச்சம் மற்றும் இருளுக்கு இடையே ஒரு வலிமையான முரண்பாட்டை பின்பற்றுவார் டாவின்சி. இந்த பாணியை மிதமான அளவில் ரஃபேலும் பயன்படுத்தினார்.

டாவின்சியின் புமாட்டோ ஓவியத்தில் கோடுகளுக்கு பதில் மிதமான நிழலைப் பயன்படுத்தியிருப்பார். இந்த ஓவியம் ரபேலை வெகுவாக பாதித்த ஓவியமாகும். ரஃபேல் வரைந்த ஓவியங்களில் காணப்பட்ட உருண்டையான, தெளிவான மிதமான முக அமைப்புகள், அவை வெளிப்படுத்திய மனித உணர்வுகள் போன்றவை டாவின்சியின் ஓவிய பாணியை கடந்தவை.

1507ல் டிபொஷிசன் ஆப் கிறிஸ்ட் ஓவியம் வரையும் பணி ரபேலிடம் அளிக்கப்பட்டது. அந்த ஓவியம் தற்போது ரோமில் போர்கீஸ் காலரியில் உள்ளது. மைக்கேல் ஏஞ்சலோவின் ஓவியங்கள் மனித உடலமைப்பை துல்லியமாக வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்துபவை. ஏஞ்சலோவிடம் இருந்து இதை கற்றுக்கொள்ள விரும்பினார் ரஃபேல். டிபொஷிசன் ஆப் கிறிஸ்ட் ஓவியத்தில் ரஃபேல் வரைந்த உருவங்களில் உடலமைப்பு துல்லியமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கும்.

அதே சமயத்தில் இந்த ஓவியத்தில் லியானார்டோ மற்றும் ஏஞ்சலோ ஆகிய இருவர் பாணியில் இருந்தும் வித்தியாசமான பாணியை கையாண்டிருந்தார் ரஃபேல். அவர்கள் இருவரது ஓவியத்திலும் சொல்ல வரும் விஷயம் பூடகமாக சொல்லப்பட்டிருக்கும். ரஃபேலின் ஓவியங்கள் வெகுஜன பாணியில் வெளிப்படையாக அமைந்திருக்கும்.


1508ல் போப் இரண்டாம் ஜூலியஸ், ரோமுக்கு வருமாறு ரஃபேலுக்கு அழைப்பு விடுத்தார். கட்டிடக்கலைஞர் டொனாட்டோ ப்ரமான்ட்டேயின் ஆலோசனையின் பேரில் இந்த அழைப்பு வந்தது. அந்த நேரத்தில் ரோமில் அவர் அறிமுகம் ஆகவில்லை. ஆனால் வெகு விரைவிலேயே அவரது மேதைமை ரோம் முழுவதும் தெரிய ஆரம்பித்தது. ஓவியத்திறனோடு அவரது மிடுக்கான தோற்றமும் அனைவரையும் கவர்ந்தது. விரைவில் பிரபலமான அவர், “ஓவியர்களின் இளவரசர்” என்று அழைக்கப்பட்டார்.

ரோமில் 12 ஆண்டுகள் வசித்தார் ரஃபேல். இந்த காலகட்டத்தில் மகத்தான பல படைப்புகளை அவர் உருவாக்கினார். இரண்டாம் ஜூலியஸ் வாடிகனின் பாப்பல் அப்பார்ட் மென்ட்டில் வசித்து வந்தார். அவரது வீட்டில் நடுத்தர அளவில் அறைகள் இருந்தன. அவை ஸ்டான்சா என அழைக்கப்பட்டன. ரோம் வந்ததும் இந்த அறைகளில் சுவர் ஓவியம் தீட்டும் பணிதான் ரபேலின் முதல் பணியாக இருந்தது.

ரபேலின் படைப்புகளிலேயே ஸ்டான்சா டெல்லா சிக்னேச்சுரல் அலங்காரம்தான் மகத்தான படைப்பாக கருதப்படுகிறது.

ஸ்கூல் ஆப் ஏதென்ஸ் ஓவியத்தில் பிளேட்டோ மற்றும் அரிஸ்டாட்டில் போன்ற தத்துவமேதைகள் இடம் பெற்றிருந்தனர். ரஃபேலின் சுவர் ஓவியங்களிலேயே மிகவும் பிரபலமானது ஸ்கூல் ஆப் ஏதென்ஸ்தான். மறுமலர்ச்சி காலத்தைச் சேர்ந்த ஓவியங்களில் மிக உன்னதமான படைப்புகளில் ஒன்றாக அது திகழ்ந்தது.
ரோமில் ரஃபேல் வரைந்த தி மடோனாஸ் அவரது முந்தைய படைப்புகளில் இருந்து வித்யாசமாக அமைந்தது. அதை ஒரு திருப்புமுனை என சொல்லலாம்.

16ம் நு£ற்றாண்டின் முதல் இருபது வருடங்கள் ரோமின் மிக முக்கியமான ஓவியராக திகழ்ந்தார் ரஃபேல். அவரது சித்திரங்களை அவர் புதிய வடிவில் கொடுத்தார்.

சிஸ்டின் தேவாலயத்தின் சுவர்களில் மிகப்பெரும் 10 திரைச்சீலைகளை அமைக்கும் பணியை போப் பத்தாம் லியோ ரஃபேலிடம் ஒப்படைத்தார். அந்த திரைச்சீலைகளில் ஓவியங்கள் வரையும் பணியை துவங்கினார். அவற்றில் 7 திரைச்சீலைகள் 1516ல் முடிந்தன. இப்போதும் அந்த திரைச்சீலைகள் வாடிகனில் உள்ளன. ரஃபேலின் ஒரிஜினல் கார்ட்டூன்கள் பிரிட்டீஸ் ராயல் கலக்ஷன் மற்றும் லண்டனில் உள்ள ஆல்பர்ட் மியூசியத்தில் காணப்படுகின்றன.

ரபேலின் கடைசிப் படைப்பு ட்ரான்ஃபிகரேஷன். இந்த மகத்தான படைப்பை முடிப்பதற்கு முன்பே ரஃபேலை மரணம் தழுவிக்கொண்டது. அவரது உதவியாளர் கியுலோ ரோமனோதான் அதை முடித்தார். வாடிகன் மியூசியத்தில் இன்னும் அந்தப் படைப்பு உள்ளது. ரஃபேல் இறக்கும் போது அவருக்கு வயது 37. தனது பிறந்தநாள் அன்றே இறந்தார். அவரது இறுதிச்சடங்குகள் வாடிகனில் நடந்தன. அவரது தலைமாட்டில் அவரது கடைசிப் படைப்பான ட்ரான்ஸ்ஃபிகரேஷன் வைக்கப்பட்டிருந்தது. ரோமில் உள்ள பான்த்தியோனில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Leave A Reply